இலங்கை: முதலை விழுங்கும் அரசியல்

-அதிரன்

கணினி மென்பொருள்களை உருவாக்கி, அவற்றுக்காக வைரஸுகளையும் உருவாக்குவதுதான் வியாபாரத்தின் தந்திர அரசியல். இல்லையானால் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியுமா? இது அரசியலுக்கும் விதிவிலக்கானதல்ல; ஒரு வகையில் முதலை விழுங்கும் அரசியலைப் போன்றதுதான் இதுவும். ஆயிரக்கணக்கான முட்டைகளை மணலுக்குள் இட்டுப் புதைத்துவிட்டு, அந்த முட்டைகளுக்குள் இருந்து முதலைக்குட்டிகள் வெளியில் வரும் வேளை, அங்கு போய், வௌியில் வரும் குட்டிகளைப் பிடித்து விழுங்கிவிடுமாம் முதலை.

அதில் தப்பிப் பிழைத்து வருபவைதான் ஊருக்குள் அட்டகாசம் காட்டித் திரிகின்றன. சில பிரதேசங்களில், அவற்றுக்குப் பயந்து மனிதர்கள், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் செல்லவேண்டும்.

ஏகாதிபத்தியமும் ஒருவகையில் அப்படித்தான். வெளியில் தெரிந்து நடப்பவை மாத்திரம்தான் கொடுமை என்றோ, அடக்கு முறையென்றோ இல்லை. வௌியில் தெரியாமல் எத்தனையோ அடக்குமுறைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இலங்கையில் மேற்கத்தேயக் கலாசாரத்திலான அரசியலோ, அரசாங்கமோ நடைபெறுவதற்கான காலம் கனிவதற்கு எவ்வளவு வருடங்கள், எத்தனை சந்ததிகள் செல்லுமோ என்று நம்மால் கணக்கிட்டுக் கொள்ளவே முடியாது.

கடந்த 2015 ஐ விட்டுவிட்டால், இப்போதுள்ள அரசாங்கத்துக்கு அடையாளமே இல்லை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு, எல்லாமே பெரும் குழப்பமாகவே இருக்கின்றன.

100 நாள்கள் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டது முதல், மக்கள் பெரும் பெருமூச்சொன்றை விட்டு நிம்மதியடைவதற்குள் நாடு அதள பாதாளத்தில் இருக்கிறது. கடன் சுமைகள் நிறைந்து போயிருக்கின்றன. நாட்டைத் தூக்கி நிமிர்த்தப் போகிறோம் என்று, மக்கள் மீது சுமைகள் ஏற்றப்பட்டன. ஏற்றப்பட்ட சுமைகள், வரிகள் என்ற பெயரில் அவர்களை அழுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் வியாபாரிகள், வர்த்தகர்களை அது ஒன்றுமே செய்துவிடாது. அத்தனையும் கொள்வனவாளர்களாகிய சாதாரண மக்களையே நெருக்கிக் கொண்டிருக்கின்றன.

போதையற்ற நாட்டை உருவாக்குவதற்காக சிகரெட், மதுபானத்தின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இதனால் நாட்டுக்கு வருமானம் அதிகரித்துள்ளது. தடை செய்யப்படவேண்டிய பொருட்களுக்கு வரிகளை அதிகரித்து, மக்களை வழித்துத்துடைத்து, வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் அரசியல் என்றுதான் இதைச் சொல்லவேண்டும்.

நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்காக அரசியல் செய்யும் அரசாங்கம், இலங்கை நாட்டில்தான் இருக்கும் போலிருக்கிறது. ஆனால், யாரும் இவை இரண்டையும் நாட்டில் தடை செய்வதற்கான அரசியல் எதையும் செய்வதாயில்லை என்பதுதான் கவலையாக இருக்கிறது.

பிரித்தானியர்கள் நம்முடைய நாட்டிலிருந்து செல்கையில் தெரிந்தோ, தெரியாமலோ, திட்டமிட்டோ செய்துவிட்டுப் போன ஆட்சி முறை, இப்போதும் நம்நாட்டில் சண்டையைத்தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

நாட்டில் அதுவும் நாட்டை ஆளும் மன்றம், தினமும் பிரச்சினைகளுடன் இருக்கிறதென்றால், நாடு எவ்வாறு சுமூகமான செயற்பாட்டில் இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலை யாரும் சொல்லமாட்டார்கள்.

அரசியலுக்காக மக்களா, மக்களுக்காக அரசியலா என்ற கேள்வியை இப்போது கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது. அந்தளவுக்கு மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றி விற்றுத் தொலைத்துவிட்டார்கள்.

நீண்டகாலமாகவே, நம்முடைய மக்கள் மத்தியில் இருக்கின்ற பழக்கத்தில் ஏற்பட வேண்டிய மாற்றத்தையே, இலங்கையின் அரசியல் சூழல் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது. நாடுகளில் இராணுவப் புரட்சி வெடிக்கிறதோ இல்லையோ, மக்கள் புரட்சி வெடித்தாக வேண்டும் என்றுதான் புரட்சியாளர்கள் எல்லோரும் புறப்பட்டார்கள். அந்த வகையில் இலங்கையின் அரசியல், மக்கள் மயப்பட வேண்டிய காலம் இதுவாகத்தான் இருக்கிறது.

பொது அரசியலுக்கு இடையில் தமிழர்களின் அரசியல் கோணலாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.
புதிய அரசாங்கத்துக்காகக் கடந்த தேர்தலில், தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள். அதன் ஊடாக, ஒரு தீர்வுத்திட்டம் கிடைத்துவிடும் என்றுதான் நம்பினார்கள்.

