கறையான்களும்! கருநாகங்களும்?

என் மீது விமர்சனம் மட்டுமல்ல திட்டுகள் சேறுபூசல்கள் வசைபாடல் என வரிசைகட்டி வரும் என்ற பயம் இன்றி, என் மனதில் சரி என பட்டதை பதிவு செய்கிறேன். சினிமா ஒரு சாக்கடை என விமர்சித்த எழுத்து சித்தர் ஜெயகாந்தன் தானும் அதில் இறங்கியபோது வந்த விமர்சனத்துக்கு கூறிய விளக்கம் நான் சாக்கடையை சுத்தம் செய்ய வந்தேன் என்பதே. யாருக்காக அழுதான்? சிலநேரங்களில் சில மனிதர்கள்! ஒருநடிகை நாடகம் பார்க்கிறாள்! என தொடர்ந்த அவரின் சாக்கடை சுத்திகரிப்பு சாதித்தது என்ன? என்ற கேள்விக்கு ரஜனிகாந்தின் கபாலி வரை பதில் இல்லை. கூவம் ஆற்றை சுத்திகரிக்கும் செயலுக்கு ஆன்மீகவாதியான சத்திய சாயி பாபா, நாத்திகவாதியான கலைஞர் கருணாநிதி வீட்டு படியேறி கொடுத்த கோடான கோடி பணம் அதை சாதிக்காது, தன்னை கடந்து செல்லும் பயணிகள் தம் மூக்கை பொத்திக்கொள்ளும் நிலையில்  இன்றும் நாறிக்கிடக்கிறது.

அதே போல் எம்மை ஆண்ட பிரித்தானியர் ஆட்சியில் பெரும் பதவிகளை அலங்கரித்த எம் மூத்த தமிழர் முதல், இன்றைய மெத்தப் படித்த//படிக்காதவர் மத்திய அரசுகளிடம் விலைபோய் பெற்ற  பதவிகளால் பெருமிதம் கொண்டு தமிழர் தலைமை தாம் தாம் என மார்தட்டுபவர், எம் இனத்துக்காக சாதித்தது என்ன என்ற கேள்விக்கு பதில் தேடவே என் இந்த பதிவு. போற்றுவார் போற்றட்டும்? புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும் என்ற மனநிலையில் தான் இந்த தேடல். பாதிப்படைவோரின் எடுபிடிகளான அபஸ்வர நயனங்கள் தம் தலைவன் துதிபாட என் குலம் கோத்திரம் பற்றி இணையங்களில் சலசலக்கட்டும். குறை ஒன்றும் இல்லை. நெற்றிக்கண்ணை காட்டினும் குற்றம் குற்றமே என கூறிய நக்கீரன் பெயரில் பொய்யுரைக்கும் பிரகிருதிகள் வாழும் இவ் வையகத்தில் தான் நானும் வாழ்வதால் குரைப்பது என்னை கடிக்கும் என்ற பயமோ அன்றி அற்புதன், நிமலராஜன் போல் எனக்கும் கதி மோட்சம் கிடைக்கலாம் என்ற கலக்கமோ எனக்கு இல்லை. ஆண்டி உடுத்ததை உதறினால் பறப்பது சாம்பல் என்ற நிலை தான் என் களநிலை என்பதால் அச்சம் இல்லை உண்மை உரைக்க.

