சோவியத் யூனியனின் பௌத்த மதக் குடியரசு தன்னு துவா! எங்கே இருக்கிறது?

 

ஆசியாக் கண்டத்தில், ரஷ்யா, மொங்கோலியா நாடுகளுக்கு நடுவில் உள்ளது. 1920 முதல் 1944 வரையில் சுதந்திரமான தனி நாடாக இருந்தது. துவா மொழி பேசும் சைபீரிய பூர்வகுடிகளை பெரும்பான்மையாகக் கொண்டது. அவர்கள் திபெத்திய- பௌத்த மதத்தை பின்பற்றுகிறார்கள்.

தன்னு மலைப் பிராந்தியத்தின் பழங்குடிகளான துவா மக்கள், ஒரு நாடோடி இனமாக வாழ்ந்தவர்கள். நீண்ட காலமாக, சீனா, மஞ்சு, ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்களால் மாறி மாறி ஆளப்பட்டு வந்தது. 1917 ரஷ்யப் புரட்சியை அடுத்து நடந்த உள்நாட்டுப் போரில், போல்ஷெவிக் செம் படைகள், சார் மன்னனுக்கு விசுவாசமான படைகளிடம் இருந்து அந்த நாட்டைக் கைப்பற்றின. லெனினின் நேரடி பணிப்பின் பெயரில், தன்னு துவா ஒரு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப் பட்டது. சோவியத்யூனியனும், மொங்கோலியாவும் ஒரு உடன்படிக்கையின் பிரகாரம் சுதந்திரத்தை அங்கீகரித்தன.

தன்னு துவா ஜனாதிபதி, பௌத்த மதத்திற்கு முக்கிய இடம் கொடுத்து, மொங்கோலியாவுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். பௌத்த- துவா தேசியத்தை வளர்த்து வந்தார். அதனால் அதிருப்தியுற்ற துவா கம்யூனிஸ்டுகளின் இரகசிய அமைப்பொன்று, அதிரடிப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து நாட்டின் பெயர் “தன்னு துவா மக்கள் குடியரசு” என்று மாற்றப் பட்டது. நாடோடி சமூக அமைப்பு முடிவுக்கு வந்தது. கம்யூனிச கூட்டுறவுப் பண்ணைகள் உருவாக்கப் பட்டன.

இரண்டாம் உலகப் போரில், தன்னு துவா அரசு சோவியத் யூனியனுக்கு தன்னாலியன்ற சிறியளவு பங்களிப்பை செய்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர், தன்னு துவா ரஷ்யாவின் ஒரு பகுதியாகியது. 1992 வரையில், அது ரஷ்யாவுக்குள் அடங்கிய சுயாட்சிப் பிரதேசமாக இருந்தது. இன்று அது ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே தொடர்ந்தும் இருக்கிறது.

(Tharmalingam Kalaiyarasan)