“ஆண்கள் உடல்அரசியலைப் பேசலாம் என்றால்,பெண்கள் ஏன் உடலரசியலைப் பாடக்கூடாது”?

(-புஷ்பராணி சிதம்பரி)

ஈழத்தின் வடபுலத்தில் மயிலிட்டிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது பிரான்ஸில் வசித்து வரும் புஷ்பராணி, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும்,அதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TELO) இயங்கிய பெண்போராளி ஆவார். அத்துடன் இவர் தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவுக்கு அமைப்பாளராக இருந்திருக்கின்றார். ஆயுதம் தாங்கிய தமிழ் ஈழத்தேசியவிடுதலைப் போராட்ட வரலாறில் முதன் முதலாகச் சிறை சென்ற இரு பெண்போராளிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப்படுத்துள்ளார். இவர் பல்வேறு தளங்களில் இருந்தவர்களுடனும், அன்றிருந்த தமிழ் ஈழத்தேசிய விடுதலைப்போராட்ட இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும், அவர்கள் அந்தப் பொறுப்புகளுக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடன் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஓர் சக போராளியாக இருந்திருக்கின்றார். இந்த விடுதலைப்போராட்டத்தில் பலவிதமான சித்திரவதைகளையும் சாதியரீதியாக ஒடுக்குமுறையையும் சந்தித்தவர் புஷ்பராணி சிதம்பரி. அன்றைய காலகட்டத்தில் இருந்த சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கை இழந்த இளைய தலைமுறையினருடன் இவர் ஆயுதப் போராட்டத்தினாலேயே எமக்குத் தீர்வு உண்டு என்று அப்பொழுதே எண்ணத்தொடங்கியவர். அண்மையில் இவரால் தமிழ் எழுத்துப் பரப்புக்கு “அகாலம் ” என்ற நூல் எமக்கு கிடைத்துள்ளது.