இழந்தவைகள் இழந்தவைகளாகட்டும் இருப்பவைகளையாவது பாதுகாப்போம்

ஆபத்துக்குள் வாழ்தல் என்பது, வடக்கு, கிழக்கு வாழ் மக்களைப் பொறுத்த வரையில், புதிய விடயம் அல்ல. யுத்த காலத்தில் ஆள் அடையாள அட்டையை, சட்டைப் பையில் கொண்டு திரிந்தார்கள்; இன்று முகக்கவசத்தை முகத்தில் அணிந்து திரிகின்றார்கள்.

ஆனாலும், உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய கொரோனா வைரஸைக் காட்டிலும் உயிர் வாழ்வதற்குத் தேவையான (அரசியல்) தேர்தல் கதைகளை, சமூக வலைத்தளங்களிலும் நேரடியாகவும் மக்கள் அதிகம் பகிர்ந்து கொள்கின்றார்கள்.

அவ்வகையில், நீண்ட காலத்துக்குப் பின்னர், மங்கலகரமாக நடைபெற்ற நிகழ்வில் (பூப்புனித நீராட்டு விழா) மக்கள் கூட்டத்துடன் இருந்த போது, சுவாரஸ்யமான பல அரசியல் உரையாடல்கள் நடந்தன. சுவாரஸ்யங்கள் என்றாலும், அர்த்தங்கள் பொதிந்தவையாக அவை காணப்பட்டன.

“நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகுது, யாருக்கு வாக்களிப்பதென்று தெரியாதபடி சனங்கள் குழம்பிப் போய் உள்ளனர்; அப்படி எங்கட சனத்தை இவங்கள் குழப்பிப் போட்டாங்கள்” என ஒருவர் கூறினார்.

“இதில் என்ன குழப்பம் இருக்கு? ஏன், நாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்ப வேண்டும். நாங்கள், ஓரணியாகக் கூட்டமைப்புக்குத்தான் வாக்களிக்க வேண்டும்” என மற்றையவர் கூறினார்.

“நாங்கள் இவ்வளவு காலமும் இவைக்கு (கூட்டமைப்பு) வாக்களித்து, என்னத்தைக் கண்டனாங்கள்” என்றார் இன்னொருவர்.

அந்த மற்றையவர் தொடர்ந்தார், “அவருக்கு வாக்களித்தோம், இவருக்கு வாக்களித்தோம் என நாங்கள் யாருக்கு வாக்களித்தாலும் இதுவேதான் எங்கள் நிலைவரம்; இதனை அனைவரும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், நான், கூட்டமைப்புக்கு வாக்களிக்கச் சொன்னபடியால், கூட்டமைப்பின் ஆதரவாளர் அல்ல; அவர்கள் செய்தது எல்லாம் சரி எனச் சொல்லவும் வரல்லை. ஆனால், நாங்கள் (தமிழர்கள்) ஓர் அணியாகச் செயற்படுவதற்காக மட்டுமே, அவர்களுக்கு வாக்களிக்கச் சொல்கின்றேன்” என்றார் .

இவர்களின் உரையாடலில் இருந்து, (ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல்) தமிழ் மக்கள் இன்னும், மிகத் தெளிவாக இருக்கின்றார்கள். மக்களை வழி நடத்த வேண்டிய அரசியல்வாதிகளே, அவர்களை குழப்புகின்றார்கள். தமிழ் மக்கள், தாங்கள் உதிரிகளாக உதிர்ந்து போக விரும்பவில்லை என்பதை உணரக்கூடியதாக இருந்தது.

வடக்கு, கிழக்கில் பல தமிழ் அரசியல் கட்சிகள் போட்டியிட்டு ஒவ்வொன்றும் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றால், அரசாங்கம் யாருடன் பேச்சுவார்த்தைக்கு வரும். அரசாங்கம் பேச்சுவார்த்தையைத் தவிர்ப்பதற்கு, நாமே வழி ஏற்படுத்திக் கொடுத்ததாக அமையலாம்.

