தமிழ் போர்க்குணத்தின் ஒரு பாரம்பரியம்: ஜனநாயகத்துக்கான வெகுஜன அரசியல்

தோழர் சிறிதரனுடன் ஒரு நேர்காணல்

அகிலன் கதிர்காமர்

புரட்சி சாத்தியமானது என நாங்கள் நம்பினோம்:

இடதுசாரிகள் ஐக்கியப்பட வேண்டும்:
இங்குள்ள அதிகாரிகள் நிலப்பிரபுத்துவ பிரபுக்களைப் போல செயற்படுகிறார்கள்:sritharan-11
கேள்வி: உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் பின்னணி பற்றிக் கூற முடியுமா? உங்கள் அரசியல்மயமாக்கலில் அது செல்வாக்குச் செலுத்தியதா?

பதில்: எனது குடும்பம் தீவுப் பகுதிகளான நயினாதீவு மற்றும் அனலைதீவு என்பனவற்றைச் சேர்ந்தது மற்றும் எனது தந்தை கல்வித் திணைக்களத்தில் ஒரு எழுதுவினைஞராகக் கடமையாற்றினார். நான் சிறுவனாக இருந்தபோது எனது குடும்பம் யாழ்ப்பாணம் கொட்டடியில் பூபாலசிங்கம் குடும்பத்தினருடன் தங்கியிருந்தது. அவர்தான் பிரபலமான பூபாலசிங்கம் புத்தகசாலையை ஆரம்பித்தவர் அத்துடன் அவர் நயினாதீவைச் சேர்ந்த ஒரு கம்யுனிஸ்ட் தலைவரும் ஆவார். எனது மாமா ராஜேந்திரனும் ஒரு அர்ப்பணிப்புள்ள கம்யுனிஸ்டாக இருந்தார். எனது தாயின் தகப்பனார் ஒரு புகையிரதநிலைய பொறுப்பாளராக இருந்தார், நான் பிறப்பதற்கு முன்பே அவர் காலமாகிவிட்டார், ஆனால் அவர் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலுள்ள நல்லதொரு புத்தகச் சேகரிப்பை விட்டுச் சென்றிருந்தார். எங்கள் வீட்டில் நேரு மற்றும் காந்தியின் புகைப்படங்கள் இருந்தன. நேரு எழதிய டிஸ்கவரி ஒப் இந்தியா என்கிற புத்தகத்தின் ஒரு பிரதி மற்றும் அறிவு தொடர்பான புத்தகத்தின் பத்து பாகங்களும் எங்கள் வீட்டில் இருந்தன. பின்னர் பாரதியாரின் பழைய தமிழ்ப்புத்தகங்கள், மகாபாரதம் மற்றும் இராமாயணம் என்பனவும் அங்கிருந்தன. எனது தந்தை கொழும்பில் வேலை செய்தபோது அவர் வழக்கமாக ஒவ்வொரு வாரமும் செய்திப் பத்திரிகைகள் மற்றும் வார இதழ்கள் என்பனவற்றை பொதி செய்து தபால் மூலம் அனுப்புவார். எனவே நான் வளர்ந்தது புத்தகங்களைச் சுற்றியே, இறுதியில் நான் பரவலாக வாசிக்க ஆரம்பித்தேன் மற்றும் அது என்னுள் பெரிய செல்வாக்கினைச் செலுத்தியது.

நான் 7ம் வகுப்பில் படிக்கும்போது நாங்கள் தீவகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயர்ந்தோம் மற்றும் அங்கு நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்குச் சென்றேன். நான் உயர்தர வகுப்புக்கு வந்தபோது அரசியல் ரீதியாக நல்ல அறிவைப் பெற்றிருந்தேன். 1972ம் ஆண்டு குடியரசு அரசியலமைப்புக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலம் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்த பதட்டமான நிலமை என்பன எனக்கு நினைவிருக்கிறது. 1974ல் நடைபெற்ற உலகத் தமிழாராய்சி மாநாநாட்டுக்கு நான் சென்றிருந்தேன், ஆனால் படுகொலைகளில் முடிந்த அந்த இறுதி நாளில் நான் அங்கிருக்கவில்லை.1977 கலவர காலங்களில் யாழ்ப்பாணத்தில் காவல்துறையினர் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது எனக்கு நினைவிருக்கிறதுது, புதிய சந்தைக்கு மண்ணெண்ணை ஊற்றி அவர்கள் எரித்ததை நான் கண்ணாரக் கண்டேன். எனவே எழுச்சி பெற்றுவந்த தமிழ் தேசிய அலை எனக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியது.

