ஒன்றுபட்டால்த்தான் உண்டு வாழ்வு

(க. அகரன்)

ஓன்றுபட்டால் உண்டு வாழ்வென்பது முதுமொழியாக இருந்தாலும் கூட, இதன் செயல் வடிவம் என்பது, எந்தவகையில் சாத்தியமாகி உள்ளது என்பது கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது. அன்றாட வாழ்விலும் சரி, அரசியல் சூழலிலும் சரி, ஒன்றுமையின் தேவைகள் பலமாகவே சுட்டிக்காட்டப்பட்டு வந்தாலும் கூட, அதைச் சாத்தியமான வகையில் செயற்படுத்துவதற்கு, களம் அமைந்துள்ளதா என்பது சிந்திக்கப்படவேண்டிய விடயமே.

அரசியல் தளத்தில், தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைந்துள்ள நிலையில், அதைச் சாத்தியப்பாடான நிலைக்கு இட்டுச்செல்லக்கூடிய வழிவகைகள், உருவாக்கப்படுவதற்கான நிலை காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, நிறைந்தே உள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பால், அரசியல் ரீதியான முன் நகர்வைக் கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று பல பிரிவுகளாக உடைந்துபோயுள்ள நிலையில், மீள ஒட்டவைக்க வேண்டிய தேவை, கூட்டமைப்புக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை.

இந்த ஒற்றுமை என்பது, கொள்கை ரீதியான ஏற்பாடுகளுடன், கட்டமைப்புச் சார்ந்து உருவாக்கப்படவேண்டும் என்ற சிந்தனை, அரசியலாளர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்த் தலைவர்கள் என மார்தட்டிக்கொள்பவர்கள் அத்தனைபேரையும் ஒரே மேசையில் கொண்டு வரக்கூடியதும், ஆக்கபூர்வமான பேச்சை ஆரம்பிக்க கூடியதுமான வல்லமை யாருக்குள்ளது? தமிழ் அரசியல் வெளியில் வெற்றிடமாகவே உள்ளது.

இன்றைய சூழலில், அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தின் ஒரு கட்டமாக, அரசமைப்புத் திருத்தம் இடம்பெற்று வருகின்ற போதிலும், அது தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள், தவிர்க்க முடியாததாகி விட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே, அரசமைப்பு தொடர்பாக, பூரண தெளிவில்லாத தன்மை உள்ள நிலையில், பொது மக்கள் அதனைப் புரிந்துகொள்வதும் அதன் உள்ளார்த்தங்களை விளங்கி ஆமோதிப்பது என்பது ஏற்புடைய விடயமாகக் கொள்ள முடியாது.

அரசமைப்பு தொடர்பான தெளிவூட்டல்கள், போதுமானதாக இல்லாத நிலையில், தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலேயே மாற்றுக் கருத்துகளால் அரசமைப்பை வைத்து மோதிக்கொள்ளும் ஆரோக்கியமற்ற நிலை நீடித்துக்கொண்டே செல்கின்றது.

வெறுமனே, அரசியல் நிலைபேற்றுக்காக மாத்திரம் தீர்வு, ஒற்றுமை என்பதை மேடைபோட்டுப் பேசிவரும் தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களின் இருப்பையும் அதன் தொன்மையையும் மழுங்கடிக்கும் செயன்முறையில் தாம் ஈடுபட்டுள்ளோம் என்பதை ஒரு கணமேனும் சிந்திக்க தலைப்பாடாமை வேதனையே.

தமிழ் அரசியல்வாதிகளுக்குள்ளும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலும் காணப்படும் முரணான எண்ணப்பாடுகள், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் விஸ்பரூபம் எடுத்திருந்த நிலையிலேயே, இன்று மாகாண சபையை வைத்து, ஒற்றுமை தொடர்பில் பேசப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து வெளியேறிய, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப் என்பன, கொள்கை ரீதியான உடன்பாடின்றி வெளியேறியதாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு வெளியேறியவர்கள் கூட, ஒன்றுபட்டுச் செயற்பட முடியாத நிலையே காணப்படுகிறது.

இவர்களுக்கு உள்ளும் இன்று வேறுபட்ட கருத்து மோதல்கள் நிலவி வரும் நிலையில், மாகாணசபைத் தேர்தலில் கூட, ஒன்றுபட்டுச் செயற்பட முடியாத நிலையே காணப்படும்.

வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், “மாகாண சபையில் நாங்கள் பிரிந்து நிற்போமாக இருந்தால், இன்று நகரசபை, பிரதேச சபைகளில் தென்னிலங்கைக் கட்சிகள் எவ்வாறு தமது கால்களைப் பதித்தார்களோ, அதனைவிட மோசமாக, அவர்களுடன் இணைந்து ஆட்சி நடத்தக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு, மாகாணசபை தள்ளப்படக் கூடிய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

அத்துடன், “மாகாணசபையை வினைத்திறன் மிக்கதாக உருவாக்க வேண்டுமாக இருந்தால், அனைவரும் ஒன்றினைய வேண்டும். முதலமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து, மாகாணசபை தேர்தலில் ஒற்றுமைப்பட்டு, எங்களுடைய ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும். அதற்காக தமிழீழ விடுதலை இயக்கம் தொடர்ந்து செயற்படுவதுடன் ஒற்றுமையை விரும்பாதவர்களுடன் பயணிக்காது” எனவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலை, செல்வம் அடைக்கலநாதனிடம் உள்ளதாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கட்சிகள் வெளியேறும்போது, கூட்டமைப்பின் தலைமைகளுக்கு இது தொடர்பாக எடுத்தியம்பாது, மௌனம் காத்ததன் நோக்கம் என்ன, என்ற வினா எழுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் அக் கூட்டுக்குள் ஒரு கட்சி ஆதிக்கம் செலுத்தி வருவதாக, இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தனது மனக்கிலேசத்தை, மேடைபோட்டுக் கூறிவரும் நிலையில், அது குறித்து சம்பந்தப்பட்ட கட்சி, செவிசாய்த்ததாகத் தெரியவில்லை.

இவ்வாறான நிலையில், உடன்பாடின்றி வெளியேறிய கட்சிகள், மீள எவ்வாறு இணையும் என்ற சிந்தனை ஓட்டத்தை அதற்குள் இருக்கும் கட்சிகள் ஏற்படுத்த வேண்டும்.

வெறுமனே ஒன்றுமை என்பதை, வாய்ப்பேச்சிலும் தேர்தல் கால உசுப்பேற்றல்களாகவும் பேசிவிட்டுப்போக, மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பது நடைமுறைச்சாத்தியமல்ல.

கடந்த காலங்களில், நடைபெற்ற தேர்தல்களைப் படிப்பினையாகக் கொண்டு, செயற்பட வேண்டிய தேவை உள்ளதாக, ஆயுதக்குழுக்களாக இருந்து, ஜனநாயக செயற்பாட்டுக்குள் சென்றுள்ள கட்சிகள் வலியுறுத்தி வந்தபோதிலும், அவர்களும் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கு, இதுவரை பேச்சுகளை முன்னெடுத்ததாக அறியமுடியவில்லை. காலத்துக்குக் காலம் புதிய கூட்டுகளும் கூட்டணிகளும் வடக்கில் இருந்து தெற்கு வரை, தமிழ்த் தரப்புகளால் அமைக்கப்பட்டுள்ளதே தவிர, அவை ஆக்கபூவமாகத் தொடர்ந்து இயங்குவதற்கான முயற்சிகளை, அதன் அங்கத்துவக் கட்சிகள் மேற்கொண்டிருக்கவில்லை.

இந்நிலையிலேயே முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரான ராஜா குகனேஸ்வரன் நிகழ்வொன்றின் போது, “இன்று மாகாணசபைத் தேர்தலுக்காக, ஒன்றுமைபற்றிப் பேசுகின்றவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து, ஒவ்வொரு கட்சியாக வெளியேறும்போது, அதற்குள் இருந்தும் ஏன் தடுக்க முடியாமல் போனது?” என்ற கேள்வியை எழுப்பி இருந்ததுடன் கூட்டமைப்பின் தலைமையையும் விமர்சித்திருந்தார்.

எனவே, தமிழர் தரப்பு அரசியலில் ஒற்றுமை என்பது, விமர்சனத்துக்கு உள்ளாகி, காலங்கள் கடந்து செல்கின்றதே தவிர, நடைமுறைச் சாத்தியமான ஒரு நிலைப்பாட்டை எட்டுவதற்கு, இயலாத காரியமாகவே உள்ளது. இதற்கு, ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வோரு காரணங்களைக் கற்பித்து கொண்டாலும், தமிழரசு கட்சியின் மேலாந்த சிந்தனை அல்லது தம்மை முன்னிலைப்படுத்தும் எண்ணப்பாடுகளாலேயே, இவை சாத்தியமற்றுப்போவதாகத் தமிழ் அரசியல்வாதிகள் குமைகிறார்கள்.

