காலத்தின் திசைவழிகள்: போராட்டங்களின் உலகமயமாக்கல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

வாழ்க்கைத் தெரிவுகள் எதையும் வழங்காதபோது, போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என, மக்கள் உணர்கிறார்கள். ஒருபுறம் செல்வம், சிலரது கைகளில் மலைபோல் குவிகையில், இருந்த கொஞ்சமும் மெதுமெதுவாகக் களவாடப்படுவதை அவர்கள் உணர்கையில், அவர்களுக்குப் போக்கிடம் எதுவும் இல்லை. அமைதியாக இருத்தல், பொறுமை காத்தல் போன்ற போதிக்கப்பட்ட அஹிம்சை வழிமுறைகள் எதுவுமே, பயனளிக்காது என்பதை உணர்ந்த பின்னர், மக்களால் என்ன செய்ய முடியும்?

இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்ற நிலையில், அவர்கள் செய்யக் கூடியது என்ன? தனது எதிர்காலம் மட்டுமன்றி, தனது குடும்பத்தினதும் தனது பிள்ளைகளினதும் எதிர்காலம் கேள்விக்குறியாவதற்கும் அப்பால், எதிர்காலமற்ற நிகழ்காலத்தை எதிர்நோக்கி இருக்கையில், என்ன செய்யவியலும்?

உலகம் இப்போது போராட்டங்களால் தகித்துக் கொண்டிருக்கின்றது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் போராட்டங்கள் நடக்கின்றன. அவற்றைப் பிராந்திய ரீதியாகவோ, கண்டங்கள் ரீதியாகவோ வேறுபடுத்த முடியாதபடி, அவை பல்கிப் பரவியுள்ளன.

சரியாகச் சொல்வதானால், அவை உலகமயமாகியுள்ளன. அவற்றில், உலகக் கவனத்தை எட்டாத சில முக்கிய போராட்டங்களையும் அவற்றையொட்டி, நாம் வாழும் உலகின் எதிர்காலத்தின் திசைவழி குறித்த பார்வையையும் இக்கட்டுரை வழங்க முனைகிறது.

பங்களாதேஷ்: வீதிக்கு வந்த மாணவர்கள்

ஜூலை மாதம் 29ஆம் திகதி, பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் பிரதான விமான நிலைய வீதியில், பயணிகளை ஏற்றுவதற்காக ஒன்றுக்கொன்று போட்டியிட்ட இரு பஸ்களுக்கு இடையிலான சவாரியில், மாணவனும் மாணவியும் சிக்கி மரணமடைந்தனர்.

இது பங்களாதேஷ் மாணவர்களை வீதிக்குக் கொண்டுவருவதற்கான தீப்பொறியாக அமைந்தது. இதையடுத்து பங்களாதேஷில் வீதிப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரி, தொடர்ச்சியாக ஒன்பது நாட்களாக மாணவர்கள் போராடினார்கள். இது மொத்த பங்களாதேஷையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

உலகளாவிய ரீதியில், வீதிவிபத்துகளில் அதிகளவானவர்கள் மரணமடையும் நாடுகளில், பங்களாதேஷ் முன்னணியில் உள்ளது. பங்களாதேஷில் ஆண்டுதோறும் சராசரியாக 4,000 பேர், சாலை விபத்துகளில் இறப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2017ஆம் ஆண்டில் மட்டும், பங்களாதேஷில் இடம்பெற்ற வீதிவிபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,200 ஆகும்.

வீதிவிபத்துகளுக்குக் காரணமானவர்களுக்கு, கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனக்கேட்டும், போக்குவரத்து, வீதிவிபத்து தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் கேட்டு, மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

தொடக்கத்தில் இதை அரசாங்கமோ, ஊடகங்களோ பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. நாட்கள் செல்லச் செல்ல, தங்கள் போராட்ட வடிவத்தை அவர்கள் மாற்றினார்கள். வாகனத்தை ஓட்டுபவர்கள் முறையான ஆவணங்கனையும் உரிமங்களையும் வைத்திருக்கிறார்களா என, மாணவர்கள் வாகனங்களைச் சோதனையிடத் தொடங்கினர்.

