சம்மந்தர் எதிர்வுகூறல் முழுமை பெற கால நீடிப்பு தேவை!

2016ல் தீர்வு கிடைக்கும் என்று, புதிய நல்லாட்சி அரசு அமைந்த உடன் தன் எதிர்பார்ப்பை, சம்மந்தர் வெளியிட்டார். அது ஒன்றும் சாத்திர நம்பிக்கை அல்ல. சந்திரிகா ரணில் மைத்திரி மீது அவர் வைத்த அனுபவ முதிர்ச்சி. பிரபாகரன் இருக்கும்வரை அவர் ஏற்காத எதனையும் ஆதரிக்கும் நிலை எவருக்கும் இருக்கவில்லை. அதனால் தான் சந்திரிகா அம்மையார் காலத்து தீர்வு திட்டத்தை, ஆதரிக்க முடியாத இருதலை கொள்ளி எறும்பு நிலையில், சம்மந்தர் இருந்தார்.

மகிந்த தீர்வை தருவார் என எதிர்பார்த்து பலமுறை அவரை அணுகியும், எதனையும் பெறமுடியாத கையறு நிலைதான் அவருக்கு ஏற்ப்பட்டது. ஆனால் புதிய அரசின் கூட்டாளியான ரணில், ஒரு படி கீழ் இறங்கி வந்து தீர்வை முன்மொழிவதற்கு தன்னை தயார்ப்படுத்தியது, சம்மந்தர் மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது. கூடவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகார குறைப்புக்கு சம்மதித்த, மைத்திரி மனப்பாங்கு, தீர்வு நிச்சயம் என்ற எண்ணத்தை துளிர்விட செய்தது.

காலக்கணிப்பில் சம்மந்தருக்கு சற்று கணிதப் பிழை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவர் கொண்ட நம்பிக்கை, அதற்க்கான அவரின் தொடர் செயல்ப்பாடு பற்றி, அவர் மீது கேள்விக்கணை தொடுக்க இயலாத அளவிற்கு, அவர் ஒவ்வொரு அடியாக முன்னேறி வருவது தெரிகிறது. என் முன்னைய கட்டுரைகளில் சம்மந்தர் வாக்கு பலிக்குமா? தீர்வுத் திகதி நெருங்குகிறது! என என் மன அச்சத்தை பதிவுசெய்த எனது இப்போதைய நிலைப்பாடு, “சம்மந்தர் சொல் பலிதமாக கால அவகாசம் தேவை”. 

எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்ப்பட இது ஒன்றும் பாத்திரக்கடை அல்ல. அரசியல் சதுரங்கம்.   அறுபத்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாக எம் நாட்டில் நடக்கும்  புதிய குருசேத்திர யுத்தத்தில், சமஸ்டி, மாவட்ட சபை, ஈழப்போராட்டம், மாகாணசபை என நீண்டு செல்லும் தீர்வு முயற்சிகள் எல்லாம், பாதி பயணத்தில் வேறு வடிவம் எடுத்த, எம் போராட்ட வரலாற்றின், நாடித்துடிப்பு அறிந்த மூத்தவர் சொல் கேட்க வேண்டிய காலத்தில், அவர் முனைப்புடன் செயல்ப்படும் விடயம், ஒரு நாளில் ஒரு பொழுதில் நடைபெற முடியாத ஒன்று என்ற புரிதல் எமக்கு வேண்டும்.

நாம் எடுக்கும் எமக்கான முடிவு எம்மை மட்டுமே பாதிக்கும். எம் உறவுகளுக்கான முடிவு அவர்களை மட்டும் பாதிக்கும். ஆனால் எம் இனத்துக்கான முடிவு அனைவரையும் பாதிக்கும். தலைமைகளின்  தவறான முடிவுகளின் இறுதி முடிவுக்கு, முள்ளிவாய்கால் நிதர்சன சாட்சி. அவ்வாறு ஒரு நிகழ்வு இனியும் வேண்டாம் என நினைப்பவர் எடுக்கும் எந்த முடிவும், எடுத்தேன் கவிழ்த்தேன் என இருக்க முடியாது. Give and Take எனும் கொடுத்து வாங்கல் தவறல்ல. அது இரு தரப்பாராலும் எட்டப்படும் தீர்மானங்களை வலிதாக்கும்.