முதலாவது படித்த இலங்கையர் என பிரித்தானியர் சேர் பட்ட மகுடம் சூட்டிய பொன்னம்பலம் இராமநாதன் முதல் இன்று அவர் பரம்பரை வழிவந்த மத்திய அமைச்சர் சுவாமிநாதன் வரை உரசிப் பார்த்தால் எத்தனை கரட் இனத்துக்கு தேறியது எவ்வளவு சேதாரம் செய்கூலி என்பது தெரியவரும். சோழர்காலத்து பொலநறுவை சிவன் கோவில் தவிர இலங்கையில் இருக்கும் ஒரே ஒரு முழுமையும் கருங்கல்லிலான கொழும்பு கொச்சிக்கடையில் இருக்கும் கோவிலை கட்டியவர் இராமநாதன். தன் தந்தை சிறு ஓலை குடில் அமைத்து வழிபட்ட பொன்னம்பலவாணேஸ்வரர் எழுந்தருள இந்தியாவில் இருந்து கருங்கற்களை வள்ளங்களில் தருவித்து சாதித்தவர், வடக்கின் கல்விநிலையை கவனத்தில் கொண்டு திருநெல்வேலியில் பரமேஸ்வரா கல்லூரி, மருதனா மடத்தில் இராமநாதன் கல்லூரி என ஆண் பெண் இருபாலரும் தனித்தனியே கல்விபயிலும் வகை செய்தார். செட்டி நாட்டு ராஜாக்கள் போல் கல்விக்கு அவர் செய்த அந்த செயல் பின்நாளில் யாழ்ப்பாண பல்கலை கழகமாக அவற்றை மாற்றமுற செய்தது.

இந்து சமயத்துக்கும் தமிழர் கல்விக்கும் சேவை செய்தவர் அரசியல் நிகழ்வில் சிங்களவர் சாதிய  விருப்பு சார்ந்தே செயல்ப்பட்டார். படித்த இலங்கயராக கரையார சமூகத்தை சேர்ந்த மார்கஸ் பெர்னாண்டோ வந்துவிட கூடாது என்ற சாதி சிந்தனை கொண்டவர் செயலுக்கு துணைபோனார். சொலிசிட்டர் ஜெனரல் என்ற உச்ச பதவியில் இருந்து ஒய்வு பெற்ற பின் கொடைக்கானலில் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தவரை கூட்டிவந்து தம் தேவைக்கு கறிவேப்பிலையாக சிங்கள தலைவர்கள் அன்று அவரை பயன்படுத்தினர். சிங்கள முஸ்லிம் கலவரத்தில் சிறை சென்ற சிங்கள தலைவர்களை மீட்க உலக யுத்தம் நடந்த வேளையிலும் இங்கிலாந்து பயணித்து அவர்களை சிறை மீட்க உதவியவரை குதிரை வண்டியில் அமர்த்தி தாமே குதிரைகளாக மாறி அவர் இல்லம் வரை இழுத்து சென்ற சிங்கள தலைமை தமிழர் உரிமை விடையத்தில் என்ன செய்தது என்பதை அவர் தம் தமையனார் அருணாசலத்துக்கு நடந்ததை அறிந்தால் புரிந்து கொள்ளலாம்.

நம்பிக்கெட்ட நாயன்மார்கள் எம் இனத்தில் பலர். அதில் விலை போனவர்கள் சிலர், தம் விருப்பு தெரிவில் தோற்றுப் போனவர்கள் ஒரு சிலர். அப்படி விருப்பு தெரிவில் தோற்றுப்போனவரில் மூல முதல்வர் அருணாசலம் அவர்கள். தமிழர் என்றாலும் கொழும்பு வாசி என்பதால் அங்கு வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதியாக தன்னை பிரதிநித்துவ படுத்தும் தன் விருப்பு தெரிவுக்கு வடக்கின் தலைமையை சிங்களத்துக்கு தலைசாய்க்க வைத்து சிங்களம் தன் இலக்கை அடைந்த பின் அவரையும் கறிவேப்பிலை என காரியமாற்றிய கால நிலை, பின்பு ஈழம் இல்லை ஆனால் எல்லாம் என்று டக்ளசிடம் சொன்ன பிரேமதாசா யுகத்தில் மட்டுமல்ல இன்று நடக்கும் நல்லாட்சி அரசிலும்  தொடர்கிறது. சோதனை மேல் சோதனை ஈழ தமிழனை சூழும் வேளையில் புதிய தலைமைகள் புற்று ஈசல் போல புறப்பட்டு வரும். அவற்றில் பல விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்து படும். தப்பி பிழைப்பவை தப்பாட்டமும் ஆடும்.