தமிழர்களின் நிரந்தரத் தீர்வுக்கான அழுத்தத்தைக் கொடுப்பதற்குத் தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபடவேண்டிய தேவை இருக்குமேயானால், தமிழரசுக்கட்சி தவிர்த்து, ஏனைய கட்சிகள் ஓரணியில் வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.

அவ்வாறான அணி, வட மாகாண முதலமைச்சரின் தலைமையில் உருவாகுமா என்ற கேள்வி, வன்னி மக்களிடையே நிறையவே உள்ளது. எனினும், அதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட வேண்டிய தேவையுள்ளது.

வட மாகாண முதலமைச்சரைப் பொறுத்தவரையில், ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது, அவருக்கு இருந்த செல்வாக்கு தற்போதும் உள்ளதா என்பது ஆராய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதொன்றாகும்.
அதற்குமப்பால், வடக்கு, கிழக்கில் ‘எழுக தமிழ்’ நிகழ்வை மேற்கொண்டபோது, சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்ந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவு, வடக்கு முதலமைச்சருக்கு இருந்தபோதிலும் தற்போது குறைந்துள்ளது. அது மாத்திரமின்றி, முதலமைச்சருடன் யார் யார் இணைந்தால், நாம் இணைய மாட்டோம் என்ற பட்டியலையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிழக்கிலங்கையில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இன்றைய ஒற்றுமைக்குப் பலமாக இருக்கும் என எண்ணப்பட்டு வரும் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் என்பவற்றையும் இணைத்தே, புதிய அரசியல்பாதையை முதலமைச்சர் கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால், அவர் அதைக் கொண்டு செல்லட்டும், தாம் இணைய மாட்டோம் என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளமையானது, முதலமைச்சர் தலைமையில் புதிய கட்சி உருவாக்கம் பெற்றாலும் கூட, அது ஒட்டுமொத்தமாக தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமைப்பட்ட அமைப்பாக இருக்காது என்பதே யதார்த்தம்.

எனவே, தமிழ் மக்கள் பேரவை என்ற பூச்சாண்டி அரசியல் களம், இன்று கைவிடப்படும் நிலையில், அதை வைத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடான, ஒரு கட்டமைப்பாக வளர்க்க எண்ணியவர்களுக்கு பெரும் ஏமாற்றமே கிடைக்கப் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்துக்குள் வட்டத்தைக் கீறி, கற்றவர்கள் மாத்திரமே தமிழரின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பேரவை, தனது தளத்தை விஸ்தரிக்கும் முன்பாகவே, களையிழந்து கட்டமைப்புடைந்து போயிருக்கின்றது. இவ்வாறான நிலைமை, மாற்று அணி ஒன்றின் அங்குரார்ப்பணம் என்பது, வடக்கு, கிழக்கில் எந்தளவு சாத்தியமானது என்பதற்கான உதாரணமாக அமைந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து அதிருப்தியுடன் வெளியேறிய கட்சிகள் எவையும், தனித்துத் தேர்தல் களத்தில் ஜொலிக்கவில்லை. இந்த அச்சம் ஆட்கொண்டுள்ளமையால், இன்று பல கட்சிகளும் வேறு ஒரு கூட்டுக்குள் தாம் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தைச் சமூக மட்டத்தில் உலா வரவிட்டுள்ளனர்.

அதன் வெளிப்பாடாகவே, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அண்மையில் நடைபெற்ற நிகழ்வில், மிதவாதத் தலைவர்கள், தமிழர்களை ஏமாற்றி வருவதாகவும் தீர்வைப் பெற்றுத்தருவதாக, காலாதி காலமாகத் தெரிவித்து வரும், போலித் தலைமைகளை நம்பாது, முதலமைச்சர் தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என்கின்ற கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

ஆகவே, முதலமைச்சர் தலைமையிலான கூட்டு ஒன்றினை, ஈ.பி.ஆர்.எல்.எப் விருப்பத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

குறிப்பாக, குறித்த கட்சி, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து, தன் சுயமிழந்ததோ, அதேபோன்றதான நிலையை மீள விரும்பி அழைப்பதாகவே இது காணப்படுகின்றது.

