தனிநபர், பிரதேச, மத, இன வாதம் எழுப்பும் – சங்கொலி!

வடமாகாண முதல்வரை வாராதுவந்த மாமணி, எங்கள் பிரம்மா என்றெல்லாம் எழுதி அவரை பேரவைக்கு இணைத்தலைவராக்கி, தமக்கு பெருமை சேர்த்தவர் தரும் வஞ்சக புகழ்ச்சியால் ஏற்பட்ட மயக்கமா? இல்லை சங்கூதுபவர் சொல்வது கீதை என்ற தடுமாற்றமா? என எண்ணும் அளவிற்கு அண்மையில் வரும் ஆசிரியர் தலையங்கங்கள், சமூகங்களிடையே ஏற்படுத்த கூடிய வேண்டத்தகாத நிகழ்வுகளை தவிர்க்கும்படி, புருசொத்தமனுக்கு புத்திசொல்ல முதல்வர் காட்டும் “அருவருக்கத்தக்க மௌனம்” என்னை விசனப்பட வைக்கிறது. முதலில் தனி நபர்களை தாக்க தொடங்கியவர், தன் பிரதேச வாதத்தை கொழும்பில் ஆரம்பித்தார். விலை போன கொழும்பு தலைமை என சுமந்திரனை சாடினார். பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உட்பட ஜனாதிபதியுடன் சந்திப்பை நடத்தினால், விருந்துகளில் கலந்து கொண்டால் அவர்களை விலை போனவர்கள் என்று வரையறுத்தால், இன்று இருக்கும் எந்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, உறுப்பினர்களும் விலை போனவர்கள் என்று தான் தலையங்கம் எழுதவேண்டும். ஏனென்றால் புலிகள் காலத்தில் அனைவரும் இருந்தது தெற்கில், அரச வசதி மற்றும் பாதுகாப்பில்.


தமிழரசு கட்சியின் மூக்கணாங்கயிறை கிழக்கு தலைமையில் இருந்து, மாவை தன் கையில் எடுக்கவேண்டும் என்று எழுதியவர், தமிழ் அரசு கட்சி தலைவர் வடக்கில் தோற்றுப்போக, கிழக்கில் வென்று 1977 தேர்தல் வரை தொடர் வெற்றி கண்டு கட்சிக்கு பெருமை சேர்த்தது, கிழக்கின் முடிசூடா மன்னன் செல்லையா இராசதுரை என்பதை மறக்கலாமா? அல்லது பட்டிருப்பு இராசமாணிக்தை விலத்தலாமா? தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வித்திட்ட தராகி சிவராம் உட்பட கிழக்கின் பத்திரிகையாளரை ஓரம்கட்டலாமா? வட மாகாண சபையில் காணப்படும் மெத்தன போக்கு உட்பட, இருக்கும் இடத்து வேலைகளை விட்டு மடத்தடி பேரவை கூட்டத்தில் நேரத்தை செலவிட வேண்டாம் என, வினையமாக கேட்டு அதுபற்றி ஆலோசிக்க முதல்வரிடம் நேரம் ஒதுக்குமாறு உறுப்பினர்கள் விண்ணப்பித்தால் அதற்கு கறுப்பு ஆட்டின் படம்போட்டு தலையங்கம் எழுதுவதும், குறிப்பட்ட உறுப்பினரை தாக்குவதற்கு ஆங்கில பட நடிகரும் கலிபோர்னியாவின் ஆளுநருமான ஆணல்ட் சுவார்செனேகர் படம் போட்டு தலையங்கம் எழுதும் செயலும் ஏற்புடையதா?

