தூத்துக்குடி போராட்டம் இப்படியொரு கொதிநிலையை அடையும்

2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தமிழர்களுக்காக பெரும் எண்ணிக்கையில் தீயில் வெந்து இறந்த பின்னர், தமிழக மக்கள் மீண்டுமொருமுறை அதிகாரத்துக்கு எதிரான தமது போர்க்குணத்தை காண்பித்திருக்கிறார்கள். ஆளும் வர்க்கத்துக்கு எதிரான தங்களது ஓர்மம் சமரசம் செய்ய முடியாதது என்பதை மீண்டுமொரு தடவை களத்தில் வந்து நின்று நிரூபித்திருக்கிறார்கள்.

சமூகப்பொறுப்புள்ள போராட்டங்கள் எனப்படுபவை இன்று வெறும் இரண்டு வரி ஸ்டேட்டஸ்களாகவும் – அடி நுனி தெரியாத வட்ஸ் அப் தகவல்களாகவும் – போலி இணையத்தளங்களுக்குள் ஒளிந்து கிடந்து குழறும் வாய்ச்சவாடல்களாவும் மலிந்திருக்கும் நிலையில் –

‘காப்பரேட்’ பூதத்துக்கு எதிரான மாபெரும் மக்கள் சக்தி ஒன்றை ஒன்று திரட்டி வீதியில் இறங்கி அதற்காக தங்கள் உயிரையும் ஆகுதியாகியிருப்பது என்பது மாபெரும் தியாகம். “செயல் வீரம்” என்பது இதுதான் என்று எழுதிவைத்து சென்றிருக்கிறார்கள் இதில் உயிர் துறந்த உணர்வாளர்கள்.

அது இன்னொரு வகையிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, போராட்டத்தின்போது தமிழக காவல்துறையின் சினேப்பர் படையணியினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒன்பது பேர் இந்த மக்கள் போராட்டத்தை முன்னின்று ஒருங்கமைத்தவர்கள். முன்னணியில் இயங்கியவர்கள். மக்களுக்கான பெரும்பலமாக களத்தில் நின்றவர்கள். ஆக, இந்த படுகொலை படலமானது, எழுந்தமானமாக கூட்டத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட தூப்பாக்கி சூட்டினால் இடம்பெற்றது அல்ல. நன்கு திட்டமிட்டு, யார் யாரையெல்லாம் போட்டுத்தள்ளினால், இந்தப்போராட்டத்தை ஆணிவேரோடு பிடுங்கி எறியலாம் என்ற தூரநோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தலைகளை போட்டுத்தள்ளிவிட்டால், அவர்களுக்கு பின்னாலுள்ள மக்களை முருங்கை மரத்தில் ஒட்டியிருக்கும் மயிர்கொட்டிகளை போல பாளையை கொழுத்தி பிடித்து பொசுக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு மாநில அரசாங்கத்தினால் இப்படி துணிச்சலாக – கொத்தாக ஒரு கொலைப்படலத்தை – நிறைவேற்றிவிடலாம் என்பதெல்லாம் கொடுமையான கணிப்பு. மத்திய அரசின் நேரடி நெறிப்படுத்தலில் – மோடியின் தயவிலான காப்பரேட்டுக்களின் முழுமையான ஆசீர்வாதத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் – திட்டமிட்ட அரச பயங்கரவாதம்தான் இது!

ஆக இனி அடுத்தது என்ன?

தாங்கள் எப்படியான நச்சு முடிவுகளை எடுத்தாலும் அவற்றை இருகரம் நீட்டி வாங்கி வாயில் போட்டுக்கொள்ளவேண்டும் என்ற அதிகார வர்க்கத்தின் எதிர்பார்ப்புகளுக்கு கொடுக்கவேண்டிய எதிர்ப்பு, போராட்டத்தில் உயிர் நீத்த மக்களின் தியாகத்தை நீர்த்துப்போக செய்யாதவண்ணமிருக்கவேண்டுமே தவிர, கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது.

தூத்துக்குடி போராட்டம் இப்படியொரு கொதிநிலையை அடையும். அப்போது தங்களின் பக்கம் அரசியல்வாதிகளை அணைத்து வைத்துக்கொண்டால் அதிகார சக்திகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்று முழுமையாக தெரிந்தும்கூட, தங்களை நாடி வந்த அனைத்து அரசியல் தரப்பினரை அகற்றிவிட்டு சாவை எதிர்நோக்கியவாறு களத்தில் நின்றிருக்கிறார்கள் போராட்டக்காரர்கள். எல்லா தருணங்களிலும் போராட்டங்களை தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் தரப்பினரை இந்தப்போராட்டத்தின்போது போராட்டக்காரர்ரகள் பயன்படுத்தியிருந்தால் இப்படியொரு இழப்பை தவிர்த்திருக்கலாமோ என்ற கேள்வி, குண்டு அடிபட்டு வீழ்ந்து கிடக்கும் ஒவ்வொரு உடலங்களையும் பார்க்கும்போது உள்ளுக்குள் அழுத்திக்கொண்டிருக்கிறது.

ஆனால், நடந்தது நடந்துவிட்டது.

இனி இந்தப்போராட்டத்தினை முன்கொண்டு செல்லவேண்டுமாயின் – அதன் தொடர்ச்சியை கனதி குன்றாமல் பேணவேண்டுமாயின் – நிச்சயம் இதிலொரு அரசியல் கலப்படத்தை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது. அதுதான் இறந்த போராளிகளுக்கு செய்யும் அஞ்சலியும் தொடர்ச்சியான மக்கள் எழுச்சிக்கான உந்து சக்தியாகவும் அமையும். அரசியல்வாதிகள் ஏதாவது செய்ய விரும்பினால், காப்பரேட்டுக்களுடன் ஒப்பந்தமிடும் அரசின் பேனாவை வாங்கி முறித்தெறிவதற்கான வேறு வழிகளை கண்டுபிடிக்கச்சொல்லுங்கள்.

படைப்பாளிகளே! குறைந்த பட்சம் இந்த இரத்தக்கறை படிந்த அரசின் கைகளால் வாங்கிய விருதுகள் – கௌரவங்களையாவது தூக்கி எறியலாமே, இறந்த போராளிகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக!

(ப. தெய்வீகன்)