தோழமை தினம் 19.11.2017 சுவிஸ்

கட்சித்தலைமை காரியாலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தோழமைதின செய்தி

தோழமை தினம் 19.11.2017 சுவிஸ்

அன்புக்குரிய தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்

எங்கள் நேசிப்பிற்குரிய செயலாளர் நாயகம் அமரர் தோழர் பத்மநாபாவின் பிறந்த நாளை தோழமை தினமாக 2015 ஆண்டு முதலில் நாம் அனுஷ்டித்தோம். இன்று நவம்பர் 19 அவரது 66 வது பிறந்த தினமாகும். தோழர் பத்மநாபாவின் இலட்சியக் குறிக்கோள்களை, அவர் தலைமை ஏற்றிருந்த கட்சியின் கொள்கைகளை உரத்துச் சொல்லுகின்ற இந்த தோழமை தினத்தை இவ்வருடம் சுவிஸ் தோழர்கள் அனுஷ்டிக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

· சுதந்திரம், சுயமரியாதை, சமாதானம், சமத்துவம்

சமூகநீதி, சகோதரத்துவம் ஆகியவற்றை

நிலைநாட்ட உழைப்போம்.

· கருத்து வேறுபாடுகளை கடந்து

பரஸ்பரம் நல்லெண்ணத்தை வளர்த்து

உடன்பாடுகளைக் காண்போம்.

· அரசியல் பேதங்களுக்கு அப்பால்

பொது நலன்களுக்காக ஒன்றுபடுவோம்.

· கடந்த கால வேதனைகள், சோதனைகளை மறந்து

சுபிட்சமான எதிர்காலத்தை நோக்கி

நம்பிக்கையுடன் முன்னேறுவோம்.

என இந்த நினைவுநாளில் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே தோழமை தினத்தின் கோசமாக முன்வைக்கப்பட்டது. அமரர் தோழர் பத்மநாபா அவர்கள் தனது சொல்லிலும், செயலிலும் இவற்றுக்கு வழங்கிய முக்கியத்துவத்தை நாம் அறிவோம். இந்தக் கருத்துக்கள் உதாசீனம் செய்யப்பட்டதன் விளைவுகளையும் நாட்டு மக்களும், நாமும் அனுபவித்திருக்கிறோம்.

எனவே, குறித்த கோசங்களின் பொருத்தப்பாட்டை, தேவையை நாங்கள்; விளங்கிக் கொள்வது பிரதானம்.

தோழர் பத்மநாபாவின் வழியை வெறுமனே பேச்சிலும் எழுத்திலும் பின்பற்றிவிட முடியாது. அது நடைமுறையில் பிரயோகிக்கின்ற, மக்கள் மத்தியில் செயற்படுத்திக் காட்டுகின்ற பாரிய கடமையாகும்.

கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று, கட்சியின் கொள்கைகளை முன்னெடுதத்துச் செல்வதிலும் கட்சியின் இலக்குகளுக்காக பணியாற்றுவதிலும் தன்னலமற்று செயற்பட்ட வழிகாட்டியாக தோழர் பத்மநாபா விளங்கினார். கூட்டுத் தலைமை என்பதன் பரிமாணங்களை விளங்கி, அவற்றுக்கு மதிப்பளித்து செயற்பட்டார். கட்சியின் வளர்ச்சிக்காக சக தோழர்களின் அயராத உழைப்பை கோரிநின்ற அதேவேளை கட்சியில் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் ஸ்தாபன கட்டமைப்புக்களை பேணுவதற்கும் முக்கியத்துவமளித்தார்.

தனி நபர்களின் ஆற்றல்களை, கட்சியின் வளர்ச்சியில் ஒவ்வொருவரதும் பங்களிப்பின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்டு அவர்கள் சுயாதீனமாக செயற்பட இடமளித்தார். இந்த இடைவெளியை துஸ்பிரயோகம் செய்தவர்களையும் நாம் கடந்துவந்த பாதையில் எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது.

எஸ்.ஜி என எங்கள் எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட அமரர் தோழர் பத்மநாபா அவர்களது கருத்துக்களாலும், செயல்களாலும் ஈர்க்கப்பட்ட பலர் கட்சிக்கு உள்ளேயும், கட்சிக்கு வெளியேயும், உள்ளுரிலும் உலக நாடுகளிலும் பரந்து வாழ்கிறார்கள். அதேபோன்று அவரது பெயரை சொல்லிக்கொண்டே அவர் முன்னெடுத்த இலட்சியக் குறிக்கோள்களுக்கு மாறாக சுய லாபங்களுக்காக செயற்படும் சிலரும் இல்லாமல் இல்லை. அத்தகையவர்களின் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் நாம் மயங்கிவிடக் கூடாது ஒவ்வொருவரதும் கடந்தகால, நிகழ்கால செயல்களையும் கவனத்திலெடுத்தே அவர்களின் நடவடிக்கைகள் மதிப்பிடப்பட வேண்டும்.

பத்மநாபாவின் இறப்பிற்குப் பின் ஒன்றும் சரியாய் இல்லை, ஒருவர் மீதம் நம்பிக்கையில்லை என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள் இவ்வாறு கூறுவது உண்மையில் அவரை இழிவுபடுத்துவதாகும் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஒரு தலைவன் தனது இலட்சியத்தை, கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒருவரையும் உருவாக்கவில்லை என்றால் அவர் ஒரு சிறந்த தலைவன் ஆகமாட்டார் என்பது அவர்களுக்குப் புலனாவதில்லை.

தாங்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதை நியாயப்படுத்துவதற்காக அல்லது ஸ்தாபன நடைமுறைகளுக்கு புறம்பான தமது போக்குகளுக்கு நியாயம் கற்பிப்பதற்காக தங்களுடைய குற்றங் குறைகளை மூடி மறைப்பதற்காக இந்தப் போர்வையை போர்த்திக்கொள்கிறார்கள் என்பதை தோழர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அன்பான தோழர்களே!

தோழர் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகளை கடந்துவிட்டோம். பல்வேறு நெருக்கடிகள் உயிர் அச்சுறுத்தல்களுக்க மத்தியிலும் அவரது வழித்தடத்தில் தொடர்ந்து பயணிப்பவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் நீங்கள்.

மாறுபட்ட அபிப்பிராயங்கள், குணாம்சங்கள் உள்ள பலரையம் ஒன்றிணைத்து பலம்மிக்க ஸ்தாபனத்தை கட்டியமைப்பதில் எமக்கு முன்உதாரணமாக தோழர் பத்மநாபா விளங்குகிறார். அவரது வழியில் நாம் அனைவரையும் அரவணைத்து, செயற்படுவதன் மூலமே கட்சிக்கு பலம் சேர்க்க முடியும். மக்களின் சமூக, அரசியல், பொருளாதார நலன்களை வென்றெடுக்க முடியும்.

இந்த தோழமைதினம் எமது வேலைத்திட்டங்களுக்கு மேலும் உத்வேகம் தருவதாக அமைய வேண்டும் என்று வாழ்த்தி இந்த தோழமை தினத்தை ஏற்பாடு செய்து நடாத்துவதில் முன்நின்று உழைத்த அனைத்து தோழர்களையும் பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம் .
.
தலைமைக்காரியாலயம் -யாழ்ப்பாணம்
பத்மநாபா மக்கள் முன்னணி
தமிழர் சமூக ஜனநாயக கட்சி