சரத் பொன்சேகா சொல்வது உண்மை தானா?

(கே. சஞ்சயன்)
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமெரிக்கா செல்வதற்கு தாம் விண்ணப்பித்த போது, வீசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டதாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல், உண்மையானது தானா என்ற சர்ச்சைகள் உருவாகியிருக்கின்றன. ஜனாதிபதியின் குழுவில், ஐ.நா செல்வதற்கு விண்ணப்பித்திருந்தவர்களில் தனக்கு மாத்திரம், வீசா வழங்கப்படவில்லை என்றும், போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு காணப்படாததே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறியிருந்தார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதைச் செய்தியாளர்களிடம் தெரிவித்த உடனேயே, அவர் பொய் சொல்கிறார் என்று இன்னொரு செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி அறிவித்திருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பதிலளிக்க வேண்டும் என்று சரத் பொன்சேகா கூறி வருவது, கூட்டு எதிரணியில் இருக்கின்ற எல்லோருக்குமே ஒருவித பயத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனென்றால், அவர் கோட்டாபய ராஜபக்ஷவைக் குறிவைத்துத் தான் இந்த விசாரணைகளுக்கு வலியுறுத்துகிறாரோ என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.  இதனால், சரத் பொன்சேகா, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தக் கருத்தை முன்வைக்கத் தொடங்கினாலும், உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்ற கூட்டு எதிரணியினர் கொதித்தெழுந்து விடுகின்றனர்.

பிரேஸிலில் தூதுவராகப் பணியாற்றிய ஜெனரல் ஜகத் ஜெயசூரியவுக்கு எதிராக, பிரேஸிலியாவில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது, அவர் குற்றமிழைத்தவர் தான் என்று சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் தாம் விசாரிக்க முற்பட்ட போதே, அப்போதைய அரசாங்கம் தன்னை இராணுவத் தளபதி பதவியில் இருந்து நீக்கி, அவரைப் பாதுகாத்தது என்றும், சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

இதுவும், கூட கோட்டாபய ராஜபக்ஷவைக் குறிவைத்த ஒரு நகர்வு தான் என்பதே கூட்டு எதிரணியினரின் கருத்து.

இதனால், கடந்த பல வாரங்களாகவே, சரத் பொன்சேகாவை எதிரணியில் உள்ள அரசியல்வாதிகள் மாத்திரமன்றி, அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகளும் கூட, கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்தச் சூழலில் தான், சரத் பொன்சேகா, தனக்கு அமெரிக்க வீசா மறுக்கப்பட்டது குறித்த தகவலை வெளியிட்டார். ஏற்கெனவே ஜகத் ஜெயசூரிய, தனக்கு அமெரிக்க வீசா மறுக்கப்பட்டது குறித்த தகவலை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பதிலளிக்கப்படாமல் இருப்பதால் தான், தனக்கும் அமெரிக்க வீசா மறுக்கப்பட்டதாக சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

ஆனால், “ஐ.நாவுக்குச் செல்லும் குழுவில் இடம்பெறுபவர்களுக்கு அமெரிக்கா, வீசா வழங்காமல் விடுவதில்லை, சரத் பொன்சேகா, பொய் கூறி, மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். மக்களின் முன் செல்வதற்குப் பயந்தே இவ்வாறு கூறியிருக்கிறார்” என்று உதய கம்மன்பில, குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவுடன் முரண்டு பிடித்த, போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பலருக்கு ஐ.நா செல்வதற்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. பிடல் காஸ்ட்ரோ, பொல்பொட், முவம்மர் கடாபி, சன் யட் சென், சதாம் ஹுசேன் போன்றவர்களே, எந்தப் பிரச்சினையும் இன்றி நியூயோர்க் சென்று வந்தனர் என்று அவர் நியாயங்களை அடுக்கினார்.

இதற்குப் பின்னர், ஊடகங்கள் மத்தியிலும் சரத் பொன்சேகா சொல்வது உண்மை தானா? அல்லது அவர் மக்களையும் ஊடகங்களையும் தவறாக வழி நடத்த முயல்கிறாரா என்ற சந்தேகம் எழுந்தது.

சரத் பொன்சேகா, ஜனாதிபதியின் குழுவில் இடம்பெற்றிருக்கவில்லை என்றும், 20 ஆவது திருத்தச்சட்டம் மீது 20 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்ததால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் ஜனாதிபதி தனது குழுவில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றும், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூட, நியூயோர்க் செல்லவில்லை என்றும் ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டன.

இந்த விடயத்தில் சரத் பொன்சேகா கூறுவது உண்மையா என்று உறுதிப்படுத்தக் கூடிய ஒரே மூலம் அமெரிக்கத் தூதரகம் தான். ஆனால், அமெரிக்கத் தூதரகம் தனிநபர்களின் வீசா தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்துவதில்லை.

ஏற்கெனவே இது போன்ற சில சந்தர்ப்பங்களில் அமெரிக்கத் தூதரகம் எந்தக் கருத்தையும் வெளியிட மறுத்திருந்தது.

ஒருவேளை சரத் பொன்சேகா பொய் கூறியிருந்தால், அமெரிக்கத் தூதரகம் உண்மையை வெளியிடாது என்ற துணிச்சலும் அதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.

ஆனால், அமெரிக்காவுடயே தான் விளையாடுகிறேன் என்பதையோ, தாம் கூறும் தவறான தகவல்கள் தன் மீதான சர்வதேச நம்பகத்தன்மையைப் பாதிக்கும் என்பதையோ சரத் பொன்சேகா கவனத்தில் கொள்ளாமல் இருந்திருப்பார் என்று கருத முடியவில்லை.

