சோஷலிஸத்திற்காக வர்க்கத்திற்கு ஒரு கட்சி!

வருடம் முடிந்து விட்டது. புது வருடம் பிறந்திருக்கின்றது. புது வருடத்தை புதிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்குமாறு சிலர் சொல்கிறார்கள். ஆனால், இவ்வருடம் எமது வாழ்நிலை கடந்த வரவு செலவு அறிக்கையால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. நாம் எவ்வளவுதான் வணக்க வழிபாடுகளை செய்தாலும், நாள் நட்சத்திரங்களைப் பார்த்தாலும் எமது வாழ்நிலையைத் தீர்மானிப்பது எமது நாட்டின் மிகச்சிறு குழுவினரான அதிகாரபலம், பணபலம் படைத்த வர்க்கமாகும். அவர்கள் சொல்வதையும் செய்வதையும் கொண்டே எமதும் எமது பிள்ளைகளினதும் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது முதலாளித்துவ வர்க்கம் எம்மிடமிருந்து பறித்துக் கொள்பவற்றின் காரணமாகத்தான் எந்நாளும் ஏக்கப் பெருமூச்சு விட வேண்டியுள்ளது.

இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை, ஆகிய இரண்டிற்கும் சாவுமணி அடிக்கப்படவிருக்கின்றது. உழைக்கும் மக்களின் உரிமையான ஓய்வூதியம், 8 மணி நேர வேலைநாள், EPF-ETF எல்லாமே முடிந்துவிடும். எஞ்சியுள்ள அரச நிறுவனங்கள், இயற்கை வளங்கள் விற்கப்படுகின்றன. உச்சியிலேயே போடப் போகிறார்கள்.

அதுமட்டுமல்ல, எமது உழைப்பை கொள்ளையிடும் கம்பனி முதலாளிகளிடமிருந்து பெறும் இரண்டு துட்டுக்கும் ஆட்டையைப் போடும் வங்கிக்காரர்களினால் நாம் படாதபாடு படுகிறோம். பிள்ளைகளுக்கு படிப்பிக்க, மருந்து வாங்க, இருப்பதற்கு வீடுவாசல் கட்ட, கஷ்டப்படாமல் பயணம் போக வாழ்க்கையில் எந்நாளும் பிரச்சினைதான். இவற்றிற்காக பல விதங்களில் கடன்படுகிறோம். பின்பு பிரஷர், டயபடிக்… இதுதானே எமது வாழ்க்கை. அரச ஊழியரா, தனியார்துறை ஊழியரா, விவசாயியா, மீனவரா எங்கள் அனைவரினதும் வாழ்நிலை அதுதான்.

ஏன் இப்படி நடக்கிறது? தேர்தலுக்குத் தேர்தல் வாக்குறுதிகளுக்கு ஏமாந்து வாக்களித்துவிட்டு நாங்கள் பார்வையாளர்களாகி விடுகிறோம். அதுதான் இங்குள்ள பிரச்சினை. இந்தப் பிரச்சினையை நாம் மாற்ற வேண்டும். அதற்கு எமதேயான அதிகாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இனவாதம், மதவாதம், சாதிவாதம் போன்றவற்றை தூக்கியெறிந்துவிட்டு உழைக்கும் மக்கள் என்ற வகையில் நாங்கள் ஒன்றுபட வேண்டும். பாராளுமன்ற சாக்கடையில் பதில் தேடுவதற்குப் பதிலாக நாங்கள் ஒன்று சேர்ந்து எமது உரிமைகளுக்காகப் போராட வேண்டும்.

ஆனால், அந்தப் போராட்டங்களை ஒன்றோடு இரண்டோடுநிறுத்திவிடுவதில் பலனில்லை. இந்தப் பிரச்சினை முடியும் வரை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்காக உழைக்கும், பாடுபடும், மனிதர்களின் ஆட்சியை அமைக்க வேண்டும். அதற்கான ஆரம்பத்திற்காகவே முன்னிலை சோஷலிஸக் கட்சி உங்கள் முன் வருகிறது. ஃபெஷனுக்காக சிகப்புத் துணியை போர்த்திக் கொள்ளும் நவநாகரிகத்திற்குப் பதிலாக உண்மையான அமைப்பொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் முன்னிலை சோஷலிசக் கட்சி பெப்ரவரியில் தனது இரண்டாவது மாநாட்டை நடத்துகின்றது. உண்மையான இடதுசாரியம் எமக்கு வேண்டும். எமது பிரச்சினைகளுக்கு தீர்வு இருப்பது இடதுசாரிய அதிகாரத்தில், இடதுசாரிய ஆட்சியில் மாத்திரமே. நம்பிக்கையுடன் முன்வாருங்கள். கைகோர்த்துக் கொள்ளுங்கள்.

வெற்றி மக்களுக்கே!

(முன்னிலை சோஷலிஸக் கட்சி)