நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம்! கடந்தகால அரசுகளின் தவறான பொருளாதார கோட்பாடுகளே

(கலாநிதி எம். கணேசமூர்த்தி)

‘மத்தள விமான நிலையம், மாகம்புற துறைமுகம் ஆகிய இரு முக்கிய முதலீட்டு முயற்சிகளும் இன்று வெள்ளை யானைகளாகியுள்ளன. ஆயினும் அவற்றின் மீதான கடன்களை செலுத்தியே ஆக வேண்டும்’ இலங்கைப் பொருளாதாரத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையும் பயப்பீதியும் மக்கள் மத்தியில் பல்வேறு உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பாக மக்களின் கரிசனை முன்னரைவிடக் கூடுதலாகியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. அரசியல் எல்லைகளுக்கு அப்பால் பொருளாதாரம் தொடர்பாக சாதாரண பாமர மக்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் விழிப்புணர்வு ஒரு நல்ல சமிக்​ைஞயாகவே தோன்றுகிறது.

ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் இத்தகைய விழிப்புணர்வுக்கு காரணமென்று கூறலாம். மறுபுறம் யதார்த்த நிலைமைகளை திரித்துக்கூறும் ஊடகங்கள் தத்தம் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் நிகழ்ச்சி நிரலுக்கும் அமைவாக நடுநிலை தவறி கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் நிலையையும் காணமுடிகிறது. எந்தவொரு விடயத்தையும் நடுவுநிலை தவறாமல் தமது தொழில்சார் விழுமியங்களை மீறாது மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டிய கடப்பாடு ஜனநாயகத்தின் நெற்றிக்கண் என அழைக்கப்படும் ஊடகங்களுக்கு உண்டு. ஒரு விடயத்தை முற்றிலும் சரியென வாதாடுவதோ அல்லது முற்றிலும் பிழை என வாதாடுவதோ யதார்த்த ரீதியான அணுகு முறையாக இருக்க முடியாது.

இலங்கைப் பொருளாதாரத்தில் எந்த ஒரு நெருக்கடியும் இல்லை. நேற்றும் நன்றாக இருந்தது. இன்றும் நன்றாகவே உள்ளது. நாளையும் நன்றாகவே இருக்கும் என்ற சுபவாத சிந்தனையுடன் அரசாங்கம் அணுகமுனைகிறது. இப்போது ஏற்பட்டுள்ள நாணய மாற்று வீதத் தளம்பல்நிலை நாட்டுக்கு ஒன்றும் புதிதல்ல. மாறாக தொடர்ச்சியாக காலத்திற்கு காலம் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றே வந்துள்ளன. அவற்றை கடந்த காலங்களில் இலங்கை சமாளித்து வந்துள்ளது. எனவே ‘இதுவும் கடந்து போகும்’ என்ற நம்பிக்கையில் மக்கள் கிலிகொள்ளத் தேவையில்லை. மத்திய வங்கியும் அரசாங்கமும் பிரச்சினையை வெற்றிகரமாகக் கையாண்டு வருகிறது. நாட்டின் நாளாந்த அலுவல்கள் வழமைபோலவே நடைபெறுகின்றன. நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெற்று தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவைக் களைய அரசாங்கம் ஆவணசெய்யும் என்ற நம்பிக்கையை விதைக்க முனைகிறது. அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அரசாங்கத்திடமிருந்து இவ்வாறான கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.

இதற்கு முற்றிலும் மாறாக எதிர்க்கட்சிகள் என தம்மை அழைத்துக்கொள்ளும் குழுவினர், ‘நாட்டில் எல்லாமே கெட்டுப்போய்விட்டது. நாளையே பொருளாதாரம் விழுந்துவிடும். அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களோ தீர்வுகளோ இல்லை. அது இப்போதே பதவி விலக வேண்டும். பிரதமர் பதவி விலக வேண்டும். அல்லது ஜனாதிபதி அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நாட்டை முறையாக ஆளத்தெரியாவிட்டால் செய்யக்கூடியவர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டுப் வீட்டுக்குப் போய்விட வேண்டும்’ என்றும் ‘நாங்கள் பதவிக்கு வந்தால் எல்லாவற்றுக்கும் தீர்வு காண்போம். முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியும் இணைந்தாலே நாட்டுக்கு விமோசனம் உண்டு’ என்றவாறு எரிகிற வீட்டில் பிடுங்குவது இலாபம் என்றவகையில் கருத்துக்களை வெளியிட்டு வருவதையும் ஊடக சந்திப்புகளை நடத்துவதையும் அவற்றை எதிர் நிலைப்பாட்டு ஊடகங்கள் ஊதிப்பெருப்பித்து தலைப்புச் செய்திகளாக வெளியிடுவதையும் காணமுடிகிறது.