இராமநாதனும் அருணாசலமும் ஏற முடியாமல் சறுக்கிய குதிரையில் பொன்னம்பலம் சவாரி செய்ய ஆரவாரத்துடன் கச்சை கட்டினார். ஆனாலும் மந்திரி பதவி என்ற அவரின் இச்சைக்கு பலியாகிதால், ஆரம்பத்தில் கோப்பி பின் இறப்பர் நடுகைக்கு தம் வியர்வையை உதிரத்தை உடலை உரமாக்கி  பின்பு கடும் குளிரிலும் வெயிலிலும் தம் பல தலைமுறை உழைப்பில் மலை முகடுகளை தேயிலை தோட்டங்களாக மாற்றிய,  தென் இந்தியாவில் இருந்து ஏமாற்றி கூட்டி வந்து அடிமைகள் போல் நடத்தப்பட்டவரின் வாக்குரிமை பறிப்பு துச்சமாய் போனது. எம் விரல் கொண்டு எம் கண் குத்தும் குள்ள நரித் தனம் சிங்கள பேரின வாதத்தின் கைவந்த கலை என்பதை அறியாத பேதிலிகள் தான், இந்த விலை போன தலைமைகள். பொங்கி எழுந்த தமிழரால் உருவான தமிழ் அரசு கட்சியும் பெயரில் கூட தமிழில் அரசும் ஆங்கிலத்தில் சமஸ்டியும் கேட்டு இரு வேடம் பூண்டது. பாம்புக்கு இரட்டை நாக்கு சட்டம் படித்தவனுக்கு பல நாக்கு என்பது பாட்டி கால பழமொழி. அதுவே அன்று எம் சட்டம் படித்த (இன்று படிக்காத) அரசியல் வாதிகளின் அரிச்சுவடி.

 

ஆடுகளம் மாறவில்லை. அடிக்கும் பந்தும் மாற வில்லை. களமிறங்கும் ஆட்டக்காரர் மட்டுமே நிலைமைக்கு ஏற்ப மாறுவர். ஆடுகளம் தமிழ் மக்கள். அடிக்கும் பந்து அவர்தம் மறுக்கப்பட்ட  உரிமை போராட்டம். அன்று ஆடியவர் மற்றும் இன்றுவரை ஆடுபவர் பற்றி நான் கூறத்தேவை இல்லை. அது வெள்ளிடை மலை. இதில் என் பணி உரசிப்பாத்தல் மட்டுமே. சொக்கத்தங்கம் தேற  சேதாரம் செய்கூலி பற்றி சொல்லும் பணி என் சிந்தையில். யாம் யார்க்கும் குடி அல்லோம் எவருக்கும் அஞ்சோம் என சட்டத்துக்கு கட்டுப்பட்ட லண்டன் வாசியாய் என்னால் கூற முடிந்தாலும் உண்மை உரைத்தால்// முரண்பட்டால் என்ன நடக்கும் என அண்மையில் யாழ் பத்திரிகை மையத்தில் ஒரு இயக்கத்தின்//கட்சியின் முன்னாள் உறுப்பினர் தான் நடத்திய ஒளிப்பதிவு பேட்டியில் நெடுந்தீவு நிக்கலஸ், தினமுரசு அற்புதன், ஒலிபரப்பாளர் ராஜா வரை கொன்றது யார் என கூறி, மகேஸ்வரி வேலாயுதம் கொலையை மட்டும் அது குடும்ப பிரச்சனை என்கிறார். விசாரித்தால் பல சம்பவங்களுக்கு விடை கிடைக்கும் என்றவர் சம்பவத்தில் ஈடுபட்டவர் வெளிநாட்டில் மட்டுமல் உள்ளூரிலும் இருப்பதாக உறதி செய்கிறார்.

