இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் – 7)

அன்பார்ந்த நண்பர்களே!
ஆற்றல் மிகு தோழர்களே!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் (ததேகூக்காரர்கள்;) இலங்கையின் 13வது திருத்த அரசியல் யாப்பு மூலமாக வந்த மாகாண சபைகள் எந்தவகையிலும் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாகாது என்றும் அதனால் எந்தவித பிரயோசனமும் இல்லை என்றும் கூறுகின்றனர்.
13வது திருத்த அரசியல் யாப்பை நீங்கள் ஏற்கவில்லை என்றால் எதற்காக நீங்கள் அதனடிப்படையிலான மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டீர்கள்? மாகாண சபையை குழப்பம் விளைவிக்கும் ஓர் அரங்கமாக மட்டும்தான் நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்களா? அதற்காக மட்டுமேதான் மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்றி அதனைக் கைப்பற்றப் போகிறீர்கள் என்று நீங்கள் தமிழ் மக்களுக்குச் சொல்லவில்லையே!

வைக்கோல் பட்டடை நாயின் தத்துவம்
மோசமானதென்று தான் எல்லோரும் படித்தோம்

வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது நீங்கள் வெளியிட்ட உங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை நீங்களே திரும்ப ஒருமுறை எடுத்து நன்கு உன்னிப்பாக வாசித்துப்பாருங்கள். அதில் நீங்கள்:-
• பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புனர்வாழ்வு,
• அழிந்து போன பொருளாதார மற்றும் நிர்வாகக் கட்டமைப்புக்களைப் புனர்நிர்மாணம் செய்தல்,
• இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு,
• விதவைகளுக்கு கௌரவமான புனர்வாழ்வு
• சிதைந்து போன விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்களை மீண்டும் நிலைநிறுத்தி அபிவிருத்தி செய்தல்
என எத்தனை வாக்குறுதிகளை நீங்கள் தமிழர்களுக்கு அடுக்கடுக்காக அளித்திருக்கிறீர்கள் என்பது நினைவிருக்கிறதா?
இப்படியாக, ததேகூக்காரர்களைக் கேட்டால் அதற்கு அவர்கள் சொல்லும் பதில் என்ன தெரியுமா? அவர்கள் தாங்கள் மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்றி அவற்றைக் கைப்பற்றாவிட்டால் அரசாங்க சார்பு கட்சிகள் – குழுக்கள் அவற்றைக் கைப்பற்றி அதன் மூலம் மக்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்து மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறும் நிலை ஏற்படும் என்பதாலேயே தாங்கள் மாகாண சபைகளைக் கைப்பற்றியதாகச் சொல்கிறார்கள்.
அப்படித்தான் அரசாங்க சார்பு கட்சிகள் – குழுக்கள் கடந்த காலங்களில் உள்ளுராட்சி மன்றங்களைக் கைப்பற்றி மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை வளர்த்துக் கொண்டன என்கின்றனர். அதனால் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமது அடிப்படைத் தேவைகள் மற்றும் அவசியமான தேவைகளுக்குப் பயனற்றது எனக் கருதும் நிலை ஏற்படுகிறது. அதனால் சிறிது சிறிதாக ததேகூவிடமிருந்து தமிழர்கள் அரசாங்கத்தின் பக்கம் சார்ந்து செல்லும் நிலைமை படிப்படியாக அதிகரித்தது என்கின்றனர். அதனைத் தடுக்கவே தாங்கள் மாகாண சபைகளைக் கைப்பற்றியதாகக் சொல்கிறார்கள்.
அதேவேளை, ததேகூக்காரர்களிற் பெரும்பான்மையானவர்கள் தாங்கள் முதலிற் கூறியதற்கு முழுக்க முழுக்க முரணாக இப்போதிருக்கும் மாகாண சபையினூடாக எதையும்; மக்களுக்குச் செய்ய முடியும் என தாங்கள் நம்பவில்லை என்கின்றனர்.
எதையும் செய்ய முடியாத மாகாண சபையை வைத்துக் கொண்டு அரசாங்க சார்பான கட்சிகள் மட்டும் எதைச் சாதித்துவிடப் போகிறார்கள்? அவர்களாலும் மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்படாதுதானே? அவர்கள் மாகாண சபையினூடாக மக்களுக்கு நன்மை செய்து விடுவார்கள் என்று நீங்கள் ஏன் அஞ்ச வேண்டும்? என்று கேட்டால், அதற்கு அவர்களிடம் தெளிவான பதில் எதுவும் இல்லை.
