“சொந்த வீட்டுக்குத் திரும்பும்வரை வீதியில்தான் எங்கள் வாழ்க்கை”

“சொந்த வீட்டுக்குத் திரும்பும்வரை வீதியில்தான் எங்கள் வாழ்க்கை”·
என்று பத்து நாட்களுக்கும் மேலாக வீதியிலேயே படுத்தெழும்பிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள். “வீடு திரும்பும்வரையில் வீதியை விட்டுச் செல்ல மாட்டோம்“ என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள், பெண்கள் என கிராமத்திலுள்ள அத்தனைபேரும் வீதிக்கு வந்து விட்டனர். போராட்டக்களமாகியிருக்கிறது வீதி.


மைத்திரி – ரணில் நல்லாட்சியில் இப்படி ஒரு வார்த்தையா? இப்படியொரு போராட்டமா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், கண்முன்னால் மெய்யாகவே இப்படித்தான் அந்த மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் அந்த மக்கள் வீதியில் நிற்கிறார்கள். அருகே உள்ள மரங்களின் கீழே சமைக்கிறார்கள். வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் போராட்டக் கொட்டகையில் இருக்கிறார்கள். இரவில் கொடும்பனிக்குளிர். பகலில் அனலடிக்கும் வெயில். இருந்தாலும் காணிகளை விடுவிக்கும்வரையில் இந்த இடத்தை விட்டுப்போகப்போவதில்லை என்று சத்தியாவேசத்துடனிருக்கிறார்கள்.
போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பல இடங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் தினமும் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த மக்களின் போராட்டத்துக்குப் பல அமைப்புகள் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்திருக்கின்றன. இன்னும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் அவ்வப்போது வந்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துச் செல்கிறார்கள். ஊடகங்களும் ஓரளவுக்கு இங்கே ஒளியைப் பாய்ச்சுகின்றன. தென்பகுதியிலிருந்தும் பொது அமைப்புகளும் இடதுசாரிச் செயற்பாட்டாளர்களும் சென்று தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர, வவுனியா, யாழ்ப்பாணம். மட்டக்களப்புப் போன்ற இடங்களிலும் இந்த மக்களுக்கான ஆதரவுப்போராட்டங்கள் நடந்துள்ளன. தொடர்ந்து ஏனைய இடங்களுக்கும் இது விரிவடையலாம்.
ஆனால், இந்த மக்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்திருந்தால், இந்தப் பிரச்சினை – காணி விடுவிப்பு – க்குத் தீர்வு கிடைத்திருக்கும் என்று சுமந்திரன் எம்.பி சொல்கிறார். இதனுடைய அர்த்தம் என்னவென்று விளங்கவேயில்லை. இந்த மக்களின் பிரச்சினையை இன்னும் ரணில் விளங்காமல் இருக்கிறாரா? அல்லது இதைப்பற்றி எடுத்துச் சொல்லி, ரணிலுக்கு விளக்கமளித்து, வீதியிலிருக்கும் மக்களை அவர்களுடைய சொந்தக் காணிகளுக்கு அனுப்பி வைப்பதற்கு சுமந்திரனுக்கு முடியாமலிருக்கிறதா?

(Sivarasa Karunagaran)