‘வரலாறு முக்கியம் அமைச்சரே!’

(என்.கே. அஷோக்பரன்)

“வரலாறு என்பது இறந்தவர்கள் மீது ஆடப்படும் பொய்” என்பார் ஃப்ரெஞ்ச் அறிஞர் வோல்டேயர். வரலாறு என்பது எப்போதும் சிக்கலானதொன்றாகவே இருந்துகொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்தவை எல்லாம் வரலாறுதான். ஆனால், கடந்த காலத்தில் என்னதான் நடந்தது என்பதை, இப்போது நாம் எப்படி அறிந்துகொள்வது? அந்த வகையில் பார்த்தால், வரலாறு என்பது வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, இன்று எமக்கு கிடைக்கக்கூடிய வகையில் இருக்கும் பதிவுகளின் தொகுப்பு மட்டும்தான் அல்லது அந்தப் பதிவுகளுக்கு நாம் வழங்கும் பொருள்கோடல்களும் வியாக்கியானங்களும்தான். அந்தப் பதிவுகளினூடாகவும் அவற்றுக்கு வழங்கும் பொருள்கோடல், வியாக்கியானங்களூடாக கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் வரலாறு எனலாம்.