பலமான ஓர் அணியாகச் செயற்படுதல் ஊடாகவே, பேரினவாத அரசாங்கத்தை, பேச்சு மேடைக்கேனும் கொண்டு வரலாம் என்பதில், எம்மக்கள் தெளிவாகவும் உறுதியாகவும் விருப்பமாகவும் உள்ளனர்.

இதற்கு மேலதிகமாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (வீடு) என்ற ஒற்றைச் சொல்லுக்கும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்ற செயலுக்கும் மதிப்பளித்தே, இதுவரை காலமும் தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து வந்துள்ளார்களே தவிர, அதில் இருக்கும் தனி மனித பிரபல்யங்களையோ, அவர்களது திறமைகளையோ ஒருபோதும் கண்டு கொள்ளவில்லை என்பதைக் கூட்டமைப்புத் தலைவர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

ஏன், தேர்தல் வாக்களிப்புகளின் போது கூட, பலர் விருப்பு வாக்கு எண்ணுக்கு வாக்களிக்காது, தாங்கள் விரும்புகின்ற வீட்டுக்கு மட்டுமே வாக்களித்து வருகின்ற தன்மையும் கூடக் காணப்படுகின்றது.

இதைவிட, கடந்த காலங்களில் கூட்டமைப்பின் ஊடாக மாகாண சபை, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் முதலமைச்சராகவும் பதவி வகித்து, கூட்டமைப்புடன் முரண்பட்டு அதிலிருந்து வெளியேறியவர்கள், தங்களுக்குள் ஒற்றுமையாக, ஓரணியாகச் செயற்பட முடியாது, மேலும் முரண்படுகின்றமை கூட, கூட்டமைப்பு தனது பலத்தை முழுமையாக இழக்காது இருப்பதற்கான பிறிதொரு காரணமாகவும் அமைகின்றது.

இதுவே மாற்று அணி தோற்றமும் எழுச்சியும் பெற முடியாமைக்கான பிரதான காரணமாகவும் அமைகின்றது. மேலும், இவ்வாறாக மாற்று அணியாகத் தொழிற்பட முனைந்தவர்களது எல்லைகள், யாழ். மாவட்டத்துக்குள் மட்டுமே சுருங்கி விட்டமை போன்ற நிலைமைகளும் காணப்படுகின்றன.

ஆகவே, சுருங்கக்கூறின் ஆயுதப் போராட்டத்தின் மௌனத்துக்குப் பின்னரான காலங்களில் (2009) கூட்டமைப்பு தமிழ் மக்களின் நாடித் துடிப்புக்கு எற்ற மாதிரி இயங்கவில்லை; இயங்க முடியவில்லை. கூட்டமைப்புக்கான மாற்று அணி என வெளிக்கிட்டவர்கள், கூட்டமைப்புக்கு எதிரான மனநிலையில் இயங்கினரே தவிர, தமிழ் மக்களது மனநிலையைப் புரிந்து, ஆகக்குறைந்து ஒன்றுபட்டுக் கூட இயங்கவில்லை; இயங்க முடியவில்லை.

‘எவரொருவர் எதுவும் சாதிக்கப் போவதில்லையோ, அவர் தியாகம் செய்யத் தேவை இல்லை. சாதிக்கப் போகின்றவர்கள், கட்டாயம் நிறையத் தியாகம் செய்ய வேண்டும். யார் அதிக உயரத்தை எட்டப் போகிறார்களோ, அவர்கள் அளப்பரிய தியாகங்களைச் செய்ய வேண்டியது அத்தியாவசியமாகின்றது’ என்ற ஜேம்ஸ் அலனின் கூற்று இவ்விடத்தில் பொருத்தமாகும்.

ஆகவே,தமிழ் மக்களுக்காகச் சாதிக்கப் போகின்றோம் என அரசியலுக்கு வந்தவர்கள், தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். அதேவேளை, உன்னதமான தியாகங்களுக்கூடாகப் பயணித்த விடுதலைப் போராட்டத்தை, நடுத்தெருவில் விட முடியாது. ஆனால், நாங்கள் சிறுபிள்ளைத்தனமாகச் சண்டை போடுகின்றோம்; விரிசல்களை விரிவாக்குகின்றோம்.

