‘கறிவேப்பிலை அரசியல்’ கைகொடுக்காது

இப்போது, சிறுபான்மைச் சமூகங்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற குரல்கள் உரக்கக் கேட்கின்றன. ஏற்கெனவே, முஸ்லிம் சமூகம், சிங்கள மக்களோடு உறவைப் பலப்படுத்தி, நல்லெண்ணத்தை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில், முன்முயற்சிகளை எடுத்து வருகின்ற சூழலில், தமிழ்-முஸ்லிம் உறவு பற்றிய கதையாடல்கள், புதுப்பொலிவு பெற்றிருக்கின்றன.

ஜெனீவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள காலப்பகுதியில், ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ பேரணியொன்றை தமிழ் மக்கள் முன்னெடுத்து இருந்தனர். இதில், முஸ்லிம்களும் மிதமான ஆதரவொன்றை வழங்கியிருந்தனர்.

இதற்கு முன்னதாக, முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட சில தருணங்களில், ஓரிரு தமிழ் அரசியல்வாதிகள், முஸ்லிம் சமூகத்துக்காகப் பேசியும் இருந்தனர். இந்தப் பின்னணியிலேயே, சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான உறவு பலப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது.

ஆனால், எடுத்த எடுப்பில், உறவைப் பலப்படுத்த வேண்டும் என்று மேலோட்டமாகக் கூறப்படுகின்றதே தவிர, இதுபற்றிய கொள்கை சார்ந்த திட்டங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

எந்த விடயத்தில், சிறுபான்மைச் சமூகங்கள் இணைவது? எந்த விவகாரத்துக்காகச் சிங்கள மக்களுடன் கைகோர்ப்பது? எதன் பொருட்டு தனித்தனி அணுகுமுறைகளைக் கையாள்வது என்று, விளக்கமாகச் சொல்வதற்கு ஆளில்லை. அதுபற்றிக் கேள்வி கேட்பாரும் இல்லை.

இலங்கையில் வாழ்கின்ற மூவினங்களைச் சேர்ந்த சாதாரண மக்கள், இன்னும் உறவோடுதான் இருக்கின்றார்கள். சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையில், காலாகாலமாக நிலவிய நல்லுறவைச் சீரழித்தவர்கள் யார்?

சாதாரண பொதுமக்களா, மூன்று வேளையும் தனக்கும் தனது குடும்பத்துக்கும் உணவு வேண்டுமென்று, இரவுபகலாக ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கின்ற மக்கள் கூட்டமா? இல்லை; இல்லவே இல்லை!

ஆட்சியாளர்களும் பெருந்தேசியக் கட்சிகளும் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் ஆயுதக் குழுக்களும் இனவாத, மதவாத செயற்பாட்டாளர்களுமே மக்களைப் பிரிக்கும் கைங்கரியங்களை, இன்று வரை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு கிராமத்திலோ நகரத்திலோ, வாழ்கின்ற பண்டாரவுக்கும் பழனியாண்டிக்கும் பறக்கத்துல்லாவுக்கும் இடையில், எந்த இன முரண்பாடும் கிடையாது. அவர்கள் இனம், மதம் கடந்த ஒரு வாழ்க்கையையே இன்றும், இன்னும் வாழ்கின்றனர்.

குறிப்பாக, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு எப்படியிருந்தது என்பதற்கு, வரலாற்றில் பல அத்தாட்சிகள் உள்ளன. தெற்கில் வாழும் முஸ்லிம்கள், சிங்கள மக்களோடு எவ்வாறான உறவைப் பேணினார்களோ, அதைவிட இறுக்கமான உறவு, வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இருந்தது.

இனம், மதத்தால் வேறுபட்ட சமூகங்கள் என்றாலும் இனம், மதம் ரீதியாகத் தம்மை அடையாளப்படுத்தி, அதன் பெயரில் பிரிந்து நிற்கவில்லை. இந்த நெருக்கம்தான், தமிழ் பேசும் சமூகங்கள் என்ற பொதுவான அடையாளத்தைக் கொடுத்தது.

