என்னை நல் ஆசான் ஆக்கிய ஆசான்களை வணங்கி நிற்கின்றேன்

என்னை நல் மாணாக்கனாக்கிய ஆசிரியர் அனைவருக்கும் ஆசிரியர் தினத்தில் மீண்டும் எனது மரியாதை கலந்த வணக்கங்கள். அருவரியில் ஆரம்பித்து பல்கலைக் கழகம் வரையும் மரத்தடி விளையாட்டுத்திடலில் ஆரம்பித்து மக்களின் விடுதலைக்காகான பொதுவாழ்வில் பயணத்தை மேற்கொள்வதற்கு எனக்கு பல்வேறு ஆசிரியர்களின் வழிகாட்டல் பேருதவியாக இருந்தது. என்னைப் பெற்றெடுத்த என் தந்தையர் எனது இன்று வரையிலானான மாசீக குரு. அவர் தனது காலத்தில் கல்வி கற்றது வெறும் 3ம் வகுப்பு என்றாலும் இன்று சபையில் நான் தலை நிமிர்ந்து நடப்பதற்கான நேர்மை, நீதி, ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து இவர் வகுத்துக் கொடுத்த வாழ்கைப் பாதை தான் முதல் காரணமாக அமைகின்றது. இதனைத் தொடர்ந்து அவையத்து முன்னிருக்க எனது குஞ்சியப்பு மாமா போன்றவர்கள் பேருதவியாக செயற்பட்டனர். இதில் தான் ஈற்றெடுக்காவிட்டாலும் தனது இரத்தம் என்று எனக்கு வழிகாட்டியாக நின்ற அந்த குஞ்சப்புவையும் மாமாவையும் நான் அடிக்கடி நினைவில் நிறுத்துவதுண்டு.

மாக்சிசம் கற்றுக் கொடுத்த எனது மக்களே என் வாழ்வின் இருப்பிற்கான அர்த்தத்தை அதிகம் ஏற்படுத்தியவர்கள். எனது இந்த பயணத்தில் நான் இணைந்து வேலை செய்த அனைத்து தோழமைகளும் எனக்கு ஆசான்களே. இன்று சபையில் எழுந்து நின்று மக்களுக்கான கருத்துரை வழங்கும் ஆசானாக என்னை வளர்த்தெடுத்தவர்கள் இவர்களே. பாடசாலைக் கல்வியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க எனக்கு முதல் வாய்பு அளித்த வேம்படி மகளிர் கல்லூரி இன்று வரை உயர்தரவகுப்பு மாணவர்களின் ஆசான் ஆக்கி இரு தலைமுறை தாண்டி பலருக்கும் ‘மாஸ்ரர்’ ஆக்கிய தற்செயல் நிகழ்வை இந்த ஆசிரியர் தினத்தில் மகிழ்சியுடனும் நன்றியறிதலுடனும் நினைவு கூறுகின்றேன்.

இதுவே 1978 களில் கிழக்கில் ஏற்பட்ட சூறாவளி பேரழிவைத் தொடர்ந்து உயர் வகுப்பு மாணவர்களுக்கான கூட்டு மீள் தயாரிப்பு வகுப்புக்களில் பங்களிப்பு செய்வதற்கும் வடக்கு கிழக்கு என்ற மக்கள் இடையேயான உறவுகள் பலப்படுவதற்கும் முக்கிய காரணியாக அமைந்தது. ஒரு நல் ஆசியருனுக்குரிய முதன்மைப் பண்பு தொடர்ந்தும் நல் மாணவனாக இன்னமும் கற்றுக் கொள்ளத் தயாராக இருத்தல். எனது வாழ்க்கைப் பயணத்தில் இன்றுரை இதனைக் கடைப்பிடிக்கின்றேன். இந்த ஆசிரியர் தினத்தில் நானும் ஒரு ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்.

(Saakaran)