இலுக்குச்சேனை: ‘இல்லை’கள் மட்டுமே இருக்கும் கிராமம்

(முகம்மது தம்பி மரைக்கார்)

‘எனது தந்தையுடன் 1960ஆம் ஆண்டு குடும்பமாக இந்தக் கிராமத்துக்கு வந்தோம். அப்போது இந்தப் பிரதேசம் காடாக இருந்தது. காடுகளை வெட்டி, இங்கு குடியேறினோம். அப்போது வெள்ளைக்குட்டி என்கிற முகம்மது இஸ்மாயிலும் அவரின் மூன்று சகோதரர்களும் இப்றாலெப்பை என்பவரும் மட்டுமே இங்கு எங்களைப்போல் வந்திருந்தார்கள். அப்போது எனக்கு 10 வயதாக இருந்தது’.

இலுக்குச்சேனைக் கிராமத்தில் நாம் சந்தித்த ஏ.எல்.எம்.பசீர் தனது கடந்த கால வாழ்க்கையை எம்மிடம் நினைவுபடுத்திப் பேசினார். இலுக்குச்சேனைப் பள்ளிவாசலின் முன்னாள் தலைவராகப் பணியாற்றியவர் பசீர். 66 வயது என்று சொல்ல முடியாது. ஓர் எறும்புபோல் சுறுசுறுப்பாக இருக்கிறார். தனது கிராமத்தின் அத்தனை விடயங்களோடும் தொடர்போடு உள்ளார். அங்கு நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆண்டு, திகதியுடன் நினைவில் வைத்துப் பேசுகிறார்.

இலுக்குச்சேனை – அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒரு கிராமம். அக்கரைப்பற்று நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 15 கிலோமீற்றர் தூரத்தில் இலுக்குச்சேனை அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தின் ஒரு பகுதி அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இன்னொரு பகுதி தமண பொலிஸ் நிலையத்தின் நிர்வாகத்தின் கீழ் செல்கிறது. சின்னச் சின்ன ஊர்கள் கூட, இன்றைய கால கட்டத்தில் ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு முன்னற்றம் கண்டுள்ள நிலையில், இலுக்குச்சேனைக் கிராமம் அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கியுள்ளது.

‘அக்கரைப்பற்றிலிருந்துதான் இங்கு நாங்கள் குடியேறினோம். இங்கு முதன் முதலாக குடியேறியவர்களில் எங்கள் குடும்பமும் அடங்கும். ஏதாவது தொழில் செய்யும் நோக்கத்துடன்தான் எனது தந்தையார் இங்கு குடும்பத்துடன் குடியேறினார். விவசாயம், மீன்பிடித் தொழில்களை இங்கு செய்து வந்தோம்’ என்று கூறும் பசீர் இப்போது மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

இலுக்குச்சேனையில் 1960ஆம் ஆண்டிலிருந்து மக்கள் குடியேறியபோதும், 1993ஆம் ஆண்டுதான் இந்தக் கிராமம் அபிவிருத்திகளை முதன் முதலாகக் கண்டது என்று இங்குள்ள மக்கள் கூறுpகின்றார்கள். அப்போதைய அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் இணைப்பாளராகக் கடமையாற்றிய ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் பெரு முயற்றியினால், இந்தக் கிராமத்தில் சில அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டதாக இக்கிராமத்தவர்கள் நன்றியுணர்வுடன் தெரிவிக்கின்றனர். பின்னாளில் அதாவுல்லா அமைச்சரானார்.

இலுக்குச்சேனைக் கிராமத்துக்கு 55 வருடங்களுக்குப் பிறகுதான் குழாய் இணைப்பு மூலமான குடிநீர் வசதிகள் கிடைத்தன. அதற்கு முன்னர் குடிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்குமான நீரினை வாய்க்காலில் இருந்தே இங்குள்ள மக்கள் பெற்றுக்கொண்டனர். வாய்க்காலில் நீர் வராத காலங்களில் இவர்கள் நீருக்காக அலைய வேண்டியிருக்கும். 2015ஆம் ஆண்டு இங்குள்ள மக்களுக்கு நீரிணைப்புக் கிடைத்ததால் இப்போது நீர்ப் பிரச்சினை இங்கு பெரிதாக இல்லை.