இவ்விரு எதிரெதிர் நிலைப்பாடுகளும் சரியாக இருக்குமென்று நம்புவதற்கில்லை. தற்போதைய அரசாங்கம் இதனை ஒரு பிரச்சினையாக காட்டிக்கொள்ள விரும்பாவிட்டாலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதை மறைக்க முடியாது. உண்மையில், இலங்கையின் பொருளாதாரத்தின் பலவீனமான செயற்பாட்டிற்கு தற்போதைய அரசாங்கத்தின் இயலாத் தன்மையே காரணமென்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றதாகும். கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளின் தொடர் விளைவுகளே நிகழ்கால மேம்பாட்டிற்கோ அல்லது சீர்கேட்டிற்கோ காரணமாக அமைகின்றன.

நாட்டின் சென்மதி நிலுவைப் பிரச்சினையானது மிக நீண்டகாலமாகவே இலங்கையில் பாரிய சிக்கலாக இருந்து வருகிறது. ஏற்றுமதி வருமானங்களை விரிவாக்க முடியாத பொருளாதாரக் கட்டமைப்புக்கள் ஒருபுறம் என்றால், இறக்குமதிகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கு எதிர்பார்த்தளவு மறுபுறமும் வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்கு உள்ளே வராமை, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் வெளியேறும் நிலைமை சர்வதேச ரீதியில் ஏற்பட்டுவரும் புவிசார் அரசியல் மாற்றங்கள் என்பவற்றினால் உருவாகியுள்ள பாதகமான நிலைமைகள் என்பவற்றை ஒரு அரசாங்கத்தின் பலவீனமான செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்டதாக கொள்ளமுடியாது. மறுபுறம் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த நாள்முதல் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் ஏற்பட்ட பொருளாதார செயலாற்றத்திற்கு துணைபோயுள்ளது என்பதையும் மறுக்க முடியாது. 2015ஆம் ஆண்டின் பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது.

உண்மையில் இலங்கைப் பொருளாதாரத்தின் கட்டமைப்பு சார்ந்த பலவீனங்களுக்கு நீண்டகால வரலாறு உண்டு. தொடர்ச்சியாகவே இறக்குமதிகளில் தங்கியிருக்கும் நிலைமை ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்த போதியளவு ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டன. எனினும் முறையான திட்டமிடல், அமுல்படுத்தல், கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் பின்னூட்டல்கள் இடம்பெறாமை, அரசியல்வாதிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அமைவாகக் கொள்கைத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றமை, நிர்வாகக் கட்டமைப்பில் நிலவும் பலவீனமான நடைமுறைகள், அழுத்தக் குழுக்களின் செயற்பாடுகள், ஊழல் இலஞ்சம் போன்றவை காரணமாக அரச நிருவாக இயந்திரத்தின் பலவீனமான தன்மை போன்ற பல்வேறு அம்சங்கள் இலங்கையின் பொருளாதார செயலாற்றத்திலும் வர்த்தகக் கட்டமைப்பிலும் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. 1977இல் பொருளாதாரத்தை தாராளமயப்படுத்திய பின்னர் அதனை முறையாக முன்னெடுத்து போட்டித்தன்மை வாய்ந்த ஏற்றுமதிகளை இனங்கண்டு ஊக்குவிக்க போதியளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஏற்றுமதிகளுக்கு எதிரான ஒரு சார்பு நிலையே நாட்டில் நிலவியதாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். திறந்த பொருளாதாரக் கொள்கையானது பாதகமான ஒன்றல்ல. ஆனால் அக்கொள்கை ஊடாக நன்மைகளை அடைவதற்கான புத்திசாலித்தனத்துடன் நாம் உள்ளோமா என்பது முக்கியமான வினாவாகும்.

‘கிழக்காசியாவின் அற்புதம்’ என அழைக்கப்படும் புதிய கைத்தொழில்மய நாடுகளும் ‘பிரிக்ஸ்’ (BRICS) என அழைக்கப்படும் எழுச்சி பெற்றுவரும் நாடுகளும் தமது பொருளாதார அடைவுகளை திறந்த பொருளாதாரத்தின் ஊடாகவே அடைந்துகொண்டன. மாறாக குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டுவது போல உள்நாட்டுச் சந்தைகளை நம்பி அவை செயற்படவில்லை.

2005இன் பின்னர் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையிலான திட்டங்களே முன்னுரிமைத் திட்டங்களாக இருந்தன. மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் பெரும்பகுதி உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளை மையப்படுத்தியதாக இருந்தது. விமான நிலையம், துறைமுகம் அதிவேக நெடுஞ்சாலைகள் போன்றன அமைப்பதற்கு வழங்கப்பட்ட முன்னுரிமைகள் ஏற்றுமதித்துறைக்கு வழங்கப்படவில்லை. வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஏற்றுமதி சார் துறைகளில் ஊக்குவிக்க போதியளவு முனைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை.

