மோடியின் தோல்விகள்

 

சிலிக்கான் வேலியில் மோடி கிளப்பும் விளம்பரப் புழுதி, நாளிதழ்களை கறையாக்கி வருகிறது. கறையும், புழுதியும் நல்லதல்ல என்றாலும் மோடி ஆண்டையின் காலில் விழுந்து கிடக்கும் ஊடகங்கள் சலிக்காமல் பஜனையை கிளப்பி வருகிறார்கள். மோடியை புகைப்படம் பிடிப்பதிலிருந்து, ஆட்களை அழைத்து வருவது, உள்ளூர் சில்லறை மற்றும் மொத்த விற்பனை பிரமுகர்களை காட்டுவது, வசனங்களை தயாரிப்பது, ஊடகங்களில் மானே தேனே போட்டு எழுதிக் கொடுப்பவது வரை பெரும்படையே அங்கும் இங்கும் வேலை செய்கிறது. ஆனாலும் ஒரு குற்றவாளியை இப்படி வாஷிங்டன் சென்ட் போட்டு மறைக்க முடியுமா?


ஆர்.எஸ்.எஸ், மோடி, பா.ஜ.க வகையறாக்களை ஆதரிக்கும் என்.ஆர்.ஐக்களைப் போலவே எதிர்க்கும் மக்களும் அங்கிருக்கிறார்கள். இது மோடியின் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்திலும் நடந்து வருகிறது என்றாலும் ஊடக துப்பறியும் புலிகள் எதுவும் இதை கண்டுகொள்வதில்லை. அமெரிக்காவிலும் மோடியின் கயமைத்தனத்தை எதிர்க்கும் இந்தியர்களும் பிற நாட்டவரும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றனர். “சிலிக்கான் வேலியில் இந்திய மக்கள் அமோக வரவேற்பு” என்று ஊடகங்களில் இன்று காட்டப்பட்டிருக்கும் தலைப்புச் செய்தியை கவனியுங்கள். இது முற்றிலும் மோடியின் விளம்பரப் பிரிவு தயாரித்து நடத்தும் மேடை நாடகம் அன்றி வேறல்ல.

பாசிச மோடியை வரவேற்கவில்லை!
இந்த நாடகத்திற்காக சான் ஜோசில் இருக்கும் எஸ்.ஏ.பி மையத்திற்கு மோடி வரும் போது ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் மோசடி விளம்பர நாடகத்தை அம்பலப்படுத்தும் விதமாக நூற்றுக்கணக்கான மக்கள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். விண்ணதிரும் முழக்கங்களும், கடலளவு பதாகைகளும் நிரம்பிய அந்த ஆர்ப்பாட்டத்தை காணக் கண் கோடி வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நரவேட்டை மோடியின் வரலாறு, புள்ளிவிபரங்கள், வெறுப்புணர்வு, சகிப்பின்மை, சிறுபான்மையினர்க்கு எதிரான துவேசம் அனைத்தும் தோலுரிக்கப்பட்டன. இது மோடி அண்ட் கோ எதிர்பாராத திருப்பமாக அமைந்து விட்டது.

மோடி: இந்தியாவின் பிரதம கொலையாளி!
ஊடகங்கள் மற்றும் போலிஸ் மதிப்பீட்டின் படி மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 3000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்திய நீதி மற்றும் பொறுப்புணர்வுக்கான கூட்டமைப்பை தாண்டி பல்வேறு இயக்கங்கள், குழுக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். குறிப்பாக சீக்கிய மக்களைச் சொல்லலாம்.

“நாங்கள் எதிர்பார்த்ததை விட மக்கள் அதிகம் கலந்து கொண்டது ஆச்சரியமளிக்கிறது” என்கிறார் கூட்டமைப்பின் பஜன் சிங். இதற்கென பல்வேறு நகரங்களில் இருந்தும் புறப்பட்டு வந்திருக்கின்றனர். இவை அனைத்தும் மோடியின் கிரிமினல் வரலாற்றின் மேல் மக்கள் கொண்டிருக்கும் கோபத்தைக் காட்டுகிறது.

முஸ்லீம்கள், கிறித்தவர்கள், தலித்துக்கள், பெண்கள் மீது ஆர்.எஸ்.எஸ் கும்பலும் மோடியின் நிர்வாகமும் தொடுத்திருக்கும் தாக்குதலை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பேசினர். அமெரிக்காவின் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை அதிகம் கண்டுகொள்ளவில்லை. ஓரிருவர் பெயரளவுக்கு அறிக்கைகள் விட்டதோடு சரி. என்ன இருந்தாலும் அமெரிக்க முதலீடு இந்தியா வந்து அள்ளிக் கொண்டு போவதற்கு மோடியை விட்டுக் கொடுக்க முடியாது அல்லவா?

ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் மோடியின் லீலைகளை பிட்டுப்பிட்டு வைத்தனர். டிஜிட்டல் இந்தியாவுக்காக உருகும் மோடி அதே டிஜிட்டல் உலகில் அவரை எதிர்த்து எழுதியவர்களை கைது செய்த அயோக்கியத்தனத்தை ஒருவர் பேசினார். என்.ஜி.வோக்கள் மற்றும் அம்னஸ்டி அமைப்பு, கிரீன் பீஸ்ஸுக்கு எதிரான மிரட்டலை மற்றொருவர் விளக்கினார். குஜராத் இனப்படுகொலை தொட்டு பல்வேறு வகைகளில் இந்திய மக்கள் கொல்லப்படுவதையும் அதில் மோடி மற்றும் சங்க பரிவாரத்தின் பங்கையும் சிலர் பேசினர்.

“எங்களது பெயரில் வன்முறை கூடாது” – மோடியை எதிர்க்கும் குஜராத்தின் இந்துக்கள்!
மோடியை ஆரத்தழுவி கைகுலுக்கிய ஃபேஸ்புக் முதலாளி மார்க்கையும் மக்கள் விட்டு வைக்கவில்லை. “மார்க் உங்கள் கைகளை கழுவுங்கள்” என்று கிருமி நாசினி பாட்டில்களை அவருக்கு அனுப்பி வருகின்றனர். 2000 முசுலீம்கள் கொலை செய்த பாதகச் செயலுக்கு குற்றம் சாட்டப்பட்டவரோடு என்னய்யா குலுக்கல் என்று இதுவரை 250 பாட்டில்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

மோடியின் விளம்பர ஜோடனைகள் ஆரம்பமாகிய உடனேயே இந்த எதிர்ப்பு இயக்கம் ஆரம்பித்து விட்டது. இதை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை, ஜனநாயக, மதச்சார்பற்ற இயக்கங்கள் அனைத்தும் நடத்தியிருக்கின்றன. இந்த ஆர்ப்பாட்டத்தை இந்திய , அமெரிக்க அரசுகள் விரும்பாமல் இருந்தாலும், இரு நாட்டு ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தாலும் இந்த எதிர்ப்பை மறைக்க முடியாது.
வரலாற்றின் குப்பைத் தொட்டியில் குந்தியிருக்க வேண்டிய இந்த குற்றவாளியை இங்கு மட்டுமல்ல எங்கும் எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதையே சிலிக்கான் வேலி ஆர்ப்பாட்டம் உணர்த்துகின்றது.