அரசாங்கம் தனக்கு சார்பான கட்சிகள் மாகாண ஆட்சியில் இருந்தால் அவர்களுக்கு அதிகாரத்தையும் பணத்தையும் வழங்குகிறது என்று இந்த ததேகூக்காரர்கள் மொட்டையாகச் சொல்கிறார்கள். அரசாங்க சார்புக் கட்சிகள் மாகாண சபையில் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ஊடாகத் தானே மாகாணத்தின் பிரதேச அபிவிருத்திக்கும் மாகாண மக்களின் தேவைகளுக்குமான பயன்தரும் திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றுகிறது.
அரசாங்க சார்பு கட்சிகள் மாகாண சபையில் இருந்தால் அவர்கள் மாகாண சபையின் ஆட்சியாளர்கள் என்ற அந்தஸ்த்தோடும் மக்களால் பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற உரிமையோடும் அரசாங்கத்திடம் நட்புணர்வோடு கேட்க வேண்டியவற்றைக் கேட்டும், சுமுகமாக பேச்சுவார்த்தைகளை நடத்தியும் மாகாணத்திற்;கும் மக்களுக்கும் தேவையானவற்றைப் பெற்று செயற்படுத்துவார்கள். மேலும் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து தங்களுக்குச் சார்பானவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்ற நன்றி உணர்வோடும் ஒரு கடமைப்பாட்டு எண்ணத்தோடும் அரசாங்கம் ஒன்று செய்ய வேண்டிய இடத்தில் பத்தைச் செய்ய வேண்டும் என முன்வருமே! என்று விழித்துக் கூறினால்
அரசாங்கத்தின் மீதான தமது ஆத்திரத்தையும் வெறுப்பையும் கொட்டித் தீர்க்கிறார்களே தவிர ததேகூக்காரர்கள் தமிழ் மக்களுக்கான நன்மை தீமைகள் பற்றிய விளக்கத்தை அவர்கள் தருவதாக இல்லை.
ஊரைக் கவருவதே கொள்கையாகிப் போனால்
உருட்டலும் பிரட்டலும் தானே நடைமுறைகளாகும்
உண்மையில் மாகாண சபைகள் மூலம் மக்களுக்கு ஏதும் நன்மைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ததேகூக்காரர்களிற் பெரும்பான்மையானவர்களிடம் இல்லையென்றே கொள்ள வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல, மாகாண சபையால் எதுவித நன்மையும் தமிழ் மக்களுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதிலும் ததேகூக்காரர்கள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள் என்பதுவும் தெளிவாகத் தெரிகின்றது.
நீங்கள் மாகாண சபைத் தேர்தல்களிலும் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களிலும் பங்குபற்றி அவற்றின் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதற்கும் அவற்றிற்கான தேர்தல்களில் பங்குபற்றாமலே இருப்பதற்கும் இடையில் என்ன வேறுபாட்டை நீங்கள் ஆக்கியிருக்கிறீhகள்? என்று கேட்டால் – மக்களுக்கான அடிப்படை மற்றும் அவசியமான தேவைகள் – அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைப் பொறுத்த வரையில் இப்பொழுதும் நீங்கள் பிரயோசனமற்றவர்கள்தானே! என்று கூறினால் அதற்கு இந்த ததேகூக்காரர்கள், தங்களுக்கு மஹிந்த அரசாங்கம் போதிய அதிகாரங்களையோ போதிய நிதியையோ தரவில்லை என்கிறார்கள்.
• மஹிந்த அரசாங்கம் உங்களோடு ஒத்துழைக்க வேண்டுமென்று எதிர்பார்த்தா நீங்கள் மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்றினீர்கள்?
• மஹிந்த அரசாங்கம் உங்களோடு ஒத்துழைக்க விரும்பும் விதமாக நீங்கள் எப்பொழுதாவது நடந்து கொண்டதுண்டா?
• மஹிந்த அரசாங்கத்துடன் “உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற விதமாக விட்டுக் கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுத்தும், உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய இடங்களில் குரல் கொடுக்கும் வகையாகவே செயற்படுவோம்” என்று மக்களுக்கு உங்கள் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியதுண்டா?
• நீங்கள் எப்போது பார்த்தாலும் மஹிந்த சகோதரர்களை சர்வதேசக் கூண்டில் ஏத்துவதிலும் சிறிலங்கா அரசை சர்வதேச சமூகங்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதிலும் தானே மிக அக்கறையாக நடந்து கொள்கிறீர்கள்?