கேள்வி: போர்க்குணமிக்க பல முன்னோடிகளைப் போலவே உங்கள் அரசியல் வாழ்க்கையும் 70 களின் பிற்பகுதிகளில் ஒரு இளைஞர் செயற்பாட்டாளராக ஆரம்பித்தது.1970 களின் பிற்பகுதியில் இருந்து 1980 களின் ஆரம்பம் வரையான முக்கியமான வருடங்களில் அரசியல் அமைப்பு மற்றும் அறிவுபூர்வமான செல்வாக்கு என்பன எப்படி இருந்தன?

பதில்: நான் உண்மையாகச் சொல்வதானால், பாரம்பரிய இடதுசாரியைப பற்றி நாங்கள் விeprlf-demoமர்சித்;தோம். அவர்களின் தீர்வை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை மற்றும் இனவாத சக்திகளுடனான அவர்களின் கூட்டணி பற்றியும் நாங்கள் விமர்சித்தோம். மேலும் நாங்கள் பாராளுமன்ற அரசியலில்; நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, அது சமரசம் செய்து கொள்வது என்று நாங்கள் எண்ணினோம். அந்த நேரத்தில் இரண்டு பெரிய தாக்கங்கள் இருந்தன, ஒன்று ஜே.வி.பி யின் எழுச்சி மற்றது பங்களாதேசின் பிரிவு என்பனவே அவை. எனவே ஒரு நாடு பிரிவடைவதற்கு ஒரு ஆயுதப் போராட்டம் சாத்தியமானது என நாங்கள் நம்பினோம். நேர்மையாக இருப்பதற்காக பிரிவினை பற்றி நாங்கள் விவாதிக்க முயற்சித்தோம், அந்தக் காரணத்துக்காக சுய நிர்ணய உரிமைகள் போன்ற கோட்பாடுகளை பார்க்கலானோம். ஆகவே நாங்கள் கிழக்கு திமோர், மின்டானோ மற்றும் ஸ்பெயின் நாட்டில் உள்ள பாஸ்க் போன்ற இடங்களில் நடந்த போராட்டங்கள்பற்றி வாசித்தோம்.

கம்யுனிஸ்ட்டான சண்முகதாசன் போன்றவர்களுக்கும் மற்றும் தமிழ் தேசியவாதிகளுக்கும் இடையே பல விவாதங்கள் இடம்பெற்றன. 1970 மற்றும் 1980 களில் யாழ்ப்பாணம் அரசியல் ரீதியாகவும் மற்றும் அறிவுஜீவியாகவும் மிகவும் மும்முரமாகச் செயற்பட்டது. உயர்தரத்துக்குப் பின்பு நான் எனது கல்வியை தொடரவில்லை, ஆனால் பல உள்ளுர் புத்திஜீவிகள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இளைஞர்களாக நாங்கள் ஒன்றுசேர்ந்து பல பத்திரிகைகளை ஆரம்பித்தோம்.

கைலாசபதி, ஏ.ஜே.கங்காதரன், இந்திரபாலா, சிலான், நுஹ_மான் மற்றும் சிவத்தம்பி போன்றோர் பல்கலைக்கழகத்தில் இருந்தார்கள். நிர்மலா, நித்தியானந்தன், சித்திரலேகா, மௌனகுரு, வரதராஜப்பெருமாள், சோமசுந்தரி, செல்வின். ஜெயபாலன் மற்றும் சேரன் போன்ற இளம் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களும் அங்கிருந்தார்கள். பல்கலைக்கழகத்துக்கு வெளியே அவர்கள் விசுவானந்ததேவன், அண்ணாமலை, பரா, தேவராஜா, சின்ன பாலா போன்றவர்கள் உட்பட பல இடதுசாரி கட்சிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள், கலந்துரையாடல்களுக்காக மணியம் புத்தகசாலை மற்றும் செந்திவேல் மற்றும் அவர்களின் கட்சியும் இருந்தது.