இலுக்குச்சேனையில் இப்போது 60 குடும்பங்கள் உள்ளன. 300 பேருக்கும் அதிகமானோர் வாழ்கின்றனர். ஆனால், பல அடிப்படைத் தேவைகள் இங்குள்ள மக்களுக்குக் கிடைக்கவில்லை. இருந்த சில வசதிகளும் இல்லாமல் போய் விட்டன.
‘எங்கள் கிராமத்தில் ஒரு சுகாதார நிலையம் இருந்தது. வாரத்தில் ஓரிரு நாட்கள் இங்கு சுகாதார சேவைகள் இடம்பெறும். கர்ப்பிணிகள், குழந்தைகள் இங்கு சேவைகளைப் பெற்றுக்கொண்டு வந்தார்கள். ஆனால், மூன்று வருடங்களுக்கு முன்னர், இந்தச் சுகாதார நிலையம் மூடப்பட்டு விட்டது. சுகாதார நிலையக் கட்டடம் உடைந்து, பாழடைந்து போய் விட்டது.

கட்டடத்தைச் சுற்றிப் புதர் வளர்ந்துள்ளது. இப்போது இந்த நிலையத்தில் சுகாதார சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், எமது கிராமத்திலுள்ள கர்ப்பிணிகளும் சிறு குழந்தைகளையுடைய தாய்மார்களும் நீண்ட தூரம் பயணித்தே தமக்கான சுகாதாரச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இலுக்குச்சேனையிலிருந்து அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு அல்லது அம்பாறை வைத்தியசாலைக்குத்தான் செல்ல வேண்டும். இரண்டு வைத்தியசாலைகளும் கிட்டத்தட்ட 15 கிலோமீற்றர் தூரத்தில்தான் உள்ளன’ என்று தனது கிராமத்தின் அவலநிலை குறித்து ரஹீம் எனும் இளைஞர் எம்மிடம் பேசினார்.

இலுக்குச்சேனையில் அமைந்துள்ள சுகாதார நிலையத்தைச் சென்று பார்த்தோம். பல இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அந்தக் கட்டடம் கைவிடப்பட்ட நிலையில், ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. சுற்றிலும் புதர்கள்.

இத்தனைக்கும் இலுக்குச்சேனை கிராமத்திலிருந்து 20 கிலோமீற்றர் தூரத்தில்தான் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் மற்றும் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் ஆகியோர் உள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் இரண்டு சுகாதார அமைச்சர்கள் இருக்கும் நிலையில்தான், அந்த மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் மிகக் குறைந்தளவான சுகாதாரச் சேவையினைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாமல் அல்லலுறுகிறது என்பது விசனத்துக்குரிய விடயமாகும்.

இலுக்குச்சேனைக் கிராமத்தில் செய்து கொடுக்கப்பட்டுள்ள சில சின்னச் சின்ன வசதிகள் கூட, இங்கு முழுமையாகக் கிடைக்காமலுள்ளன. இந்தக் கிராமத்தில் ஒரு தபாலகம் உள்ளது. 1993ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. ஆனால், அங்கு தபால்க்காரர் என்று எவரும் இல்லை. ‘அப்படியென்றால், உங்கள் கடிதங்களையெல்லாம் எப்படிப் பெற்றுக்கொள்வீர்கள்’ என்று பெரியவர் பசீரிடம் கேட்டோம். ‘தபாலகத்தில் ஒரு பெண் பிள்ளை மட்டும்தான் பணியாற்றுகிறார். அங்கு எங்களுக்கான கடிதங்கள் வந்திருந்தால், எமக்குத் தெரிந்த யாரிடமாவது கொடுத்து அனுப்புவார். அல்லது நாங்கள் அங்கு ஏதாவது வேலையாகப் போகும்போது, எங்கள் கடிதங்களைத் தருவார்’ என்று பசீர் பதிலளித்தார்.

