மாகாண அரசிற்கான அதிகாரங்களை தாருங்கள் இல்லாவிட்டால் நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம் – பத்மநாபா(1989 ல்)

 

அமரர் பத்மநாபா தொடர்பாக வருடத்தில் இருமுறை மட்டுமே அதிகம் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. ஒன்று நவம்பர் 19 அவரது பிறந்த நாள், இரண்டு ஜூன் 19 அவரது இறந்த நாள். 1985 திம்பு பேச்சுகளுக்கு பின்னரான காலப்பகுதியில் திரு பத்மநாபா அவர்கள் அவரது அமைப்பை சேர்ந்த ஒரு சில முக்கியமானவர்களை வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரு தடவைகள் நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவருந்த அழைத்துச் செல்வது வழக்கம்.

இதற்கு என்ன காரணம் என அவரிடம் கேட்கும் போது, எதிர்காலத்தில் சர்வேதேச இராஜதந்திரிகளுடனான பேச்சுக்கள் இப்படியான ஆடம்பர இடங்களிலேயே இடம்பெறும், அப்படியான பேச்சுக்களில் நீங்கள் கலந்து கொள்ளும் போது இப்படியான ஆடம்பரங்களை கண்டு வியப்பீர்களானால் பேசவந்த விடயங்களில் உங்கள் கவனம் இருக்கப் போவதில்லை அதற்குதான் இந்த ஏற்பாடு என்பாராம்.

அவரது தூரநோக்கை நினைத்து பார்க்கும் போது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருக்கின்றது. இன்றைய நாட்களில் நட்சத்திர ஹோட்டல்களில் உணவருந்துவது என்பது ஒரு பெரிய விடயம் அல்ல, ஆனால் 1986 களுக்கு முன்னர் குறிப்பாக போராட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு அது ஒரு பெரிய விடயமே.

அமரர் பத்மநாபா அவர்களது ஒவ்வொரு செயற்பாட்டிலும் ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கும் என கேள்விப்பட்டதுண்டு. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை அவரது பிறந்த நாள் ‘கார்திகை 19’ நாட்களில் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என கருதுகிறேன்.

1989 ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பிற்கும் இலங்கை அரசிற்குமான முரண்பாடு மிகவும் உச்ச நிலையில் இருந்த ஆண்டு. “மாகாண அரசிற்கான அதிகாரங்களை தாருங்கள் இல்லாவிட்டால் நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம்” என கூறி ஒவ்வொரு அதிகாரங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்த ஆண்டு.

இவ்வாறு மாகாண அரசு தனக்கான அதிகாரங்களை பறித்துக்கொண்டதாலும், பத்மநாபா அவர்களின் வேறு சில அரசியல் செயற்பாடுகளாலும் சீற்றம் கொண்ட இலங்கை அரசு, “பத்மநாபா இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டார், இலங்கை அரசிற்கெதிராக சதி செய்தார்” என்ற பழைய வழக்கு ஒன்றை தூசுதட்டி கையில் எடுத்துக் கொண்டது.

நீதிமன்றத்தில் பத்மநாபா அவர்களை உடனடியாக ஆயராகுமாறு உத்தரவு பிறப்பித்ததோடு இவரை கண்ட இடத்தில் கைது செய்யும் அதிகாரமும் இலங்கை காவல் துறைக்கு வழங்கப்பட்டிருந்தது.

இப்படியான ஒரு நேரத்தில், திருகோணமலையில், பத்மநாபா அவர்களுக்கு தனது காரியாலயத்தில் இருந்து மாகாண அரசு காரியாலயத்திற்கு அவசரமாக செல்லவேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டது.

இவர் காரியாலயத்தில் இருக்கும் போது பிறிதொரு வேலைக்காக வெளியே சென்ற இவரது வாகண ஓட்டுனரும் மெய்ப்பாதுகாவலர்களும் குறித்த நேரத்திற்குள்
திரும்பி வராததால், யாருக்கும் எதுவும் சொல்லாமல், தனியாக இவரது காரியாலயத்தில் இருந்து மாகாண அரசு காரியாலயத்தை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டார்.

ஏறக்குறைய 20 நிமிடங்கள் எந்தவித பாதுகாப்பும் இன்றி தன்னந்தனியாக வீதியில் நடந்திருக்கிறார். இதில் வியப்பு என்னவென்றால் எந்த காவல்துறைக்கு இவரை கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டதோ அதே காவல்துறை நிலையம் முன்பாக நடந்து சென்று மாகாண அரசு காரியாலயத்தை அடைந்திருக்கிறார்.

இவ்வாறான இவரது செயற்பாட்டின் மூலம் பல விடயங்களை தனது அமைப்பிற்கும் தோழர்களுக்கும் கற்றுக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தாலும், அவர்கள் எவளவு தூரம் இவரது கற்பித்தலை சரியாக புரிந்து உள்வாங்கிக் கொண்டார்கள் என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.
(இந்த நடைப் பயணத்தில் அவருக்கு பின்னால் ஓட்டமும் நடையுமாய் சென்றது அன்றைய பத்தமநாபாவின் தனிப்பட்ட உதவியாளராக இருந்த தோழர் ஜேம்ஸ் என்ற நான் மட்டும்தான் இன்றும் இது பசுமையாக இருக்கின்றது.கடற்கரை வீதியில் அமைந்த( இது தோழர் ஜோர்ஜ் இன் தாயார் தம்மியார் ஆகியோர் வாடகைக்கு எடுத்த 184? ம் இலக்க வீடு) அவரின் தங்குமிடத்திலிருந்து மாகாண சபைவரைக்கும்)
(Brin Nath)