கடும் பிற்போக்குச் சிந்தனைகளை விதைத்த மிகச் சரியான நாள்

அதற்கான ஒத்திகைகள், கடந்த சில நாள்களாக முன்னெடுக்கப்பட்டன. அதன் புகைப்படங்களையும் முன்னேற்பாடுகள் தொடர்பிலான அறிவிப்பையும் பார்க்கின்றபோது, இந்நாட்டில் ‘சிறுபான்மை இனங்கள்’ எதுவும் இல்லையென்றே, பெரும்பான்மை இனத்தின் எதிர்காலச் சந்ததியினரின் மனங்களில் நச்சுவிதைகளாக விதைக்கப்படுகின்றன என்பதை உணரமுடிகிறது.

சுதந்திரம் எமக்கு, தாம்பாளத்தில் வைத்து வழங்கப்படவில்லை. அதற்காக, ஒவ்வோர் இனமும், சமயங்களும் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. ஆனால், சுதந்திரத்துக்கான அர்த்தத்தை மழுங்கடிக்கும் வகையிலான அறிவிப்பு, செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சுதந்திர சதுக்கமும் அதனோடிணைந்த பிரதேசங்களும் பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, ‘பெப்ரவரியில் வெசாக்கா?’ எனப் பலரும் கேள்வியெழுப்பி உள்ளனர். அத்துடன், ‘இலங்கையின் போர்வீரர்கள்’ என்ற பதாகையின் கீழ், இம்முறை படையினர் அணிவகுத்துச் செல்கின்றனர்.

யுத்தத்துக்குப் பின்னர், சகல இனங்களின் மனங்களிலும் நல்லிணக்கத்துக்கான நல்லெண்ணங்களை விதைக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் தங்களுடைய இருப்புக்காக, இனக்குரோத சிந்தனைகளை விதைத்து, எதிர்காலச் சமூகத்தினரிடத்தில் சித்திரத்தைக் கீறிவிட்டுள்ளனர். இது, பலவருடங்களுக்குப் பின்னர், பெரும் தாக்கத்தைச் செலுத்தும். சுதந்திர சதுக்கத்தின் அலங்கரிப்புகளையும் பதாகைகளையும் பார்க்கும் போது, நல்லிணக்கத்தைத் துளிர்விடச் செய்வதற்கு, ஆட்சியாளர்களின் நெஞ்சில் துளியேனும் ஈரமில்லை என்பதையே எடுத்தியம்புகிறது.

73ஆவது சுதந்திர தினத்தில், சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது மறுசீரமைப்புக்கும் நல்லிணக்கத்துக்கும் விழுந்த பாரிய அடியாகும். முதலாவது சுதந்திர தினம், கொண்டாடப்பட்டபோது, தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. அவ்வாறிருக்கையில், தமிழிலும் பாடுவதால் ஏற்படும் தவறென்ன என வினவவேண்டியுள்ளது.

இருமொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படுவதன் ஊடாக, இனங்களுக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கை கட்டியெழுப்பப்படும். சிங்கள மொழியில் மட்டுமே பாடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம், சிறுபான்மை இனங்களின் மனதைப் பாதிக்கும். பெரும்பான்மை இன எதிர்காலச் சந்ததியினரின் உள்ளங்களில் நச்சு விதை விதைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய கொடியிலும் மாற்றங்களைச் செய்வதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசமைப்பில் இருக்கும் தமிழ்மொழி அமுலாக்கத்தைச் செய்யவிரும்பாத அரசாங்கம், தேசிய கொடியில் சிறுபான்மை இனங்களைக் குறிக்கும் நிறங்களை அழித்து விட்டாலும் வியப்பதற்கில்லை. இவ்வாறான கடும் பிற்போக்குச் சிந்தனைகள், மிகச் சரியான நாளில் விதைக்கப்பட்டுள்ளன என்பது மட்டுமே உண்மையாகும்.

(Tamil Mirror)