நாட்கள் செல்லச் செல்ல மக்கள் ஆதரவு, மாணவர்களுக்குப் பெருகியது. மாணவர்களது கோரிக்கைகள் நியாயமானவை என, மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இந்நிலையில், மாணவர்களிடையே குண்டர்கள் புகுந்து, பொலிஸாருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், பொலிஸார் மாணவர்களைத் தாக்கினர். டாக்கா, போராட்டக் களமாகக் காட்சியளித்தது. மாணவர்களின் போராட்டங்களால், பங்களாதேஷின் தலைநகரம் ஸ்தம்பித்தது.

அரசாங்கம், குண்டர்களின் உதவியுடன் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டி, அதற்குப் பொலிஸாரின் பதில் வன்முறை மூலம், போராட்டத்தை வலுக்கட்டாயமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

ஆனால், பங்களாதேஷ் வரலாற்றில் இது முக்கியமானதொரு போராட்டமாகக் கொள்ளப்படுகிறது. மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகத் தலைநகரையே கதிகலங்க வைத்த நிகழ்வு, ஒருபுறம் ஆச்சரியமூட்டுவதாய் இருந்தாலும் மறுபுறம், அநீதிக்கு எதிராகப் போராடுவதற்கான நம்பிக்கையை விதைத்துள்ளது.

‘ரையன் எயார்’: விமானிகளின் சோகக்கதை

விமானிகள் பற்றிய கனவு நம்மில் பலருக்கு உண்டு. கம்பீரமான தோற்றம், நல்ல சம்பளம், இராஜ மரியாதை என, விமானிகள் பற்றிய பிம்பங்கள் பலமானவை. விமானியாக ஆசைப்படும் பலர், இந்தப் பிம்பங்களால் கவரப்பட்டவர்களேயாவர்.

இப்போது ஐரோப்பா எங்கும், ஒருதொகை விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘ரையன் எயார்’ விமான சேவையைச் சேர்ந்த விமானிகள், கடந்த வெள்ளிக்கிழமை (10) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், ‘ரையன் எயார்’ விமான சேவையால் 400 விமானங்களை இயக்க முடியவில்லை. இதனால், கடந்த வெள்ளிக்கிழமை மட்டும், 74,000 பயணிகள் பாதிக்கப்பட்டார்கள்.

‘ரையன் எயார் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது’, ‘ரையன் எயார் மாற வேண்டும்’, ‘எங்களை மதியுங்கள்’ என்ற பதாகைகள் விமான நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தன.

விமானப் பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில், ஐரோப்பாவில் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ‘ரையன் எயார்’, கடந்த ஆண்டு, 130 மில்லியன் பயணிகளை ஏற்றிஇறக்கியிருந்தது.

குறைந்த சம்பளங்கள், நீண்டநேர வேலை ஆகியவற்றைத் திணிக்கும் ‘ரையன் எயார்’ நிறுவனத்தின் வியாபார மாதிரியின் அடிப்படையில், அதீத சுரண்டலுக்கான புதிய நிர்ணய வரம்புகளை அமைப்பதில், அது முக்கிய பாத்திரம் வகிக்கிறது.

மிகக்குறைவான விலையில் ஆசனங்களை வழங்குவதன் மூலம், வாடிக்கையாளர்களைத் தன்வசம் வைத்துள்ளது. அதேவேளை, மிகக்குறைந்த ஊதியத்தைத் தொழிலாளர்களுக்கு வழங்குவதன் மூலம், ஏராளமான இலாபத்தை அது சம்பாதித்துள்ளது.

குறிப்பாக, விமானிகள் தொழிற்சங்கமாக ஒன்றிணைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு மிகக்குறைவான மருத்துவக் காப்புறுதியே வழங்கப்படுகிறது. சம்பளம் தொடர்பான நியமமான விதிகள் கிடையாது; வேலைநேர அட்டவணையோ, கட்டுப்பாடுகளோ கிடையாது.

கிழக்கு ஐரோப்பாவில் குறைவூதிய நாடுகளில், பிழிந்தெடுக்கும் முகாமைத்துவ முறைமைகளைப் பயன்படுத்தி, அடிமட்டச் சம்பளத்துக்கு பணியாளர்களை ‘ரையன் எயார்’ நியமித்துள்ளது. குறிப்பாக, 10 அமெரிக்க டொலர்கள் சம்பளம் வழங்கப்படும் விமானச் சேவைப் பணியாளர்களும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். 4,000க்கும் அதிகமான ‘ரையன் எயார்’ பணியாளர்கள், மாதத்துக்கு மிகக் குறைவான சம்பளமாக 600 டொலர் அளவுக்கே பெற்றுக்கொள்கின்றனர்.