சுமந்திரன் செய்தவை, சொல்லியவை பற்றி பட்டிமன்றம் போடுகின்றோம். சரி, சுமந்திரன் செய்தவை, சொல்லியவை தொடர்பில் குழப்பம் இருந்தால், அவருக்கு விருப்பு வாக்குப் போடுவதைத் தவிர்க்கலாம் தானே. அதற்கு ஏன் எங்களது நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க வேண்டும்.

தமிழரசுக் கட்சி, சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கவலைப்படும் எம்மக்கள், அடுத்த மாதம் ஐந்தாம் திகதி நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? அதற்கான ஆயுதமும் (யாழ்ப்பாணம், கிளிநொச்சி) வாக்காளர்களது கைகளில் உள்ளது தானே?

ஒரு விடயத்தை மட்டும், அனைவரும் தயவு கூர்ந்து உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் ஒற்றுமையாக, ஒரு கட்சிக்கு மட்டும் வாக்களித்தால் மட்டுமே, கிழக்கு மாகாணத்தில் ஐந்து (சில வேளைகளில் ஆறு) ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளலாம். கடந்த முறை (2015) ஐந்து ஆசனங்கள் கிடைத்தன.

திருகோணமலை ஒன்று, மட்டக்களப்பு மூன்று அல்லது நான்கு, அம்பாறை ஒன்று என ஆசனங்கள் கிடைக்கப் பெறும். இந்நிலையில், தமிழ் வாக்குகளின் சிதைவு, ஏனைய இனங்கள் கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

இது போலவே, வன்னித் தொகுதியிலும் நிலைமைகள் உள்ளன. கூட்டமைப்பு, கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில், வெறும் ஏழு வாக்குகளால் ஆறாவது ஆசனத்தை இழந்தது.

இந்நிலையில், 2001ஆம் ஆண்டு காலப் பகுதிகளில், பல தமிழ்க் கட்சிகள் இருந்தாலும், தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்துக்குச் சமாந்தரமாக, தமிழ் மக்களது ஜனநாயகப் போராட்டம் பயணிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 20.10.2001 ஆம் திகதி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

அன்று கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் அங்கம் வகித்தன. 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும் 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய கட்சிகள் விலகின.

இன்று, சிங்கள பௌத்த பேரினவாதம் பேரெழுச்சி கொண்டு நிற்கின்றது. திருக்கோணேஸ்வரம், நல்லூர் முருகன் கோவில்கள் எல்லாவற்றுக்கும் தமிழர்கள் வரலாம், கும்பிடலாம்; ஆனால், அவை எங்களுடையவை என உரிமை கேட்டு விட்டது. நாளை தமிழர்களின் வீட்டு சுவாமி அறையில் இருக்கும் பிள்ளையாரும் பறிபோகலாம்.

ஆகவே, எதிர்வரும் காலங்களில் மேலும் ஆபத்துகள் வரவுள்ளன. அழுதாலும் அவள் தானே பிள்ளை பெற வேண்டும் என்பது போல, ஆபத்துகள் எதுவானாலும் அதைத் தாங்குவதற்குப் பலம் வேண்டும்.

சர்வதேசம் வரும் வரும் என, வராத சர்வதேசத்துக்குக் காத்திருக்க முடியாது. அரசமைப்பு வரும் வரும் என எக்காலமும் வராத யாப்புக்குக் காத்திருக்க முடியாது. இழந்த இருப்புகள் போக, மீதியாக உள்ளவற்றைப் பாதுகாக்க, தமிழர்கள் ஓரணியாகத் திரள்வதே இப்போது எம்முன் உள்ள ஒரே தெரிவு.

அதற்காக வடக்கு, கிழக்கில் தனித்தவமானதும் பலமானதுமான கட்சி ஒன்றை வெல்ல வைப்பதே, அதற்கான பாதை எனலாம். வேறு ஏதேனும் உண்டா?