தமிழ்த் தேசிய அரசியலில் ‘மூளை’யின் வகிபாகம்

தற்போது ராஜபக்‌ஷர்கள் அசுர பலத்துடன் ஆட்சியில் இருக்கிறார்கள். அதுவும் கேள்விகளுக்கு அப்பால், நினைப்பதையெல்லாம் செய்ய முடியும். அதற்கு 69 இலட்சம் மக்களின் ஆணை கிடைத்திருக்கின்றது என்பது ஒரு சாட்டு.

சஜித் பிரேமதாஸவோ, அவரின் ஐக்கிய மக்கள் சக்தியோ என்ன செய்வதென்றே தெரியாது முழித்துக் கொண்டிருக்கின்றனர். ரணில் விக்கிரமசிங்க, வரலாற்றுத் தோல்வியோடு அமைதியாகிவிட்டடார். அவரின் ஐக்கிய தேசிய கட்சி வாழ்ந்து கெட்ட ஜமிந்தாரின் நிலைக்குச் சென்றுவிட்டது.

தென் இலங்கையில், ராஜபக்‌ஷர்கள் மீதான அதிருப்தியைத் தோற்றுவித்து, மாற்றத்துக்காக இயங்க வேண்டிய தரப்புகள் எல்லாமும், சக்தியிழந்து படுக்கைக்குச் சென்றுவிட்ட நோயாளியின் நிலையை அடைந்துவிட்டன.

இந்த நிலையில்தான், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, தன்னுடைய மூளையைக் கொஞ்சமாகவேனும் பாவித்து, கருமங்களை ஆற்றும் நிலையை நோக்கி நகர்ந்திருக்கிறது. ராஜபக்‌ஷர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் வெற்றிகளைப் பெறுவதெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாத காரியம்.

அப்படியான நிலையில், அரசியல் வெற்றிகளைக் காட்டிலும், அரசியல் தோல்விகளின் அளவைக் குறைத்துக் கொள்வோம் என்கிற நிலைக்கு, தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்களும் தரப்புகளும் வந்திருக்கின்றன. அதன் அண்மைய நடவடிக்கைகளாக இரு விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

  1. தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு எதிரான அரச நடவடிக்கைகளுக்கு, எதிராக தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்ததும், அதனை ஒரு தேர்தல் அரசியலுக்கு அப்பாலான இணக்கப்பாடான நிலையில் பேணும் வகையிலான நடவடிக்கைகளும் ஆகும். (ஆனால், தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் சிலரும் அவர்களின் ஒத்தூதித் தரப்பும் தேர்தல் அரசியலுக்கான ஓர் ஏற்பாடாகக் கொண்டே, அதனை முன்நகர்த்த விரும்புகின்றன என்கிற விடயம் பெரும் உறுத்தலாகும்)

திலீபனின் நினைவேந்தலுக்கான தடை என்பது, மாவீரர் நினைவேந்தலுக்கான தடை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான தடை என்று இனி நீளப் போகிறது. அதாவது. தமிழ் மக்களின் அரசியலும் அதன் உரிமைசார் உணர்வும் கூட்டுச் சேரும் இடங்களையெல்லாம் அழித்தொழித்துவிட வேண்டும் என்பது தென்னிலங்கையின் எண்ணம். அதற்கு நினைவேந்தல்களை நீக்குதல் என்பது மிகப்பெரிய உத்தி.
அதுதான், ராஜபக்‌ஷர்கள் பதவியில் இருக்கும் தருணங்களில் எல்லாம் நினைவேந்தல்களுக்கான தடையை எப்படியாவது ஏற்படுத்திவிடுகிறார்கள்.

அப்படியான நிலையில், அந்தத் தடைகளை எதிர்கொள்வதும், தாண்டிக் குதிப்பதும் தமிழ் மக்களுக்கு முக்கியமானது. அதுதான், அரசியல் உரிமைப் போராட்டத்தை தக்க வைப்பதற்கும் உதவும்.

இது மாவீரர் தினத்தினை நினைவுகூரும் நவம்பர் மாதம். கொரோனா காலத்து சட்ட திட்டங்களைப் பயன்படுத்தி மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதிலிருந்து விலக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும். அவ்வாறான நிலையில், அதனை எவ்வாறு எதிர்கொள்வது, நினைவேந்தலுக்கான உரிமையை எவ்வாறு அடுத்த தலைமுறையிடம் கடத்துவது என்பது பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும். அதற்கு தமிழ்த் தேசிய அரசியல் தன்னுடைய மூளையைப் பயன்படுத்தியாக வேண்டும்.

தமிழ்த் தேசிய அரசியலை மக்கள் காலம் காலமாக நம்பிக்கையோடுதான் தூக்கிச் சுமந்திருக்கிறார்கள். அந்த அரசியலுக்குள் நச்சுப் பாம்புகளும் வேடதாரிகளும் பல தருணங்கள் இருந்தும் இருக்கின்றார்கள். இப்போதும் அவ்வாறான விசக் கூட்டம் இருக்கின்றது. அது, தங்களின் சுயலாப கட்டங்களை நோக்கிச் சிந்திக்கவும் செய்கின்றது.

குறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியலின் ஆன்மாவைக் கொண்டு சுமப்பது போல காட்டிக் கொண்டு, அற்ப சொற்ப நலன்களுக்காக இயங்கவும் செய்கின்றன. அவ்வாறான தரப்புகளைப் பகுத்தறிந்து கொண்டு, நம்பிக்கையுள்ள ஒரு செயற்பாட்டுத் தளத்தை நோக்கி, தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரணியில் சேர்ப்பது முக்கியமானது. அதன் போக்கில், திலீபன் தடைக்கு எதிராகக் கூடிய தமிழ்த் தேசிய கட்சிகளின் நடவடிக்கையை, ஒரு வடிவமாகக் கொள்ளலாம்.