தமிழர்களுக்கு, தனிநாட்டுக்கு ஒப்பான கோரிக்கை இருந்தது. அதற்காகத் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடினர். ஆனால், இன்றுவரை முஸ்லிம்களுக்கு அப்படியான ஓர் அபிலாஷை இல்லை. ஆயினும் கூட, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில், ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களும் இணைந்து கொண்டனர். இதற்கும் மேற்சொன்ன நல்லுறவே காரணமாக அமைந்தது.

ஆனால், பின்னாளில் சகோதர தமிழ்ப் போராளிகளையே, களையெடுக்கும் படலம் ஒன்றை தமிழ் ஆயுத இயக்கங்கள் ஆரம்பித்திருந்தன. சிலபோது முஸ்லிம் போராளிகளும் இரையாகினர்.

அதுமட்டுமன்றி, 80, 90 களில் பல கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றன. வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதுடன் கிழக்கில் பள்ளிவாசலிலும் வேறுபல இடங்களிலும் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. போராட்டம், ஆயுதங்களை முன்னிலைப்படுத்தியதாக, வேறு ஓர் உருவம் எடுத்தது. இதன்பிறகுதான், முஸ்லிம்கள் படிப்படியாக விலகிக் கொண்டனர். அதன் பின்னர் நடந்த பல சம்பவங்கள், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நம்பிக்கையீனத்தை விதைத்தன.

தமிழர்களோடு எந்தளவுக்கு அரசியல், சமூக உறவைக் கொண்டிருந்தார்களோ, அதே உறவை, சிங்கள மக்களோடும் முஸ்லிம்கள் கொண்டிருந்தார்கள். இருப்பினும் பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்திய ஆட்சியாளர்களும் இனவாத சக்திகளும், இவ்விரு சமூகங்களுக்கும் இடையில் ஒரு பிரிகோட்டைப் போடுவதற்கு, இன்றுவரை பிரயத்தனப்படுகிறார்கள்.

இந்நிலையில், சிறுபான்மையினங்கள் தமக்கிடையில் ஒன்றுபட வேண்டும் என்ற உணர்வெழுச்சி, இப்போது மீண்டும் புத்தெழில் பெற்றிருக்கின்றது.

இலங்கையில், ஆயுத இயக்கங்களும் கடும்போக்குச் சக்திகளும் எவ்வாறு இனங்களுக்கு இடையிலான நெருக்கத்தை விரும்பவில்லையோ அதுபோன்ற மனநிலையையே, பெருந்தேசியமும் ஆட்சியாளர்களும் கொண்டுள்ளனர்.

குறிப்பாக, இரண்டு சிறுபான்மை இனங்களுடனும், பெருந்தேசியம் ஒரே காலத்தில் எதிர்த்தாடுவது இல்லை. மாறாக, ஓர் இனத்தை இணைத்துக் கொண்டு, மற்றைய இனத்துக்கு எதிரான நகர்வுகளைச் செய்வதே, பொதுவாக அவதானிக்கப்பட்ட போக்குகளாகும்.

இதையும் தாண்டி, சிறுபான்மையினர் தமக்கிடையில் மீண்டும் உறவைப் பலப்படுத்த வேண்டியுள்ளது. இதற்குச் சாதகமான சில அறிகுறிகளும் அண்மைக் காலத்தில் தென்படுகின்றன.

நாட்டில், கடந்த ஏழெட்டு வருடங்களாக, முஸ்லிம்கள் கடுமையான இனம், மதம் சார்ந்த ரீதியில் பல நெருக்குவாரங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த வரிசையில் ஹபாயா, ஹலால் போன்ற விவகாரங்கள் தலைதூக்கிய வேளையில், பெரிதாக முஸ்லிம்களுக்காகப் பரிந்து பேசாத தமிழ் அரசியல்வாதிகள், ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் குறிப்பிடத்தக்க உரைகளை நிகழ்த்தியுள்ளனர்.

எம்.ஏ. சுமந்திரன், இரா.சாணக்கியன் உள்ளிட்ட சில தமிழ் எம்.பிக்கள் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தமை, முஸ்லிம்களிடையே ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனாலேயே, ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யான பேரணிக்கு, நிகழ்கால முஸ்லிம் எம்.பிக்கள் பங்கேற்காத போதிலும், சிவில் சமூகம் பல இடங்களில் ஆதரவளித்தனர்.