விட்டுக்கொடுப்பு என்பது அடிமைத்தனம் அல்ல. அதுவும் ஒருவகை கெட்டித்தனம். காலக்கிரமத்தில் நினைத்தை அடைய விரும்புபவரின் புத்திசாலித்தனம். இன்று இழப்பதை நாளை வட்டியுடன் மீளப் பெற முடியும் என எண்ணும் நபர்களை விட, இனியும் தன் இனம் அழிவதை தவிர்க்க பொறுமையுடன் செயல்ப்படுதல் நிச்சயம் போற்றுதலுக்கு உரியது. அதை செய்பவரை விலை போனவர் என்றோ, தலை தாழ்த்தியவர் என்றோ விமர்சிப்பவர் பேசும் பேச்சுக்கள், மக்களை விட்டில் பூச்சிகள் ஆக்கும் செயலே. விமர்சித்தல் எளிது. சாதித்தல் அவ்வாறல்ல.

அண்மைய நிகழ்வுகள் சம்மந்தர் தலைமையில் மேற்கொள்ளப்படும் முன் முயற்சி பலிதமாகும் என்ற சமிக்ஞைகளை எமக்கு தருகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் முதல் மாவீரர் நினைவு கூரல் வரை முன்னைய அரசும், அதன் கட்டளைப்படி செயல்ப்படும் படைகளும் அவற்றிற்க்கு தடைகளை தான் விதித்தனர். ஆனால் நல்லாட்சி அரசு அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இது சம்மந்தர் எடுத்த மென்வலு முயற்சியின் பலா பலன் என ஒரு பத்தி எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

தென் இலங்கையின் கொதிநிலை தணியாது தீர்வு திட்டத்தை திணித்தால், அது வெந்து கருகிவிடும் என்பது, நாம் பட்டு அறிந்த வரலாற்று பாடம். பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனை என்பது, அவர்தம் இருப்பின் அச்சத்தினால் உருவானது. சிங்கள மக்களின் இருப்பை காப்பாற்றத்தான், பௌத்த மதத்தை அரணாக அமைத்தார் அநகாரிக தர்மபாலா. அதை இனவாதம் என்று மட்டும் வரையறுக்க முடியாது. அது அவரின் இனப்பற்று. ஆனால் அவர் வழி வந்தவர்கள், பதவி அரசியல் செய்தவர்கள் மதவாதம் துணை கொண்டு இனவாத தீயை கொழுந்துவிட செய்தனர்.

இன்று நீரூற்றி அணைக்கும் நிலையில் அந்தப் பெரும்தீ இல்லை. அதற்கு மேலும் எண்ணை ஊற்றாத நிலையை உருவாக்கினால் மட்டுமே தீ தணியும், பின் சாம்பலை விலத்தி செப்பனிட்டு சுட்ட மண் ஆறியபின், நீர் விட்டு பயிர் வளர்க்கும் விருப்பை தான் சம்மந்தர், தன் எதிர்வு கூறலாக 2016ல் தீர்வு என, அது கணிதப் பிழையோ, அல்லது பொங்கும் பாலில் நீர் தெளித்து சுண்டக் காச்சும் செயலாகவோ சொல்லியிருக்க வேண்டும்.