கட்டடவாக்கம், நெடுஞ்சாலைக் கட்டமைப்பு, துறைமுகம், விமான நிலையம் போன்றவற்றை அமைக்க பெருமளவு நிதி வெளிநாட்டுக் கடனாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் இந்த உட்கட்டுமானங்களின் மூலம் ஏற்றுமதி செய்யக்கூடிய எதனை உருவாக்க இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடையேதும் இல்லை.

மத்தள விமான நிலையம், மாகம்புற துறைமுகம் ஆகிய இரு முக்கிய முதலீட்டு முயற்சிகளும் இன்று வெள்ளை யானைகளாகியுள்ளன. ஆயினும் அவற்றின் மீதான கடன்களை செலுத்தியே ஆக வேண்டும்.

இன்று ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்குத் தீர்வாக அரசாங்கம் மற்றுமொரு கடனை சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான முயற்சியினை மேற்கொண்டுள்ளது. இது ஒரு தற்காலிகத் தீர்வாக அமைந்தாலும் எதிர்காலத்தில் அந்தக் கடனையும் மீளச் செலுத்த வேண்டியிருக்கும்.

பொதுமக்களைப் பொறுத்தமட்டில் இறக்குமதிச் செலவின அதிகரிப்பின் காரணத்தால் பொருட்களின் விலையேற்றம் அவர்களின் வயிற்றில் அடிக்கும்போது அதிருப்தி தலைதூக்கும். நாட்டின் முதலீடுகள் வீழ்ச்சியடையும்போது வேலையின்மை அதிகரிக்கும். எனினும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள என்டபிரைஸ் ஸ்ரீலங்கா போன்ற செயற்திட்டங்கள் ஏற்பட்டுள்ள எதிர்மறைச் சூழலை ஓரளவுக்கு தணிக்க உதவக்கூடும். மறுபுறம் எதிர்வரும் வரவு செலவுத் திட்டமும் இத்தகைய புறச்சூழலை கருத்திற்கொண்டு உருவாக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருபுறம் மக்களின் அதிருப்தியை குறைக்கும் நோக்கில் சலுகைகளை வழங்குவது ஒரு சவாலாகவும் மறுபுறம் செலவுகளை ஈடுசெய்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை விரிவாக்கிக் கொள்வது மற்றொரு சவாலாகவும் இருக்கும்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வருமான வரிக்கட்டமைப்பு தனியார்துறை மற்றும் அரசதுறை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் தமது தேர்ச்சி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் உழைக்கும் பணத்தின் ஒருபகுதியை அரசு கட்டாயமாகத் திரட்டுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள அதேவேளை அவ்வாறு தரப்படும் வரிப்பணம் எதற்காக செலவிடப்படுகின்றது என்பது வினாவாகி நிற்கிறது. இது பொருளாதாரத்தை அவர்கள் குறைத்துக்கொள்ளும் நிலைக்கு இட்டுச் செல்லலாம். அத்தோடு முறைசாராத பொருளாதார நடவடிக்கைகளின் விரிவாக்கத்திற்கும் இட்டுச் செல்லலாம். வரி செலுத்தும் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படும் அதிருப்தி அரசியல் ரீதியாக எதிர்வரும் தேர்தலில் பிரதிபலிக்கக்கூடும். எனவே அடுத்துவரும் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் அவ்வளவு இலகுவான ஒன்றாக இருக்கப்போவதில்லை. பொருள் விலையேற்றம் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கும்போது வட்டி வீதங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குள் மத்திய வங்கி தள்ளப்படும். இது எதிர்கால முதலீட்டுத் தீர்மானங்களை கணிசமாக பாதிக்கலாம்.

எனவே இன்றைய சூழலில் அரசாங்கம் விரிவாக்க இறைவரிக் கொள்கையையோ விரிவாக்க பணக்கொள்கையையோ கையாள முடியாது. இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தற்காலிகமாக விதிப்பதன் மூலம் டொலர் வெளியேற்றத்தைக் குறைக்கலாம். அத்தோடு அரசாங்கம் மேற்கொண்டுவரும் செலவினங்களில் கணிசமான வெட்டுக்களை மேற்கொள்ள வேண்டி ஏற்படும்.

ஏற்றுமதிப் பன்முகப்படுத்தலுக்கான தீவிரமான முனைப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முறையான நிகழ்ச்சி நிரலுடன் கூடிய செயலாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட (Performance based) ஏற்றுமதி நிகழ்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக என்டபிரைஸ் ஸ்ரீலங்கா செயற்திட்டம் ஏற்றுமதி ஊக்குவிப்போடு நேரடியாகத் தொடர்புபடுத்தப்படல் வேண்டும்.

“மெகா” செயற்திட்டங்களில் நிதியினை முடக்குவதை தவிர்த்து சிறிய நடுத்தர முயற்சிகளின் ஊக்குவிப்பு ஊடாக ஏற்றுமதிப் பன்முகப்படுத்தலை முயற்சிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.