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, பின் மனிதரை கடிப்பது என ஊர் சொல்லாடல் ஒன்று உண்டு. வட மாகாண சபை உறுப்பினரை கறுப்பாட கடித்துவிட்டு பின் தை திருநாள் தலையங்கத்தில் இன்னொரு விடயத்தை பொங்க வைத்துள்ளார். “மாட்டிறைச்சிக் கடைகளை முற்றாகத் தடை செய்யுங்கள்” என்ற தலையங்கத்தில் “இதற்கு மேலாக பசுச் சாணத்தை நீறாக்கி அதனை சிவ சின்னமாக நெற்றியில் அணியும் சைவத் தமிழர் பண்பாடும் பட்டிப் பொங்கலுக்குள் புரையோட இருப்பதைக் காணமுடியும். இவ்வாறான சிறப்புடைய தமிழர் தாயகத்தில் மாட்டிறைச்சிக் கடை என்று பெயர்ப் பலகை சூட்டப்பட்டிருப்பது மிகவும் அபத்தமானது. எனவே தமிழர் தாயகத்தில் மாட்டிறைச்சிக் கடைகளை இல்லாதொழிக்க வேண்டியது அவசியமாகும்” என எழுதியுள்ளார். அப்படியானால் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என அத்தனை போராட்ட இயக்கங்களும் வரித்துக்கொண்ட கொள்கை, கோட்பாட்டை இவர் வடக்குக்குள் முடக்கப் பார்க்கிறாரா?

25 வருடங்களுக்கு முன் பல தலைமுறைகள் இந்த மண்ணில் வாழ்ந்தவர்களை, 2 மணித்தியால அவகாசத்ததில் உடுத்த உடையுடன் பலவந்தமாக வெளியேற்றிய பாவத்தை தான், நாம் முள்ளிவைக்காலில் தொலைத்து நந்திக்கடல்லில் கரைத்தோம். அதன் எச்ச சொச்சங்களை இன்னமும் சுமக்க வேண்டுமா? தமிழர் தாயகம் தமிழருக்கு மட்டுமா? அதில் தமிழ்ப்பேசும் மக்களுக்கு இடம் இல்லையா?. தந்தை செல்வா தமிழ்ப்பேசும் மக்கள் என்றுதானே வழி நடத்தினார். தமிழ் – பேசும் என பிரிக்கவில்லையே! 1990ல் வடக்கில் இருந்து தமிழ்ப்பேசும் மக்களை வெளியேற்றினர். பின்னர் 1994 யாழில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றினர். வளமான வன்னிக்காடுகளை கந்தக தீக்கு இரையாக்கி தாமும் பொஸ்பரஸ் குண்டுகளால் பொசுங்கி போயினர். இன்று மீள்குடியேற்றம் ஆமை வேகத்தில் நகரும் போது சுனாமி போல அழிவு எழுத்து தேவை தானா?

ஒரு இனத்தின், மதத்தின், பண்பாடு, பழக்கவழக்கம் இன்னொரு இனத்தின் விருப்பு, வெறுப்புக்கு உட்பட்டதல்ல. அது அவரவர் தனித்துவம். ஆனால் அனைத்து இனத்துக்கும், மதத்துக்கும் இருக்கவேண்டிய பொதுவான விடையம் சகிப்புத்தன்மை. யானைக்கு மதம் பிடித்தால் மரங்களுக்கு சேதம். மதத்துக்கு மதம் பிடித்தால் இனத்துக்கு சேதம். காந்தி போல் வினோபாஜி போல் ஜீவகாருண்யம் பேச முற்படுபவர், பட்டிப்பொங்கலுக்கு மாட்டிறைச்சி கடை என்பதை இல்லாதொழிக்க வேண்டும் என எழுதியது போல, தை பூசத்து தலையங்கத்தில் “கோழி இறைச்சி கடைகளை இல்லாதொழிக்க” என எழுதுவார் என எதிர்பார்த்து ஏமாந்தேன். சூரன் போருக்கு முன், கோழி கடை மற்றும் ஆட்டிறைச்சி கடை இல்லாதொழிக என எழுதுவார் என எதிர் பார்க்கிறேன். காரணம் அவர் வழிபாடும் நல்லைக்கந்தன் சேவல் கொடியோன், ஆட்டுக்கடா வாகனத்தில் வரும் கடவுளர்கள் எல்லாம் அவருக்கு மின் அஞ்சல் அனுப்பி, வேண்டுகோள் விடுத்ததாக தேவலோக செய்தி ஒன்று கசிந்துள்ளது.