விமானிகள், ‘ரையன் எயார்’ விமானச் சேவை நிறுவனத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் இல்லை. அவர்கள், ஓர் ஆள் நிறுவனத்தை நிறுவி, அயர்லாந்தில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அதன்படி அவர்களது சம்பளமானது, அவர்களது தனியார் நிறுவனம், ‘ரையன் ஏயார்’ நிறுவனத்துக்கு வழங்கிய சேவைக்காக கொடுக்கப்பட்ட தொகையாக, அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும்.

இதன் மூலம் பல விடயங்களை ‘ரையன் ஏயார்’ சாதித்துள்ளது. முதலாவது, ஒரு சேவைக்காக, ஒரு கம்பெனி இன்னொரு கம்பெனிக்கு வழங்கும் தொகை. எனவே, தொகையைப் பெற்ற கம்பெனி (விமானி) பெற்ற தொகைக்கு, அரசாங்கத்துக்கு வரி செலுத்த வேண்டும். இது தனியாள் வரியல்ல, கம்பெனி வரி; எனவே வரிவிதிப்புவீதம் அதிகம்.

இரண்டாவது, கம்பெனி ஊடாகச் சேவையைப் பெற்றுக் கொள்வதால், முதலாளி-தொழிலாளி உறவு இங்கே கிடையாது. எனவே, தொழிலாளி குறித்த பொறுப்பு எதுவும் ‘ரையன் எயார்’ நிறுவனத்துக்குக் கிடையாது. இதனால் காப்புறுதி, மருத்துவ உதவி, ஓய்வூதியம், பிற கொடுப்பனவுகள், விடுமுறை என எதுவும் கிடையாது. இதனால் தொழிலாளிக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படைப் பாதுகாப்பு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

விமானி அல்லாத பிற ஊழியர்கள், தனியார் முகவர் நிறுவனங்களால் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அம்முகவர் நிறுவனங்களின் சேவைக்கு, ‘ரையன் எயார்’ தொகையை வழங்குகிறது. இவ்வாறு வேலைக்கமர்த்தும் தனியார் முகவர் நிறுவனங்கள், எந்தவித மருத்துவ காப்புறுதிகளோ, ஓய்வூதியமோ, பிறகொடுப்பனவுகளோ எதுவுமே கிடையாது என்ற உடன்பாட்டை ஒப்பந்தத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்கிறார்கள். இதனால், விமானியல்லாத பிறருக்கும் எதுவித அடிப்படையான சமூகப் பாதுகாப்பும் வழங்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

‘ரையன் எயார்’ நிறுவனத்தில், 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்ட, நெதர்லாந்தைச் சேர்ந்த விமானி ஒருவர், வேலைநிறுத்தத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னர், மலாகா விமான நிலையத்தின் பணியாளர் கார் நிறுத்தும் பகுதியில் இறந்து கிடந்தார். பெல்ஜியத்தின் புரூசெல்ஸூக்கு விமானம் செலுத்த வேண்டியிருந்த, சற்று நேரத்துக்கு முன்னர் தான், அவர் தற்கொலை செய்து கொண்டார். இது, ‘ரையன் எயார்’ விமானியின் இரண்டாவது தற்கொலையாகும்.

சிலகாலத்துக்கு முன்னர், இங்கிலாந்தின் லிவர்பூல் ‘ஜோன் லென்னன்’ விமான நிலையத்தில், பிரித்தானிய விமானியொருவர் உயிரை மாய்த்துக் கொண்டார். விமானிகள் எதிர்நோக்கும் மன அழுத்தம் அபரிமிதமானது.

அயர்லாந்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ‘ரையன் எயார்’ நிறுவனத்தின் அயர்லாந்து விமானிகள், கடந்தாண்டு நான்கு தடவைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஓரேயொரு கோரிக்கையையே முன்வைத்திருந்தனர். தாங்கள் தொழிற்சங்கமாவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே அக்கோரிக்கையாகும்.

இதற்கு, ‘ரையன் எயார்’ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மைக்கல் ஓ லியரி, “தொழிற்சங்கமாவதை அனுமதிப்பதை விட, நான் எனது கைகளை வெட்டிக் கொள்வது மேல்” எனப் பதிலளித்துள்ளார். இதையடுத்து ஸ்பெயின், பிரித்தானியா, நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள விமானிகளும் இக்கோரிக்கையைக் கூட்டாக முன்வைத்தனர்.

