விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல்

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய கட்டம், ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற அளவில் சுருங்கி நிற்கிறது. அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள், உரைகள், அறிக்கைகள் சார்ந்துதான் அரசியல் இயக்கமும், ஊடக இயக்கமும் நிகழ்ந்து வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்கால நம்பிக்கைகளாக, ஆக்கபூர்வமான சக்திகளாகத் தம்மைக் கருதும் தரப்புகளும் கூட, இருவரில் ஒருவரின் துணைக்குழுவாக மாத்திரமே தற்போது இயங்கி வருகின்றன.

சுய அடையாளத்தோடு எழுந்து வருவது சார்ந்தோ, நம்பிக்கைகளை ஏற்படுத்துவது சார்ந்தோ, எந்தவொரு தரப்பும் கடந்த பத்து வருடங்களில் வெற்றி பெற்றிருக்கவில்லை.

இந்த நிலையில் நின்றுகொண்டுதான், தனிநபர்களில் தங்கி நிற்கின்ற தமிழர் அரசியலைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் பேச வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இந்தப் பத்தியாளர் உட்பட, கிட்டத்தட்ட அனைத்து அரசியல் பத்தியாளர்களும், ஆய்வாளர்களும், ஊடக ஆசிரியர்களும் கூட, ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற கட்டத்துக்கு அப்பால், சிந்திப்பதற்கோ செயற்படுவதற்கோ பெரும்பாலும் முனைவதில்லை.

நாளாந்தம் விக்னேஸ்வரனும், சுமந்திரனும் ஏதோவொரு நடவடிக்கையால் பேசுபொருளாக மாறி நிற்கிறார்கள். அதில், பெரும்பாலானவை ஏட்டிக்குப் போட்டியான கட்சி அரசியல், தேர்தல் அரசியல் சார்பிலானவை.

இன்றைக்குத் தமிழ்த் தேசிய அரசியல் என்பது, தேர்தல்களை நோக்கியதாக நகர்த்தப்பட்டுவிட்ட சூழலில், தேர்தல் அரசியல் சார்ந்தாவது, தெளிவான தெரிவுகளை உருவாக்கிக் கொள்ள முடியாத கட்டமொன்று ஏற்பட்டிருக்கின்றது. கூட்டமைப்புக்கு எதிரான அணி என்கிற அடையாளத்தை ஒருங்கிணைப்பது சார்ந்தாவது, ஏனைய தரப்புகளால் சரியான இணக்கப்பாடோ, செயற்பாடோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான காலத்தில், தமிழ்த் தேசிய அரசியலின் தலைமையை, இடைநிரப்புத் தரப்பாகவே சம்பந்தனும் கூட்டமைப்பும் ஏற்றதாக, இந்தப் பத்தியாளர் கருதுகிறார்.

ஆனால், இடைநிரப்புத் தரப்பொன்று, தன்னுடைய குறைபாடுகளைச் சரிசெய்து கொண்டும், ஆளுமையை நிரூபித்துக் கொண்டும் பிரதான தலைமையாகத் தொடர்ந்தும் இயங்குவதிலும் பிரச்சினையில்லை.

அவ்வாறான உதாரணங்கள், உலகம் பூராகவும் உண்டு. எனினும், கூட்டமைப்பைப் பொறுத்தளவில், கடந்த பத்து ஆண்டுகளில், அந்தக் கட்டத்தை அடைந்திருக்கின்றதா, என்று கேட்டால் பதில் ஏமாற்றமானது.

2009க்குப் பின்னர், தோல்வி மனநிலையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த, தமிழர் அரசியலின் தலைமையையே சம்பந்தன் ஏற்றார். அது, கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்கிற அடிப்படையால் மாத்திரம் வந்தது அல்ல.

மாறாக, தங்களை வழிநடத்துவதற்கான அனுபவமுள்ளவரின் தலைமைக்கான வெற்றிடத்தை, தமிழ்த் தரப்புகள் உணர்ந்ததன் விளைவால், உருவான ஒன்று.

இல்லையென்றால், கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் தலைமையிலான முன்னணி விலகிய தருணத்திலேயே, கூட்டமைப்பு பல துண்டுகளாக உடைந்திருக்கும்.

