பயிரை மேய்ந்த வேலிகள்..(29)

(மாணவிகளை புலிகளாகவே அடையாளபடுத்திய அரசாங்கம்.)

முல்லைத்தீவு வைத்திய சாலையில் இருந்து வவுனியாவுக்கு இந்த மாணவிகளை கொண்டு செல்வதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம்– ICRC உதவியது. இந்த மாணவிகளை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் ஆரம்பத்தில் பல சிக்கல்கள் காணப்பட்டன. அக்காலத்தில் நிலவிய புலிகளின் போக்குவரத்து அனுமதி (பாஸ்) முறையினை இந்த அப்பாவி மாணவிகள் மீது கடுமையாக நடைமுறைப்படுத்த புலிகள் முயன்றனர்.

போக்குவரத்து அனுமதி (பாஸ்) வழங்குவது புலனாய்வு அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் குடும்ப விபரம் மற்றும் மீள திரும்பக்கூடிய சாத்திய தன்மை என்பவை பற்றி ஆராய்ந்தே முடிவெடுத்தனர். இதற்கென கிராமத்திற்கு கிராமம் சம்பளம் கொடுத்து ஆட்களையும் நியமித்திருந்தனர். இவ்வாறு சம்மபளத்துக்கு புலனாய்வு துறையுடன் வேலை செய்தவர்களாலேயே மக்கள் அதிகளவு சிரமங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. அக்காலத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவை சேர்ந்த புலிகளிடம் கூட கதைத்து பேசி அனுமதியை வாங்கிவிடலாம். ஆனால் இவ்வாறு சம்மபளத்துக்கு அங்கு வேலைசெய்தவர்களுடன் மக்களால் கதைக்கவே முடியாத நிலை காணப்பட்டது.

ஒருவர் பாஸுக்கு விண்ணப்பித்தால் அவருக்கான பதில் குறைந்தது மூன்று மாதங்களின் பின்பே வழஙக்ப்பட்டது. போக்குவரத்து அனுமதிக்கு விண்ணப்பிபவர்களின் சரித்திரமே திரட்டப்பட்டது. அவர் செல்லும் இடத்தில் உள்ள பல புலனாய்வு கண்காணிப்பாளர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு ஆராயப்பட்டது. அவர் கூறுவது உண்மையா எனவும் ஆராயப்பட்டது. இவை எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே ஆள்பிணையுடன் பாஸ் வழங்கப்படும். ( இந்த போகுவரத்து அனுமதி தொடர்பாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் தொடரலாம் என்பதால் இத்துடன் இதனை நிறுத்துகின்றேன்)

மாணவிகள் விடயத்திலும் இந்நடைமுறைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. காயமடைந்த மாணவிகளின் உதவியாளர்கள் விடயத்திலும் இவ்விடயம் பின்பற்றப்பட்டது. காயமடைந்த குடும்பத்தில் அனைவரையும் அனுப்புவதில் தடை விதிக்கப்பட்டது. உதவியாளராக புலனாய்வு உறுப்பினர்களை அனுப்பவும் திட்டமிடப்பட்டது. ஆனால் மாணவிகளை ICRC அழைத்துச்செல்ல இருப்பதை உணர்ந்து கொண்ட புலிகள் அத்திட்டத்தை கைவிட்டனர். .நா. போர் நிறுத்த கண்காணிபு பிரிவினரின் நெருக்கடி காரணமாக மூன்று மாணவிகளையும் வவுனியாவுக்கு சிகிட்சைக்காக அனுப்பபட்டனர்.

இராணுவ கட்டுப்பாட்டு பகுதியான வவுனியாவுக்கு செல்லும்போது விசாரனைக்கு வரும் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் எப்படி உரையாட வேண்டும் எவ்வாறு அங்கு நடந்து கொள்ள வேண்டும் எனவும் காயப்பட்ட மாணவிகளுக்கும் அவர்களுடன் கூட செல்லும் உதவியாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை புலிகள் வழங்கியிருந்தனர்.இங்கே முல்லைத்தீவில் எஞ்சியிருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை மனதில் கொண்டு செயற்படுமாறு அவர்களுக்கு வெளிப்படையாகவே அவர்கள் கூறினார்கள். அத்துடன் வவுனியாவில் உள்ள புலிகளின் புலனாய்வு முகவர்களால் இந்த மானவிகளை கண்காணிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டது.

இவ்வாறு வவுனியாவுக்கு மேலதிக சிகிட்சைக்காக சிறிபதி கஸ்தூரி (18), தம்பிமுத்து தயாழினி(20), பாலசிங்கம் சுனேத்ரா(19) ஆகியோர் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும் இம்மாணவிகள் மேலதிக சிகிட்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்

அங்கு சிகிட்சை பெற்று வந்த இந்த மாணவிகளை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் செப்டம்பர் 01,2006ல் அறிவித்தனர். அதன் படி அந்த மாணவிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விமானதாக்குதலுக்கு உள்ளான இடம் செஞ்சோலை எனப்படும் அநாதை இல்லம் அல்ல எனவும் அது புலிகளின் பயிற்சி முகாம்தான் எனவும் அரசு தரப்பினர் இப்போது அடித்துக்கூறத்தொடங்கினர். மாணவிகளை கட்டாயப்படுத்தி தமது பயிற்சி முகாமில் ஆயுத பயிற்சியை வழங்கப்பட்ட புலிகளால் தடுத்து வைக்கப்பட்ட இவர்களை இனிமேலும் மாணவிகள் தாக்கப்பட்டார்கள் எனக் கருத முடியாது எனவும் அரசாங்கம் கூறினர்.

.நாவின் சிறுவர் அமைப்பு தவறான தகவலை வெளியிட்டதாக இந்த மாணவிகளின் வாக்கு மூலத்த சாட்சியாக வைத்து அரசாங்கம் .நா மீது நேரடியாகவே குற்றம் சாட்டியது. ( இந்த மாணவிகள் விவகாரத்துடன் அரசாங்கத்தரப்பினருக்கும் .நா சிறுவர் நிதியத்துக்கும் இடையிலான மோதல் உருவாகியதும் அது தொரபில் .நா எடுத்த இறுக்கமான நிலைப்பாடு எனபன இத்தொடரில் இருந்து விலகிச்செல்லவதாலும், மிக நீண்டதாக இருப்பதாலும் அதனை இங்கே தவிர்க்கின்றேன்)

அதன் பின் அந்த மாணவிகள் குணமடைந்த பின் மீண்டும் முல்லைத்தீவுக்கு செல்ல அனுமதிக்கப்படவும் இல்லை அவர்கள் அதனை விரும்பியிருக்கவும் இல்லை. மாணவிகள் கொல்லப்பட்ட துயர நிகழ்வுடன் மாணவ மாணவிகளுக்கான கட்டாய ஆயுத பயிற்சியை புலிகள் கைவிட்டனர். இப்போது மாணவர்களால் சற்று ஆறுதலடைய முடிந்தது. இந்த ஆறுதுக்காக அவர்கள் கொடுத்த விலை 53 மாணவிகளின் உயிரும் 129 பேரின் உடல் ஊனமும்.

மாணவ சமூகத்தின் இந்த ஆறுதல் நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. அது தற்காலிகமானதாகவே இருந்தது. இப்போது வேறு விதமாக புலிகள் தமது ஆட்டத்தை தொடங்கியிருந்தனர்.

தொடரும்..

(Rajh Selvapathi)