இலங்கை முன்னிருக்கும் வரலாற்று வாய்ப்பு!

(மீரா ஸ்ரீனிவாசன்)
ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்து, இலங்கையின் அதிபராக மைத்ரிபால சிறிசேனாவையும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கேயும் இலங்கை மக்கள் தேர்ந்தெடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது தேசியக் கூட்டணி அரசு. பத்தாண்டு காலமாக, கடும் கண்காணிப்பு, அச்சுறுத்தல்கள், ஊடகத்தின் மீதான அடக்குமுறை, ஜனநாயக அமைப்புகளைப் பலவீனப்படுத்துதல் என்று மகிந்த ராஜபக்ச நடத்திய சர்வாதிகார ஆட்சி, 2015 ஜனவரி 9-ல் முடிவுக்கு வந்தது. அவரது ஆட்சியில், வளர்ச்சித் திட்டங்களை விடவும் ஊழல்கள், ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் போன்றவைதான் பிரதானமாக இருந்தன. போர் வெற்றி மூலம், இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்களர்கள் மத்தியில் அவருக்கு உருவான செல்வாக்கும் செல்லரித்துப்போனது.

முதல் தேசியக் கூட்டணி

மாற்றத்தை உருவாக்கும் எந்த ஒரு அரசியல் சக்திக்கும் வாய்ப்பு உண்டு எனும் அளவுக்கு ஒரு அரசியல் சூழல் உருவானது. ‘மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றும், நல்ல நிர்வாகத்தைத் தருவோம்’ என்றும் பிரச்சாரம் செய்து, தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது. கிராமப்புறங்களைச் சேர்ந்த கணிசமான சிங்களவர்கள், வடக்குப் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் ஆகியோருடன் சர்வதேச அளவிலும் ஆதரவு கிடைத்ததால் ராஜபக்சவை சிறிசேனாவால் தோற்கடிக்க முடிந்தது. சிறிசேனாவின் இலங்கை சுதந்திரக் கட்சியும் (எஸ்.எல்.எஃப்.பி.) அவரது அரசியல் எதிரியான ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சியும் (யூ.என்.பி.) இணைந்து இலங்கையின் முதல் தேசியக் கூட்டணி அரசை ஏற்படுத்தின. அரசியல் களத்தில் நிகழ்ந்த மிகப் பெரிய மாற்றம் அது. மக்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ரணில் விக்ரமசிங்கேவால் இலங்கை மத்திய வங்கி கவர்னராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மகேந்திரன், கருவூலப் பத்திர மோசடியில் ஈடுபட்டதாக மிகப் பெரிய புகார் எழுந்தபோதிலும், குறைந்தபட்சம் தனது முதலாவது ஆண்டில் இந்த அரசு சமாளித்துக்கொண்டது. இந்த அரசுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதில் உறுதியாக இருந்த இலங்கை மக்களில் பெரும்பாலானோர் 2015 ஆகஸ்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணிக்கே வாக்களித்தனர்.

குழப்பங்களை எதிர்கொள்ளும் அரசு

அதிபரின் நிர்வாக அதிகாரங்களைக் குறைக்க, அரசியல் சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு கொண்டுவந்தது; ஊடகங்களுக்கான வெளியைத் திறந்துவைத்தது; சமரசத் துக்கு விரிவான வியூகத்தை வளர்த்தெடுத்தது; நான்கு அம்சம் கொண்ட அணுகுமுறையை வழங்குவதாக ஐநா மனித உரிமை ஆணையத்திடம் உறுதியளித்தது. அத்துடன், புதிய அரசியல் சட்ட வரைவுப் பணிகளையும் தொடங்கியது. வடக்குப் பகுதிக்கு அதிபர் சிறிசேனா பல முறை சென்ற துடன் ராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களில் ஒரு பகுதியையும் விடுவித்தார். தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தனது கடமை என்றும் கூறினார்.

இரண்டாவது ஆண்டில் நுழையும் இந்த அரசு, தற்போது பல குழப்பங்களை எதிர்கொள்கிறது. இலங்கையின் பொருளாதாரம் மோசமடைந்திருப்பதுடன், கூட்டணி அரசுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இரு தலைவர்களும் தெரிவிக்கும் முரண்பாடான கருத்துகள் அவர்களிடம் இருக்கும் ஒற்றுமையின் செயற்கைத் தன்மையைப் பகிரங்கப்படுத்துகின்றன. அத்துடன், ராஜபக்ச குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகள், கொலை வழக்குகள் போன்றவற்றை இலங்கை அரசு மென்மையாகக் கையாள்வது, அரசுக்கும் ராஜபக்ச ஆதரவு சக்திகளுக்கும் இடையில் திரைமறைவுப் பேச்சுவார்த்தை நடக்கிறதோ எனும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

கவலை தரும் விஷயம்

புத்தத் துறவிகள் வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபட்டுவருவதைக் கண்டுகொள்ளாமல் அரசு மெளனமாக இருப்பது, கவலை தரும் மற்றொரு விஷயம். கிழக்குப் பகுதி நகரமான மட்டக்களப்பில் தமிழரான ஒரு அரசு அதிகாரியை இனவெறியுடன் மோசமாகத் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்த புத்தத் துறவி மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சர்வதேச நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளைப் பொறுத்தவரை, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இலங்கையுடனான உறவு என்பது பெரும்பாலும் பொருளாதார ஒத்துழைப்பு அல்லது பாதுகாப்பின் அடிப்படையிலேயே இருக்கிறது. இந்த இரு நாடுகளும் இலங்கையில் சீனாவின் இருப்பு தொடர்பாகவே கவனம் செலுத்திவரும் நிலையில், இலங்கையின் அரசியல் நிகழ்வுகள் தொடர்பான அந்நாடுகளின் ஆர்வம் கணிசமாகக் குறைந்திருக்கிறது.

