தூத்துக்குடி படுகொலை

அதிகார வர்க்கம் எப்போதும் ஒரே குணம் கொண்டது.அது அதிகாரத்தை தக்கவைக்க எதையும் செய்யும்.அவர்களுக்குஇனம்,மதம்,சாதி எதுவுமே கிடையாது.இவர்களிடையே மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

சாதி,இன,மத,பிரதேச வாதங்கள் மக்களை சிந்திக்கவிடாமல் தமது பக்கம் திசை திருப்ப பாவிக்கப்படும் உபாயங்கள்.தூத்துக்குடி சம்பவத்தில் சுட்டவர்களை குற்றம் சொல்லிப் பயனில்லை.அவர்களை ஏவியவர்களையே கண்டிக்கவேண்டும்.

உப்பென்றும் சீனியென்றும்
உள்நாட்டுச் சேலையென்றும்
எத்தித் திருடுவாரெடி கிளியே
ஊமை ஜனங்களடி

என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.சுதந்திர போராட்டத்தின்போது வெளிநாட்டுபொருட்களை புறக்கணித்து அவற்றை தீயிட்டு கொழுத்திய வரலாற்றை இந்தியர்கள் மறந்துவிட்டார்கள்.

அன்று ஜூலியன்வாலா பாக் இல் நடந்த படுகொலைகளை இந்தியர்கள் மறந்துவிட்டார்கள்.ஏனென்றால் ஆட்சிகள் கைமாறியபோதும் அதிகார வர்க்கத்தின் குணங்கள் மாறவில்லை.எந்த வெள்ளையர்கள் ஆண்டார்களோ அவர்களின் கைக்கூலிகளிடமே இந்தியா கையளிக்கப்பட்டது.

எந்த வெள்ளையர்களை நாட்டைவிட்டு வெளியேற்றினார்களோ அதே வெள்ளையர்கள் அல்லது அவர்களின் பினாமிகள் தொடர்ந்தும் இந்தியாவை கொள்ளை அடிக்கின்றனர்.கொள்ளையடிக்க இந்திய அதிகார வர்க்கம் துணை நிற்கிறது.

உலகில் இரண்டு வர்க்கம் மட்டுமே உண்மையானது.முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம்.நாங்கள் இனம்,மதம்,மொழி,சாதிகளை கைவிடாதவரை இந்த முதலாளி வர்க்கம் இலகுவாக எங்களை ஏமாற்றும்.தனி ஒரு மனிதனுக்காக,பணத்துக்காக சொந்த இனத்தை,உறவுகளை கொல்லத் தூண்டுவதே முதலாளி வர்கத்தின் இயல்பு.அதுவே தூத்துக்குடியில் நடந்துள்ளது.

அங்கே மக்களைசுட்டவன் கூலிக்கு மாரடிக்கும் அரச ஊழியன்.வாங்கும் சம்பளத்துக்கு விசுவாசமாக கடமையை செய்துள்ளான்.இவர்களை ஏவியவனை யாரும் கண்டு கொள்வதில்லை.சட்டம் பாயும்போதும் சமூகம் காறி உமிழும்போதும் இந்தசமூகத்தில் பழியை இவர்களே ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம்.அதிகார வர்கத்தின் கடமையை நிறைவேற்றியதால் குற்றவாளிகளாக தண்டிக்கப்படலாம்.இது கீழ் நிலை ஊழியர்களின் பரிதாப நிலைமை.ஏவிவிட்டவர்கள் நிரபராதிகளாக தப்பிவிடுவார்கள்

இதற்கு எல்லாம் மக்களே பொறுப்பு.தவறான மனிதர்களை தேர்தலின்போது தேர்ந்தெடுக்கிறார்கள்.பின்னர் குஅறஐ சொல்கிறார்கள்.இத்தனை கோடி மக்களில் எத்தனையோ நல்லவர்கள் கடமை உணர்வு உள்ளவர்கள் இருக்கிறார்கள்.அவர்களை கண்டும் காணாமலும் கடந்து போகும் மக்களே குற்றவாளிகள்.

சாதி,இனம்,மதம் என கண்மூடித்தனமாக சிந்தித்து தவறான மனிதர்களை சட்டமன்றம்,பாராளுமன்றம் அனுப்பினால் விளைவுகள் இப்படித்தான் இருக்கும்.

அரசியல்வாதிகளை அரசியற்கட்சிகளை விமர்ச்சிக்கும் தகுதி எவனுக்கும் இல்லை.இந்தசெய்திகளை வைத்து பிழைப்பு நடாத்தும் ஊடகங்களும் பிரதான குற்றவாளிகள்.எவ்வளவுதான் கல்வி அறிவு பெற்றாலும் சுயநலம் அறிவுக் கண்களைமறைக்கிறது.அதனால்தான் அதிகாரிகளாலும் சிந்திக்க முடிவதில்லை.

சாதி,மதம்,இனம் கடந்து வாருங்கள்.மனித நேயத்தோடு சிந்தியுங்கள்.இல்லையேல் நாங்களே எங்களுக்கு எதிரி.

(Vijaya Baskaran)