பெண் போராளி தமிழினியின் மரணம் போர்க்குற்றத்தின் குறியீடு

தனது இளமைக் காலம் முழுவதும் போராளியாகவே வாழ்க்கையை நகர்த்திய தமிழினி இன்று காலை புற்று நோயால் காலமனார். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழினி கடந்த வாரம் கொழும்பிலுள்ள மகரகம வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் பெண்கள் அணியின் பொறுப்பாளராகச் செயற்பட்ட தமிழினின் 1991 ஆம் ஆண்டில் தனது 19 வது வயதில் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார். பெண்கள் இராணுவப் பயிற்சி, பிரச்சாரம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழினி பல இராணுவத் தாக்குதல்களை முன் நின்று நடத்தினார். யுத்தக் குற்றங்களின் நேரடிச் சாட்சிகளில் ஒருவரான தமிழினியின் மரணம் வரலாற்றின் ஒரு பிரதான கட்டத்தின் மரணமாகும்.

2009 ஆம் ஆண்டு யுத்த முடிவில் கைதான தமிழினி 2013 ஆம் ஆண்டு வரை இராணுவத்தின் சிறையிலிருந்தார். தமிழினி சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் அனைத்தும் அரவரது மரணத்தோடு மறைந்துவிட்டன. 2009 ஆம் ஆண்டில் வன்னியின் கந்தகக் காற்றும், நச்சு வாயுக்களும் 43 வயதாகும் தமிழினியின் மரணத்தின் மூல காரணமாகவிருக்கலாம். இவை ஆராயப்பட வேண்டும். இலங்கை அரசின் போர்க்குற்றங்களின் புற்று நோயைச் சுமந்து இன்னும் எத்தனை போராளிகள் வாழ்கிறார்கள் என்பது ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டும். குண்டுச் சன்னங்களைச் சுமந்த குழந்தைகளும், கந்தகக் காற்றைச் சுவாசித்த ஒரு கூட்டமும், சிங்களப் பேரினவாதிகளாலும், தமிழ்ப் பிழைப்பு வாதிகளாலும் ஏமாற்றப்பட்டுள்ளது என்பதற்கு தமிழினி ஒரு குறியீடு.

ஐரோப்பிய நாடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலே, மருத்துவப் பரிசோதனை, உளவியல் ஆலோசனை என்று மக்களைத் அலசி எடுத்துவிடுவர்கள். ஒரு சிறிய நிலப்பரப்பை விமானக் குண்டுகளால் துளைத்தெடுத்துவிட்டு, நச்சு வாயுக்களால் நிரப்பிவிட்டு பல ஆண்டுகள் அந்த மக்கள் கூட்டத்தை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள். பின்னர், எந்த முற் பரிசோதனையுமின்றி தெருக்களில் அவர்கள் வீசியெறியப்பட்டுள்ளார்கள்.

நல்லாட்சி அரசு என்று கூறிக்கொண்டு தேனிலவு கொண்டாடும் தமிழ் அரசியல்வாதிகளாகட்டும், ராஜபக்சவைத் தண்டிக்கப் போகிறோம் என்று சினிமா காட்டியவர்களாகட்டும், இதுவரை அந்த மக்களின் நலன்கள் குறித்துக் கோரிக்கை முன்வைத்ததில்லை.

தலைவரும் தளபதியும் வாழ்கிறார்கள் என உலகம் முழுவதும் வயிற்றுப் பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம் முன்னை நாள் போராளிகளைக் கண்டுகொள்வதில்லை. அவர்களில் பலர் ஏழ்மையின் விழிம்பிலும் அச்சத்தின் பிடியிலும் வாழ்க்கை நடத்துகிறார்கள். சமூகத்தின் புறக்கணிப்பு, புலம்பெயர் பிழைப்புவாதிகளின் வியாபாரம், பேரினவாதத்தின் அச்சுறுத்தல் என்ற அனைத்து அவலங்களையும் சந்திக்கும் தியாகிகள் பாதுகாக்கப்பட வேண்டும். லண்டனில் லட்சங்கள் செலவில் நடத்தப்படும் மாவீரர் திருவிழாவின் மற்றொரு நிழல் படமாக தமிழினி பயன்படுத்தப்படலாம். ஆனால் ஆயிரம் தமிழினிகளின் அவலங்களுக்கு அது தீர்வாகாது.

தமிழினியின் கவிதைகளில் ஒன்றில் சித்திரவதையின் கோரம் வெளிப்படுகிறது:

போருக்குப் புதல்வரைத் தந்த
தாயாக வானம்
அழுது கொண்டேயிருந்தது.
வெடியதிர்வுகளின் பேரோசைகளால்
குடி பெயர்ந்தலையும்
யானைக் கூட்டங்களாக
இருண்ட முகில்களும் கூட
மருண்டு போய்க் கிடந்தன.
பகலை விழுங்கித் தீர்த்திருந்த
இரவின் கர்ஜனை
பயங்கரமாயிருந்தது
அம்பகாமப் பெருங்காட்டின்
போர்க்களத்தில்.
காதலுறச் செய்யும்
கானகத்தின் வனப்பை
கடைவாயில் செருகிய
வெற்றிலைக் குதப்பலாக
சப்பிக்கொண்டிருந்தது
யுத்தம்.
மீளாப் பயணம் சென்ற தோழி
விடைபெறக் கை பற்றி
திணித்துச் சென்ற கடதாசி
செய்தி சொன்னது..
காலமாவதற்காக காத்திருக்கும்
அம்மாவின் ஆத்மா
கடைக் குட்டியவளின்
கையாலே ஒரு துளி
உயிர்த் தண்ணிக்காகத்
துடிக்கிறதாம்.
எவருக்கும் தெரியாமல்
என்னிடத்தில் குமுறியவள்
விட்டுச் சென்ற
கண்ணீர்க் கடலின்
நெருப்பலைகளில்
நித்தமும்
கருகிக் கரைகிறது
நெஞ்சம்.
தனி மனித
உணர்ச்சிகளின் மீதேறி
எப்போதும்
உழுதபடியே செல்கின்றன
போரின்
நியாயச் சக்கரங்கள்.
அக்கணத்தில்
பிய்த்தெறியப்பட்டிருந்த
பச்சை மரங்களின்
இரத்த வீச்சத்தை
நுகர்ந்த வல்லுாறுகளின்
நீண்ட நாக்குகளில்
உமிழ்ந்து
பெருகுகிறது
வெற்றிப் பேராசை.

(இனியொரு)