• மஹிந்த அரசாங்கத்துக்கு நீங்கள் ஒவ்வொரு நேரமும் சவாலாகவும் சங்கடமாகவும் இருந்து கொண்டு, சர்வதேச அரங்கங்களில் சிறிலங்காவுக்கு எதிரான நாடுகளின் அணிவரிசையில் குந்திக் கொண்டும் இருக்கும் நீங்கள், பின்னர் மஹிந்த உங்களோடு ஒத்துழைக்கவில்லை என முறையிட்டால் அது உங்களுடைய கருத்தோடு நீங்களே முரண்படுவதாகவல்லவா உள்ளது?
• இப்படிப்பட்ட ஒரு நிலையில் மஹிந்த என்ன, மஹிந்த நிலையில் இருக்கும் ஒரு மண்ணாங்கட்டி கூட உங்களுக்கு ஒத்துழைக்கும் – உங்களை அணைத்து துணையாக இருக்கும் என நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
• சிங்கள விரோத தமிழ்த் தேச இன உணர்ச்சிகளை ஊட்டி வாக்குகள் சேர்க்கும் அரசியல் ஒன்று உங்களுக்கு இருந்தால் அதேவாறான ஓர் அரசியல் ஒவ்வொரு சிங்கள அரசியல்வாதிக்கும் இருக்கும் தானே!
இவ்வாறு கேள்விகளை ஒரு பொதுவான நியாயத்தின் அடிப்படையில் எழுப்பினால், அப்போது ததேகூக்காரர்கள், “இல்லையில்லை! நாங்கள் சலுகைகள் கேட்கவில்லை! எங்கள் உரிமைகளையே கேட்கிறோம், மாகாண சபைகளுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய அதிகாரங்களையும் நிதிவளங்களையுமே கேட்கிறோம்” என்று கூறுகிறார்கள்

ஒப்பாரியை போராட்ட முழக்கமாகக் கொக்கரிப்பதில்
தமிழ் தேசியக் காரர்களுக்கு ஒப்பாரும் மிக்காருமில்லை

மாகாண சபைகளுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய அதிகாரங்களையும் நிதிவளங்களையும் மஹிந்த அரசாங்கம் தரவில்லை என்பதைப் பற்றி இங்கு விவாதிக்க வேண்டாம். அதை அப்படியே வைத்துக் கொள்வோம், அப்படியானால் அவற்றை நீங்கள் யாசகம் கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இல்லையே. மஹிந்த தரவில்லையே என முணுமுணுத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லையே! சட்டப்படி கிடைக்க வேண்டிய அதிகாரங்களையும் வளங்களையும் மாகாண சபைகளுக்கு மத்திய அரசாங்கம் தரவில்லை என்றால் நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைகளையெல்லாம் இதுவரை முன்னெடுத்திருக்கவல்லவா வேண்டும்!
அதற்காக நீங்கள்:

 1. மஹிந்தவின் மத்திய அரசாங்கம் அரசியல் யாப்பின் எந்த விதியின்படி மாகாண சபைக்கு என்ன அதிகாரத்தை எந்த வகையாக தரவில்லை அல்லது தரமறுக்கிறது என்பது தொடர்பான எந்தவொரு தீர்மானத்தையும் ஏன் இதுவரை மாகாண சபையில் நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் ஒரு சட்ட மேதை அவரால் இதுவரை எத்தனையோ ஆக்கபூர்வமான – மாகாணசபையின் அதிகாரங்கள் தொடர்பாக மத்திய அரசாங்கத்தை நோக்கி கோருகின்ற தீர்மானத்துக்கான பிரேரணைகளை வரைந்து தள்ளியிருக்க முடியும். ஆனால் இதுவரை அப்படியெதுவும் நடக்கவில்லையே! ஏன்?
 2. அரசியல் யாப்பின்படி யாருக்கு என்ன அதிகாரங்கள், உரிமைகள், கடமைகள், பொறுப்புகள் உரியவை என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கோ, ஆளுநருக்கோ அல்லது எந்த அமைச்சருக்குமோ கிடையாது. அந்த அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு மட்டுமே உண்டு. ஆனால் மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பாக நீங்கள் மாகாண சபையின் வழக்கு என இதுவரை உச்சநீதிமன்றத்தை ஒரு தடவை கூட அணுகவில்லையே!