குறிப்பாக, கூட்டமைப்புக்குள்ளிருந்தே தமிழரசுக் கட்சியை விமர்சிக்கும் கட்சிகள், தமது சொந்தச் சின்னத்தில் களமிறங்க அச்சம் கொண்டுள்ளமையாலேயே வெளியேற விருப்பம் கொள்ளாமல் உள்ளன என்பதே உண்மை.

அந்தத் துணிவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்திருந்தபோதிலும், அவர்கள் முன்னர் கூறியது போல், எந்தத் தேர்தலிலும் ஜொலிக்கவில்லை.

இவ்வாறான அச்சமான நிலை ஏனைய கட்சிகளுக்கும் உள்ளது. இதன் காரணமாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து, விமர்சித்து வரும் கட்சிகள் வெளியேறாது, அதற்குள் இருந்துகொண்டே காலத்தைக் கடத்தி வருகின்றன.

இவ்வாறான நிலைப்பாட்டை அவர்கள் எடுத்திருப்பது, சரியானதாக இருந்தபோதிலும், ஏனைய கட்சிகளை ஒன்றுபடுத்தும் செயற்பாட்டிலும், விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளும் நிலைமையையும் கூட்டமைப்புக்குள் ஏற்படுத்த, அதன் அங்கத்துவக் கட்சிகள் முனைப்புக் காட்ட வேண்டும்.

இல்லையேல், தமிழ் மக்களின் தாயகமாகக் கொள்ளப்படும் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள், வியாபித்துத் தமிழ் மக்களின் விகிதாசார நிலையில் ஏற்படும் மாற்றங்களின் பின்னால், எதையும் சாதிக்க முடியாதவர்களாக, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் காணப்படுவர் என்பதே உண்மை.

குறிப்பாக, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் அதி வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள், அடுத்து வரும் மாகாணசபைத் தேர்தலில் பாரிய தாக்கத்தை செலுத்த போகின்றது என்பது மறுப்பதற்கில்லை. இதன் காரணமாகத் தேசியக்கட்சிகளின் இருப்பு வடக்கு, கிழக்கில் நிலை நிறுத்தப்படும் பட்சத்தில் தமிழர்களின் பேரம் பேசும் சக்தி கேள்விக்கு உட்படுத்தப்படும்.

ஊரிமை சார்ந்த விடயங்களை, எடுத்தியம்புவதற்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இருக்காத பட்சத்தில், தேசியக்கட்சிகளின் கருத்துகள் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் கருத்துகளாகச் சர்வதேச ரீதியிலும் தென்னிலங்கைக்கும் கொண்டு செல்லப்படும். இது ஆரோக்கியமற்ற தமிழர் அரசியலுக்கான வழிவகையாகவே இருக்கப்போகின்றது என்பது உண்மை.

இதற்குமப்பால், தென்னிலங்கை அரசியல் சக்திகள், தமிழர்களின் அரசியல் பலத்தைச் சிதைக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதாகத் தெரிவிக்கும் தமிழ் அரசியல்வாதிகள், அதன் பின்னரும் கூட, தமது செயற்பாடுகள் தொடர்பாகவும் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பாகவும் சிந்தித்து செயற்படாமல் உள்ளமை கவலையளிக்கும் விடயமாகும்.

இந்நிலைமை, எதிர்காலத் தமிழ்ச் சந்ததிகள், தொடர்ந்தும் தமது உரிமைக்கான போராட்டத்தை நடாத்த வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

எனவே, சர்வதேசத்தையும் தென்னிலங்கை சக்திகளையும் நம்பிப் பயணிக்கின்றோம் என்ற கருத்தை முன்வைத்து நகரும் தமிழ்த் தலைமைகள், தமக்குள் இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து, ஓரணியில் திரளாத வரையில், தமிழர்களுக்காக தீர்வு நோக்கிய பயணம், ஆமை வேகத்திலேயே நகரும் என்பதில் ஐயமில்லை.

ஆகவே, இந்நகர்வை வேகப்படுத்துவற்கான களச்சூழல்களைத் தமிழ் அரசியல்வாதிகளே மேற்கொள்ள வேண்டியிருப்பதுடன் அதன் போது வரும் தடைகளை தகர்த்தெறியும் தற்துணிவு அரசியலிலும் தேவையென்பதே உண்மை.