கஜனின் தூய்மைவாதமும் பேரவையின் தவறும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியைப் பலப்படுத்தும் ஒற்றைச் சிந்தனையோடு, யாழ். மய்யவாத அரசியல் அரங்கு அண்மைய நாள்களில் இயங்கி வருகிறது. தொடர்ந்தும், தூய்மைவாதம் பேசிவரும் கஜேந்திரகுமாரும், அவரது விசுவாசிகளும் புதிய கூட்டணிக்குள் தம்மை இணைப்பது தொடர்பில் நிபந்தனைகளை விதித்து வருகிறார்கள். இது, கூட்டணியை உருவாக்குவதற்காக உழைக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கு, நெருக்கடியை வழங்கியிருக்கின்றது.யாழ். பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் அண்மைய நாள்களில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல்களுக்குச் சூட்டப்பட்ட தலைப்புகள் வேண்டுமானால் வேறுவேறாக இருக்கலாம். ஆனால், அவற்றின் பிரதான நோக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணியைப் பலப்படுத்துவது என்பதேயாகும்.

அதுபோல, மைத்திரி தோற்றுவித்த அரசியல் நெருக்கடி, நாட்டை 50 நாள்களுக்கும் மேலாக அலைக்கழித்துக் கொண்டிருந்த போதும், தமிழ் அரசியல் பத்திகளில் அதிகமானவை, விக்னேஸ்வரனின் கூட்டணிக்குள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை, எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற கோணத்திலேயே இருந்தன.

இந்தக் கட்டத்தில் இருந்துதான், கூட்டமைப்புக்கு மாற்றான அணி தொடர்பில் முன்னோக்கியும் பின்னோக்கியும் பார்க்க வேண்டியிருக்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், குறிப்பாக யாழ். மய்யவாத அரசியல் அரங்கில், இணைந்து இயங்குவதற்கு பொருத்தமற்றவர் என்கிற அடையாளம், கஜேந்திரகுமார் மீது உண்டு. தவிர்க்க முடியாத புள்ளிகளில் அவர், மற்றவர்களுடன் இணைந்து இயங்குவதற்கு முன்வந்தாலும், இன்னொரு கட்டத்தில் ஏதோவொரு காரணம் சொல்லி, அடம்பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார்.

இதுதான், கடந்த காலத்தில் அவரை மாற்றுத் தலைமையாக முன்னிறுத்திச் செயற்பட்ட தரப்புகள் சொல்லும் பிரதான குற்றச்சாட்டு. அவரின் முன்னாள் அரசியல் – சட்ட ஆலோசகர்களும் கூட, அதே குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தியே மேடைகளில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

நடைமுறை அரசியல் என்பது, ஒற்றைப்படையான தூய்மைவாதம் பேசுவதால் மாத்திரம் அடைய முடியாதது; ஆகவே, இணக்கமான நிலைப்பாடொன்றுக்கு வரவேண்டும் என்று கஜேந்திரகுமாரையும் அவரது விசுவாசிகளையும் நோக்கி, பேரவைக்காரர்கள் அழைக்கிறார்கள்.

உண்மையிலேயே, தூய்மைவாதம் மாத்திரம்தான், விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணிக்குள் கஜேந்திரகுமார் இணைவதிலுள்ள பிரச்சினையா? அப்படியென்றால், முன்னணி ஆரம்பிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டபோதும், இன்னமும் தமிழ்க் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் பயணப்பட ஆசைப்படுவது, எதன் அடிப்படையில் என்கிற கேள்வி எழுகின்றது.

கூட்டமைப்பைக் கட்சியாகக் பதிவு செய்யவில்லை என்று, கடந்த காலத்தில் தொடர்ச்சியாக விமர்சித்து வந்த இந்தப் பத்தியாளர் உள்ளிட்ட பலரும், முன்னணியைப் பதிவு செய்து, புதிய சின்னத்தை கஜேந்திரகுமார் பெற்றுவிடுவார் என்றுதான் நம்பியிருந்தார்கள். கடந்த பொதுத்தேர்தல் காலத்திலும், இந்த விடயம் தொடர்பில் இந்தப் பத்தியாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால், கஜேந்திரகுமாரோ, முன்னணிக்காரர்களோ இதுவரையிலும் சைக்கிள் சின்னத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் எந்தவொரு நிலைப்பாட்டுக்கும் வரவில்லை. “ஏன், அந்த முனைப்புகள் முன்னெடுக்கப்படவில்லை” என்று கேள்வி எழுப்பினாலும், அது தொடர்பில் அவர்கள் பதில் சொல்வதற்கும் தயாராக இல்லை.

