‘சொந்த மண் அழுகிறது; விரைந்து வாரீர்’

அண்மையில், யாழ்ப்பாணத்தில் உள்ள நண்பரின் வீட்டுக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. சமகால அரசியல் உட்பட பல விடயங்களை அலசிக்கொண்டிருந்தோம். அவ்வேளையில், மழை பெய்து கொண்டிருந்தது. காண்டாவனத்திலும் கனமழை கொட்டுது என்றவாறு, பக்கத்து வீட்டு அம்மா ஓடிவந்தார்.

அவ்வேளையில், தனது கடைசி மகன் (ஐந்தாவது) க.பொ.த (உ/த) படிப்பதாகவும் அவனுக்குப் படிப்பு சரிவராது எனவும் தெரிவித்தார். பிரான்ஸில் இருக்கும் பெரியவள் (மூத்த மகள்), அங்கு அவனை எடுப்பதாகக் கூறியிருப்பதாகவும் கூறினார். அத்துடன், மேலும் இரு பிள்ளைகள் கனடாவில் குடும்பத்துடன் வசிப்பதாகவும் கூறினார்.

“சரி அம்மா, மகனுக்கு பிரான்ஸ் போக விருப்பமா?” எனக் கேட்டோம். இல்லை இல்லை. தங்களுக்கு இங்கு போதுமான அளவு தோட்டக்காணி இருப்பதாகவும் தோட்டம் செய்யவே அவனுக்கு விருப்பம் எனவும் கூறினார். அடுத்தது, பிறிதொரு சம்பவம். பட்டதாரி ஆசிரியைக்கு, பெற்றோர் மாப்பிள்ளை தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளனர். சிறிய அளவில் சொந்தமாகக் கடை நடத்தும் வரன் கிடைத்துள்ளது. பெண்ணுக்கு முழுச் சம்மதம். ஆனால், பெற்றோர் சம்மதிக்கவில்லை. மாப்பிள்ளையின் தொழில் பிடிக்கவில்லையாம். இதேவேளை, பிறிதொரு இலண்டன் வரன் கிடைக்கின்றது. பெற்றோருக்கு பெருவிருப்பம். பெற்றோருக்காக சம்மதம் தெரிவித்த பெண், புலம்பெயர்கின்றார்.

அடுத்து, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1996ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பில் குடும்பத்துடன் வசிக்கின்றார். அவர்களது காணி, அண்மையில் விடுவிக்கப்பட்டது. தற்போது யாழ். வந்து, தனது காணியை விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

ஏன் அவசரப்பட்டு விற்கின்றீர்கள்? உடனடியாக குடும்பத்துடன் ஊர் திரும்புவது கடினமானதோ? ஆனால், மெல்ல மெல்லச் சொந்த மண்ணில் மீளக்குடியேறலாம் அல்லவா? எனக் கேட்டேன். “1990 மற்றும் 1995 இடப்பெயர்வு வெறுத்துவிட்டது” என்றார். “இனி யாழ்ப்பாணம் வர விருப்பம் இல்லை” என்றார்.
“1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது கொழும்பிலிருந்து அகதியாக அல்லல்பட்டு கப்பல் மூலம் வந்தீர்கள். அது எனக்குத் தெரியும். ஆனால், மீண்டும் அங்கு போய் வாழ்கின்றீர்கள் தானே?” எனக் கேட்டபோது, பதில் இல்லை.

இவ்வாறான சம்பவங்களைக் கூறி, எவரையும் மனதளவில் புண்படுத்துவது நோக்கமல்ல. மாறாக, பல்வேறு காரணங்களால், தமிழர் பிரதேசங்களில் தமிழர் சனத்தொகை, வற்றிக்கொண்டு செல்கின்றதே என்ற ஆறாத ஆதங்கம் மட்டுமே.

புலம்பெயர்ந்து வாழும் உறவுகள், ஊரில் உள்ள தங்கள் உறவுகளை அங்கு அழைப்பதில் தவறில்லை. ஆனால், நீங்கள் அழைக்கும் ஒரு நபர், அங்கு வந்து மாதம் இரண்டு இலட்சம் சம்பாதிப்பார் எனின், அவரை ஊரிலேயே அதிலும் கூடுதலாக உழைக்க ஊக்கப்படுத்துங்கள். உறவுகளுடன் வாழ வழிசமையுங்கள்.

ஏனெனில், ஊரில் நிலம் இருந்தும் விவசாயம் செய்ய விவசாயிகள் இல்லை. பாடசாலைகள் இருந்தும் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. வைத்தியசாலைகள் இருந்தும் வைத்தியம் செய்ய மருத்துவர்கள் இல்லை.