 3. இலங்கையின் நீதி;;த்துறை சுதந்திரமாக இல்லை, உச்சநீதிமன்றமும் மஹிந்த அரசாங்கத்தின் கைப்பொம்மையாகவே இருக்கின்றது என்று சாக்குப் போக்குச் சொல்லாதீர்கள். இதை உங்களின் வீராவேச மேடைப் பேச்சுக்கான விடயமாக வைத்துக் கொள்ளுங்கள். என்னதான் இருந்தாலும் மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்பாக சர்வதேசங்களை அணுகுவதற்கு முதலில், இலங்கையின் உச்சநீதி மன்றத்தில் அரசியல் சாசன வழக்குகளை அடுத்தடுத்து தொடுப்பதுவும் அவற்றின் மீது உங்கள் சட்ட நியாயங்களை வலுவாகவும் தீர்க்கமாகவும் நிலைநாட்டுவதுவும் எவ்வளவு அவசியம் என்பதை தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களில் மேதையான உங்கள் முதலமைச்சர் மற்றும் கௌரவ சுமந்திரன் போன்றோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே!
 4. உச்சநீதிமன்றத்துக்கு மாகாணசபையின் அதிகாரங்கள், முன்னுரிமைகள் தொடர்பான அரசியல் சாசன வழக்குகளைக் கொண்டு செல்வதற்கு முதல், இன்றைய இலங்கையின் அரசியல் சாசனத்தின்படி மாகாண சபைகளுக்கு கணிசமான அதிகாரங்கள் உள்ளன என்பதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமல்லவா?
 5. இந்த மாகாண சபைகளுக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லையென்று நீங்களே கூறிக்கொண்டு, பின்னர் இந்த மாகாண சபைகளுக்கு சட்டப்படியாக உள்ள அதிகாரங்களை அரசாங்கம் தரவில்லை என்றால் நீங்களே உங்களுக்குள் முரண்படுகிறீர்கள் – தெளிவற்றவர்களாக இருக்கிறீர்கள் என்றல்லவா அர்த்தம்?
  இப்படியெல்லாம் பகுத்தறிவான கேள்விகளை அடுத்தடுத்து தர்க்கபூர்வமாக ஒரு கோர்வையாக அடுக்கிக் கேட்டால் கடைசியாக, “விடிய விடிய இராமர் கதை விடிஞ்சதும் இராமருக்கு சீதை என்ன முறையென்று கேட்டானாம்” என்பது போல இந்த ததேகூக்காரர்கள் மீண்டும் தொட்ட இடத்துக்கே வந்து தாங்கள் மாகாண சபை முறையை அங்கீகரிக்கவில்லை என்றும் தங்களுக்கு மாகாண சபைகள் மீது நம்பிக்கை இல்லை என்றும், தங்களுக்கே நம்பிக்கையில்லாத மாகாண சபைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படச் செய்வது தங்களுடைய வேலை இல்லை என்றும் கூறுகின்றனர்.
  மாகாணசபையை “கெடுக்கிறன் பார் பந்தயம் பிடி” என்கிறார்கள்
  கெட்டழிவது இவர்களைத் தலைவர்களாக்கும் தமிழ்ச் சமூகமே!

உண்மையில் இப்போதுள்ள மாகாண சபைகள் ஏதோ ஒரு வகையில்; இன்றைய காலத்துக்கு சிறிதளவாயினும் அவசியமானதாக இருந்தாலும் கூட – அதனை ஓரளவாயினும் பயனுடையதாக ஆக்குவதற்கு வாய்ப்பு இருந்தாலும் கூட, அதன் மீது மக்களுக்கு சிறிதளவு நம்பிக்கையும் ஏற்பட்டு விடாமற் பார்த்துக் கொள்வது அவசியம் என்றும் தமது தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை சுலோகங்கள் கொண்ட அரசியலுக்கு இந்த மாகாண சபையை செயற்திறன் உள்ளதாக ஆக்குவது பொருத்தமற்றது என்றுமே பெரும்பான்மையான ததேகூக்காரர்கள் கருதுவது தெளிவாகத் தெரிகின்றது.
