பல ஆயிரம் மக்கள் வீதியெங்கும் குழுமியிருக்க பிடல் காஸ்ட்ரோ இன் இறுதி யாத்திரை

வெள்ளை றோஜா மலர்களினால் சோடிக்கப்பட்ட பச்சை நிற ரஷ்யத் தயாரிப்பான இராணுவ ஜீப் வாகனத்தில் நாலு நாட்கள் கியூபாவின் பட்டி தொட்டியெல்லாம் 800 கிலோ மீற்றர் பயணம் செய்த பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி இறுதி அமைவிடமான சன்டியாகோவை இன்று அடைந்தது. வீதி எங்கும் பல ஆயிரத்தற்கு மேற்பட்ட மக்கள் குழுமி நின்ற தமது தலைவனுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். புரட்சிக்கு பின்னர் 50 வருட காலமாக கியூபாவின் ஆட்சிப் பொறுப்பில் நாட்டை வெற்றிப்பாதையில் கொண்டு சென்ற தமது தலைவனுக்கு தமது கண்ணீரை காணிக்கையாக்கி வழியனுப்பி வைத்தனர்.


60 வருடங்களுக்கு முன்பு அமெரிக்க ஆதரவு பாடிஸ்ட்டா (Batista) இராணுவ அரசுக்கு எதிராக புரட்சி நடாத்தி வெற்றியடைந்த பின்பு தனது தோழர்களுடன் தலைநகர ஹவானாவில் மக்களுடன் இணைந்து ஊர்வலமாக வந்ததை நிவைவூட்டும் நிகழ்வாக இது இருந்தது. பொதுமக்கள் கியூபாவின் தேசியக்கொடியை அசைத்த வண்ணம் நீங்கள் இன்னமும் நீண்ட காலம் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும்(Long may he live) என் கோஷங்கள் தாங்கிய பதாகைகளைச் சுமந்த வண்ணம் வழியனுப்பி வைத்தனர்.
நவம்பர் 25, 2016 ம் திகதியன்று தனது முதுமையின் காரணமாக இயற்கை எய்திய பிடல் காஸ்ட்ரோ 9 நாட்கள் கடந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலமையில் அமைந்த பொதுவுடமை ஆட்சியின் வெற்றியின் அடையாளமாக தனது நாட்டை மக்களுக்கு விட்டுச் சென்றள்ளார்.

பாடிஸ்ட்டா இன் அடக்குமுறை அரசுக்கெதிராக இராணுவ முகாம் ஒன்றின் மீது நடாத்திய தாக்குதல் தோல்வியில் இவரது சகாக்கள் 9 பேரின் கைதுகளுடன் முடிவுற்றது. குற்றம்சாட்டப்பட்ட பிடல் காஸ்ட்ரோ தனக்காகவும் தனது சகாக்களுக்காவும் நீதிமன்றத்தில் வாதிட்டபோது பாவித்த ‘வரலாறு எம்(ன்)னை விடுதலை செய்யும்’ என்ற மக்கள் புரட்சிக்கான அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் இன்றுவரை ஒடுகப்படும் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடும் வாழ்வை அரத்;தம் உள்ளதாகவும் நீதியுள்ளதாகவும் நிறுவி நிற்க ஊக்கத்தை அளித்துள்ளது என்றால் மிகையாகாது. இதுவே லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தென் அமெரிக்க, ஆபிக்க, மூன்றாம் உலகநாடுகளில் நடைபெற்ற மக்களின் போராட்டத்திற்கு உந்து சக்தியாக அமைந்தது. கூடவே மெக்சிக்கோவில் ஆரம்பமான சே உடனான உறவு கெரில்லாப் போராட்ட முறையின் அடையாளமாக உலகெங்கும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்தை தமது உணவு உற்பத்தி முறையில் முழுமையாக பாவிப்பதற்கு மக்களை வழிநடத்திய தலைவர். இவர் தனது இறுதிக்காலத்தில் தனது விவசாயத் தோட்டத்தில் அதிக நேரங்களைக் கழித்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. உணவு உற்பத்தியில் ஈடுபடுதல் மனித குலத்தின் மிக அடிப்படையான உழைப்பு முறை என்பதை நடைமுறையில் எடுத்துக்காட்டி உணவு உற்பத்தியில் தன் நிறைவுகண்டு பட்டினிச் சாவைற்ற தேசமாக தனது நாட்டைக் கட்டியமைத்த தமது தலைவரை வணங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

மருத்துவத்துறையில் உலகின் முதல் தரமான நிலையை தனது நாடு அடைவதற்கும் தமக்கு கிடைத்த இந்த வளத்தை ஏனைய நாடுகளுக்கு வழங்கவும் பிடல் காஸ்ட்ரோ எப்போதும் பின் நிற்கவில்லை ஹெயிட்டில் ஏற்பட்ட புயலுக்கு பின்னரான காலராவுடன் கூடிய மனித அழிவிலிருந்து கெயிட்டி மக்களை காப்பாற்றியதாகட்டும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் குடிகொண்டிருந்த எபோலா உலகில் இருந்து விரட்டியதாகட்டும் சர்வதேசம் எங்கும் தமது மருத்துவத்துறையினால் சேவை செய்வதற்கான வளர்ச்சியை கியூபா அடைவதற்கு அடித்தளம் இட்ட தமது தலைவனை மக்கள் தமது செவ்வணக்கம் மூலம் அனுப்பிவைத்தனர்.

பொது மக்கள் இரவு முழுவதும் வீதியெங்கும் நீண்ட நாட்களாக விழித்திருந்து தமது சகபாடியிற்கு இறுதி மரியாதை செலுத்தினர் இறுதி நிகழ்ச்சியில் கியூபாவின் தற்போதைய தலைவர் ராகுல் காஸ்ட்ரோ, மெக்சிக்கோ, ஈகுவாடோர், பொலிவியா. வெனிசுலா, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்கள் தமது இரங்கல் உரையை நிகழ்த்தியிருந்தனர்.

(சாகரன்)