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில், தமிழ் மருத்துவர்களுக்கான பற்றாக்குறை, தீராத பெரும் பிரச்சினையாக உள்ளது. மன்னாரில் காணப்படுகின்ற வைத்தியர் பற்றாக்குறையால், கடந்த வருடத்தில், நோயாளர் காவு வண்டிக்குள்ளேயே 15 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.

வைத்தியர்கள் இல்லாமையால், காய்ச்சல், இருமல் போன்ற சிறு உபாதைகளுக்கும், பலத்த சிரமங்களுக்கு மத்தியில், பலமணி நேரம் தூர இடங்களை நோக்கிப் பயணம் செய்தே மருந்து எடுக்கவேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். அத்துடன், வடக்கிலுள்ள 23 அரச மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர்கள் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.

இதைவிட, மருத்துவ நிபுணர்களுக்குப் பாரிய பற்றாக்குறை உள்ளது. மருத்துவமனைகளின் பௌதீக வளங்களது பற்றாக்குறையை நிவர்த்தி செய்தாலும், மனிதவளப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையே தொடர்கின்றது.

அண்மையில், முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஒருவரைச் சந்தித்தபோது, பின்வருமாறு ஆதங்கப்பட்டார். “என் உடலில் என்ன வருத்தமென, என் தாய் மொழியில் கூறமுடியாததையிட்டு, மனதால் கவலைப்பட்டேன்” என்றார். ஒருவர், தனக்கு என்ன பிரச்சினை (நோய்) என மனம் விட்டுத் தன் தாய்மொழியில் உள்ளத்தால் உரையாடும் வாய்ப்பென்பது, பெரும் பேறு ஆகும்.

ஆகவே, கொடிய யுத்த வடுக்களிலிருந்து மீளவேண்டிய தமிழ்ச் சமூகம், வெறும் உடல் சார்ந்த உபாதைகள் மாத்திரமன்றி பெரும் உளஞ்சார்ந்த சிக்கல்களுடனான வாழ்வுடன் போராடுகின்றது. முன்னர் சாவுக்குள் வாழ்ந்தவர்கள், தற்போது வாழ்வுக்குள் சாகின்றார்கள். ஆகவே, அவர்களை உடலாலும் உள்ளத்தாலும் தேற்றவேண்டிய அவசர தேவை உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம், நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில், கிழக்கு மாகாணம் எட்டாவது இடத்திலும் வடக்கு மாகாணம் ஒன்பதாவது (கடைசி) இடத்திலும் உள்ளது.

ஆகவே, கொடிய போரால் அனைத்துத் துறைகளும் வீழ்ந்துள்ளன. அவ்வாறு வீழ்ந்த சகல துறைகளையும் மீண்டும் நிமிர்த்த, அங்குள்ள சேவையாளர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.

ஆனாலும், மனிதவளப் பற்றாக்குறையானது, எடுக்கும் முயற்சிகளைத் தடுக்கும் காரணியாக அமைந்துள்ளது. இந்நிலையில், கடல்தாண்டி, மொழிதாண்டி, இனம்தாண்டி வாழும் புலம்பெயர்ந்த உறவுகளையும் வடக்கு, கிழக்கின் எல்லைதாண்டி வாழும் தமிழ் உறவுகளையும், ஈரவிழிகளுடன் இருக்கும் தாய்மண், தாய்வீடு வருமாறு அறைகூவல் விடுக்கின்றாள்.

போரால் இழந்த அனைத்தையும் ஈடுசெய்ய முடியாது. ஆனாலும், அதிலிருந்து மீண்டுவர வேண்டுமென்ற உத்வேகமும் உழைப்பும், உள்ளுணர்வும், தமிழ்ச் சமூகத்திடம் மிக அதிகமாக இருப்பதால் மட்டுமே, அவர்களும் இப்பூமிப்பந்தில் மானிடனாக வலம் வருகின்றார்கள்.

உதாரணமாக, கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த (சா/த) பரீட்சையில், முள்ளிவாய்க்கால் மாணவன் ஒருவன் 9ஏ சித்திகளைப் பெற்றான். அவன், இறுதி யுத்தத்தில் தனது நெருங்கிய உறவுகள் பலரைப் போரில் பறி(லி) கொடுத்தான்.

