நவீன ஏகலைவன்கள்

(Vijaya Baskaran)

முன்னாள் வட கிழக்கு மாகாண முதல்வர் வரதராஜபெருமாள் அவர்களின் பேட்டியைப் பார்த்தேன்.உண்மையில் அவரை அரசியலிலும் நிஜவாழ்விலும் ஓரம் கட்டும் ஒரு முயற்சியாகவே உணருகிறேன்.

இன்று தமிழர் அரசியலில் செல்வாக்கும் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்தபோதும் வரதராஜபெருமாள் அவரைக் குறிவைத்து ஒரு திட்டமிட்ட சதி முயற்சியாக அந்தப் பேட்டி அமைந்துள்ளது.அந்த தொலைக்காட்சி பேட்டி காணுபவர்கள் விதண்டாவாதமான கேள்விகளையும் அதே நேரம் பேட்டியை திசை திருப்பி அவரை சிக்கலில் மாட்ட முனைவதாகவும் புரிந்துகொள்ள முடிகிறது.

இதேபோன்ற ஒரு பேட்டியை தமிழர் தேசிய கூட்டமைப்பை நோக்கி இவர்கள் நடத்துவார்களா? இப்படி சஜித்தை ஏன் ஆதரிக்கிறீர்கள் என கேட்ப்பார்களா?வரதரை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முயலும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் குற்றங்களோடு நேரடியாக சம்பந்தப்பட்ட பலர் இன்னமும் சமூகத்தில் வாழ்கின்றனர். அரசியலில் இருக்கின்றனர். ஏன் வரதரை நோக்கி மட்டும் இந்தக் கேள்விகள்?

ஏனைய அமைப்புகளை கோலைக் குற்றவாளிகளாக காட்டும் இந்த ஊடகங்கள் அரசியல்வாதிகள் புலிகள் செய்த படுகொலைகள் பற்றி ஏன் கேள்வி எழுப்புவதில்லை. புலிகள் செய்த படுகொலைகளோடு ஒப்பிடும்போது ஏனைய அமைப்பினர் செய்த கொலைகள் ஒரு வீதம் கூட இல்லை. இலங்கை இராணுவம்கூட புலிகள் அளவுக்கு தமிழ் மக்களை படுகொலை செய்யவில்லை. இதை மறுப்பவர்கள் புலிகள் செய்த கொலைகள் பற்றி கணக்கெடுக்கத் தயாரா?புலிகளின் சதிகளும் ஊடுருவல்களுமே மற்ற அமைப்பினர் நடாத்திய படுகொலைகளுக்குக் காரணம்.புலிகள் காரணமின்றி அப்பாவிகளையும் கொன்றார்கள்.

ஈ பி ஆர் எல் எப் கட்டாய இராணுவத்துக்கு பிள்ளைகளை கடத்தினார்கள். உண்மை. ஆனால் இந்திய இராணுவத்தோடு ஈ பி ஆர் எல் எப் விலகியதும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை புலிகள் விசாரித்தபின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் தாமாகவே பிள்ளைகளை புலிகளிடம் கையளித்தனர்.அதில் எத்தனைபேர் உயிருடன் வந்தார்கள். இதை எல்லாம் கேட்க ஆளில்லை. கருணா பிரிந்தபோது கிழக்கு மாகாண புலி உறுப்பினர்கள் எத்தனைபேர் கொல்லப்பட்டார்கள்.?ஏன் புலிகளால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட பிணங்களையே தோன்றி எடுத்து அந்தப் பிணங்களை வெட்டிக் கொத்திக் கிள்ளி வன்மம் தீர்த்தார்கள். இதை எந்த அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் இதுவரை கண்டு கொண்டதில்லை.

புலிகளின் ஆதரவாளர்களே புலிகளை நம்பாமல் வாழ்ந்தனர். ஏதோ ஒரு இனவெறி புலிகளை அதன் வெறியாட்டங்களை ஆதரிக்க வைத்தபோதும் அவர்களே புலிகளை நம்பவில்லை. புலி உறுப்பினர்களே புலிகளை நம்பாமல் இயக்கத்தில் இருந்தார்கள்.

வரதர் என்ற சமூக பொருளாதார அரசியல் அறிந்த ஒருவரை ஒதுக்கும் முயற்சியாகவே இந்தப் பேட்டி உள்ளது.அரசியல் போட்டி பொறாமை பல திறமைசாலிகளை ஓரம் கட்டவைக்கிறது.இது ஒரு திட்டமிட்ட சதி.

நமது மக்களுக்கான தேவைகள் என்ன என்பதை மூடி மறைத்து மரணித்துப்போன மனிதர்களின் பெயரால் தமிழர்களின் அரசியலை நகர்த்துகிறார்கள்.

யுத்தம்முடிந்து பத்து ஆண்டுகளில் வடக்கு கிழக்கே வாழும் பாமர மக்களின் வாழ்க்கைத் துயரங்களை எந்த பத்திரிகையாளர்களோ தொண்டு நிறுவனங்களோ அரசியல்வாமிகளோ வெளியே கொண்டுவரவில்லை. கண்டு கொள்ளவும் இல்லை.மாறாக முன்னாள் போராளிகளின் அவலங்களை மட்டுமே காட்டி விளம்பரம் தேடுகிறார்கள்.எத்தனையோ தேவைகள் மக்களுக்கு இருக்க முள்ளிவாய்க்கால் காணமல் போனவர்கள் என்று மக்களை முட்டாள்களாக்கும் அரசியலே தொடர்கிறது.

இந்தப் பேட்டி மகா பாரதத்தில் ஏகலைவன் கட்டை விரலை அவராகவே வெட்டிக் கொடுக்க வைத்த கதையை நினைவுக்கு கொண்டு வருகிறது.கர்ணனோடு போட்டி போட முடியாத பஞ்ச பாண்டவர்கள் அவன் பிறப்பை சாதியை சொல்லி வசைபாடி அவமானப்படுத்துயதை நினைவுகூர வைக்கிறது .

வரதர் போன்ற ஆக்கபூர்வமான சிந்தனையாளர்கள் பலரை ஏதோ பொய் காரணங்களைக் காட்டி செயற்படவிடாமல் தடுக்கிறது.இராமன் வாலியை மறைந்து நின்று கொன்றதுபோல வரதரை சதிவலையில் வீழ்த்தும் முயற்சியே இந்தப் பேட்டி.

இப்படி ஒரு பேட்டியை துணிவோடு எதிர்கொண்ட வரதராஜபெருமாளைப் பாராட்டவேண்டும்.இதேபோன்று டக்ளஸ் சித்தார்த்தன் சுரேஷ் பிரேமச்சந்திரன் மாவை சம்பந்தன் போன்றோரையும் இந்த தொலைக்காட்சி பேட்டி காணத் தயாரா?புலிகளின் கொலைகளையும் அலசத் தயாரா?

இது பேட்டி என்ற பெயரில் நடந்த ஊடக விபச்சாரம்.வரதராஜபெருமாள் ஒரு நவீன ஏகலைவன்.இவரின் திறமைகளை ஏற்க இந்த சமூகம் மறுக்கிறதென்பதே அப்பட்டமான உண்மை