சூரியதேவன், தேசியத்தலைவர் என தாம் நம்பியவரை தலைக்குமேல் வைத்து கொண்டாடியவர் அவர் பற்றிய தகவல்களை எழுத முற்பட்ட சபாலிங்கத்தை பரலோகம் அனுப்பினர். ஆனால் தலைவர் உடலம் நந்திக்கடலில் கருணாவால் அடையாளம் காட்டப்பட்ட பின் ஐயர் முதல் தமிழினி வரை சாட்சியங்களாகவும், கூர்வாளின் நிழலாகவும் பதிவில் வந்தன. மறுப்புகள் வந்தாலும் நடந்தவை பற்றிய தெளிவு பலருக்கு இப்போது புரிந்திருக்கும். அது போலவே புலிக்கு பின்னர் இந்த பூனைகளும் கூடைக்கு வெளியே வர தொடங்கிவிட்டன( The Cat  has come out  of the Bag). இதற்கும் மறுப்புகள், விளக்கங்கள் என வரத்தொடங்கி விட்டன. ஆனாலும் நீண்டகாலமாக இது புகைந்த விடயம் என்பதால் நெருப்பு இல்லாமல் புகைக்காது என்பதும் தெரிந்த விடயம். அத்தனை சம்பவங்களும் தமிழ் மக்களை காக்கவும், அவர்தம் உரிமைகளை பெறவும் என, புறப்பட்ட தலைமைகளின் நேரடி//மறைமுக வழி நடத்தலில் தான் நடந்தேறின. மெத்தப்படித்த திருவாளர்கள் இராமநாதன்! அருணாசலம்! பொன்னம்பலம்! செல்வநாயகம்! அமிர்தலிங்கம்! ஆடிமுடித்த களத்தில் ஆயுதம் தாங்கிய “எங்கட பொடியள்” என ஏற்றுக்கொள்ளபட்டவர் ஆடிய ஆட்டத்தை உரசிப்பார்ப்பதில் பிரியோசனம் இல்லை. அது எப்பவோ முடிந்த காரியம்.

காரணம் ஆடுகளத்தில் ஆயுதம் அறிமுகமாகும் வரை சேதாரமும் செய்கூலியும் பெரிய அளவில் இருக்கவில்லை. தம் அரசியல் அபிலாசைகளுக்காக விலைப்போனவர் இருந்தாலும் பெரும்பாலும் தம் சுய சம்பாத்தியத்தை இழந்தவரும் இருந்த களம் அது. அண்மையில் நினைவுகூரப்பட்ட  மூன்று தசாப்தங்கள் உடுவில், மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த, அராஜகத்துக்கு பலியான அமரர் தருமலிங்கம் ஐயா போன்ற உரசிப்பார்க்க முடியாத தலைவர்கள் பலர் ஆடிய களம், எம் மக்களுக்கு முழுமையாக எதனையும் பெற்றுத்தராத போதும் முள்ளிவாய்க்கால் வரை நடக்கவைத்து, முள்வேலிக்குள் அவர்களை முடங்கவைத்து, அகதிகளாய் அலையவிட்டு, அவர்தம் இருப்பிடங்களை இராணுவ முகாங்களாக மாற்றவில்லை. ஆனாலும் அவர்கள் மேல் உள்ள குற்றசாட்டையும் மறுப்பதற்கு இல்லை. ‘’பழம் பழுத்தால் வவ்வால் வரும்’’, ‘’புலிவரும் முன்னே தமிழ் ஈழம் வரும் பின்னே’’ என்ற வீர உணரச்சிகர பேச்சக்களை இவர்கள் இருந்த மேடையில் பேசிய ஆனந்தன்கள் ஜெர்மனியிலும் இந்தியாவிலும் அகதியாய் அடைக்கலம் புக அவர்தம் வீரமான உணர்ச்சிகரமான பேச்சுக்களை கேட்டு ஆர்ப்பரித்த இளையவர் கைகளில் ஆயுதங்கள்.