‘இந்த நிலை காரணமாக நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். உதாரணமாக, வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்துவிட்டு, அதற்காகக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு அவர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்குரிய கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தும், உரிய காலத்தில் கிடைக்காமல் போயிருக்கின்றன. இதுபோல் உரிய காலத்தில் கிடைக்க வேண்டிய கடிதங்கள் காலம் பிந்திக் கிடைப்பதால், எமது கிராம மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள்’ என்று பசீர் விவரித்தார்.

இலுக்குச்சேனைக் கிராமம், அண்மைக் காலத்தில்தான் சின்னச் சின்னதாக கொங்கிறீட் வீதிகளைக் கண்டுள்ளது. இலுக்குச்சேனையில் ஒரு பாடசாலை உள்ளது. தரம் -05 வரையில்தான் அங்கு வகுப்புகள் இருக்கின்றன. பாடசாலையைச் சென்று பார்த்தோம். கட்டடங்கள் மிகவும் பழையவையாகக் காணப்பட்டன. ஒரு கட்டடத்தின் கூரை கழற்றப்பட்டிருந்தது. திருத்த வேலை இடம்பெறுவதாக அங்கு சந்தித்த அதிபர் கூறினார்.

இலுக்குச்சேனைப் பாடசாலையில் 05ஆம் தரம் வரையில்தான் வகுப்புகள் உள்ளன. அதற்கு மேல் கற்பதென்றால், 15 கிலோமீற்றர் தூரத்திலுள்ள அக்கரைப்பற்றுக்குத்தான் மாணவர்கள் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே அங்குள்ள கணிசமான மாணவர்கள் 05ஆம் தரத்துடன் தமது பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திக் கொள்கிறார்கள் என்பது கவலை தரும் செய்தியாகும்.

நாட்டில் வளப்பங்கீடு சரியாகவும் நியாயமாகவும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதுதான் அதிகமான பிரச்சினைகளுக்குப் பிரதான காரணமாகும். அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று எனும் ஊர், கொழும்பு மாநகரத்துக்கு இணையான அபிவிருத்திகளைப் பெற்றுள்ள அதேவேளை, அதே பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இலுக்குச்சேனைக் கிராம மக்கள், அடிப்படை வசதிகளே இல்லாமல் அவதியுறுவது மிகப்பெரும் அநியாயமாகும்.

சில பிரதேசங்கள் அபிவிருத்திகளால் அதிகபட்சம் போஷிக்கப்படுவதற்கும் வேறு சில பகுதிகளுக்கு அபிவிருத்திகள் கிட்டாமல் போவதற்கும் அரசியல்வாதிகள் பிரதான காரணமாக உள்ளார்கள். தங்களுக்கு எங்கெல்லாம் வாக்குகளை கணிசமாகக் ‘கறந்து’ கொள்ள முடியும் என்று கணக்கிட்டுக் கொள்கிறார்களோ, அங்கெல்லாம் அபிவிருத்திகளை அரசியல்வாதிகள் கொட்டுகின்றார்கள். குறைந்தளவு வாக்குள்ள பகுதிகளை கவனிக்காமல் விட்டு விடுகின்றார்கள். இதனால், அருகருகே உள்ள இரண்டு பிரதேசங்களில் ஒன்று உச்சப்பட்ச அபிவிருத்திகளை அனுபவிக்கும் அதேவேளை, மற்றைய பிரதேசம் அடிப்படைத் தேவைகளுக்காக அலைய வேண்டியுள்ளது.

