சங்க காலமும் கீழடி புதை நகரமும்

சங்க இலக்கியங்கள் கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட கால தமிழர் வாழ்வியலையும் அவர் தம் பண்பாட்டு கூறுகளையும், நாகரிக செழுமையயையும் எடுத்தியம்புகின்றன். ஆனால் அவற்றுக்கான தொல்லிதல் சான்றுகள் மிகக் குறைவாகவே கிடைத்தன . உலகின் பல நாகரிகங்களின் செழுமையயை எகிப்தும், மொசப்பட்டோமியாவும், மொகஞ்சதாரோவும், கிரெக்கமும், ஏதன்சும் பறை சாற்றி நிற்கின்றன. தமிழர்களின் பண்டை நாகரிகத்தின் அழிந்து போன பல நகரங்களை நாம் கற்பனையிலேயே காணவேண்டியிருந்தது.

ஆனால் கடந்த ஓராண்டாக மதுரை கீழடியில் நடை பெற்ற அகழ்வாய்வு நமக்கு புதிய வெளிச்சத்தை தந்திருக்கிறது. இன்னும் நாம் கண்டு பிடிக்க வேண்டியவை நிறையவே உள்ளன என்பதை இந்த ஆராய்ச்சி உணர்த்துகிறது. ஆனால் இதில் அக்கறை செலுத்த வேண்டிய தமிழக அரசு மெத்தனப் போக்கையே கடைப் பிடிக்கிறது.

இது தொடர்பாக வந்த கட்டுரை ஒன்றை இங்கு பதிவிடுகிறேன். உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் இதில் அக்கறை எடுத்தால் என்ன.

கீழடி

சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய அகழ்வாராய்ச்சித் துறையினரின் ஆய்வில் புதையுண்ட ஒரு நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வு மேலும் தொடர்வதற்குள் சட்டச் சிக்கல் எழவே, ஆய்வு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கீழடி ஆய்வின் திட்ட இயக்குநர் என்ன சொல்கிறார், கீழடி அகழ்வாய்வின் தலைமை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் கேட்ட போது , “கிபி 300-ம் ஆண்டு தொடங்கி 10-ம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் ஆய்வில் கிடைத்திருக்கின்றன. இதைத் பத்திரப்படுத்தி தமிழகத்திலேயே வைக்கதான் அரசிடம் இரண்டு ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை” என்கிறார்.

சு.வெங்கடேசன் சொல்வது என்ன: கீழடி ஆய்வுகளை தன்னுடைய கட்டுரைகளில் கொண்டு வந்து கொண்டிருக்கும் ‘சாகித்திய அகாடமி’ விருதாளர் சு.வெங்கடேசன், “கீழடியில் 110 ஏக்கர் நிலத்தில் 50 சென்ட் வரைதான் அகழாய்வு செய்திருக்கிறார்கள். முழுவதையும் ஆராய்ச்சி செய்ய இன்னும் பத்துமுதல் இருபது வருடங்கள் தேவைப்படும். அதனால் இதில் தமிழக அரசும் தொல்லியல் துறையும் இணைந்து கொள்ள வேண்டியது அவசியம்” என்றார்.

சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர், ஸ்ரீலட்சுமி:  ” கீழடி ஆய்வில் ஏற்பட்டுள்ள தடைகுறித்து, டெல்லி, தலைமை இயக்குனருக்கு தெரிவித்துள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம்” என்கிறார்.

கீழடி மக்கள் கருத்து என்ன

ஆய்வாளர்களுடன் பொதுமக்களும், மக்கள் இயக்க சக்திகளும் கீழடி ஆய்வில் களம் இறங்கியுள்ளனர். அவர்களிடம் பேசியபோது, ” கீழடியில் அகழாய்வு செய்துள்ள இடம், தனியாருக்கு சொந்தமானது. அகழாய்வுக்கு பின், தொல் பொருட்களை மட்டும் எடுத்து விட்டு, மீண்டும் நிலத்தை பழையபடியே மூடிக் கொடுப்பதாக, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. தாங்கள் போட்டுக் கொடுத்த ஒப்பந்தத்தை தாங்களே மீறுவது என்றால், எதிர்காலத்தில் அகழ்வாராய்வுக்கு நிலத்தைக் கொடுப்பதில் பொதுமக்கள் தயங்குவார்கள், கண்டிப்பாக முன்வர மாட்டார்கள் என்ற இக்கட்டான சூழலில் அகழ்வாய்வுத் துறையினர் உள்ளனர்.” என்கின்றனர்.

மு.கருணாநிதியின் அறிக்கை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி, “கீழடி ஆய்வின் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரீகத்தைக் கொண்டதல்ல என்ற கருத்துத் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரீகத்தின் தொன்மையைப் பறை சாற்றுகின்றன.