அரசியல் களத்தை தம் வெற்றி வேண்டி தாம் பேசிய பேச்சுக்களால் ஆயுத களமாக்கியவர் பற்றி உரசிப்பார்த்தால் சேதாரம் செய்கூலிக்கு இவர்கள் தான் அத்திவாரம் இட்டவர் என்ற குற்றசாட்டை எப்படி மறுக்கமுடியும். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என கூறிய அண்ணன் அமரர் அமிர்தலிங்கம் கூட, அவர் வளர்த்த இளவல்களால் படுகொலை செய்யப்பட்டது அவரின் அரசியல் பிழைத்ததாலா என்ற கேள்விக்கு  யார் பதில் சொல்வது? சிறு பிள்ளை வேளாண்மை விளைந்தும் வீடு வந்து சேராது என்பது தெரிந்தும் வழிநடத்த தயங்கியதால் வந்த வினைதான் இது என்று  இன்று அலசுபவர், அன்று ஆயுதங்களுக்கு கொடுத்த அதீத ஆதரவை அவர்தம் இயலாமை என்றும்  விமர்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒன்றாய் இருந்து பின் பலவாய் பிரிந்து தம்முள் முட்டி மோதிய இளவல்களை தட்டிக்கேட்கும் தலைமதத்துவ திராணி அற்றுப்போனதால், கறை படிந்த கரங்கள் என அவர்களை விலத்தி இந்திய ஆதரவில் அரசியல் செய்யலாம் என்ற கனவில் மிதந்ததால் தான், ஈடு செய்ய முடியாத இழப்புகளை எம் இனம் சந்திக்க நேர்ந்து என்ற குற்றச்சாட்டை மறுக்கமுடியுமா?

சிங்கத்தின் பிடரியை திருகச்சென்றவர் அதன் வாலில் சுருண்டது தான் சேதாரம் செய்கூலியின் உச்சம். விடுதலை வேட்கையில் களமாட புகுந்தவர் கறையான்கள் போல அழகான புற்றுகளை அமைத்து, தாம் நேசித்த மக்களின் அரணாக தம்மை உருவாக்கும் முயற்சியில், இதயசுத்தியுடன் செயல்ப்பட்டவர் மத்தியில் புகுந்த ஒருசில சுயலாப, பதவிமோகம் கொண்டவரின் செயலால் புற்றை நெருங்கிவர மக்கள் பயப்பட்டனர். பாலும் முட்டையும் படையல் போட்டாலும் அது என்ன செய்யும் என்பதை காலக்கிரமத்தில் தான் அவர்களால் கண்டுகொள்ள முடிந்தது. போராளிகள் மத்தியில் சுய இச்சை கொண்டவர் செயலால் ஏற்பட்ட சலசலப்பு பல பிளவுகளை தந்தது. அதனால் போராட்டமும் திசைமாறி பயணித்து சர்வதேச சதி என்ற சகதிக்குள் அகப்பட்டு புதைந்து  போனது. இன்னொரு முறை கறையான்களால் புற்றுக்களை உருவாக்க முடியுமா என்ற கேள்விக்கே இடமில்லாமல் கருநாகங்கள் படமெடுத்து ஆடுகின்றன. அன்று ஒரு துரையப்பாவை துரோகி என துப்பாக்கி ரவைக்கு இரையாக்கினர். இன்று பல துரையப்பாக்கள் தோன்றி இருப்பதால் பல்குழல் பீரங்கிக்கு எங்கு போவர்?

 