100 நாள்களுக்குள் அரசியல் சாசனம் எழுதப்படும், தீர்வு வரும் என்றுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சொன்னார்கள். ஒன்றும் நடந்ததாக இல்லை. அடுத்து 2016க்குள் என்றார்கள். அதற்குள்ளும் ஒன்றும் நடக்கவில்லை. இரண்டு வருடங்கள் முடிந்து, மூன்றாவது வருடமும் நடைபெறுகிறது. தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியும் இல்லை; தீர்வும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான, அரசியல் எதிர்ப்பு அலைகள் மக்கள் பக்கம் இருந்து ஆரம்பித்திருக்கிறது.

அரசியல் என்பது பயன்படுத்துவதற்கானது. மக்களைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளாகிய பின்னர் அவர்களுக்காகச் செயலாற்றாது சட்டம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என்பதும். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்காகக் காத்திருப்பதும் பொருத்தமற்றதாகவே இருக்கிறது. அவ்வாறானால், அரசியல்வாதிகளின் தேவை இல்லையென்றாகி விடுகிறது. காத்திருப்பு எல்லா விடயங்களிலும் சாத்தியமில்லை என்பதற்கு, சுதந்திர இலங்கையின் வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் பல சந்ததிகளைக் கடந்தும், தொடரும் காத்திருப்புக்கும் விட்டுக் கொடுப்புக்கும் அறுவடை எப்போது கிடைக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தான்தான், தமிழர்களின் தனிப்பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டிருக்கையில், தமிழர் அரசியலிலிருந்து காணாமலாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, உள்ளே நுழைந்து, தாம் இவ்வாறுதான் என்பதனை மீண்டும் ஒருமுறை கட்டியம் சொல்லியிருக்கிறது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் போது, ஒதுக்கப்பட்டதற்கான காரணத்தை வலுவாக்கியும் இருக்கிறது.

த.தே.கூ, உண்மையில் ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பால் உருவாக்கப்பட்ட அதற்குள், பல கட்சிகள் இருக்கின்றன. இக்கட்சிகளுக்குள்ளேயே, ஒற்றுமை இல்லாத நிலையில், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈ.பிஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகள் பிரிந்து நின்று, தம் பலத்தை நிரூபிக்க முயல்கின்றன.

கூட்டுக்கட்சியாக இருந்து கொண்டு த.தே.கூ, தான்தான் தமிழர்களின் பிரதிநிதி என்று கூற முடியாத நிலை தோன்றிவிட்டது. வடக்கு முதலமைச்சர் ஒரு பாதையிலும், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வேறொரு பாதையிலும், அதற்குள் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவிதமாகவும் தமிழர்களின் அரசியல் இருக்கிறது. நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரதமருக்கெதிராகக் கொண்டுவரப்பட்டபோது, கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது. இப்போது எதிர்க்கட்சித் தலைவர் மீதும் நம்பிக்கையில்லாப் பிரேரணை வருமா என்ற சந்தேகத்துடன் பொது அரசியல் இருக்கிறது.

இந்த இடத்தில்தான், தமிழ் மக்களின் அரசியல் வெற்றிடம் தோன்றியிருக்கிறது. அரசியலில் இருப்பின், ‘முதலை விழுங்கல்’ போன்றதுதான் அதன் முக்கியத்துவம். என்னால் முடியுமோ, இல்லையோ அதை முடியுமானதாக மாற்றுவதும் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதும் இதற்கு நல்ல உதாரணம்.

யுத்தம் முடிவடைந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை நாட்டின் ஒரு ராஜாவாகவே தன்னை மிகைப்படுத்திக் கொண்டார். நாட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் ஊழல்களும், அதற்குள் நிறைந்தே இருந்தன. அவ்வேளையில்தான், வடக்கு, கிழக்கின் மீள்குடியேற்றம் நடைபெற்று, வன்னியில் முகாம்கள் பல மூடப்பட்டன. ஆனால், பெரும்பாலும் வடக்கில் காணி மீட்புப்பிரச்சினை இன்னமும் தொடர்கிறது.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், இன்னமும் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவில்லை.

காணாமல் போனோர் விடயத்துக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். ஆனாலும், நல்லாட்சி தொடங்கப்பட்டு 3 வருடத்தின் பின்னரே பெரியளவான பிரயத்தனத்தின் பின்னர், அதற்கான அலுவலகம் தொடங்கப்பட்டிருக்கிறது.

ஒன்றை மறைப்பதற்கு இன்னொன்றைச் செய்வது போல, ஜெனீவாவில் அமளி தொடங்குகையில், இங்கே உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அது முடிந்த கையோடு அம்பாறை, கண்டி, பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்னமும் முடியாமல் அமைச்சர்களின் பதவி விலகல்கள்; புதிய அமைச்சரவை என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த முதலை விழுங்கும் அரசியலுக்குள், தமிழ் மக்களுக்கான தீர்வுக்கான சந்தர்ப்பம் பார்த்துச் சாத்தியப்படுமா என்பது மிகப் பெரிய கேள்விதான்.
குழம்பிய குட்டை போல இருக்கிற நாடாளுமன்றம் எப்போது சுமூக நிலைக்கு வரும் என்ற கேள்வியையும் சேர்த்தே இப்போது கேட்டுக் கொள்ள வேண்டும்.