இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த தலைவர்

சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பு ஆந்திரபிரதேசத்தில் இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் ராகுல்காந்தியைச் சந்திக்க நேர்ந்தது.
அரசியலை அதிகாரத்தின் பிடியில் இருந்து விடுவித்து, மீண்டும் சேவைக்கான களமாக மாற்ற வேண்டும் என்கிற அவரது தீராத பெருங்கனவின் முதல் முயற்சி அந்த நிகழ்ச்சி. அந்த நிகழ்வில் ஒரு சிலரை அவர் சில மணித்துளிகளில் இனம் கண்டு கொண்டார். அதில் நானும் ஒருத்தி. அவரது உள்ளுணர்வு அபாரமானது என்பதை பின்னாளில் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன்.
அடுத்த சில மாதங்களில் அவர் இளைஞர் காங்கிரசில் இந்தியா முழுவதும் நேர்மையான, களப்பணியில் விருப்பமுள்ள, மக்களை நேசிக்கின்ற இளைய தலைமுறைத் தலைவர்களை கண்டடைய ஒரு குழுவை நியமித்தார்.

அந்த தேடல் தான் என்போன்ற எந்த அரசியல் பின்னணியும் இல்லாத ,எளிய பின்புலம் உள்ள 22பேருக்கு இளைஞர் காங்கிரஸ் தேசியக் கமிட்டியில் பணியாற்ற வாய்ப்பளித்தது. முதல் கூட்டத்திலேயே எங்களுக்கு அவர் சொன்னது “என்னை சார் என்று அழைக்கத் தேவையில்லை. ராகுல் என்று பெயர் சொல்லியோ, விருப்பமில்லாவிட்டால் ராகுல்ஜி என்றோ அழைக்கலாம” என்பதுதான். நான் உட்பட பலரும் இன்றுவரை அவரை அப்படித்தான் அழைத்து வருகிறோம்.

ஆரம்பகாலத்தில் எனக்கும், அவருக்கும் இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு , விவாதத்தில் முடிவதுண்டு. சக நண்பர்கள் தலைமையோடு ஏற்படும் கருத்துமோதலை பதட்டத்தோடு பார்த்துக்கொண்டிருக்க அவர் இயல்பாக எடுத்துக்கொள்வார். அவர் கருத்து சரியல்ல என்று நினைத்தால், பலர் முன்னிலையில் எவ்வித ஈகோவும் இல்லாமல் திரும்பப் பெற்றுக்கொள்வார்.

தொடர்ந்து அவரோடு சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு அவருடைய வாசிப்பின் ஆழமும்,சிந்தனைத் தெளிவும்,நல்லியல்புகளும்,எந்தச் சூழ்நிலையிலும் அநீதியோடு சமரசம் செய்துகொள்ளாத அவரது மன உறுதியும்,( இன்றுவரை இதே குணத்தால் நெருக்கடிக்கு உள்ளாகும் என் போன்ற பலரையும் காப்பாற்றி வருகிறார்) போராட்ட குணமும் ,கடும் உழைப்பும்(ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் கூட சாதரணமாக பணியாற்றக் கூடியவர்), எளிய மக்கள் மீதான அவரது எல்லையற்ற அன்பும் அவரை அதிகம் புரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்தது.

எவ்வளவு கடினமான பணிச்சுமைக்கு மத்தியிலும் அவசியமான கேள்விகள்,சந்தேகங்களுக்கு பொறுமையாக விளக்கம் அளிக்கக்கூடியவர். புரிவதற்கு தாமதமானாலோ,புரிந்து கொள்ள முடியாவிட்டாலோ எரிச்சலடையாமல் பொறுமையாக எடுத்துச் சொல்வார்.

பல நேரங்களில் அவரது கணிப்பு சரியாகவே இருக்கும். ஆனால் சில சமயங்களில் நமக்கு அது சரியென்று தோன்றாது. அப்போதெல்லாம் நான் எனக்குச் சரியென்று பட்டதைத் தான் செய்வேன். அது சமயங்களில் அவர் கணித்தது போல் தவறாகப் போய்விடும். ஸாரி என்று போய் நின்றால் சிரித்துக்கொண்டே வருத்தப்பட ஒன்றுமில்லை. எல்லாம் ஒரு அனுபவம் தான் என்று சொல்லிவிடுவார்.

அவருக்கென்று ஒரு கனவு உணடு. அது அரசியலை மாற்றவேண்டும் என்பது தான். நமது காலத்தில் முடியாமல் கூடப் போகலாம். ஆனால் நாம் முதலடியை எடுத்து வைக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருப்பார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தொகுதி மக்களே தேர்வு செய்வது போன்ற பல விசயங்கள் அந்தப் பட்டியலில் உண்டு.
அவரோடு பேசிய,பழகியவர்களுக்கு அவரது நல்லெண்ணமும்,தொலை நோக்குச் சிந்தனையும் புரியும். அதிர்ந்து பேசாதவர்.ஆனால் உறுதியானவர்.