காரணம் பொங்கு தமிழ் பறை ஒலி ஓய்ந்தும், எழுகதமிழ் பறை ஒலி தொடர்கிறது. கமுகுகள் தறித்து பாடைகளில் உணர்ச்சி தமிழர்கள் பயணிக்க, தாம் பாராளுமன்றம் போகும் புதுவழியே இது என்பது பறை அடிக்க சொன்னவர்கள் மறுக்க முடியாத உண்மை. முள்ளிவாய்க்கால் நினைவும் மாவீரர் நினைவும் தடையின்றி நடக்க அனுமதித்த கரணம், பொங்கும் தமிழரையும் எழுகதமிழரையும் செயல்  இழக்க செய்யும் தந்திரம் என்பவர், பொங்கியும் ஒன்றும் ஆகப்போவதில்லை, எழுக தமிழ் நடத்தியும் சாதிக்க போவதும் எதுவும் இல்லை.

தீர்வுதிட்டவரைபு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால், பாராளுமன்றில் முன்மொழியப்பட்டு  வாதப்பிரதி வாதங்களின் பின் நிறைவேற்றப்பட்டு, அது உச்சநீதிமன்ற பார்வைக்கு பின், மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். பதவிக்கு வந்ததில் இருந்து இந்த அரசின் நகர்வுகள், கூடியவரை தீர்வை தம் ஆட்சி காலத்துள் தந்துவிட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுவது புலப்படுகிறது. படைகளின் வசம் உள்ள காணிகள் விடுவிப்பில் கூட, நடைமுறை சாத்தியமான அணுகுமுறைகள் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

பல பிரிவுகளாக இயங்கும் அரசியல் சூழலில், தீர்வை முன்வைக்க முயலும் தெரிவு செய்யப்பட்ட அரசு, யுத்தத்தில் பங்கெடுத்து பல இழப்புகளை சந்தித்த அரச  படைகள், யுத்தத்தை தமது தலைமை தான் வென்றெடுத்ததாக மார்தட்டும் மகிந்த தரப்பு, என முக்கோண இழுபறியில், ஏனைய தரப்புகளின் கோரிக்கைகளை உதாசீனம் செய்யும் பலம் அல்லது துணிவு பதவியில் இருக்கும் அரசுக்கு இல்லை. இராணுவ சதி புரட்சி ஏற்ப்படாமல் பார்ப்பதும், பதவிக்கு வர இனவாத தீக்கு எண்ணை வார்க்கும் எதிர் தரப்புக்கும் முகம் கொடுத்துத்தான் தீர்வை முன்னகர்த்த முடியும்.

இனப்பிரச்சனைக்கான எந்த முன்மொழிவும் நடைமுறை சாத்தியமாக, இரு தரப்பு விட்டுக்கொடுப்பும் அவசியம். அதிலும் எந்தளவு தூரம் ஏற்புடையவற்றை முன்னகர்த்தினால், எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும் என்ற கணிப்பு வேண்டும். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீவுதான் தேவை என பொத்தாம் பொதுவாக அறிக்கை மட்டுமே விடமுடியும். ஆனால் அடையமுடியாது. கடந்த வரலாற்று பாடம் அது. எந்த விடயங்களை சிக்கல் இன்றி தீர்க்க முடியுமோ அதில் இணக்கம் கண்டபின், ஏனைய விடயங்களை படிப்படியாக நகர்த்தும் போது, அனைத்து விடயங்களும் நிறைவேறும் சூழ்நிலை உருவாகும்.

நிலைமைகளின் கனதி அனைவரும் அறிந்ததே. அது அறுபத்து எட்டு ஆண்டுகள் புரையோடிப்போன விடயம். ஒவ்வொரு தலைமையும் விடாகண்டர்களாகவும், கொடாகண்டர்களாகவும் செயல்ப்பட்ட கடந்த வரலாற்று படிப்பினை தொடர்ந்தால், நிரந்தர தீர்வு என்றுமே வராது. அதனால் ஏற்ப்படும்  தொடர் பாதிப்புக்கு முகம் கொடுப்பது தமிழ் தரப்பாகவே இருக்கும். பாராளுமன்ற முறைமைக்குள் ஆறாவது திருத்த சட்டத்துள், சத்தியப்பிரமாணம் செய்து விட்டு பொங்குதமிழ் எழுகதமிழ், என கோசம் மட்டுமே போடமுடியும். அல்லது வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, புதிதாய் அமைக்கப்படும் புத்தர் சிலைகளை பார்த்து பெருமூச்சு விட்டு, கச்சாமி சொல்லவேண்டிவரும்.(புத்தம் சரணம் கச்சாமி).