சாதகமான சூழல்

அரசியல்ரீதியான பின்னடைவு, நிச்சயமற்றதன்மை ஆகியவற்றுக்குப் பிறகும் அரசியல் சட்டச் சீர்திருத்தத்தை நோக்கி முன்னேற இலங்கை அரசுக்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது, அரசியல் தீர்வுக்கான சூழல் இதற்கு முன்னர் இத்தனை சாதகமாக இருந்ததில்லை. காரணம், இரண்டு முக்கியக் கட்சிகளும் ஆட்சியில் இருக்கின்றன என்பது மட்டுமல்ல; வடக்கு மாகாணத் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த அரசைப் புறக்கணிப்பதை விடவும் ஒன்றிணைந்து செயல்படவே விரும்புகிறது. இலங்கையின் முக்கியமான எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கும் ஆதரவாக இருப்பதன் மூலம் அரசுடன் இணைந்து பணியாற்றுவதை வெளிக்காட்டியிருக்கிறது.

மேலும் பொறுப்புக்கூறல், போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேசச் சமுதாயம், மனித உரிமை அமைப்புகள் தரப்பிலிருந்து இருந்த அழுத்தம் கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்திருக்கிறது. பொறுப்புக்கூறல் தொடர்பான கோரிக்கையை எழுப்புவதன் மூலம் அரசியல்ரீதியான குழப்பங்கள் ஏற்படும் என்பதால், அதைவிடவும் அரசியல் சட்டச் சீர்திருத்தம்தான் முக்கியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கருதுகிறது. முன்பே சொன்னதுபோல், அரசியல் தீர்வை எட்டுவதற்கான சூழல் இதற்கு முன்னர் இத்தனை சாதகமாக இருந்ததில்லை.

அரசின் முன் உள்ள அழுத்தங்கள்

எனினும், கூட்டணி அரசியலில் ஏற்பட்டிருக்கும் பலவீனம் கவனிக்க வேண்டிய விஷயம். இப்பிரச்சினை இந்த அரசுக்கு எளிதாக இருக்கப்போவதில்லை. 225 இடங்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் சிறிசேனா – ரணில் கூட்டணிக்கு 155 இடங்கள் உள்ளன. இலங்கை சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் 50 பேர் சிறிசேனா வசம் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் ராஜபக்ச அணிக்கு மாறிவிடுவதாக மிரட்டிவருகிறார்கள். மீதம் இருக்கும் இலங்கை சுதந்திரக் கட்சி எம்.பி.க்களையும் பிற ஆதரவாளர்களையும் வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறார் ராஜபக்ச. விரைவில் அரசைக் கவிழ்க்கப்போவதாக அவர் மிரட்டிவருகிறார். ஆனாலும், பிரதமரும் அதிபரும் அவரது கருத்துகளை அலட்சியம் செய்துவிட்டனர். நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை. மேலும், ராஜபக்ச தலைமையிலான அரசு மீண்டும் வருவது என்பதற்கு அரசியல்ரீதியாகச் சாத்தியமில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். எனினும், இந்த அரசுக்குத் தோல்விகள் ஏற்படும்போதெல்லாம் ராஜபக்ச பலம் பெற்றுவருகிறார்.

புதிய அரசியல் சட்டம் தொடர்பான பொது விவாதங்கள் மிகக் குறைவாக நடக்கின்றன. பெரும்பான்மையாக உள்ள சிங்களச் சமூகத்தைச் சீர்திருத்தத்தில் ஈடுபடுத்தாதவரை, பிற அரசியல் அழுத்தங்களைச் சமாளித்துக்கொண்டு புதிய அரசியல் சட்ட உருவாக்கப் பணிகளை முன்னெடுத்துச் செல்வது அரசுக்குக் கடினமானதாகவே இருக்கும். விஷயம் சிக்கலானது. காலமும் கடந்துகொண்டிருக்கிறது. சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கே முன்னர் ஒரு வாய்ப்பு இருக்கிறது. இருவரும் இணைந்து செயல்பட்டுச் சீர்திருத்த நடவடிக்கையை நிறைவுசெய்வதன் மூலம், இலங்கை மரபில் புதிய அத்தியாயத்தை உருவாக்கலாம். இல்லையென்றால், ஒரு மிகப் பெரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிய தலைவர்கள் என்றே இருவரும் பார்க்கப்படுவார்கள்!

(© ‘தி இந்து’(ஆங்கிலம்) தமிழில்: வெ.சந்திரமோகன்)