மாட்டிறைச்சி கடைகளை மூடும்படி எழுதிய தலையங்கத்தில், “இதற்கு ஏனைய சமயத்தவர்களும் நிச்சயம் உதவி செய்வார்கள் என்று நம்பலாம். ஒரு இனத்தின் – சமயத்தின் நடைமுறைகளுக்கும் மரபுகளுக்கும் மதிப்புக்கொடுப்பது அவசியமாகும் என்ற அடிப்படையில் மாட்டிறைச்சிக் கடைகளை இல்லாது செய்வதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுப்பது பட்டிப்பொங்கலை அர்த்த முடையதாக்கும்” என முடிக்கிறார். அப்படி என்றால் தமிழர் வாழும் இதே மண்ணில் வாழும் உருத்துடைய தமிழ்பேசும் முஸ்லிம் இன இஸ்லாம் மதத்தினரதும், கிறிஸ்தவ மதத்தினரதும், நடைமுறைகளுக்கும், மரபுகளுக்கும் மதிப்பு கொடுப்பது அவசியம் என்பது ஆசிரியருக்கு புரியவில்லையா? ஒரு கண்ணுக்கு வெண்ணை மறுகண்ணுக்கு சுண்ணாம்பா?

கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல கணிசமான இந்துக்களும் மாட்டு இறைச்சியை புசிப்பவர்கள் தான். 1970ல் மொக்கன் கடை புட்டு, மாட்டு ரோஸ் உண்ண மருதடிப்பிள்ளையார் ஊரான மானிப்பாயில் இருந்து நாம் செல்லும் வேளையில், கந்தன் ஆளும் நல்லூர் இந்துப் பெருமக்கள் ஆளுக்கு ஒரு குழல் புட்டை, மாட்டு ரோஸில் ஊற வைத்ருப்பர். கடைக்குள் நுழையும் போதே நெற்றியில் பூசிய நீறும் சந்தண பொட்டும் விடை பெற்றுவிடும். கந்தசஷ்டி விரதத்துக்கு முன்பே நல்ல கொளுத்த கறுத்த ஆடு வாங்கிவரப்பட்டு, பலா இலை புண்ணாக்கு முள்முருக்கை இலை என கைத்தீனி கொடுத்து வளர்க்கப்படும். கந்தசஷ்டி விரதம் முடிய சைவ உணவு உண்ட வயிற்றுக்கு, பத்தாம் நாள் பத்தியமாக அதுவரை இலைபோட்டு வளர்த்த ஆடு எம் சாப்பாட்டு இலையில் பகிரப்படும்.

ஊர்க்கோழிகள் குறைந்து போனாலும் புறைலர் கோழி, கல்பேட் என சந்திக்கு சந்தி கோழிக்கடை. பங்கு இறைச்சிகாலம் மாறி, சந்தைக்கு சந்தை ஆட்டிறாச்சி கடை இருக்கும் ஊரில், மாட்டு இறைச்சி கடை உறுத்துகிறது. அதற்கு கூறும் காரணம் நெற்றியில் இடும் திருநீறு மாட்டு சாணத்தால் வருவது இந்துக்களின் மத நம்பிக்கையாம். வீட்டில் யாருக்காவது தீரா நோய் வந்தால் காளி கோவிலுக்கு சேவல் கோழி நேர்ந்து விடுவதும் இந்து, அதை வாங்கி கொன்று தின்பதும் இந்து. கோவில்களில் தெய்வங்கள் குளிர வேள்வி நடத்தி ஆடுகளை பலியிடுவதும் இந்து, அதை வாங்கி வேள்வி இறைச்சி என நல்லெண்ணையில் பொரியல், வறுவல், பிரட்டல் என உண்பதும் இந்து. இதுவும் மத நம்பிக்கையா?. உள் நோக்கம் கொண்ட இவரின் எழுத்துகள் தெற்கில் பொதுபல சேனா போல வடக்கில் வலம்புரி சேனா உருவாகிறதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

