புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part1)

மே 18எங்கள் தேசத்தில் எம் இனத்தை கொலைகளத்தில் பலி கொடுக்கப்பட்ட நாள் , இறந்த அனைவருக்கும் எனது அஞ்சலிகள். ஆனால் இது யாரால் ஏற்பட்டது ? போரின் இறுதி நாட்கள் எவ்வாறு இருந்தன?வன்னியில் என்ன நடந்தது? பிரபாகரன் இறுதியாக The Three Hundred என்ற ஆங்கில படத்தை பார்த்த பின்னர் எடுத்த முடிவு என்ன? கொஞ்சம் நீளமான பதிவு ஆனால் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு பதிவு, ஒரு 20 நிமிடங்கள் ஒதுக்கி இதனை முழுவதும் படிக்கவும்.

களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு.

உண்மைகள் சொல்லப்படாதவரையில் பொய்களின் ஊர்வலமே நடக்கும் என்பார்கள். இந்தப் பொய்கள் எப்போதும் எல்லோரையும் எல்லாவற்றையும் மயானத்துக்கே அழைத்துச் செல்லும். வன்னியுத்தமும் ஈழத்தமிழர் போராட்டமும் ஏறக்குறைய இத்தகையதொரு நிலையையே இன்று எட்டியுள்ளன. விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் பற்றியும்.

வன்னியில் என்ன நடந்தது? புலிகள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டனர்? அல்லது எப்படித் தோற்றனர்? உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இது போன்ற ஏராளமான கேள்விகள் நம் முன் விரிந்து கிடக்கின்றன. .நா. உட்படப் பல்வேறு தரப்பினரும் இந்த நிலைமைகள் மற்றும் விவரங்கள் தொடர்பாகப் பலவகையான அபிப்பிராயங்களைத் தெரிவித்து வருகின்ற போதும் உண்மை நிலவரத்தை எந்தத் தரப்பும் இன்னும் முழுமையாகக் கண்டறியவில்லை.

முதலில் இந்தப் பத்தியாளர் இன்னும் எல்லா உண்மைகளையும் சொல்ல முடியாத அச்சத்துடனேயே உள்ளார் என்பதை நீங்கள் உணர வேண்டும். ஆனால் எல்லா உண்மைகளையும் இங்கே சொல்ல முடியாவிட்டாலும் பொய்யுரைப்பதைத் தவிர்த்திருக்கிறார். வன்னியில் புலிகளின் தடைகள், ஜனநாயக மறுப்பு, கருத்து சுதந்திரமின்மைக்குள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேச முடியாமை என்னும் நிலைமை இருந்ததைப் போலவே இப்போது அங்கிருந்து தப்பிவந்தும் எல்லாவற்றையும் பேச முடியவில்லை.

இங்கும் தொடர்பு வசதி இல்லை. அது மட்டுமல்ல, வன்னியிலிருந்து வெளியேறப் புலிகள் விதித்திருந்த பயணத் தடையைப் போன்றே இந்த முகாமிலிருந்தும் யாரும் வெளியே செல்ல முடியாது. ஒரு கைதி நிலையே (தடுப்பு நிலையே) தொடர்கிறது. அதனால் இந்தப் பத்திகூட மிக ரகசியமாகவே எழுதப்படுகிறது. வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தத் தகவல் யுகத்தில் எந்தத் தொடர்பாடலுமில்லாமல் எல்லாவற்றிலிருந்தும் எல்லோருடனுமான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம். ஒரு பத்திரிகை வாசிப்பதற்குக்கூட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இப்படியே இன்று மூன்று லட்சம் வரையான சனங்கள் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றைப் பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது வன்னியில் என்ன நடந்தது என்று பார்ப்போம். ஏனெனில் வன்னி நிலையே, புலிகளின் அரசியலே, ஈழத் தமிழரின் இந்த வீழ்ச்சிக்கு முழுக் காரணம்.

2006 ஆகஸ்ட் 11இல் விடுதலைப் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்ததுடன் வன்னிக்கான கதவுகள் பெரும்பாலும் மூடப்பட்டுவிட்டன. ஒரு பக்கத்தில் சிறிலங்கா ராணுவம் பாதைகளை மூடியது என்றால் மறுபுறத்தில் புலிகள் சனங்களுக்கான தொலைத்தொடர்புகள், போக்குவரத்து, பயண அனுமதி எல்லாவற்றையும் மூடினார்கள். வன்னி மக்கள் இரண்டு தரப்பினருடைய நெருக்கடிகளுக்கும் முற்றுகைக்கும் உள்ளாக வேண்டியதாகியது. யுத்தம் ஓய்வற்று நடந்த இரண்டரை ஆண்டுகளிலும் வன்னி மக்கள் பட்ட துயரங்களும் கொடுமைகளும் அழிவுகளும் அவமானங்களும் சாதாரணமானவையல்ல.

(அருண் நடேசன்)

(தொடரும்….)