இது சாத்தியமாகாதபோது, கடந்தாண்டு கிறிஸ்மஸ்ஸை ஒட்டி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மிரட்டியதன் விளைவாக, ‘ரையன் எயார்’ நிர்வாகம், தொழிற்சங்கமாதலை ஏற்றுக் கொண்டதோடு, அதனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் உடன்பட்டது.

ஆனால், எட்டு மாதங்கள் கடந்த நிலையில், எதுவித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை. இதனால், விமானிகளின் எக்கோரிக்கையையும் ‘ரையன் எயார்’ கணக்கெடுக்கவில்லை. இதன் விளைவால் இந்த வேலைநிறுத்தம், இப்போது நடைபெறுகிறது.

இப்போராட்டமானது, ஐரோப்பா, வடஆபிரிக்கா எங்கிலும் 37 நாடுகளில், 86 விமான நிலையங்களில் இருந்து, 13,000 தொழிலாளர்களுடன் செயற்பட்டு வரும், பன்னாட்டுப் பெருநிறுவனம் ஒன்றுக்கு எதிரான, ஓர் உலகளாவிய போராட்டமாக வேகமெடுத்து வருகிறது. இதன் தீவிரத்தன்மை, இன்று உலகம் எதிர்நோக்கும் சவால்களுக்கான சரியான உதாரணமாகும்.

இப்போராட்டம் இன்று, ஐரோப்பாவை நிலைகுலைய வைத்துள்ளது. இது, ஐரோப்பாவெங்கும் இன்று எழுகின்ற போராட்டக் குரல்களின் ஒருபகுதியாகும்.

குறிப்பாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமானிகள், இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையானது, சுரண்டலுக்குள்ளாகும் உழைக்கும் மக்களின் சர்வதேசிய ஒற்றுமையைக் காட்டுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, பிரித்தானியாவின் 50,000 பல்கலைக்கழக ஆசிரியர்கள், தங்கள் ஓய்வூதியக் கொடுப்பனவு வெட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நிகழ்த்திய வேலைநிறுத்தப் போராட்டம், பிரித்தானியாவின் நவீன வரலாற்றில் காணக்கிடைக்காத ஒன்று. இதையும், கடந்த மாதம் பிரான்ஸில் ரயில்வே ஊழியர்கள் சம்பள, சமூகநல வெட்டுகளுக்கு எதிராக நிகழ்த்திய மாபெரும் வேலைநிறுத்தத்தையும் ‘ரையன் எயார்’ வேலைநிறுத்தத்துடன் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

இதேபோல், இத்தாலியில் பண்ணைகளில் வேலைசெய்யும் குடியேறிகள், மோசமான சுரண்டலுக்கு உள்ளாவதை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இவை உலகத்தின் திசைவழி குறித்துத் தெளிவான செய்தியொன்றைச் சொல்கின்றன.

‘அமேசன்’: செல்வம் இங்கே குவிந்து கிடக்கிறது?

‘ரையன் எயார்’ நிறுவனத்தை விட, உலகளாவிய ரீதியில் நன்கறியப்பட்ட, பல்தேசியக் கம்பெனியான ‘அமேசன்’ நிறுவனத்தின் ஊழியர்கள், கடந்த மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக போர்த்துக்கல், போலந்து, இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி ஆகிய நாடுகளில் பணிபுரியும் ‘அமேசன்’ ஊழியர்கள், மிகக்குறைவான சம்பளம், மோசமான வேலைத்தள நிலைவரங்கள் ஆகியவற்றைக் காரணம்காட்டி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஜேர்மனியில், ‘அமேசன்’ நிறுவனத்தில் பணியாற்றும் 16,000 பணியாளர்களும், ஸ்பெயினில் பணியாற்றும் 2,000 பேரும், தங்கள் தங்கள் நாடுகளில், அரசாங்கங்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த அடிப்படைச் சம்பளத்தை, தங்களுக்கு ‘அமேசன்’ நிறுவனம் வழங்க வேண்டும் என்று கோரி, போராடி வருகின்றனர்.