ஆனால், நிலைமை எதுவாக இருந்தது என்றால், தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர், தலைமையேற்கும் தகுதி, மக்களை வழிநடத்தும் தகுதி, தங்களுக்கு இருக்கின்றதா? என்கிற கேள்வியை, ஒவ்வொருவரும் தமக்குள் எழுப்பி, பதில்கள் கிடைக்காத புள்ளியில், பெரும்பாலானவர்கள் சம்பந்தனின் பின்னால் திரண்டார்கள்.

அவ்வாறான நிலையின் இன்னொரு வடிவமே, இப்போதும், விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன் வடிவத்திலும் வந்திருக்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியலில், தம்மை நம்பிக்கையான தலைவர்கள் என்று காட்டிக்கொள்ளப் பலருக்கும் விருப்பமுண்டு. ஆனால், தலைமைத்துவத்தை ஏற்பது சார்ந்தோ, வழிநடத்துவது சார்ந்தோ, இன்றுவரையில் அவர்கள் தங்களைச் சிறிதளவேனும் நிரூபித்திருக்கவில்லை. அதுதான், அவர்களை விக்னேஸ்வரன், சுமந்திரன் பின்னால் துணைக்குழுக்களாகத் திரள வைத்திருக்கின்றது.

இடைக்காலத் தலைவராகச் சம்பந்தன், ஆட்சி மாற்றம் உள்ளிட்ட சில கட்டங்களை வெற்றிகரமாகக் கடந்தாலும், கூட்டமைப்பை நம்பிக்கையான தரப்பாக நிலைநிறுத்துவது சார்ந்தோ, புதிய தலைமைகளை உருவாக்குவது சார்ந்தோ, எந்தவோர் ஆற்றலையும் வெளிப்படுத்தவில்லை.

இன்றைக்கும், கூட்டமைப்புக்கு மக்கள் அளிக்கின்ற வாக்கு என்பது, இருப்பதில் ஓரளவுக்கு சிறந்தது என்கிற அடிப்படையிலானவை. மாறாக, பெரிய நம்பிக்கைகளின் வழி வருபவை அல்ல.

இன்னொரு கட்டத்தில் விக்னேஸ்வரன், சுமந்திரன் பிரச்சினையை ஆரம்பத்திலேயே முடித்து வைக்காமல், இழுபட விட்டமை என்பது கூட்டமைப்புக்கு மாத்திரமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் பின்னடைவாக மாறியிருக்கின்றது. ஏனெனில், புதிய வழிகளைத் திறக்கும், பல கதவுகளை, அது மூடியிருக்கின்றது.

2015ஆம் ஆண்டு, விக்னேஸ்வரன் கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு வந்த புள்ளியில், அவரைச் சரியாகக் கையாண்டிருக்க வேண்டும். அல்லது, கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றியிருக்க வேண்டும். மாறாக, அந்தச் சூழலைச் சம்பந்தன் உருவாக்காமல், குடுமிப்பிடிச் சண்டையை நீளச் செய்தமை, கடந்த மூன்று வருடங்களை, எதுவுமின்றிக் கடக்க வைத்திருக்கின்றது.

கூட்டமைப்புத் தலைமைதான் தவறிழைத்திருக்கின்றது என்று பார்த்தால், தம்மை மாற்று அணியாகக் கருதிய தரப்புகளும், சிவில் சமூக அமைப்புகளும், புத்திஜீவிகளும் கூட்டமைப்புக்குள் நிகழும் சச்சரவைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே காலத்தைக் கடத்தி விட்டன.

தம்மைத் தலைவர்களாக உருவாக்குவதிலிருந்து தவறிவிட்டு, தலைமையின் வெற்றிடத்துக்காக, விக்னேஸ்வரனின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். ஒவ்வொரு கட்டத்திலும், விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும், விக்னேஸ்வரனை நோக்கியே, அவர்கள் மீண்டும் மீண்டும் தலைமைத்துவ நம்பிக்கையைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தார்கள். அது, கேலிக்குரியது. அதுதான், இன்றைக்கு அவர்களை துணைக் குழுக்களாக மாற்றியிருக்கின்றது.

இன்றைக்கு ஆரோக்கியமான அரசியல் உரையாடலின் கட்டங்கள், தமிழ்த் தேசியச் சூழலில் பெரியளவில் நிகழ்வதில்லை. நிகழ்த்தப்படும் உரையாடல்களில் பெரும்பாலானவை, சமூக ஊடக மனநிலையில் இடம்பெறுபவை. அதிலும், பெரும்பாலனவை, ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ அணிகளாகப் பிரிந்து நின்று நிகழ்த்தப்படுபவை.

