பாகிஸ்தானின்ன் இஸ்லாமிய அடிப்படைவாதம்

பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் வளர்ச்சிக்கும், பங்களாதேஷ் பிரிவினைக்கும் தொடர்பிருக்கிறது. அதாவது, தேசிய இனப் பிரச்சினைகளை அடக்கும் நோக்கில் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த பாதுகாப்புக் கவசம் தான் இஸ்லாமியவாதம்.

பங்களாதேஷ் விடுதலைப் போராட்டக் காலத்தில், பாகிஸ்தானிய படையினர் நடத்திய இனப்படுகொலைகளும், கூட்டுப் பாலியல் வல்லுறவுகளும் பாகிஸ்தானிலும் அதிர்வலைகளை தோற்றுவித்தன. மனித உரிமை ஆர்வலர்கள், சமதர்மக் கட்சிகள் அதைக் குறிப்பிட்டு அரச இயந்திரத்தை தாக்கிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய பாகிஸ்தானும் பல்லின மக்கள் வாழும் நாடு தான். பஞ்சாப் மாநிலத்தவர்கள் கையில் தான் ஆட்சியதிகாரம் உள்ளது. இலங்கையில் ஈழம் மாதிரி, பாகிஸ்தானில் ஒதுக்கப் படும், பலுச்சிஸ்தான், சிந்தி மாநிலங்களில் தனிநாட்டுக் கோரிக்கை இருந்து வருகின்றது.

வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தை சேர்ந்த பஷ்டூன் மொழி பேசும் மக்கள் ஆப்கானிஸ்தானுடன் சேர விரும்புகின்றனர். பஷ்டூன் இனத்தவரின் ஆதிக்கத்தில் உள்ள ஆப்கான் அரசு, நீண்ட நெடுங்காலமாக சர்வதேச எல்லையை அங்கீகரிக்க மறுத்து வந்துள்ளது. அதைவிட, காஷ்மீர் மாகாணம், இந்தியக் காஷ்மீருடன் சேர்ந்து தனிநாடாக விரும்புகின்றது.

வேறு பட்ட மொழிகளைப் பேசும், கலாச்சாரங்களை பின்பற்றும் மக்களை ஒன்று சேர்ப்பது கடினமான விடயம். பங்களாதேஷ் பிரிவினையின் பின்னர், பிற மொழித் தேசியங்கள் மத்தியிலும் பிரிவினைக் கோரிக்கை வலுக்கலாம் என்று அரசு அஞ்சியது. அதனால், சர்வாதிகாரி சியாஉல் ஹக் காலத்தில், இஸ்லாமிய மத அடிப்படைவாதம் ஊக்குவிக்கப் பட்டது. ஏனென்றால், பல்வேறு மொழிகளை பேசும் இனங்களை ஒன்றிணைக்கும் சக்தி இஸ்லாமிய மதம் மட்டுமே.

(Kali Marx)