காரணம் அண்மைய “வடக்கு மாகாண சபைக்கு தேவர்குழு வழங்கிய ஆலோசனை” என்ற தலையங்கத்தில் “ஈழத்தமிழர்களின் சனத்தொகை என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. ஒரு பிள்ளை இரண்டு பிள்ளைகளுடன் மகப்பேற்றை நிறுத்தி விடுகின்றனர். இதனால் இலங்கையில் சனத் தொகை ரீதியில் முஸ்லிம் மக்கள் இரண்டாம் இடத்தை மிக விரைவில் பிடிக்கவுள்ளனர். எனவே ஈழத்தமிழ் குடும்பங்கள் ஆகக்குறைந்தது ஐந்து பிள்ளைகளையாவது பெற்று வளர்க்க வேண்டும். இது தொடர்பில் வடக்கு மாகாண சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி சில சலுகைகளை அறிவிக்க வேண்டும். இதற்கு எங்கள் பிரம்ம தேவரும் உதவவேண்டும்” என எழுதியுள்ளார். ஈழத்தமிழ் தாய் தனக்கு எத்தனை பிள்ளைகள் வேண்டும் என்பதை தன் உடல் நிலை மற்றும் பொருளாதார வளம் கொண்டு முடிவு செய்யட்டும். அதை ஏன் முஸ்லிம் மக்கள் சனத்தொகையில் இரண்டாம் இடத்துக்கு வருவதுடன் முடிச்சு போட்டு இனவாதமாக எழுதவேண்டும்?

நான் எழுதும் கட்டுரைகளில் பதிவிடக்கூடாத சொற் பிரயோகங்கள் இருந்தால் அதை நீக்கிவிட்டே இணையங்கள் வெளியிடுகின்றன. சில இணையங்கள் பதிவதை தவிர்த்திருக்கின்றன. அதனால் என் எழுத்து மெருகேறுகிறது. இணையங்களுக்கு இருக்கும் சமூக அக்கறை ஏன் தினசரிகளுக்கு இல்லை. இணையத்தை பார்ப்பவரைவிட நாளேடுகளை பார்க்கும் சாமானியர்கள் தான் அதிகம். எழுத்தாயுதம் கொண்டு சமூக அவலங்களை நீக்கவேண்டும். அதைவிடுத்து சமூகங்களுக்கு இடையே அவலத்தை ஏற்படுத்த கூடாது. பல்லின, பலமத நம்பிக்கை கொண்ட, பலவிதமான கலாச்சார பின்னணிகள் கொண்ட, நாம் வாழும் மண் காழ்ப்புணர்ச்சி கலக்கும் சேற்று நிலமாகாமல், நல்ல நெல் மணிகள் விளையும் கழனிகளாக மாற உங்கள் பேனாக்கள் இரத்தம் சொரியாமல், நீர் வார்க்கட்டும். சுட்டாலும் சங்கு வெண்மை தரும் ஆனால் உங்கள் சங்கு மட்டும் கறுப்பாய் மாறி வெறுப்பாய் ஒலிக்கிறது. வாசகன் நெஞ்சில் நஞ்சை விதைக்கிறது. அப்பனே சங்கொலி நாயகா! புருசோத்தமா! எம் மண்ணில் வாழும் அனைவரும் எமக்கு குறை ஒன்றும் இல்லை என கூறும் நிலைவர எழுதுங்கள் கண்ணா!

(மாதவன் சஞ்சயன்)