கிடைத்தவரை போதும் எம் இழப்புகளை மீட்க என தற்காலிகமாகவேனும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை உருவாக்கத்தில் ஒதுங்கியவர், பின் அது பிரிக்கப்பட்ட போது எமக்கு ஏற்பட கூடிய நிரந்தர சேதாரம் செய் கூலி பற்றி மூச்சுவிடாதவர்கள், இன்று இணைப்பு பற்றி ஏப்பம் விடுகின்றனர். தான் போக வழியற்ற மூஞ்சூறு துடைப்பத்தை சேர்த்து இழுக்க முற்பட்டது போல இணைப்பு பற்றி இன்று நாம் நோக்க வேண்டிய துன்பியல் நிலை. அந்த துன்பியல் சம்பவத்துக்கு காரணமானவர் வடக்கு மாகாண சபை மாண்புமிகு???? அமைச்சர்கள். ஊழல் செய்ததில் விசாரணையை எதிர்நோக்கும் இவர்கள் கறையான்களா? கருநாகங்களா?. விடுதலை போராட்ட காலத்தில் இவர்கள் ஆற்றிய சேவைகொண்டு நோக்கும் போது நிச்சயம் இவர்கள் கறையான்கள் அல்ல. சொந்த மக்களின் நலனை கவனத்தில் கொள்ளாது தம் சொந்தங்களுக்கு மாகாண நிதியை பயன்படுத்தியதாக கணக்காளர் நாயகத்தின் அறிக்கையை எதிர்கட்சி தலைவர் படித்து காட்டிய பின்பு தான் முதல்வர் கூட விசாரணை கமிசனுக்கு ஒத்துக்கொண்டார். அதுவரை எதிர்க் கட்சி தலைவர் எது சொன்னாலும் வேண்டாப் பெண்டாட்டி கால் பட்டாலும் கை பட்டாலும் குற்றம் என்பது போலவே அவர் மீது வசை பாடினர் வட மாகாண சபை ஆளும் தரப்பினர்.

மகிந்தரின் தேவைக்காக பிள்ளையான் முதல்வராகி செய்த அளவு கூட செயல்ப்படாது போன இவர்கள், கிழக்கு மாகாண முதல்வர், அமைச்சர்கள் காற்றாய் சுழன்று காரியமாற்றும் வேளையில், வடக்குடன் கிழக்கை இணைத்து மீண்டும் ஒரே சபையாக இயங்கவேண்டும் என நினைப்பது, அதனையும் வினைத்திறன் அற்றதாக உறங்கு நிலைக்கு கொண்டு சென்று, ஊழல் நாயகங்களின் பேரில் மேலும் விசாரணை கமிசன்களை நியமித்து, மக்கள் வரிப்பணத்தை கரியாக்கவா என்ற கேள்வி எழுகிறது. கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம்களின் கை ஓங்கி இருகிறது, அபிவிருத்தி விடயங்களில் ஓரவஞ்சனை காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டை இணைப்பின் மூலம் சரிசெய்து விட முடியாது. உண்மையில் வரலாற்று ரீதியான தமிழ் பேசும் மக்களின் வாழ்விடமான வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பது, தமிழ் முஸ்லிம் மக்களின் இருப்புக்கு பாதுகாப்பு என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் போராட்ட காலத்தில் இரு இன த்துள்ளும் புகுந்த கருநாகங்கள் கக்கிய நஞ்சு கண்ணிவெடிகளை விட மோசமான பாதகத்தை செய்கிறது.

இணைப்பால் ஏற்பட கூடிய நிலைமைகள் பற்றிய சந்தேகம் தீரும்வரை இருதரப்பாரும் ஏட்டிக்கு போட்டியாக முரண்பட்டு செயல்ப்படும் நிலை தொடர்ந்து கொண்டே போகும். அவ்வப்போது இரு பகுதியுள்ளும் புகுந்து விட்ட கருநாகங்கள் படமெடுத்து ஆடும். இன விரோத நஞ்சை கக்கும். காலா காலமாக கறையான்கள் கட்டி வளர்த்த ஒற்றுமை என்ற புற்றுக்குள் ஒரு காலத்தில் சாரைகள் புகுந்தவேளை அவ்வப்போது சிறு சிறு சம்பவங்கள் கிழக்கின் எல்லை கிராமங்களில் இடம்பெற்றன. ஆயுதங்கள் ஆளுமை செய்த போது சாரைகள் கருநாகங்களாக மாறி தமிழ் முஸ்லிம் இன முரண்பாட்டை நிரந்தரமாக்கின. நல் ஆட்சி அரசில் பெயருக்கு தான் ஒற்றுமை பேணப்படுகிறது. ஆனால் செயலில் அது இல்லை. மத்திய அமைச்சர்கள் முதல் மாகாண அமைச்சர்கள் வரை, வடக்கு கிழக்கு முதலமைச்சர்கள் உட்பட தனி அரசியல் நிலைபாட்டில் தான் பயணிக்கின்றனர். அன்று பிரித்தானிய மகாராணியின் ஆட்சியில் இருந்து விடுபட மட்டுமல்ல அண்மையில் மகிந்த மன்னரை வீட்டுக்கு அனுப்பவம் மூவின மக்களும் கரம் கோர்த்தே இயங்கினர். வெற்றியும் கண்டனர்.

