துரத்தும் அபாயம் விழிபடைவோமா…?

யாழ்.பல்கலைக்கழகத்தில் தற்போது கலைபீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களிலும் சிங்கள மாணவர்கள் அதிகம் என்பதும் எதிர்காலத்தில் யாழ். பல்கலைக்கழக அனைத்து விடயங்களிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் இதனை தவிர்க்கவே முடியாது. இதற்காக இனவாதமும் பேசமுடியாது. இதை தவிர்க்க வேண்டும் என்றால் தமிழ் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் வீதத்தை அதிகரிக்க வேண்டும். அதாவது super merit, merit என்ற அடிப்படையில் சித்தியடைய வேண்டும். இது பெரும் பின்னடைவில் நிற்கும் எங்கள் மாணவர் சமூகம் முன்னோக்கி செல்ல இப்போது வாய்ப்பே இல்லை.

கடந்த உயர்தர பரீட்சையில் வர்த்தக பாடத்தில் தமிழ் மொழியில் முதலிடம் வந்த கொக்குவில் இந்து கல்லூரி மாணவன், தேசிய ரீதியில் 43 வது இடம். எனவே 10 தமிழ் மாணவர்கள் வருவதற்கு முன்பு எத்தனை சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி விடுவார்கள் என்று சிந்தியுங்கள்! எனவே வெட்டுபுள்ளியில் தெரிவாகும் அதிக சிங்கள மாணவர்களுக்கு பல்கலைகழகங்களில் அனுமதிக்கப்படுவதை தவிர்க்கவே முடியாது.

ஆனால் யாழ். பல்கலைக் கழகத்தை தமிழர் சொத்தாக வைத்திருக்க வேண்டுமானால் ஜப்பான் போல தாய்மொழியில் கல்வி செயற்பாடு இடம் பெற்றிருக்க வேண்டும். அப்போது ஏனைய மொழி மாணவர்கள் கலைப்பீடம் போல் அனுமதிக்கப்பட்டிருக்க முடியாது.

உங்கள் அனைவருக்கும்தெரியும் தமிழீழ போராட்டம் வீறுகொண்டு எழுச்சியடைய 1970 தரப்படுத்தல் முக்கிய காரணம் என்று! அந்த ஆண்டு உயர்தர பரீட்சையில் எதேச்சையாக 120 தமிழ் மாணவர்கள் சித்தியடைந்து பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்துக்கு தெரிவாகியமை UNP, JVP போன்ற கட்சிகள் இனவாதத்தை பூசி, பரீட்சை தாள்கள் திருத்திய தமிழர்கள் சாதகமாக திருத்தி விட்டார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் தமிழர்கள் இன்று அப்படி யோசிக்கிறோமா? இன்று சிங்களவர்கள் வேலை வாய்ப்பிலையே கை வைக்கின்றனர் யாராவது ஒருவர் கண்டுகொள்கின்றோமா? தட்டி கேட்க வேண்டிய கட்சியே மண்டியிட்டு கிடக்கிறது. நாம் சரி என்றும் நல்லிணக்கம் என்றும் தானே சொல்கின்றோம்!

பலருக்கு தெரியும் 1960 அல்லது அதற்கு முன்பெல்லாம் கொழும்பில் வேலை செய்த உயர்அதிகாரிகள் எல்லோரும் தமிழர். வெள்ளிகிழமைஎன்றால் யாழ் நோக்கி பெரும்படையே வெளிக்கிடும். ஆனால் இன்று நிலைமை என்ன? இன்று இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் உயர் அதிகாரிகள் சிங்களவர்கள். அதனை விட இரண்டாவது முஸ்லிம்கள். இது இன்றைய சனத்தொகைக்கும் பொருந்தும். நாம் இன்று பெரும் பிழைகளை விட்டு விட்டு சிறு பிழைகளை ஆராய்கிறோம். பணம் மட்டுமே எங்கள் பிழைப்பு அதற்காக யாருடனும் கூட்டு வைப்பதுதான் இன்றைய தமிழர் பாரம்பரியம்!

(Rajanikanthanv)