‘வாக்குமூலமளிப்பதற்கு கொழும்புக்கு வர முடியாது’

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு, தன்னை விசாரணைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளபோதும், கொழும்புக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் மன்னார் வந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளருக்கு, நேற்று முன்தினம் (30) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

“கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு, இன்று 2 ஆம் திகதி திங்கட்கிழமை, வருகை தருமாறு, 21.09.2017 திகதியிடப்பட்ட கடிதம் 27.09.2017 அன்று எனக்கு கிடைக்கப் பெற்றது.

”நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய அளவில், தற்போது எனது உடல் நிலை சீரின்மையால் குறித்த திகதியில் வருகை தர முடியவில்லை என்பதை தங்களுக்கு அறியத்தருவதுடன் அவசரமாக எனது வாக்கு மூலம் தேவையெனில், மன்னார் பொலிஸ் நிலையமூடாக ஏற்பாடு செய்தால் வழங்குவேன்” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

”நான் அறம் சார்ந்த வெளிப்படைத்தன்மையுள்ள சமூக செயற்பாட்டாளன் என்பதால, தங்கள் அழைப்பைக் கண்டு அச்சப்பட்டுக் கொள்ளவில்லை என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்” என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.