ஆனால் சுதந்திரத்தின் பின் பல தலைமுறை வாழ்ந்த மலையக தமிழர்களை வாக்கற்றவர் ஆக்கியது போலவே, நல்லாட்சியிலும் வடக்கின் பெரும்பகுதி மக்களின் பரம்பரை வாழ்விடங்கள் பறிபோய்க் கொண்டுதான் இருக்கின்றது. இரண்டு தசாப்தங்ககுக்கு மேலாக ஆண்ட மத்திய அரசுகளுடன் ஒட்டி உறவாடி பலன் பெற்றவர்களால் கூட முழுமையான விடுவிப்பை செய்விக்க முடியவில்லை. எதிர்கட்சி தலைவரின் தொலைபேசி அழைப்பை நம்பி உண்ணாவிரதத்தை கைவிட்ட கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் மீண்டும் இரவுபகலாய் காத்திருக்கின்றனர் காணி விடுவிப்புக்காக. மயிலிட்டி மக்களை வருடா வருடம் கூட்டி சென்று காணி காட்டியவர் இன்று இறங்கு துறை பற்றிய இழுபறியில் மௌனித்து நிற்கிறார். வடக்கிற்கு பொருத்தமில்லை என எதிர்த்து பொருத்து வீடு தர வந்த முதலாவது படித்த இலங்கையர் இராமநாதன் உறவினர் மத்திய அமைச்சர் சுவாமிநாதனை புறமுதுகிட்டு ஓட செய்தவர் கிடைக்கும் மாகாண நிதியை கூட, கால கிரமத்துள் சரியாக பகிரத்  தெரியாது அது மீண்டும் திரும்பி போனதும் காக்கா நரி வடை கதை சொல்லி மந்திரிகளின் ஊழல் பற்றி மூச்சுவிடாது மூன்றாவது ஆண்டை நெருங்கிவிட்டார்.

இனத்தின் நலன் பற்றி புலத்தில் வாழ்ந்தாலும் நினைத்து பார்க்கும் கறையான்கள் முடிந்தவரை நாம் மீளுருப்பெற ஏதாவது செய்யவேண்டும் என போராட்ட காலத்தில் புலி நிதியம் போல, இந்த பூனைகள் தம் பதவிக்காக களம் காணும் தேர்தல் காலத்தில் அனுப்பும் நிதி கூட, கருநாகங்கள் குடிபுகுந்த புற்றுக்குள் விழுவதால் உள்ளே இருப்பதன் நிகழ்ச்சி நிரல்ப்படிதான் காரியங்கள் தொடர்கின்றன. மீண்டும் நினைவூட்டுகிறேன் ஆடுகளம் மாறவில்லை அடிக்கும் பந்தும் மாறவில்லை வேலிக்கு ஓணான் சாட்சி என செயல்படும் ஆடுபவர் செயலால் தேறிய சொக்கத் தங்கம் பற்றிய நம்பத்தகு செய்தி இதுவரை கிடைக்கவில்லை, சேதாரம் செய்கூலிக்கு கணக்கு வழக்கில்லை. பொய்யா மொழி உரைத்த தீர்க்க தரசி யோகர் சுவாமி வாழிய வாழியவே

[‘’அது எப்பவோ முடிந்த காரியம்’’]

-ராம்-  (2ல் விரியும்)