ஆனால், அவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று, திரும்பத் திரும்பக் கூறி வருகின்றார்கள். தூய்மைவாதம் பேசும் கஜேந்திரகுமாரும், அவரது விசுவாசிகளும், தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்க் காங்கிரஸுக்கு என்று சில கறுப்புப் பக்கங்கள் இருப்பதையும் அது மக்களால் தெளிவாகவே உணரப்பட்டிருக்கின்றது என்பதையும் பேசுவதற்குத் தயங்குகிறார்கள்.

ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எப்பையும் புளொட்டையும் கூட்டணிக்குள் இணைத்தால், தாங்கள் வரமாட்டோம் என்கிற நிபந்தனைகளை, பேரவையை நோக்கி விதிக்கிறார்கள்.

தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் ஒட்டுமொத்தத் தூய்மைவாதம் பேசிக் கொண்டு இயங்குவதற்கான தகுதி, எந்தத் தரப்புக்கும் இல்லை. அது, கூட்டமைப்பாக இருந்தாலும், கூட்டணியாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும். அதற்கும் கஜேந்திரகுமாரும், முன்னணியும் விதிவிலக்கு அல்ல. குறிப்பாக, சைக்கிள் சின்னத்தில் தங்கியிருக்கும் வரை, தூய்மைவாதம் பற்றிப் பேசுவதற்கான தகுதி முன்னணிக்கு அறவே இல்லை.

ஒரு கட்டத்துக்கு மேல் யோசித்தால், பாரம்பரியச் சொத்தைக் காப்பாற்றும் ஒருவர் போல, சைக்கிள் சின்னத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாரா கஜேந்திரகுமார் என்கிற கேள்வியும் எழுகிறது. தனிப்பட்ட ரீதியில் கஜேந்திரகுமார் தன்னுடைய சொத்துகளையும் பாரம்பரியத்தையும் பேணுவது சார்ந்து, எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை; அது வரவேற்கப்பட வேண்டும். ஆனால், சைக்கிள் மீதான கறுப்புப் பக்கங்களை மறைத்துக் கொண்டு, தூய்மைவாதம் பேசும் அரசியல் நிலைப்பாடுதான் இங்கு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

சைக்கிள் மீது எந்தவிதமான கறுப்புப் பக்கங்களும் இல்லை; தூய்மையானது என்கிற நிலைப்பாட்டைக் கஜேந்திரகுமார் உண்மையிலேயே கொண்டிருக்கிறார் என்றால், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட போதும், சைக்கிளின் ஆரம்ப கர்த்தாவான ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை, விளம்பரப் பதாகைகளில் தவிர்த்து, தந்தை செல்வாவைச் சேர்ந்தது ஏன்? ஒரு பக்கத்தில் தந்தை செல்வா, இன்னொரு பக்கத்தில் குமார் பொன்னம்பலம் படங்களையே முன்னணியினர் காட்சிப்படுத்தி இருந்தனர்.

இது தொடர்பில் கேள்வி எழுப்பியபோதும், முன்னணியின் அரசியல் ஆலோசகர்களாக இருந்த தரப்புகள் அப்போது கொதித்துக் கூச்சலிட்டன. ஆனால், இன்றைக்கு அவர்களே, முன்னணியை நோக்கி ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.தமிழ்த் தேசிய அரசியலின் பெருங்காவலர்கள் தாங்கள் மாத்திரம்தான் என்கிற மயக்கத்திலிருந்து கஜேந்திரகுமாரும் அவரது விசுவாசிகளும் விடுபட வேண்டும். தமிழ் மக்களை மய்யமாக முன்வைத்து நகர்வதே தமிழ்த் தேசிய அரசியல்.