கேதீஷ் லோகநாதன் போன்றவர்கள் எங்களுக்கு உதவியாக இருந்ததுடன் தெற்கில் இருந்து ஒற்றுமைக்காக வந்த இடதுசாரி கட்சிகள் மற்றும் இனம் சார்ந்த நீதி மற்றும் சமத்துவம் (மிர்ஜே) இயக்கம் என்பனவற்றை சேர்ந்த வாசு, ஆனந்த வக்கும்புர, நியுட்டன், உபாலி, தயான், சுனிலா, புல்சரா, ஜோ, என்பவர்களுக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். தெற்கில் நடைபெற்ற கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு நாங்களும் அழைக்கப்பட்டோம்.

சிலபேர் எங்களுக்காக ஆய்வுக் குழுக்களை நடத்தினார்கள் மற்றவர்கள் மாவோயிசம் பற்றி சிந்திக்க எங்களுக்கு சவால் விடுத்தார்கள். ட்ரிம்மர் மண்டபத்தில் அரசியல் படங்கள் காட்டப்பட்டன. அந்த நேரத்தில் அவைகளால் உள்வாங்கப்பட்ட நாங்கள் புரட்சி சாத்தியமானது என நம்பினோம்.

கேள்வி: தமிழ் போராளிகளுடன் எப்படி நீங்கள் தொடர்புபட்டீர்கள்?

பதில்: 1977ல் ஈழ புரட்சிகர மாணவர்கள் அமைப்பு (ஈரோஸ்) லண்டனில் ரட்னசபாபதி மற்றும் அருளர் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. மற்றும் அவர்கள் ஈழ மாணவர்கள் பொது சங்கத்தையும் (ஜியுஈஎஸ்) உருவாக்கினார்கள். பலஸ்தீனியன், ஆபிரிக்கன் மற்றும் ஏனைய விடுதலை இயக்கங்கள் போன்ற உலகெங்கிலுமுள்ள போராட்டக் குழுக்களுடன் அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தியதுடன் தமிழர் போராட்டத்தை சர்வதேச ரீதியில் சிந்திக்க வைக்க விரும்பினார்கள்.

வன்னியில் அவர்கள் ஒரு பயிற்சி முகாமை ஆரம்பித்தார்கள், ஆனால் பஸ்தியாம்பிள்ளை சம்பவத்துடன் 1978ல் எல்.ரீ.ரீ.ஈ யினால் வன்னியில் சில காவல்துறையினர் கொல்லப்பட்டதினால் வன்னியில் இருந்த எல்லா முகாம்களும் சோதனைக்கு உள்ளாயின. கலந்துரையாடல்களுக்காக லண்டனில் இருந்து வந்தவர்கள் ஒருவாறு சமாளித்து வெளியேறமுடிந்தது, ஆனால் தலைமை லண்டனிலா அல்லது இங்கு யாழ்ப்பாணத்திலா அல்லது இந்தியாவிலா இருக்கவேண்டும் என்கிற கேள்வி எழுந்தது.

1980 ஆகஸ்ட்டில் எங்களில் கிட்டத்தட்ட 15 பேர்கள் வரை பத்மநாபாவின் தலைமையில் நடந்த அமைப்பாளார்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் வைத்து சந்தித்தோம். நாங்கள் நீந்துவதற்குச் செல்வதுபோல கீரிமலைக்குச் சென்றோம் பின்னர் மீனவர்கள் அங்கிருந்து எங்களை இந்தியாவுக்கு கடத்திச் சென்றார்கள். அது இந்தியாவுக்குச் செல்வதற்கான சில மணி நேர படகுச் சவாரி. அந்த மாநாட்டில் நாங்கள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை (ஈபிஆர்எல்எப்) ஒரு இரகசிய அமைப்பாக உருவாக்கினோம். முன்னணி அமைப்புகளை மட்டுமே மேற்பார்வை செய்வது என்று நாங்கள் தீர்மானித்தோம். ஜி.யு.ஈ.எஸ் அமைப்புக்கு பொறுப்பாக நான் நியமிக்கப்பட்டேன்.