தேசம் நெற் இல் பதிவான பேராசியர் ஹூல் அவர்களின் சிந்தனையை பகிர்கிறேன். “இரா சம்பந்தன் குறிப்பிடும் அரசியல் தீர்வு பற்றிக் குறிப்பிட்ட பேராசிரியர் ஹூல்அவர் தேதியைப் பிற்போட்டுச் செல்வதை சுட்டிக்காட்டினார். ஆனாலும் சம்பந்தன்  சுமந்திரன் கூட்டின் முயற்சிகள் முக்கியமானவை   பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் யாப்பு திருத்தம் மற்றும் அரசியல் தீர்வு ஏற்றுக்கொள்ளப்படுவதே கடினமாக உள்ள நிலையில்,

அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் உச்ச நீதி மன்றத்துக்குச் சென்று சர்வஜன வாக்கெடுப்புக்கு விட வேண்டிய நிலையும் பெரும்பாலும் ஏற்படும் எனத் தெரிவித்தார். அவ்வாறான ஒரு சர்வஜன வாக்கெடுப்பில் அரசியல் யாப்புக்குஅரசியல் தீர்வுக்கு ஆதரவைப் பெறுவது இலகுவான காரியம் அல்ல என்பதையும் பேராசிரியர் ஹூல் சுட்டிக்காட்டினார்”. பேராசிரியர் ஹூல் குறிப்பிடுவது தான் யதார்த்த நிலை. இந்த சூழ்நிலையில் ஒரே ஒரு எதிர்பார்க்கை கொள்ளக்கூடிய விடயம், இந்த அரசு நீடித்து நிலைத்தால் சம்மந்தரின் நம்பிக்கை பொய்க்காது. 

படிப்படியாகவே தீர்வு சம்மந்தமான விடயங்களை நடைமுறை சாத்தியமாக்கக் கூடிய  சூழ்நிலையில், சம்மந்தர் அணுகுமுறையும் சுமந்திரன் செயல்ப்படும் முறையும், நாட்டில் காணப்படும் முக்கோண சூழ்நிலையில் இருந்து எமக்கான தீர்வை, அவர்தம் தொடர் செயல்ப்பாடுகள் மூலம் நிதர்சனமாக்கும் என்ற நம்பிக்கை, பொய்க்காது என்று தான் எண்ணத்தோன்றுகிறது. முள்ளிவாய்க்கால், மாவீரர் தினம் மட்டுமல்ல யாழ் நூலகத்தை நான் சார்ந்த அரசே எரித்தது, அதற்க்கு மன்னிப்பு கோருகிறேன் என்ற பிரதமரின் செயல், தென்னிலங்கையின் மனங்களில் சஞ்சலத்தை உருவாக்கும்.

கூடவே முக்கோண அலகுகளில் ஒன்றான எதிர்த் தரப்பிடமும், நீங்கள் விட்ட தவறுகளுக்கும்   மன்னிப்பு கோருங்கள் எனவும் அழைப்பு விடவும் அவர் தயங்கவில்லை. முழுமையான தீர்வை ஒரு கூடையில் போட்டு கையளிக்கும் சூழ்நிலை இல்லாத யதார்த்த நிலை, மைத்திரி ரணில் சந்திரிகா கூட்டுக்கும் தெரியும், அது சம்மந்தர் சுமந்திரன் அணிக்கும் புரியும். அதனால் தான் நடைமுறை சாத்தியமான விடயங்களை முன்னிலைப் படுத்திய அறிவிப்புகள் வெளிவருகின்றன. வடக்கு கிழக்கு இணைப்பு உடன் சாத்தியம் இல்லை என்ற உண்மையும் கூட வெளியிடப்பட்டது.