“போராட்டங்கள் எதையும் கணக்கிலெடுக்கத் தயாராக இல்லை; இவ்வாறான கோரிக்கைகள் நியாயமற்றவை” என்று ‘அமேசன்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இக்கதையில் இன்னொரு பக்கமும் உண்டு. அண்மையில், உலகின் முதலாவது பணக்காரராக ‘அமேசன்’ நிறுவனத்தின் உரிமையாளரும் பிரதான செயல் அதிகாரியுமான ஜெஃப் பெஸோஸ் அறிவிக்கப்பட்டார். அவரின் மொத்தச் சொத்து மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

பெஸோஸின் இச்சாதனையை, அவருக்குப் பணிபுரியும் 500,000 தொழிலாளர்களின் நிலையுடன் ஒப்பிடும்போது, இச்சாதனை எவ்வாறு சாத்தியமாகியது என்பது புரியும்.

பெஸோஸ், 2018ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 50 பில்லியன் டொலர் சம்பாதித்துள்ளார். இந்தாண்டின் ஒரு நாளில், அவர் ஈட்டியிருக்கும் 255 மில்லியன் டொலர் என்பது, அமெரிக்காவில் 10,000 க்கும் அதிகமான ‘அமேசன்’ தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓராண்டுச் சம்பளங்களின் மொத்தத்துக்குச் சமம்.

2018 இல் பெஸோஸ், ஒரு வினாடியில் சம்பாதித்துள்ள 2,950 டொலர்களானது, இந்தியாவில் ஓர் ‘அமேசன்’ தொழிலாளியின் ஓராண்டுச் சம்பளமான 2,796 டொலரை விட அதிகமாகும்.

இவ்வளவு தொகையைச் சம்பாதிக்கக் காரணமான ‘அமேசன்’ நிறுவனம், அமெரிக்காவில் மிகவும் ஆபத்தான வேலையிடங்களில் ஒன்று என்பதை, தொழிலிட பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், ஆதாரங்களுடன் காட்டியுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் வெளிநாட்டுப் போர்களிலும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மறுப்பிலும் ‘அமேசன்’, அமெரிக்க அரசாங்கத்தின் குற்றங்களுக்கு ஆழமாக உடந்தையாக உள்ளது. இந்நிறுவனத்துக்கு உள்ளே வளர்ந்து வரும் எதிர்ப்பு முக்கியமானது.

‘பெருந்திரளான மக்களை, நாடு கடத்துவதிலும் பொலிஸ் கண்காணிப்பு வேலைகளிலும் சம்பந்தப்பட்டிருப்பதை ‘அமேசன்’ நிறுவனம் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ எனக் கேட்டு, ஜூன் மாதம், ‘அமேசன்’ பணியாளர்கள் கடிதமொன்றை வெளியிட்டனர்.

இதில், அரசாங்கத்தின் கண்காணிப்புக்கான மற்றொரு சக்தி வாய்ந்த கருவியாக, ‘அமேசன்’ தொழிற்படுவதைக் கண்டிப்பதாகவும், அதேவேளை, இது இறுதியில் அடித்தட்டு மக்களையே பாதிக்கிறது என்றும் குற்றங்களைச் செய்கின்ற பணக்காரர்கள் இதிலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள் என்றும் சித்திரவதைகளுக்கும் கொலைகளுக்கும் ‘அமேசன்’ உடந்தையாக இருப்பதை நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டதோடு, சித்திரவதை முகாம்களில் மில்லியன் கணக்கானோரைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பை, ஹிட்லருக்கு வழங்குவதில், அமெரிக்க ஐடீஆ நிறுவனம் தொடர்புபட்டிருந்ததையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.

உலகின் திசைவழி, ஆபத்தான பாதையில் பயணிக்கிறது. இலாபவேட்கையும் அதற்காக எதையும் செய்யத் தூண்டும் பாணியிலான பண்பாட்டுச் சுத்திரிகரிப்புகளும் அதைச் சாத்தியமாக்கும் ஊடகங்களும் என இலாபத்தை எப்படியும் சேர்க்கலாம் என்பதை நியாயப்படுத்தும் அளவுகோல்கள் நிரம்பிய சூழலில் வாழ்கிறோம்.

ஒருவன் சுரண்டப்படுவதை, அவனுக்கு அநீதி இழைக்கப்படுவதை, அவனுடைய உரிமை மறுக்கப்படுவதை, அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் நாம் வாழத் தலைப்படுவதை விட, ஆபத்தானது வேறெதுவும் இல்லை.