சிந்து சமவெளி நாகரீகத்தைப் போல் இங்கும் ஒரு நகர்ப்புற நாகரீகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது. புதிய தமிழ்ச் சொற்களும் இங்குதான் கிடைத்துள்ளன” என்று கூறியிருக்கிறார்.

கி.வீரமணியின் அறிக்கை:

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, “கி.மு. 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.10 ஆம் நூற்றாண்டுவரை தமிழர்கள் எத்தகைய நகர்ப்புற வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பதற்கான தடயங்கள், ஆய்வில் கிடைத்துள்ளன. தமிழக அரசு அதற்கான நிலம் ஒதுக்கி அதனை அருங்காட்சியகமாக உருவாக்க வேண்டும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் அதற்கான தேவையான முயற்சியில் ஈடுபடும்” என்று அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஆய்வாளரின் பெருமிதம்:

கீழடி ஆய்வில் பணியாற்றிய ஓய்வு துணை கண்காணிப்பாளர் கருப்பையாவிடம் பேசியதில், “பெருமையாக, கர்வமாக உணர்கிறோம். நைல் நதி நாகரீகம் போன்று வைகை ஆற்று நாகரீகம் இந்த கீழடியின் மூலம் உலகத்தின் கண்களுக்கு காணக் கிடைத்திருக்கிறது.பிராம்மி எழுத்து ஓடுகள் நிறைய கிடைத்துள்ளது ஒரு வரப் பிரசாதம்தான். வணிகர்கள் வாழ்வியலும், பெருவணிகர்கள் வாழ்ந்ததற்கான தடமும், தொல்காப்பிய இலக்கியம் சார்ந்த விஷயங்களுக்கான ஆதாரங்களும் கீழடியில் கொட்டிக் கிடைத்திருக்கின்றன. தமிழர்களுக்கான தொன்மை நாகரீக வாழ்க்கை திரும்பக் கிடைத்திருக்கிறது, திராவிட செழுமை தெரிகிறது. அரசாங்கம் கை விரித்தாலும், பொதுமக்கள் புரிந்து கொண்டு கை கொடுக்க முன் வந்துள்ளது நெகிழ வைக்கிறது.

சங்ககாலம் என்ற ஒன்று இருந்ததற்கான சான்று ஏட்டளவில், எழுத்தளவில் என்பது போய் கண்ணெதிரே காட்சியளிக்கும் ஆவணமாக இந்த கீழடி ஆய்வு நிருபணம் செய்திருக்கிறது. ஆய்வின் ஒவ்வொரு அடியும் நம்முடைய நாகரீகம் பளிச்சிடுவதை காட்டிக் கொண்டே இருக்கிறது. விரைவில் மீண்டும் தொடர்வோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. கீழடி புரொஜக்ட் இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தான் கடைசிவரையில் உறுதியாக நின்று “இந்த இடத்தை தோண்டுங்க, விஷயம் இருக்கிறது” என்று சக்சஸ் செய்து கொடுத்தவர். அவரைத்தான் இங்கே பாராட்டியாக வேண்டும். தமிழர் வாழ்க்கையே அல்லவா, திரும்பக் கிடைச்சிருக்கு…” நெகிழ்கிறார் கருப்பசாமி.

அன்றே முடிவெடுத்த மெக்காலே:

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2.2.1835 அன்று மெக்காலே ஆற்றிய உரையில், “இந்தியா வளமான நாடு. தார்மீக மதிப்பும், சிறப்பும் கொண்ட அந்த மக்களின் ஆன்மிக நம்பிக்கை, கலாசார பாரம்பரியம் ஆகியவற்றின் முதுகெலும்பை முறித்தால் அன்றி, அந்த நாட்டை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும் என்று நான் நினைக்கவில்லை. அந்த நாட்டின் பழமையான கல்வி முறையையும் கலாசார முறையையும் மாற்ற வேண்டும் என்று நான் இங்கே முன்மொழிகிறேன். இந்தியர்கள் தங்களது சொந்த நாட்டைவிட அந்நிய நாடே மேல், சொந்த மொழியை விட ஆங்கில மொழியே மேலானது என்று நினைக்கும்போது, அவர்கள் தங்களது சுயமரியாதையையும், கலாசாரத்தையும் இழப்பார்கள். அப்போது நாம் விரும்பியவாறு அவர்களை உண்மையாக மேலாதிக்கம் செய்ய முடியும்” என்று 18-ம் நூற்றாண்டிலேயே தமிழர்களை என்ன செய்யலாம் என்ன முடிவில் உறுதியைக் காட்டிப் பேசியிருக்கிறார்.

மெக்காலே கல்வித்திட்டமும் இன்னும் மாறவில்லை, நம்முடைய பாரம்பர்ய மாண்பின் மீதான ஈர்ப்பும் நம்மிடம் இல்லை… மக்களிடம் அடிமைப் புத்தி தொடர அரசுகளே முக்கியக் காரணம்”