அமெரிக்கத் தூதரகம் இதுபற்றி வாய் திறக்காது என்பதால், ஊடகங்கள் இந்த விடயத்தில் உண்மையை சரியாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

அரசதரப்பில், வெளிவிவகார அமைச்சுத்தான் இதுபோன்ற விவகாரங்களைக் கையாள்வது வழக்கம். ஆனாலும், வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாகப் பதிலளிக்காது என்பதுவும் கூட ஊடகங்களுக்குத் தெரியும்.

எனினும், அதிகாரபூர்வமற்ற வகையில் சில தகவல்களைப் பரிமாறக் கூடிய அதிகாரிகள் மூலம், சில ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டன.

சரத் பொன்சேகாவுக்கு வீசா கோரிக்கை விடுக்கப்படவில்லை என்றும், அமெரிக்க தூதரகம் வீசா மறுத்திருந்தால் அதுபற்றி வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்திருக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஓர் ஊடகம் தகவல் வெளியிட்டது.

அதாவது, அமைச்சர் ஒருவருக்கு வீசா மறுக்கப்பட்டால், வெளிவிவகார அமைச்சின் சட்டப் பிரிவுக்கு, ஏன் வீசா மறுக்கப்பட்டது என்ற விவரத்தைத் தெரியப்படுத்தும் வழக்கம் உள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

எனினும், சரத் பொன்சேகா தனக்கு அமெரிக்கா வீசா வழங்கவில்லை என்று தான் குறிப்பிட்டிருந்தாரே தவிர, வீசா மறுக்கப்பட்டது என்று அப்போது கூறவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொரு ஊடகம், அமெரிக்காவுக்குள் நுழைந்தால், சரத் பொன்சேகா மாத்திரமன்றி, ஒட்டுமொத்த நாடுமே சிக்கல்களை எதிர் கொள்ளலாம் என்பதால், அவரை வீசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று, கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் ஆலோசனை வழங்கியதாகக் கூறியிருந்தது.

அதாவது, அமெரிக்காவில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக எவரேனும் வழக்குத் தாக்கல் செய்தால், சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அதனால் அவரை வீசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று தாழ்மையாக கேட்டுக் கொள்ளப்பட்டாதாகவும், உயர் மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் செய்தி வெளியிட்டது.

சரத் பொன்சேகா வீசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை; அவருக்கு வீசா மறுக்கப்படவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே ஆங்கில ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டிருந்தன.

எனினும், சரத் பொன்சேகா அதை முற்றாக நிராகரித்திருக்கிறார்.
தனது வீசா மறுக்கப்பட்டதால் தான், அமெரிக்கா செல்ல முடியவில்லை என்றும், இந்த ஆண்டில் மாத்திரம் தனக்கு அமெரிக்கா வீசா வழங்க மறுத்திருப்பது இது மூன்றாவது தடவை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மகளின் பட்டமளிப்பு விழாவுக்குச் செல்ல முயன்ற போதும், அமெரிக்கா வீசா வழங்க மறுத்திருந்தது என்பதையும் அவர் நினைவுபடுத்தியிருக்கிறார்.

ஜனாதிபதி தனது குழுவில் இருந்து தன்னை நீக்கவில்லை என்றும், ஊடகவியலாளர்கள் சாதாரணமாகக் கேட்ட போது தான், இதைத் தாம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா வீசா மறுத்திருப்பதாக ஏற்கெனவே இரண்டு தடவைகள் செய்திகள் வெளியாகியிருந்தன. அவை வெறுமனே மூன்றாந்தரப்புத் தகவல்களாகவே ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

இதை அவர், முன்னர் ஒருபோதும் பகிரங்கமாகக் கூறியதில்லை. இம்முறையே இதை வெளிப்படையாக உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இந்த நிலமையில், போர்க்குற்றச்சாட்டுகள் விடயத்தில் சரத் பொன்சேகா, சில விடயங்களைப் பகிரங்கமாகப் பேச முன்வருகிறார் என்றவுடன், ஊடகங்கள் அவரைப் பொய்யானவராகக் காட்டிக் கொள்ள முனைகின்றனவோ அல்லது சரத் பொன்சேகாவே தன்னை நியாயப்படுத்திக் கொள்வதற்காக இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிட முனைகிறாரோ என்ற சந்தேகம் மக்களிடம் தோன்றியிருக்கிறது.

சரத் பொன்சேகா தனக்கு விருப்பமற்றவர்களை அல்லது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக போர்க்குற்றச்சாட்டுகளையோ அல்லது அதுசார்ந்த விடயங்களையோ எழுந்தமானமாகப் பயன்படுத்திக் கொள்ளத் துணிவாரா என்பது சந்தேகம் தான்.

ஏனென்றால் அது தனக்கே ‘பூமராங்’ போலத் திருப்பித் தாக்கும் என்பது அவருக்குத் தெரியும். மூன்றாவது தரப்பான அமெரிக்கா போன்ற தரப்புகளுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் கூட தன்னை நேர்மையற்றவராக அம்பலப்படுத்திக் கொள்ள அவர் விரும்பமாட்டார்.

எது எவ்வாறாயினும், சரத் பொன்சேகாவை நேர்மையற்றவராகக் காட்டுவதில் இப்போது, அரசியல்வாதிகள் மாத்திரமன்றி, ஊடகங்களும் கூட விருப்பத்தைக் காட்டுகின்றன போலவே தோன்றுகிறது.