பெர்முடா முக்கோணம் பகுதியில்…..

இல்லை என்கிறது vinavu.com


பெர்முடா முக்கோணம் அல்லது
நரகத்தின் முக்கோணம் என்று அழைக்கப்படும் இப்பகுதி வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் உள்ளது.

பெர்முடா முக்கோணம் மிகவும் அதிக அளவு கப்பல் மற்றும் விமான போக்குவரத்து நடக்கும் பகுதியாகும். இவ்வழி மூலமாக அமெரிக்கா ஐரோப்பா மற்றும் கரீபியன் தீவுகளில் இருக்கும் துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்கின்றன. கூடவே விமானங்களும் பறக்கின்றன.

இங்கே எண்ணிறந்த விமானங்களும் கப்பல்களும் மர்மமான முறையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மறைந்து போனதாகக் கூறப்படுகிறது.

கூறப்படுகிறது என்பதிலிருந்தே அதற்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை என்பதும் உண்மை. ஏனெனில் இப்பகுதியில் அப்படி மர்மமான முறையில் கப்பல்களும் விமானங்களும் மறைந்து போனதாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ செய்திகளும் தெரிவிக்கவில்லை.

அனேகமாக இவை தப்பும் தவறுமாக பதிவு செய்யப்பட்டதோடு மறைந்து போன சில எழுத்தாளர்களின் உபயத்தால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளாகும்.

1964இல் வின்சென்ட் காடிஸ் VINCENT GADDIS என்ற எழுத்தாளர் நம்மூர் தினமலர் போன்ற மலிவான பத்திரிகையான ‘அர்கோசி’ ARGOSY யில் இந்த பெர்முடா முக்கோணத்தைப் பற்றி எல்லைகளோடு வரையறுக்கிறார். அவருக்குப் பிறகு பல எழுத்தாளர்கள் இந்த முக்கோணத்தின் பரப்பளவு குறித்து பல்வேறு அளவுகளைத் தருகிறார்கள். அவை 5 லட்சம் சதுர மைல் முதல் 15 லட்சம் சதுர மைல் வரை வேறுபடுகின்றன.

1950 முதல் பல்வேறு எழுத்தாளர்கள் அமெரிக்கப் பத்திரிகைகளில் பெர்முடா முக்கோணத்தில் மறைந்து போன விமானங்கள் கப்பல்களை பற்றி பல்வேறு கதைகளை அடித்து விட்டிருருக்கிறார்கள். அப்படி சில ஹாலிவுட் படங்களும் வந்திருக்கின்றன.

ஆனால் இவை எதற்கும் ஆதாரம் இல்லை.

லாரன்ஸ் டேவிட் குஷி ( LAWRENCE DAVID CUSCHE ) என்ற எழுத்தாளர் பெர்முடா முக்கோண மர்மம் தீர்க்கப்பட்டது ( THE BERMUDA TRAINGLE MYSTERY : SOLVED ) என்ற நூலை 1975 இல் எழுதியிருக்கிறார்.

இவர் இந்த மூடநம்பிக்கை குறித்து பல்வேறு தரவுகளை மறுக்கிறார். அவரது வாதத்தின்படி இப்பகுதியில் மறைந்துபோன கப்பல்களும் விமானங்களும் மிகைப்படுத்தப்பட்டவை.

ஒப்பீட்டு ரீதியாக இவற்றை விட அதிகமான எண்ணிக்கையில் உலகின் பல்வேறு கடல் பகுதிகளில் விமானங்களும் கப்பல்களும் மறைந்து போயிருக்கின்றன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் மறைந்து போனதைக் குறிப்பிடலாம். தற்போது அருணாச்சல் பிரதேசத்தில் (ஜூன் 2019) இந்திய விமானப்படையின் ஏ.என் 32 வகை சரக்கு விமானம் மறைந்து போயிருக்கிறது. அதை இன்று வரை தேடி வருகிறார்கள்.

பெர்முடா முக்கோணம் இருக்கும் அந்தக் கடல் பகுதி வெப்ப மண்டல சூறாவளிகள் அதிகம் வீசும் இடத்தில் இருப்பதால் புயலில் சிக்கி பல விபத்துக்கள் நடக்கின்றன.

இவை எவையும் எவையும் மர்மமானவை அல்ல.

(Rathan Chandrasekar)