இளைஞர்கள் அக்கறை காடடியதால் ஜி.யு.ஈ.எஸ்(Gues) அமைப்பு நிறைய வேலைகளைச் செய்தது. நாங்கள் பாடசாலைகளில் ஆய்வுக் குழுக்களை அமைக்க ஆரம்பித்தோம். நாங்கள் ஒடுக்கப்பட்ட சாதி சமூகங்களிடையே வேலை செய்து எங்கள் போராட்டத்துக்கு அவர்களை ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என பத்மநாபா விரும்பினார். எங்கள் பெண்கள் பிரிவில் ஏராளமான பெண்களும் இணைந்தார்கள். எனது மனைவியும் மற்றும் தோழருமான ஞ}னா 1981ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்தார். யாழ்ப்பாண சமூகம் எங்களை விரும்பவில்லை ஏனென்றால் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி இளைஞர்கள் எங்கள் இயக்கத்தில் சுதந்திரமாக இயங்கிய காரணத்தால்.

பிரச்சினைகள் தொடர்பாக வேலை செய்வதற்கு செயற்பாட்டாளர்களைச் சந்திப்பதற்காக நாங்கள் நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டி இருந்தது. கிழக்கில் மக்கள் எங்களுக்கு மிகுந்த மதிப்பளித்தார்கள். பல முஸ்லிம் தோழர்களும் எங்களுடன் இணைந்தார்கள். நாங்கள் தொழிற் சங்கங்கள், கிராமப்புற தொழிலாளர் சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சில இடதுசாரி கட்சிகள் என்பனவற்றுடன் வேலை செய்தோம், மற்றும் பல போராட்டங்களில் ஐக்கியப்பட்டோம். யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஆயிரத்திரற்கும் அதிகமானோரைத் திரட்டி பிரமாண்டான ஒரு மே தின ஊர்வலத்தை நாம் ஏற்பாடு செய்தோம். ஜே.ஆரின் 1982 பொதுசன வாக்கெடுப்புக்கு எதிராக ஒரு பாரிய பிரச்சாரத்தை நாம் மேற்கொண்டோம்.

தமிழ் சமூகத்துக்கும் மற்றும் தமிழ் போராளிகளுக்கும் இடையே முறுகல் நிலையும் இருந்தது. 1981 ல் எல்.ரீ.ரீ.ஈ, சுந்தரத்தை கொலை செய்ததை நாங்கள் வன்மையாகக் கண்டித்தோம். பின்னர் 1982ல் புன்னாலைக் கட்டுவனில் வைத்து ஒரு பேரூந்து சாரதியான அண்ணாமலையை படுகொலை செய்த சம்பவம் இடம்பெற்றது அதையும் நாங்கள் எதிர்த்தோம். இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் பற்றி பல பெரிய சுவரொட்டிப் பிரச்சாரங்களை நாங்கள் நடத்தினோம்.

கேள்வி: 1983 ஜூலை கலவரம் ஆயுதப் போராட்டத்தை விரிவாக்கியது. அது ஈபிஆர்எல்எப் மற்றும் உங்கள் வேலைகளில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தியது?

பதில்: 1983 ஜூலைக்குப் பின்னர் பெருந்தொகையான இளைஞர்கள் அனைத்து போராளி இயக்கங்களிலும் இணைந்தார்கள். நாங்களும் இந்தியாவில் பயிற்சி முகாம்களை அமைத்தோம். ஆனால் அதன்பின் எங்களால் தீவிரமான அரசியல் கல்வியைத் செயற்படுத்த முடியவில்லை. முகாம்களில் வகுப்புக்களை நடத்த நாம் முயற்சி செய்தோம், ஆனால் களத்தில் உள்ள மக்களுடன் இணைந்து வேலை செய்வதால் வரும் அரசியல கல்வியை விட அது வித்தியாசமானது. அது எங்களுக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு என நான் நினைக்கிறேன்.