2013 வாக்கில் பிஜேபி ஐ டி செல் மிகுந்த பொருட்செலவில் ,சில அடிமை ஊடகங்களின் உதவியோடு அவர் மீது சேற்றை வாரி இரைக்க ஆரம்பித்தது. விவசாயிகளுக்காகப் போராடி விவசாய நிலங்கள் விவசாயிகளுக்கே சொந்தம் என்று சட்டம் வரக் காரணமான ஒருவரை, வேதாந்தா என்கிற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக ஒடிய மலைவாழ் மக்கள் பக்கம் நின்ற ஒருவரை, அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்குக் கட்டுப்பட்டு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்ற உச்சநீதிமன்ற உத்திரவை மாற்ற முயன்ற காங்கிரஸ் அரசின் அவசர சட்ட நகலை கிழித்தெறிந்த ஒருவரை ( இல்லாவிட்டால் இன்று சசிகலா சிறையில் இருந்தே தேர்தலில் போட்டியிட முடியும்), ஆட்சியில் இருந்தபோதும், இல்லாத போதும் எப்போதும் எளிய மக்களோடு இருப்பதே அரசியல் என்று நம்புகிற ஒருவரை, தனது அரசியல் எதிரிகளை மறந்தும் கூட நாகரிகத்தின் எல்லை கடந்து விமர்சித்து விடாத தனது கட்சியினரும் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிற ஒருவரை, எளிமையும், அன்பும், கண்ணியமும் மிகுந்த ஒருவரை கேலிப்பொருளாகச் சித்தரிக்கத் தொடங்கினார்கள்.

இவ்வளவு நியாயமற்ற அவதூறுகளை எப்படி ஒருவர் எதிர்கொள்ள முடியும்? எனக்கு ஒருநாள் உண்மையிலேயே இரத்தம் கொதித்துவிட்டது. இதை இப்படியே விட்டுவிடப் போகிறோமா எனறு கேட்டேன். ஒரு வரி பதில் தான் வந்தது. Perception will change reality does not. அப்பொழுது எனக்கு அந்த பதில் அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. அதற்கும் பதில் புன்னகைதான்!

ஆனால் காலப் போக்கில் மோடியின் மீதான கட்டியெழுப்பப்பட்ட பிம்பம் சரிந்து ராகுலை பலரும் புரிந்துகொள்ள முயற்சி செயவதை அனுபவத்தில் உணர்கிறேன். இப்பொழுது அவர் ஒரு நல்லெண்ணமுள்ள ,கண்ணியமான மனிதர் என்ற அளவில் எல்லோருக்கும் அவரைப் பிடித்திருக்கிறது. ஆனாலும் ஒரு ஆனா.. இரு(ழு)ப்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அதற்கான காரணங்களையும்!

அவருக்கு சிலரைப் போல பிரிவினை,வெறுப்பின் விஷத்தை விதைக்கும் உணர்ச்சி மிக்க பேச்சு வராதுதான். கணக்கு வழக்கில்லாமல் பொய் சொல்ல வராதுதான், ஆடம்பரமாக உடையணிந்து இமேஜ் மெயிண்டெய்ண் செய்ய வராது தான், விவசாயிகள், எளிய மக்கள் இவர்கள் துயரத்தில் இருக்கும் போது அவர்களைப் பார்க்கப் பிடிக்காமல் திரும்பிக் கொள்ள முடியாதுதான்,வெற்றியோ,தோல்வியோ கண்ணியத்தையும், உண்மையையும் விட்டுக்கொடுக்க முடியாதுதான். இதனால் எல்லாம் தான் அவர் என் தலைவர்… இந்த தேசம் விரைவில் அவரைப் புரிந்துகொள்ளும்

அவரோடு பத்தாண்டுகள் பணியாற்றிய அனுபத்தில் சொல்கிறேன் காங்கிரஸ் கட்சிக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த மிகச்சிறந்த தலைவர் அவர். He is the best thing happened to the Country and Congress Party.
இப்பொழுது சிலர் அவரை எள்ளி நகையாடலாம். ஏனெனில் அவர்களுக்குத் தெரியும் அவரது பலம். அதனால் தான் அவரை கோமாளி போல சித்தரித்து பலவீனமாக்க நினைக்கிறார்கள்.
ஆனால் உறுதியும்,உண்மையும்,லட்சியக் கனவும் உள்ள ஒருவரை யாராலும் பலவீனப்படுத்திவிட முடியாது.
மக்கள் தன் தலைவனை சரியான தருணத்தில் இனம் கண்டுகொள்வார்கள். அந்த வரலாற்றுத் தருணம் விரைவில் வரும்.

எங்கு போய்விடப் போகிறோம். எல்லோரும் இங்குதானே இருக்கப் போகிறோம். அதைப் பார்ப்பதற்கு! ஒரே ஒரு வேண்டுகோள்.அடுத்தமுறை பிஜேபி ஐ டி செல் பரப்பும் அவரைப் பற்றிய வாட்ஸ் அப் கேலிகளைப் படிக்கும்,பகிரும் முன் அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று ஒரு கணம் யோசியுங்கள். கூடவே மோடி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதையும்.
நல்ல தலைவர்களைத் தவற விட்ட ஒவ்வொரு தேசமும் காயப்பட்டிருக்கிறது. நமது ஆன்மாவில் அந்தக் காயம் படக்கூடாது