ஆனாலும், அவனது நம்பிக்கை, விடாமுயற்சி, ஊக்கம் என்பவற்றால், வெற்றியின் சிகரங்களை எ(மு)ட்ட முடிந்தது. தற்போது, தமிழ் மக்களிடமுள்ள அறிவாயுதம் கல்வி மட்டுமே. அதுவே சிந்திக்க வைக்கும். அந்தச் சிறந்த சிந்திப்பே முன்நோக்கி நகர்த்தும்.

சீனப் பழமொழி கூறுவது போல, பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுக்காதீர்கள். மாறாக மீனைப் பிடிக்கக் கற்றுக்கொடுங்கள். அவ்வகையில், இழப்புகளிலிருந்து மீளும் தமிழ் இனத்துக்கு, மீனைப் பிடிக்கக் கற்றுக் கொடுக்க, அனைத்துத் துறைகளிலும் ஆர்வமுள்ள அர்ப்பணிப்பாளர்கள் தேட(வை)ப்படுகின்றார்கள். படைப்பாளிகளை உருவாக்க படிப்பாளிகள் வேண்டப்படுகின்றனர்.

நீங்கள், உலகத்தின் மற்றைய பாகங்களுக்கெல்லாம் சென்று உழைத்துக் கொடுத்தது போதும். இனியாவது, உங்களுக்காக உழைக்கப் பாருங்கள். இது, கடந்த வருட நடுப்பகுதியில், யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் கூறிய வார்த்தையாகும்.

சிங்கப்பூர் அமைச்சர் கூறியது, வெறும் வார்த்தை அல்ல. ஊக்க மாத்திரைகள் ஆகும். இலங்கை அரசாங்கங்கள், மானசீகமாக நடந்து கொண்டிருப்பின், வடக்கு, கிழக்கின் உண்மையான அபிவிருத்தியைப் பன்மடங்கு அதிகரித்திருக்கலாம்.

ஆனால், இலங்கையில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட முதல் ஐந்து இடங்களிலும், வடக்கு, கிழக்கு மாவட்டங்களே தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

பல்வேறு காரணங்களால், புலம்பெயர்ந்த தமிழர்கள், மீளத் தாயகம் திரும்புவதென்பது சவால்மிக்கதே. ஆனாலும், அனைத்துத் தடைகளையும் தாண்டி, தமிழ் வாழட்டும் என்ற உணர்வுடன் மட்டும் மீளத் தாயகம் திரும்புவதென்பதும் வரவேற்கப்படக் கூடியதொன்றே. தற்போதும் தமிழ் மக்களிடம், வெளிநாட்டுக் கனவு அல்லது மோகம் உள்ளது. அந்த மோகத்தால், தமிழ் இனம் மோசம்போகப் போகின்றது. ஏனெனில், தொடர்ந்தும் தமிழர்கள் புலம்பெயர்வதால், தமிழர் பிரதேசங்களின் சனத்தொகை தொடர்ச்சியாகக் கரைகின்றது. அடுத்துவரவுள்ள சனத்தொகைப் புள்ளிவிவரங்கள், நிச்சயமாக அவற்றைப் படம்போட்டுக் காட்டுமென்பது நிச்சயம்.

அவை, எதிர்காலங்களில் பாரிய எதிர்மறையான பின்னடைவுளைத் தரப்போகின்றன. அத்துடன், ஏனைய இனங்களோடு ஒப்பிடுகையில், தமிழ் மக்களது பிறப்பு வீதமும் மிகவும் குறைவாகவே உள்ளது.

மேலும், போர் காரணமாக வடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து, நாட்டின் இதர பகுதிகளில் வதியும் தமிழ் மக்களும், தமது தாய்மண் திரும்ப வேண்டும்.

தமிழ் வாழ மட்டும் உங்கள் மண் திரும்புங்கள். உங்கள் வீட்டைத் திருத்துங்கள். அங்குள்ள பள்ளியில் உங்கள் பிள்ளைகள் படிக்கட்டும். அங்குள்ள பல்கழைக்கழகங்களில் கல்வி கற்கட்டும். ஏனெனில், வடக்கு, கிழக்குப் பல்கழைக்கழகங்களில் கல்விகற்கும் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.

இவ்வாறாக வடக்கு, கிழக்கில் குறையும் தமிழர் சனத்தொகையால், சிக்கல்கள் நிறைய வரவுள்ளன. ஆகவே, கூடிக் குதூகழிக்கத் தன் உறவுகளைக் கூவி அழைக்கிறாள் தமிழ் அன்னை.

(காரை துர்க்கா)