அது, எந்தவொரு தனி நபரையோ, குழுவையோ, பிரதேசத்தையோ மட்டும் குறிப்பதல்ல. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழ்த் தேசியம் என்பதை, யாழ். மய்யவாதம் என்று அர்த்தப்படுத்திக் கொண்டு, தமிழ் அரசியல் கட்சிகள் இயங்க ஆரம்பித்ததுதான் பிரச்சினைகளின் அளவை இன்னும் சிக்கலாக்கி இருக்கின்றது.

ஆயுதப் போராட்ட காலம், குறிப்பாக விடுதலைப் புலிகளின் காலம், யாழ். மய்யவாதத்தின் அளவைத் தணிக்கச் செய்திருந்தது. ஆனால், அவர்களின் காலத்துக்குப் பின்னால், அது மீண்டும் ஒற்றைப்படையாக எழுந்து நிற்கின்றது.

கூட்டமைப்பாக இருந்தாலும், பேரவையாக இருந்தாலும், விக்னேஸ்வரனின் கூட்டணியாக இருந்தாலும், அவர்களின் சிந்தனை என்பது, யாழ்ப்பாணத்தை மய்யப்படுத்தியதாகவே இருக்கின்றது.

இது, யாழ்ப்பாணத்துக்கு வெளியே, இருக்கின்ற மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பெரும்பாலும் கவனத்தில் கொள்வதிலிருந்து தவறி நிற்கின்றது. இவ்வாறான நிலையொன்று, அனைத்து மட்டங்களிலும் பரவி, தமிழ் மக்களுக்கான அரசியல் என்பது, யாழ்ப்பாணம் சார்ந்தது என்கிற அபாயகரமான சிந்தனையை விதைத்துவிட்டிருக்கின்றது. உண்மையிலேயே நீண்டகால அடிப்படையில் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியொன்றைப் பலப்படுத்த வேண்டும் என்கிற சிந்தனை, பேரவைக்கு இருக்குமானால், அதன் கட்டமைப்புகளை வடக்கு, கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஆரம்பித்திருக்க வேண்டும்.

மாறாக, வரவிருக்கின்ற தேர்தல்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு கூட்டணியை ஆரம்பிக்கும் போதுதான், கஜேந்திரகுமார் போன்றவர்களிடம் அல்லாட வேண்டியிருக்கின்றது.

பேரவைக்காரர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில், அடிமட்ட மக்களிடம் சென்று பேசியிருந்தால், அதன்போக்கில் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்தால், தூர நோக்கில் சிந்திக்க தலைப்பட்டிருப்பார்கள். ஆனால், நிகழ்ந்திருப்பது என்னவோ, யாழ். மய்யவாத அரசியல் குறு மனநிலையின் நின்று, விக்னேஸ்வரனின் கூட்டணிக்கு ஆள்பிடிக்கும் வேலையேயாகும்.

கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியொன்று நிதானமாகவும் சரியான கட்டுமானத்தோடும் எழுந்து வர வேண்டும். அது குறித்து யாருக்கும் எந்த மாற்றுக் கருத்துகளும் இல்லை. ஆனால், தற்போது நிகழ்ந்து கொண்டிருப்பது அபத்தமான ஓர் ஆட்டம். அந்த ஆட்டத்தில் தங்களைக் கல்வியாளர்களாகவும் அரசியல் ஆய்வாளர்களாகவும் காட்டிக் கொள்ளும் தரப்பு, எந்தவித அடிப்படையும் அறமும் இன்றிப் பங்காளியாக்கிக் கொண்டிருப்பதுதான் வேதனையாது.

ஏனெனில், 2015ஆம் ஆண்டில் கிடைத்த ஜனநாயக சிறு வெளியைக் கொண்டு, தமிழ்த் தேசியப் பரப்பு அடைந்திருக்க வேண்டிய அடைவுகளை, கூத்தாடியே போட்டுடைத்திருக்கிறார்கள். இங்கு அதிக பட்சம் நிகழ்ந்திருப்பது, தனிநபர்களை முன்னிறுத்திய அரசியல் குறுமனநிலைக்கு பால் ஊற்றும் வேலையே. அதனால்தான், கஜேந்திரகுமார் இல்லாத கூட்டணியை பேரவைக்காரர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.