  1. தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அரச இயந்திரங்கள் மூலம், தமிழர் தாயகத்தின் நிலங்களை அபகரிக்கும் தென்னிலங்கையின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் சட்டப்பாதுகாப்பு வழங்கும் நோக்கில், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் ஏற்படுத்தியிருக்கும் நம்பிக்கை அமைப்பு ஆகும்.

அரசியல் வெற்றி, நீதிமன்றங்களில் மாத்திரம் பெறப்படும் விடயம் அல்ல. அதுவும், நினைத்த மாத்திரத்தில் சட்டங்களை இயற்றவும் அகற்றவும் ஆற்றலுள்ள பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தின் முன்னால், நீதிமன்றங்கள் பல நேரங்களில் அதிகாரமற்ற மன்றங்களாகவே கடந்த காலங்களில் இருந்தன. ஆயினும் அரசியல் தோல்விகளைச் சிறிதளவாகவேனும் தடுக்க முடியும் என்கிற போக்கில், சட்டத்தரணிகளின் ஒன்றிணைந்த சட்டப்பாதுகாப்பு நடவடிக்கை வரவேற்கக் கூடியது.

ஏனெனில், வடக்கு – கிழக்கு நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கைகள் பல பெயர்களிலும் முனைப்புப் பெற்றிருக்கின்றன. புனிதப் பிரதேசங்கள், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி, மாற்று இனங்களின் காணி அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள் என்று பல நடவடிக்கைகளும் தொடர்கின்றன.

சட்டரீதியான ஆவணங்களுடன் இருக்கின்ற பாரம்பரியக் குடிகளையே அவர்களின் நிலங்களுக்குள் நுழைவதற்கான தடையைத் தொல்லியல் திணைக்களமும் காணி ஆணையாளர் திணைக்களமும் செய்கின்றன. திரியாய்-தென்னைமரவடி பகுதியில் நீண்ட காலமாக உறுதியுரிமையுடன், காணி அனுமதிப்பத்திரத்துடன் விவசாயம் செய்தவர்கள், நிலங்களுக்குள் நுழைய முடியாமல், தமது அறுவடையையும் தொழில் நடவடிக்கைகளையும் செய்ய முடியாது தவித்துக்கொண்டிருக்கும் மக்களை நாம் காண்கின்றோம். இப்படியாகப் பல்லாயிரம் மக்களை நோக்கிய ஆக்கிரமிப்பு, தென்னிலங்கையால் மேற்கொள்ளப்படுகின்றது.

அதனை, நீதிமன்றங்களினூடாக எதிர்கொள்வதற்கான வாய்ப்பும் வசதியும் எல்லா மக்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை. அவ்வாறான நிலையில், நில ஆக்கிரமிப்புக்கு எதிரான சட்டப்பாதுகாப்பு நிலையை நோக்கிய சட்டத்தரணிகளின் திரட்சியும், ஒன்றிணைந்த நடவடிக்கையும் வரவேற்கக் கூடியது.

நல்லாட்சிக் காலத்தில் குறிப்பிட்டளவான அரசியல் பலத்தோடு இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பால், தென்னிலங்கையின் அரச இயந்திரத்தையும், அதன் இணக்க சக்திகளையும் அரசியல் பேச்சுவார்த்தைகளினூடாகப் பெரியளவில் வெற்றிகொள்ள முடியாவில்லை. பேச்சுவார்த்தைகளின் போது, அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால், அதனை நிர்வாக ரீதியாக முன்னெடுக்க அரச இயந்திரமும், அதன் பௌத்த சிந்தாந்த கட்டமைப்பும் அனுமதித்ததில்லை. குறிப்பாக, நில அபகரிப்பு, அத்துமீறிய குடியேற்றம், கடல் வளங்களின் சூறையாடல் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக அப்போதும், அரசியல் பேச்சுவார்த்தைகளைத் தாண்டி கூட்டமைப்பினர் நீதிமன்றங்களையே நாட வேண்டி வந்தது.

நல்லாட்சிக் காலத்திலேயே நிலை அப்படியிருக்கும் போது, ராஜபக்‌ஷர்களின் காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைகளினூடாக வெற்றி என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்றாக இருக்கப் போகின்றது. ஏனெனில், அரசியல் பேச்சுவார்த்தை என்ற விடயத்தையே, ராஜபக்‌ஷர்கள் விரும்புவதில்லை. அப்படியான நிலையில், நீதிமன்றங்களினூடாகத் தோல்வி தவிர்ப்புப் போராட்டத்தை நோக்கிய சட்டத்தரணிகளின் நகர்வு வரவேற்கக் கூடியது. அது, கட்சி அரசியலுக்கு அப்பாலான நடவடிக்கையாகத் தொடர வேண்டும்.

தமிழ்த் தேசிய அரசியலில் பொதுப் பிரச்சினைகளுக்காக, மூளையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கான அண்மையை உதாரணங்களாக மேற்கண்ட இரண்டு விடயங்களையும் கொள்ள முடியும்.

ஆனால், எதுவும் செய்ய முடியாது என்கிற நிலையை அடைந்துவிட்ட பின்னர்தான், மூளையைப் பயன்படுத்தி, கருமங்களை ஆற்றுவோம் என்பதுதான் தமிழ்த் தேசிய அரசியலின் தொடர் சாபக்கேடு. அதனை மாற்றி, அனைத்துத் தருணங்களிலும் மூளையைப் பொது எதிரியை எதிர்கொள்ளப் பயன்படுத்துவோம் என்கிற கட்டத்துக்கு நகர வேண்டும்.