1984 ஜூன் 5ல் எங்களில் சிலர் மைலிட்டியில் உள்ள படகு ஓட்டும் தொழிலாளர் ஒருவரது வீட்டிற்கு ஒரு கூட்டத்துக்காகச் சென்றிருந்தோம், இராணுவம் அந்த வீட்டைச் சுற்றிவளைத்து எங்களைக் கைது செய்தது. நான் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப் பட்டேன் .நான் உயிருடன் வரமாட்டேன் என்றே நான் நினைத்தேன்.

இறுதியாக நான் வெலிக்கடை சிறைக்குச் சென்றேன். அங்கு நிலமை மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. அங்கு தமிழ் கைதிகள் நல்ல ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். நாங்கள் அங்கு அரசியல் வகுப்புக்களை நடத்தினோம், கராத்தே வகுப்புகள் கூட அங்கு நடந்தது. 1983 ஐப் போன்றதொரு சிறைச்சாலை படுகொலை ஒன்று வந்தால் அதற்கு முகம் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் எங்களை நாங்கள் தயார்படுத்தி வந்தோம். நல்ல சிறைச்சாலை வசதிகள் மற்றும் உணவு என்பன கிடைப்பதற்காக நாங்கள் பல போராட்டங்களை நடத்தினோம். வானொலி செய்திகளைக் கூட எங்களால் கேட்க முடிந்தது.

எனது வழக்கிற்காக வாதாடியதுடன் எனது குடும்பத்தவர்களுக்கு நிலமையை அறிவித்து வந்த வழக்கறிஞர்கள் பிரான்சிஸ் சேவியர், குமார் பொன்னம்பலம் மற்றும் ஜோ ஜெயரட்னம் ஆகியோராவர். 1986 டிசம்பர் 19ல் நான் விடுவிக்கப்பட்டேன்.

நான் விடுதலையான நேரத்தில் எல்லாமே மாறிவிட்டிருந்தன. ஏப்ரல் 1986ல் எல்.ரீ.ரீ.ஈ ரெலோவை படுகொலை செய்ததை தொடர்ந்து புளொட், என்எல்எப்ரி மற்றும் பிஎல்எப்ரி என்பனவற்றையும் தடை செய்திருந்தது. நான் விடுதலையாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு அவர்கள் ஈபிஆர்எல்எப் இனைத் தாக்கியதுடன் அதனையும் தடை செய்திருந்தார்கள். 1986க்குள் தமிழ் ஈழம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டிருந்தோம். திம்பு பேச்சு வார்த்தைகள் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு என்பனவற்றால் பிரிவினை என்பது சாத்தியமாகாது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம்.

கேள்வி: 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தப்படி, ஈபிஆர்எல்எப் வடக்கு – கிழக்கு மாகாணசபையின் கட்டுப்பாட்டை பெற்றது அதிகாரத்தில் இருந்தபோதும் அதற்குப் பின்னரும் ஈபிஆர்எல்எப் இனது பங்கு என்னவாக இருந்தது மற்றும் உங்கள் அரசியல் சிந்தனையில் அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது?
பதில்: வரதராஜப்பெருமாள், சிவராஜா, சிவதாசன், பத்மநாதன், நச்சினார்க்கினியன் மற்றும் விக்னேஸ்வரன் போன்றவர்கள் உட்பட எங்களிடம் இருந்த அர்ப்பணிப்புள்ள மாகாணசபை உறுப்பினர்கள் மாகாணசபை முறையை வேலை செய்வதற்கு தக்கவாறு மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அரசாங்கத்திடம் இருந்து கிடைத்த சிறிதளவு ஆதரவு காரணமாக அதைச் செய்வது கடினமாக இருந்தது.

அந்த ஒப்பந்தத்தின் மூலம் விடுதலையான சுபத்திரன் மற்றும் நான் திரும்பவும் மக்களுடன் சேர்ந்து வேலை செய்யவே விரும்பினோம். இது மிகவும் கடினமான காலமாக இருந்தது. எங்களது அங்கத்தவர்களில் சிலர் எல்.ரீ.ரீ.ஈ தங்களை எப்படித் தாக்கியது என்பதையிட்டு மிகவும் கசப்படைந்திருந்தார்கள். மற்றும் அதேபோல எங்கள் பக்கத்தில் இருந்தும் பல தவறான செயல்கள் இடம் பெற்றிருந்தன.