ஒரு காலத்தில் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் குடியேறத் தொடங்கினார்கள். இப்போது நகரத்தின் பரபரப்பும் இயந்திரத்தன்மையும் கிராமங்கள் மீது மக்களுக்கு ஈர்ப்பினை ஏற்படுத்தி வருகிறது. அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமங்களில் இலுக்குச்சேனையும் ஒன்றாகும். நகரத்தின் இரைச்சலற்ற இந்தக் கிராமம், மன அமைதியுடன் வாழ்வதற்கு ஏற்ற இயற்கையினைக் கொண்டது. ஆனால், சிறிய தேவைகளுக்கெல்லாம் அலைய வேண்டியுள்ளதால், கிராமத்தின் அழகினையும் அமைதியினையும் அங்குள்ள மக்களால் அனுபவிக்க முடியவில்லை என்பதை நேரடியாகக் காண முடிந்தது.
இலுக்குச்சேனையில் சுற்றிலும் பச்சைப் பசேலென நெல்வயல்கள். வாய்க்கால்களில் நீர் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கிறது. குயில்கள், மைனாக்கள், குருவிகளின் சத்தங்களையெல்லாம் கேட்க முடிகிறது. வெளிப் பிரதேசத்திலிருந்து வரும் ஒருவரால் இவற்றையெல்லாம் அனுபவிக்க முடிகிறது. ஆனால், இலுக்குச்சேனையில் வாழ்கின்றவர்களால் இவற்றினை அனுபவிக்க முடியவில்லை. தனது கைக்குழந்தையின் எடை பார்ப்பதற்காக அந்தக் குழந்தையைச் சுமந்துகொண்டு, 15 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வைத்தியசாலைக்குச் செல்வதற்காகப் பஸ்ஸினைப் பிடிக்கும் பரபரப்புடன் ஓடிச்செல்லும் இலுக்குச்சேனையைச் சேர்ந்த ஒரு பெண்ணை, அந்தக் கிராமத்துக்குள் நுழையும்போது காணக் கிடைத்தது. அந்தக் பெண்ணால், இலுக்குச்சேனையின் கிராமியத்தை எப்படி ரசிக்க முடியும்?

நாட்டில் ஒரு பகுதியினர் சுகபோகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, இன்னும் சிலர் வாழ்வதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எத்துணை பெரிய துயரம். இலுக்குச்சேனைக் கிராமத்தின் தேவைகள் நிறைவு செய்யப்படுதல் வேண்டும். அதுவும் அவசரமாக நிறைவேற்றிக் கொடுக்கப்படுதல் வேண்டும். 300 பேருக்கும் அதிகமாக வாழ்கின்ற இலுக்குச்சேனையில் வைத்தியசாலையின் ஆரம்ப படித்தரத்திலுள்ள மத்திய மருந்தகம் ஒன்றாவது இருக்க வேண்டும். ஆனால், இயங்கிவந்த சுகாதார நிலையத்தினையே மூடிவிட்டுச் சென்றுள்ளார்கள் என்பதுதான் அங்குள்ள நிலைவரமாக உள்ளது.

இலுக்குச்சேனை, நூறுவீதம் முஸ்லிம்கள் வாழ்கின்ற ஒரு கிராமம். அம்பாறை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் இருவர் பிரதியமைச்சர்கள். அதேபோன்று, கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள் 07 பேர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். இப்படி அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் அரசியல் பொங்கிப் பூரித்து, கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் நிலையில்தான், அங்குள்ள இலுக்குச்சேனை என்கிற ஒரு முஸ்லிம் கிராமம், அடிப்படை வசதிகளற்று அல்லலுறுகிறது என்பது வெட்கக்கேடான விடயமாகும்.

இலுக்குச்சேனைக்குப் புதிதாக அபிவிருத்திகளைச் செய்து கொடுப்பதற்கு முன்னர், அங்கு ஏற்கெனவே உள்ளவற்றினை நல்லபடியாகச் செயற்படுத்துவதற்காகவாவது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலுக்குச்சேனை சுகாதார நிலையக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு ஆகக்குறைந்தது 10 இலட்சம் ரூபாயாவது செலவிடப்பட்டிருக்கும். ஆனால், அவ்வாறு செலவிடப்பட்ட நிதியினால் மக்களுக்கு எந்தவிதப் பலனும் இல்லை என்பதும் அந்தக் கட்டடம் பாழடைந்து போய், யாருக்கும் பிரயோசனமின்றிக் கிடக்கிறது என்பதும் அலட்சியத்தின் உச்சக் கட்டமாகும்.
இனியாவது இலுக்குச்சேனைக் கிராமத்தினை அங்குள்ள அரசியல்வாதிகள் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். அந்தக் கிராமம் அபிவிருத்திகளால் அழகுற வேண்டும்.