என் மனவலையிலிருந்து…..மெரினாவில் போராட்டகாரர்கள் பொலிஸ் இனால் சுற்றிவளைப்பு

(சாகரன்)

இது எதிர்பாரக்கப்பட்ட விடயம். தடைக்கு பின்னால் இருக்கும் சுதேசியத்தை அழிக்கும் செயற்பாட்டு வெளிக்கரங்களுக்கும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு இந்தப் போராட்டத்திற்கு ஒரு வளர்ச்சி நிலைக்கு பின்னர் ஆப்பு அடிக்க புறப்படும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இந்நிலைமையை சமாளிக்க தொடர்ந்தும் போராடி இறுதி இலக்கை அடைய நிச்சயம் இதற்கு ஒரு ஸ்தாபன வடிவம் தேவை. தமிழ் உணர்வு தமிழ் வீரம் தமிழர் பண்பாடு கலாச்சாரம் என்பதற்கு அப்பால் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் காளைகளை இல்லாமல் செய்து சுதேசிய காலநடை இனங்களை இல்லாமல் செய்யும் காப்ரேட் கம்பனிகளின் சூழ்ச்சிகளுக்கு எதிராக இந்திய ஆளும் வர்க்கம் செயற்படப்போவது இல்லை இதில் உறுதியான மக்கள் போராட்டமே தமிழ்நாட்டை…. இந்தியாவை மீட்சிக்குள் உள்ளாக்கும்.

தமிழக மாணவர் எழுச்சி மீதான எல்லா விமர்சனங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு அனைவரும் அவர்களுக்காகக் குரல்கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. அரச இயந்திரம் தனது உண்மை முகத்தைக் காட்டுகிறது. மாணவர்கள் மீது மோசமான தாக்குதல் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உணவு கொண்டு போவதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. அந்தப்பகுதி கடற்தொழிலாளர்கள் பொலிஸாரின் தடையையும் மீறி போராடும் மாணவர்களுக்கு உணவு வழங்கி முயற்சிசெய்துவருகின்றனர்.

ஜனநாயக நாட்டில் அமைதியான போராட்டத்தை மறுக்கும் ஆளும் வர்க்கத்தின் செயற்பாடு கட்டிக்கத்தக்கது பொது இடமான மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கும் தமது கருத்துக்களை பரிமாறுவதற்கும் போராட்ட உணர்வை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு. கோயம்புத்துஸர் பகுதியில் மேற்கத்திய பானங்களான கொக்கோ கோலா வகையறாக்களை மக்கள் நிராகரிக்கும் போராட்டம் நடைபெற்றுவருகின்றது.

ஒன்றுகூடிய மாணவரும் மக்களும் எந்தவொரு பொதுச்சொத்துக்கும் சேதம் விளைவிக்கவில்லை. போக்குவரத்துக்கோ எதற்குமோ இடைஞ்சலாகவில்லை. நாம் ஜனநாயகத்தை மதிக்கிறோமெனில், மாணவர்களை ஆதரிக்க வேண்டும். காவறதுறையையும் அரச இயந்திரத்தையும் எதிர்க்க வேண்டும். மாணவர் மீதான தாக்குதலை உடனே நிறுத்தக் கோருங்கள். இந்தியத் தூதரகங்கள் முன்னால் கூடுவதற்கு அழையுங்கள்.

இது இந்தியாவை கடந்து இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வல்லாதிக்க செலுத்த முயலும் ஏகாதிபத்திய சக்திகளின் செயற்பாட்டின் ஒருவடிவமாகும் இது எமது நாட்டையும் பாதிக்கும் விடயமாக அமையப் போகின்றது என்பதை முன்கூட்டியே எச்சரிக்கையுடன் அணுகவேண்டிய தருணம் இது