தமிழர்களின் பிரச்சினையை உலகறியச் செய்யவும், மஹிந்த அரசை அம்பலப்படுத்தவும், சர்வதேச அளவில் தமிழ்த் தலைமைகளுக்கு ஓர் உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைக்கவும், அதன் மூலம் சர்வதேச சமூகம் தமிழர்கள் விரும்புகின்ற ஒரு தீர்வை ஆக்கித் தரவுமான நிலைமையை ஏற்படுத்தவுமே தாங்கள் வடக்கு மாகாண சபையைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்
ஆக மொத்தத்தில் ததேகூக்காரர்களைப் பொறுத்த வரையில்

 1. இந்த மாகாண சபையை வேறெந்தக் கட்சியும் மக்களுக்குப் பயன்படும் விதமாக செயற்படுத்தி விடாமற் பார்த்துக் கொள்ளுதல்;:
 2. இந்த மாகாண சபையை ஒரு பயனற்ற நிறுவனம் எனும்; எண்ணத்தை மக்கள் மனதில் பதியும் வண்ணம் இதனை ஒரு பயனுமற்ற நிறுவனமாக முடக்கி வைத்திருத்தல்:
 3. இந்த மாகாண சபையை தமது குறுகிய தமிழ்த் தேசிய இனவாத அரசியல் நாடகங்களுக்கு வசமான களமாகப் பாவித்துக் கொள்ளுதல்:
 4. இந்த மாகாண சபையின் பதவிகளை வைத்து தமிழர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற முயற்சித்தல் என்ற பெயரில் தங்களுக்கான சமூக அங்கீகாரம் மற்றும் சர்வதேச அரசுகளுடனான தமது தனிப்பட்ட தொடர்புகளை வளர்த்துக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ளுதல்;:
 5. இந்த மாகாண சபை மூலம் கிடைக்கும் உத்தியோக பூர்வ அந்தஸ்த்துகளையும் வசதி வாய்ப்புகளையும் மற்றும் அனுகூலங்களையும் பெற்று தமது பாக்கட்டுகளில் கமுக்கமாக அமுக்கிக் கொண்டு மாகாண ஆட்சியை நடத்துவதில் எந்தவித அக்கறையும் காட்டாமல் சிறிலங்கா அரச ஆட்சிக்கு எதிரான மேடை அரசியலை சீவிய பரியந்தம் நடத்திக் கொண்டிருத்தல்
  என்பவற்றையே கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர்.
  இங்கு காணப்படும் ஒரு பொது உண்மை என்னவென்றால், ததேகூக்காரர்களைப் போலவே அரசாங்கத்திலுள்ள சிங்கள இனவாத சக்திகளும் இந்த மாகாண சபை செயற்படாமல் இருக்க வேண்டும் – செயற்பட முடியாமல் முடக்கப்பட வேண்டும் என்றே விரும்புகின்றன. இரண்டு பகுதியினருக்கும் அவர்களது நோக்கத்துக்கான அடிப்படைகள் வேறுபட்டாலும் சாதிக்க முனையும் இலக்கு ஒன்றாகவே உள்ளது. எனவே இருபகுதியினரும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் துணையாகவே உள்ளனர்.
  கடந்த பல தசாப்தங்களாக, இந்த இரண்டு மிருகசித்தாந்தவாதிகளும் மக்களுக்கு ஏற்படுத்தும் அழிவு – நாசம் ஒன்றேதான் – உயிரழிவுகள், பொருளழிவுகள், இயற்கைவள அழிவுகள், கணவனை இழந்தவர்களாக லட்சக்கணக்கானோர், அம்மாவோ அல்லது அப்பாவோ இல்லாத இலட்சக் கணக்கான குழந்தைகள், ஊனமுற்ற பல்லாயிரக் கணக்கானோர், வேலையில்லாது விபரீத எண்ணங்களோடு திரியும் லட்சக்கணக்கான இளைஞர்கள், சிதறிய சமூகம், பதறிய சீவியம், தேச மக்களிடையே பகைமை, அமைதியின்மை, அடிப்படைச் சுதந்திரங்கள் பறிபோனமை, நம்பிக்கையின்மை, உண்மைகள் பேச முடியாமை, சொந்த மண்ணை விட்டு நாளாந்தம் ஓட்டம், கட்டாக்காலி நியாயங்கள், அந்நியக் கடன் அதிகரிப்பு, உள்நாட்டில் புகுந்து விளையாட அந்நியர்களுக்கு கதவுகளைத் திறந்து விடல், பிறகு “எங்களை எல்லாருமாகச் சேர்ந்து அழித்துப் போட்டார்கள்” என்று ஓலம் – இவற்றைத் தவிர இந்த இரண்டு மிருக வாதிகளும் மக்களுக்கு இதுவரை பெற்றுத்தந்தது எதுவுமில்லை.
  அடுத்த கடிததத்தில் தொடருவோம்.
  இக்கடிதம் தொடர்பான உங்கள் அபிப்பிராயங்கள், எழும் கேள்விகள் மற்றும் உங்கள் விமர்சனங்களை எழுதங்கள்! அனுப்புங்கள்!
  இக்கடிதத் தொடர் பயனுடையதென நீங்கள் கருதினால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு
உங்கள் அன்பிற்குரிய – தோழமைக்குரிய
அ. வரதராஜப்பெருமாள்