சம்பந்தப்பட்ட தமிழ் எம்.பிக்கள், இதைவைத்து அரசியல் செய்கின்றார்கள் என்ற அபிப்பிராயமும் முஸ்லிம் சமூகத்துக்குள் மாற்றுத் தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றது. இதை முற்றாக மறுக்கவும் முடியாது.

ஆனபோதும், தமிழ் எம்.பிக்களின் ஆதரவுக்குரல், முஸ்லிம்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே, இதை முஸ்லிம் சமூகத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, உரிமைகளை வென்றெடுக்கும் அரசியலை, முஸ்லிம் தலைவர்கள் செய்யவும் முடியும்; ஆனால், அதைச் செய்யவில்லை.

அவ்வாறில்லாவிடின், (ஒரு பேச்சுக்குச் சொல்வது என்றால்) “நாங்கள், தமிழ்த் தேசியத்துக்கு எதிராகப் பெருந்தேசியத்துக்கு ஆதரவளிப்போம்” என்று கூறினால், ஏதாவது உரிமை கிடைக்கும் என்றால், அதைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இதில் எதையும் செய்யாமல், வெறுமனே கதைவிட்டுக் கொண்டு காலம் கடத்துவதே, முஸ்லிம் அரசியலின் வாடிக்கையாக ஆகியிருக்கின்றது.

உண்மையில், முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், தமிழ் இனத்துடனான உறவு முக்கியமானது. பரஸ்பரம் ஒரு சமூகத்துக்காக மற்றைய சமூகம் குரல்கொடுக்கவும் மானசீகமாக ஆதரவளிக்கவும் வேண்டும். இதில், ‘கறிவேப்பிலை அரசியல்’ செய்யக் கூடாது.

ஆனால், முஸ்லிம்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் வேறு; தமிழர்களின் அபிலாஷைகள் வேறு. தமிழர்கள் இனப் பிரச்சினைக்கான தீர்வை, கிட்டத்தட்ட ஒரு சுயாட்சி அதிகாரத்தை அவாவி நிற்கின்றனர்.

முஸ்லிம்களுக்கு அப்படியான தேவை எதுவும் கிடையாது. தமது இனம், மதம் சார்ந்த உரிமைகளை உறுதிப்படுத்திக் கொண்டு, பொது வாழ்க்கையில் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே, இலங்கை முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.

எனவே அடிப்படையில், சிறுபான்மைச் சமூகங்கள் தமக்கிடையே ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் இருப்பது மட்டுமன்றி, எந்த விடயத்தில் இணைந்து போராடுவது, எதில் தனித்தனி வியூகங்களை அமைக்க வேண்டும் என்ற கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

சிறுபான்மையினர் தமக்கிடையில் மட்டுமன்றி, சிங்கள மக்களுடனும் உறவைப் பலப்படுத்த வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் விட, அது முக்கியமானது.ஆட்சியாளர்களை எதிர்க்கும் தோரணையில், சிங்கள மக்களிடம் பகைமை பாராட்டக்கூடாது. தமிழ்த் தேசியம், இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, இனவாத சக்திகளாலும் பெருந்தேசியத்தாலும் கடுமையான நெருக்குவாரங்களைச் சந்தித்துள்ள முஸ்லிம் சமூகம், தமிழ்ச் சமூகத்துடன் உறவைப் பேணும் சமகாலத்தில், சிங்கள மக்களின் மனங்களை வெல்வதற்கு மேலும் முயற்சிக்க வேண்டும். ஏற்கெனவே தொடங்கப்பட்ட இதற்கான முயற்சிகளைக் கைவிட்டு விடக் கூடாது.

தமிழர்களின் கோரிக்கையும் முஸ்லிம்களின் பிரச்சினையும் வேறு விதமானவை. முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களே. இந்நிலையில், போராட்டத்துக்கும் அதிலிருந்தான தோல்விக்கும் பழக்கப்படாத முஸ்லிம் சமூகம், மிகக் கவனமாக ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்க வேண்டியுள்ளது.