அயோக்கியர்களின் இறுதி ஆயுதம்…..

தமிழ் நாட்டு கலை வியாபாரக் கூத்தாடிகளின் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கூத்துக்கள் மக்களின் அன்றாட வாழ்வோடு தொடர்பற்ற கனவுலகத்தின் குத்துவெட்டுக்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கலையை வெறும் நுகர்வுப் பண்டமாக மாற்றியதில் கோப்ரட் சினிமாவிற்குப் பெரும் பங்குண்டு. அதிலும் மக்களின் அன்றாட வாழ்க்கையை சினிமாவோடு கட்டிப் போடும் அளவிற்கு இந்திய சினிமாக் கூத்தாடிகள் செல்வாக்குச் செலுத்துகின்றனர்.

தமிழ் நாட்டு மக்களது வாழ்க்கையோடும், எமது வாழ்க்கையோடும் கிஞ்சித்தும் தொடர்பற்ற சினிமாக் கூத்தாடிகளின் குத்துவெட்டு ‘தமிழ்த் தேசியத்திற்குள்’ நுளைந்த போதே இப்பதிவை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது.

அடிப்படையில் இன்றுள்ள தென்னிந்த நடிகர் சங்கம் ஊழல் செய்ததாக நீதிமன்றம் பரிந்துரைத்தைத் பயன்படுத்தி புதிய குழு தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. இங்கு புதிய குழு நியாயமான மனிதர்களைக் கொண்டதா இல்லையா என்பது எமக்குத் தேவையற்ற விவாதம்.

இங்கு விவாதப் பொருள் பாரதிராஜா, சீமான், கௌதமன் போன்ற தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகளின் தலையீடு மட்டுமே. அதாவது பதவியிலிருக்கும் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சரத்குமார், ராதாரவி போன்றோர் ஊழல் செய்தார்களா என்பதெல்லாம் பிரச்சனையில்லை, அவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று இப் பிழைப்புவாதிகள் கூறுகின்றனர்.

கௌதமன், பாரதிராஜா, சீமான் போன்றவர்கள் ‘தமிழ்த் தேசியம்’ என்ற பெயரில் ஈழ மக்களின் ஜனநாயக முகத்தில் கரி பூசியவர்கள், ஈழத் தமிழர்க்ளின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை சினிமாக் கூத்தாக மாற்ற முற்பட்டவர்கள். தமிழ்த் தேசியத்தைப் பயன்படுத்தி புலம்பெயர் நாடுகளில் தமது பிழைப்பை உறுதி செய்துகொண்டவர்கள்.

சமூகத்தைச் சீரழிக்கும் சினிமாப் பிழைப்பில் தோல்வியடைந்த பலரின் அடுத்த குறி தமிழ்த் தேசியமாகிவிடுகிறது. புலம்பெயர் நாடுகளில் அருவருக்கும் அரசியல் நடத்தும் ஐரோப்பிய நிறவாதக் கட்சிகளுக்கு எந்தவகையிலும் குறைவில்லாமல் இனவாதத்தை உமிழும் இவர்கள் ஈழப் போராட்டத்தை இனவாதமாக்கிச் சிதைப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

மொழி என்பது தேசிய இனத்தின் இயல்புகளில் ஒன்றே தவிர அதுவே தேசிய இனத்தின் முழுமை அல்ல. அயர்லாந்தில் ஆங்கிலம் பேசும் மக்கள் இங்கிலாந்தின் ஆங்கிலம் பேசும் அரச அதிகாரத்திலிருந்து விடுதலை பெறப் போராடுகிறார்கள்.

அதே போல ஈழத் தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைக்காக ஈழத்தைச் சார்ந்த தேசிய இனம் போராடுவது நியாயமானது, அதற்கு தமிழ் நாட்டிலுள்ளவர்கள் ஆதரவளிப்பதும் நியாயமானது. ஆனால் அவை இரண்டையுமே இணைத்து தமிழ்த் தேசியம் என்று பொதுவான வரைமுறைக்குள் அடக்கி அயோக்கியர்களை முன்னிலைப்படுத்துகிறார்களே, அது ஈழப் போராட்டத்தின் பின்னடைவு.

தென்னிந்தியாவில் ஊழல் பெருச்சாளிகளை தமிழ்த் தேசியம் பாதுகாப்பதைப் போலவே, தமிழ்த் தேசியம் என்ற தலையங்கத்தில் புலம்பெயர் நாடுகளில் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கும் தமிழ்த் தேசியம் பயன்படுகிறது.

இங்கு தமிழ்த் தேசியம் மட்டுமல்ல, தேசிய விடுதலைக்கான போராட்டம் கூட, சரியாகத் திட்டமிடப்படாவிட்டால் ஆதிக்க சக்திகளின் நலன்களுக்காகவே பயன்படும் என்பதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம்.

ஆக, தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தேசிய இனங்கள் மத்தியிலுள்ள ஆதிக்க சக்திகளுக்கும் எதிரானதே என்பதை இச சம்பவங்கள் எல்லாம் நமக்குக் கற்றுத்தருகின்றன.

ஒரு தேசிய இனத்தின் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை அறிந்துகொள்வதற்குப் பதிலாக தமிழர்கள் என்ற தலைப்பில் எதிரிகளையும் இணைத்துக்கொள்கிறார்களே, அங்கு தான் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தோல்வியே ஆரம்பமாகிறது.
தமிழ்த் தேசியம் என்பதும், தேசியம் என்பதும் மக்கள் சார்ந்த கோட்பாடாகத் திட்டமிடப்படாவிட்டால் அது அயோக்கியர்களின் புகலிடமாகிவிடும் என்பது நடிகர் சங்கத் தேர்தலில் மட்டுமல்ல, முள்ளிவாய்க்கால் அழிப்பிலும் நிறுவப்பட்டது.