ஆரம்பத்தில் மூடுமந்திரம் போல தீர்வுத்திட்ட முன்னெடுப்பை வைத்திருந்த வேளை, பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது உண்மை. ஆனால் விடயங்கள் கைகூடிவந்த பின்னர் தமக்குள் ஏற்ப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், அவற்றை வெளிப்படுத்தும் முன்னேற்பாடு இருதரப்பிடமும் எட்டப்பட்டிருந்தது என்ற செய்தி அறிந்தபின், அந்த தந்திரோபாயம் வரவேற்க தக்கதே. ஒரேயடியாக ஆராயப்படும் அத்தனை விடயங்களையும் பகிரங்க படுத்தினால், பண்டா – செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் கிழிக்கப்பட்டதும், சந்திரிகா தீர்வு நகல் எரிக்கப்பட்டதும் மீண்டும் நடக்கும். 

 தம் பதவி அரசியலுக்காக மக்களை தவறாக வழிநடத்திய தலைமைகள், தம் கடந்தகால குறுக்குவழி செயல்பாட்டை விடுத்து, பாராளுமன்றில் தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேட முற்படும் தருணம், பாமர சிங்கள மக்கள் தம் பாதை எது என்பதை தீர்மானிக்கும் சுயசிந்தனை, செயல்வடிவம் பெறும். இதுவரை இனவாதம் என்ற எண்ணை ஊற்றி முன்னெடுத்த பதவி அரசியல், தலைமைகளின் சுயவிமர்சனங்கள் மூலம் தணிகின்றபோது, அரசியல் தீர்வு ஒன்றை அடையும் பாதையில் தடைகள் குறைவடையும். அந்த சூழ்நிலை உருவாகும் தருணத்தில் கால நீடிப்பு, தீர்வை முழுமையாக்கும் என்ற நம்பிக்கை தவறல்ல.

ஆனால் அதற்க்கான தொடர் நகர்வுகளை முன்னெடுக்கையில், மேலும் கால நீடிப்பு தேவைப்படின், அதுபற்றிய தெளிவை, தீர்வுக்காக காத்திருக்கும் மக்களுக்கு தெரிவித்து விட்டால், வீண் விமர்சனங்கள் வராது. காய்த்தமரங்கள் என்பதால் மட்டுமல்ல, தமது பாராளுமன்ற கதிரை கனவை நனவாக்க நினைப்பவரும் அதற்காக, தம்மால் இயன்ற வழிகளில் எல்லாம் கல்லெறிதலை தொடர்வர். வடக்கின் எழுகதமிழ் கிழக்கில் முழக்கமிடும். பேரவைகள் தீர்மானங்களை நிறைவேற்றும். அத்தனை முன்னேற்ப்பாடுகளும் அடுத்த தேர்தலுக்காக தம்மை தயார் படுத்தும் சுயநல செயலே அன்றி, வேறொன்றும் இல்லை.

தெற்கில் கொதிநிலையை தவிர்க்க அரச தலைமைகள் முயல்கையில், வடக்கு கிழக்கில் இவர்களால் அவ்வப்போது எழுப்பப்படும் சுயநலம்கொண்ட, பதவிமோக முழக்கங்கள் தீர்வை முன்னகர்த்தாது. அது முக்கோண அலகுகளில் ஒன்றான, யுத்தத்தை தாம் தாம் வென்றோம் என மார்தட்டி, மீண்டும் நாட்டை குடும்ப ஆட்சிக்குள் கொண்டுவர விரும்புபவர்களுக்கும், அவர்களின் காலடியில் தவமிருந்து பதவி சுகம் அனுபவிப்பவருக்கு மட்டுமே பயன்படும். அவர்கள் தூக்கிப்பிடித்து கோசமிட இவர்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் தீனி போடும்.

(ராம்)