இங்கு, இயற்கை நீதி, தார்மீகம், அரசியல் எதிர்காலம், இருப்பு பற்றிய அடிப்படைகள் இருப்பதில்லை. இந்த சமூக ஊடக மனநிலையும் கும்பல் மனநிலையும் சேர்ந்துகொண்டு, தமிழ்த் தேசிய அரசியலையும் அதன் அறத்தையும் நடுவீதிகளிலும், ஊடகங்களிலும் பல்லிழிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

அத்தோடு, எந்தவித அடிப்படைச் சிந்தனையும் இன்றி, ஏதேவொரு கும்பலின் பின்னால் திரளவேண்டிய நெருக்குவாரத்தை, இளைஞர்கள் மீது ஏற்படுத்தியிருக்கின்றது. அது, ஆக்கபூர்வமான கட்டங்களுக்கு அப்பாலான நிகழ்வுகளையே, பெரும்பாலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சகிப்புத்தன்மையற்ற சமூகமொன்றைக் கட்டமைக்கின்றது.

சமூகத்துக்குள் எந்தவித நம்பிக்கையையும் ஏற்படுத்தத் தெரியாத அரசியல் தலைமைகளும், கட்சிகளும், சிவில் சமூக இயக்கங்களும், புத்திஜீவிகளும், ஏன் ஊடகக்காரர்களும் இவ்வாறான பின்னடைவுகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரசியல் – சமூக மாற்றங்களின் வழி நின்று பேச வேண்டியதும், எழுத வேண்டியதும் ஊடகக்காரர்களின், பத்தியாளர்களின் கடமை என்றாலும், அதன் கட்டங்களை ஒட்டுமொத்தமாக ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற நிலைக்குள் கொண்டு சேர்த்து விட்டதிலும், அவர்கள் தவறிழைத்திருப்பதாகவே கொள்ள வேண்டும்.

அத்தோடு, தமிழ்த் தேசியத்தின் பெரும் காவலர்களாக விக்னேஸ்வரனையோ, இன்னொருவரையோ சித்திரிப்பதையும் தமிழர் அரசியலின் ஒட்டுமொத்தமான நம்பிக்கை சம்பந்தன் என்றோ சுமந்திரன் என்றோ எழுதுவதன் பின்னாலுள்ள மனநிலையையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். வேறு வழியின்றி இவர்களைக் குறித்துத்தான் பேச வேண்டியிருக்கிறது என்றால், அதனை, வெளிப்படுத்திவிட்டு எழுதுவதுதான் அடிப்படைத் தார்மீகமாகும்.

மாறாக, பிரபாகரனுக்கு அடுத்து அவர்தான், இவர்தான் என்கிற தோரணையிலான எழுத்துகளில், பெரும்பாலும் வெளிப்படுவது சரிசெய்ய முடியாத அபத்தம். அந்த அபத்தத்தை யார் கடந்து வருகிறார்களோ இல்லையோ, அரசியல் பத்தியாளர்களும் ஆய்வாளர்களும் ஊடகங்களும் கடந்து வர வேண்டும். இல்லாது போனால், கடந்த காலங்களிலிருந்து கற்ற அனுபவங்களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, தனிநபர்களைத் துதிபாடும் அரசியலை, மக்களிடம் விதைத்த அவப்பெயர் வந்து சேரும்.

இன்றைக்கு, விக்னேஸ்வரன், சுமந்திரன் இல்லாமல் தமிழ்த் தேசிய அரசியலை முழுமையாகப் பேச முடியாதுதான். நடைமுறை யதார்த்தங்கள் சார்ந்து வருவது அது. ஆனால், அவர்கள் இருவரும் மட்டுந்தான் என்று பேசுவதும், அதற்காக ஒதுக்கப்படும் நேரமும் உண்மையிலேயே பாரதூரமான அளவைத் தாண்டிவிட்டது.

ஏனெனில், அலை அடிக்கும் திசையில் தக்கைகள் வேண்டுமானால் பயணிக்கலாம். படகுகளுக்கு அப்படி இருக்க முடியாது. படகுகளுக்கு இலக்கு முக்கியம்.