அந்த நேரத்தில் நாங்கள் ஏராளமான சுய விமர்சனங்களை மேற்கொண்டிருந்தோம். ஆயுதப் போராட்டத்தின் ஆபத்துகள் பற்றி இப்போது எனக்குத் தெரிகிறது, அது ஒரு இயக்கத்தை எப்படி மிருகத்தனமாக மாற்றுகிறது என்பதும் புரிகிறது. இப்போது நான் நினைக்கிறேன் வன்முறையற்ற வெகுஜனப் போராட்டத்தை மட்டுமே நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று.

இந்திய இராணுவம் பின்வாங்கியபோது, நாங்களும் இந்தியாவுக்குச் செல்லவேண்டி இருந்தது. பின்வாங்கிச் சென்ற ஈபிஆர்எல்எப் அங்கத்தவர்கள் மற்றும் குடும்பங்களை ஏற்றுக்கொள்ள தமிழ்நாடு விரும்பவில்லை மற்றும் அதனால் எங்களை ஏற்றிச்சென்ற கப்பல் ஓரிசாவில் இறங்கியது. எங்கள் அங்கத்தவர்களுக்கு அது மிகவும் கடினமான ஒரு நேரமாக இருந்தது. பின்னர் 1990ல் பத்மநாபாவும் மற்றும் வேறு 12 பேரும் சென்னையில் வைத்து எல்.ரீ.ரீ.ஈ இனால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

கேள்வி: ஈபிஆர்எல்எப் முடக்கப்பட்டபோது உங்கள் பங்கை நீங்கள் எப்படிப் பார்த்தீர்கள்?

பதில்: 17 வருடங்களுக்குப் பிறகு இறுதியாக ஐதேக அரசாங்கம் வீழ்ச்சியடைந்து சந்திரிகாவின் அரசாங்கம் பதவிக்கு வந்தது, அது எங்களுக்கு ஒரு வழியை திறந்திருப்பதாக நாங்கள் உணர்ந்தோம். சுபத்திரனும் நானும் யாழ்ப்பாணத்தில் சில ஜனநாயக இடைவெளியைத் திறப்பதற்காக திரும்பவும் வேலையில் இறங்க முயற்சிப்பது எனத் தீர்மானித்தோம். 1997ல் திருமதி. யோகேஸ்வரன் பயணம் செய்த அதே விமானத்தில் யாழ்ப்பாணம் திரும்பினோம். ஒரு மேயர் என்கிற வகையில் அவரும் கூட எல்.ரீ.ரீ.ஈ யினால் கொல்லப்படும் வரை ஒவ்வொருவருடனும் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

சுபத்திரன் கடுமையாக வேலை செய்து யாழ்ப்பாணத்தில் பல தொடர்புகளை ஏற்படுத்தினார். ரவிராஜ் அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்தார், மற்றும் மேயர் கந்தையாவுடன் சேர்ந்து ஆனந்தசங்கரி எல்.ரீ.ரீ.ஈ இன் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் யாழப்பாண பொது நூலகத்தை திறப்பதற்கு முயற்சித்தார்கள். 2000ன் ஆரம்பத்தில் ஏற்பட்ட சமாதான நடவடிக்கைகளினால் தெற்கிலிருந்து மக்கள் திரும்பவும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதற்கு ஆரம்பித்தார்கள். ஆனால் கொலைகள் திரும்பவும் ஆரம்பமாகின, மற்றும் 2003ல் சுபத்திரன் கொலை செய்யப்பட்டார்.

நான் நினைக்கிறேன் ஒரு இயக்கமாக நாங்கள் பல தியாகங்களைச் செய்திருப்பதுடன் மக்களில் பலரிடத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தியும் உள்ளோம். வடக்கிலுள்ள சில பிரச்சினைகளில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிக் கிராமங்களில் சில குறிப்பிட்ட சிந்தனைகளை நாங்கள் விட்டுச் சென்றிருக்கிறோம். ஆனால் இயக்கங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரமும் தருணமும் இருக்கிறது, அதுவும் கடந்து செல்கிறது.

