உருப்பெறுகிறது ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு; வலுவிழக்கிறது நேட்டோ

(ஜனகன் முத்துக்குமார்)

ஐரோப்பிய இராணுவமொன்றை உருவாக்குவதற்கான முயற்சியில், ஐரோப்பிய ஒன்றியம் உண்மையில் முனைப்புக் காட்டுவதாகவே உள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஜேர்மன் சான்செலர் அங்கேலா மேர்க்கெல் இருவரும், ஐரோப்பிய ஒன்றியத் தொடர் கூட்டத்தில், கூட்டு ஐரோப்பிய இராணுவமொன்றை உருவாக்குவதற்கான தேவையை இந்த மாதம் ஆதரித்திருந்தனர். இந்த இரு நாடுகளும், வலுவான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளாவன என்பது ஒரு புறமாக இருக்க, மறுபுறமாக, பொருளாதார – அரசியல் கண்ணோட்டங்களிலிருந்து, அவர்களுடைய வார்த்தைகள் வெறும் அரசியல் சார்ந்தது அல்லாமல், தீர்க்கமான ஒரு விவகாரம் என்பது நோக்கத்தக்கது.ஜேர்மனியும் பிரான்ஸும் தமது பரிந்துரையில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இராணுவத் தலைமையமொன்றை நிறுவுதல், வெளிநாட்டு இராணுவக் கொள்கைகள் தொடர்பில் மிகவும் வினைத்திறனுடன் செயற்படக்கூடிய செயற்றிட்டத்தை முன்வைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில், இணைந்த பாதுகாப்புத் திட்டங்களை மேற்கொள்ளுதல் அவசியமாகும் எனக் கூறியுள்ளன.

பிரான்ஸ் நாளிதழ் லீ ப்பிகரோ (Le Figaro), குறித்த பரிந்துரையை பின்வருமாறு வர்ணனை செய்திருந்தது:

“மோசமடைந்து வரும் சர்வதேச பாதுகாப்புச் சூழலில், ஐரோப்பிய மக்களையும் எல்லைகளையும் பாதுகாக்கும் பொருட்டு, ஐரோப்பிய பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்காகவும், ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையைக் கட்டி எழுப்பவும் குறித்த பாதுகாப்பு ஒப்பந்தம் அவசியமாகின்றது”.

இதன் அடிப்படையிலேயே, இரு தலைவர்களினதும் அண்மைய கூற்று, ஆக்கபூர்வமாகப் பார்க்கப்பட வேண்டியதாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுமாயின், மேற்கு, மத்திய ஐரோப்பாவில், தொழிற்றுறை, தொழில்நுட்பத் தளங்களில் 40 சதவீதம், ஐரோப்பிய ஒன்றிய ஒட்டுமொத்தத் திறன்களில் 40 சதவீத அளவில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு வரவு – செலவுத் திட்டங்களைக் கொண்டுள்ள நாடுகளாக, பிரான்ஸும் ஜேர்மனியும் உள்ளன. குறிப்பாக, அந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் எஞ்சியுள்ள அணுசக்தி கொண்ட ஒரே ஒரு நாடு, பிரான்ஸ் மட்டுமே. இந்நிலையில் சீனா, ரஷ்யா தவிர்த்து, ஐ.அமெரிக்க பாதுகாப்பு மட்ட எச்சரிக்கை, ஐ.அமெரிக்க பாதுகாப்பு வளையத்துள் ஐரோப்பிய ஒன்றியம் இருக்கவிரும்பாமையின் வெளிப்பாடே, குறித்த பாதுகாப்பு முன்னெடுக்கைகள் ஆகும்.

ஆயினும், இது பற்றி முன்னொருபோது கருத்து தெரிவித்திருந்த ஐக்கிய இராச்சியம், குறித்த பரிந்துரையை ஏற்க மறுத்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகள், நேட்டோ (NATO) பாதுகாப்புக் கட்டமைப்புக்குள் ஏற்கெனவே உறுப்பினராக இருக்கின்ற வேளையில், இரண்டாவது அலையாக ஐரோப்பிய இணைந்த பாதுகாப்புக் கட்டமைப்பை ஏற்படுத்துதல், நேட்டோவின் தனித்துவமான பாதுகாப்புச் சார்பான கொள்கை வகுத்தலிலும் கொள்கைகளைச் செயல்வடிவாக்கலிலும் சீரற்ற நிலைமைகளையே தோற்றுவிக்கும் என்பதே, பரிந்துரைக்கு எதிரான கருத்தாக அமைந்திருந்தது.

குறித்த இராணுவ உருவாக்கல் பற்றிக் கருத்து வெளியிட்டிருந்த தலைவர்கள், குறித்த இராணுவமானது, தனியாக ஐரோப்பிய பாதுகாப்புக்கு மட்டும் செல்வாக்குச் செலுத்தாமல், பரந்தளவில் மருத்துவ உதவி, இராஜதந்திர உதவிகள், ஆயுதங்கள், இராணுவ உத்திகள், இராணுவ உதவிகளை உறுப்பு நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளவும், இணைந்த இராணுவ நகர்வுகளை மேற்கொள்ளவும் உதவும் எனத் தெரிவித்திருந்தனர். இது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் கடந்தாண்டு வெளியிட்ட அறிக்கையின் படி, குறித்த இராணுவ ஒருங்கிணைந்த புதிய கட்டளை மய்யம் உருவாக்கப்படும் எனவும், அதன் மூலமாகவே வான் வழித் திறன்கள், செயற்கைக்கோள் உளவு மூலம் பெறப்படும் தரவுகள் பகிரப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. குறித்த அறிக்கை மேலதிகமாக, இவ்விடயத்தில் ஸ்ட்ரஸ்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இராணுவப் பாதுகாப்புக் கூட்டில் அங்கம் வகிக்கும் ஜேர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், லக்ஸம்பேர்க், இத்தாலி, போலந்து ஆகிய நாடுகள், எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய இராணுவ சபை ஒன்றை அமைக்கவும், அதன் மூலமாக இராணுவ நகர்வுகள், செயற்பாடுகளைத் துரிதப்படுத்தவும் உதவும் என அறிவிக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைந்த உடனடியாக பணியாற்றக்கூடிய ஆற்றல் மிக்க சிறியளவிலான இராணுவக் கட்டமைப்பை உருவாக்குதல், அதனூடாக நுண்ணிய அவசரமான இராணுவத் தாக்குதல்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் பற்றியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக, ப்ரஸெல்ஸைத் தலைமையிடமாக கொண்ட ஐரோப்பிய பாதுகாப்பு முகவராண்மை மூலமாக , ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பை ஒருங்கிணைத்தல், இராணுவ ஆராய்ச்சி, வான் வழி, செயற்கைக்கோள், இணையம் மூலமான பாதுகாப்பு மேற்கொள்ளல், இராணுவக் கல்லூரிகளையும் ஆராய்ச்சிக் கூடங்களையும் அமைத்தல் – அதன் பொருட்டு பாதுகாப்பு ஆராய்ச்சிகளுக்கான ஒன்றிணைந்த ஐரோப்பிய ஒன்றிய வரவு – செலவுத் திட்டம் தயாரித்தலுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஒப்பந்தம், 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்பதும், செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாகியா என்பனவும் ஐக்கிய இராச்சியத்தோடு இணைந்திருக்கும் நெதர்லாந்தும் ஆதரவு வழங்கும் எனவும், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இவ்வொப்பந்தமானது நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இவ்வமைப்பு நேட்டோ அமைப்புடன் எவ்வாறாக இணைந்து செயற்படும் என்பது,பொறுத்திருந்தே பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.