கேள்வி: மே 2009ல் இடம்பெற்ற புலிகளின் அழிவு, தமிழர்களுக்கும் மற்றும் அவர்களின் அரசியலுக்கும் அழிவுகரமானதும் மற்றும் துயரமானதுமான காலத்துக்கு ஒரு முடிவுகட்டியது. போர் முடிந்து மற்றும் ஜனநாயகத்துக்கான பாதை திறந்து 8 வருடங்கள் ஆனதின் பின்னரும் ஏன் முற்போக்கான அரசியல் குறைவாக உள்ளதுடன் தமிழ் தேசியவாத அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறது?

பதில்: ஆம் அதைப்பற்றி நான் ஏராளமாகச் சிந்திக்கிறேன். எல்லா இழப்புகளுக்கும் பிறகும் பலர் தங்கள் உயிர்களை இழந்த பிறகும்கூட, எங்கள் தமிழ் சமூகம் எதுவுமே நடக்காதது போலத் தொடர்கிறது. இந்த நிலமைக்கான காரணங்களை நாங்கள் ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் வித்தியாசமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

அதை ஆரம்பிப்பதற்கு, எங்கள் சமூகத்தில் இன்னமும் ஜனநாயகம் முற்றும் அரசாங்கத்துடனான உறவு என்பன குறைவாகவே உள்ளன. ஒரு சாதாரண நபர் கச்சேரிக்குச் சென்றால் அவர் அதன் உள்ளே செல்வதற்கு கிட்டத்தட்ட பயந்த நிலையிலேயே இருப்பார். இங்குள்ள அதிகாரிகள் நிலப்பிரபுத்துவ பிரபுக்களைப்போல நடந்து கொள்கிறார்கள்.

இப்போது அரசியல் தீர்வுக்காக சிறிதளவு நம்பிக்கையே உள்ளது. தெற்கிலுள்ள ஒரு சில இடதுசாரிகளுடன் எங்கள் பிரச்சினைகள் பற்றி நாங்கள் கலந்துரையாடக் கூடியதாக உள்ளது. அத்துடன் கிராமத்திலுள்ள மக்கள் மிகவும் கடினமான பொருளாதார நிலையில் உள்ளார்கள்.

சில பிற்படுத்தப்பட்ட கிராமங்களில் கசிப்பு மற்றும் மணல் விற்பனை செய்பவர்களை அரசாங்கம் சுற்றிவளைத்து கைது செய்ய விரும்புகிறது, ஆனால் இதில் உள்ள துயரமான உண்மை என்னவென்றால் சில சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதை விட்டால் வருமானத்துக்கு வேறு வழி கிடையாது. பொருளாதாரம் மக்களை தோற்கடித்து விட்டது மற்றும் மத்திய அரசாங்கம் ஏன் மாகாண அரசாங்கம் கூட காவல்துறையை பயன்படுத்துவதைத் தவிர இதற்கு தீர்வு எதனையும் கண்டதாகத் தெரியவில்லை.

முஸ்லிம் விரோத உணர்வுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன, அவர்களது வெளியேற்றம் மற்றும் துயரங்களுக்குப் பின்புகூட அவர்கள் இன்னமும் யாழ்ப்பாண சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. சாதீய சிந்தனைகள் வலுப்பெற்று வருகின்றன. கிராமங்களில் சாலை வசதிகள் மின்சாரம் போன்ற அரச சேவைகள் ஒடுக்கப்பட்ட சாதியினரின் பகுதிகள் தொடங்கும் இடத்திலேயே தடுக்கப்படுகின்றன.

இடது பின்னணியில் இருந்து வந்த எங்களைப் போன்றவர்கள், உடைந்து போயிருந்தாலும், அத்தகைய இடது சிந்தனையுள்ள மக்கள் நூற்றுக்கணக்கில் இங்கு இங்கிருக்கிறார்கள். நாங்கள் ஒன்று சேரவேண்டியது அவசியமானது.நாம் ஜனநாயகம், சமூக நீதி மற்றும் நல்லிணக்கத்துக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்