எங்கள் வலியின் உணர்வுகளை வார்த்தைகளால் புரியவைக்க முடியாது

தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பின் கீழோ புனர்வாழ்வளித்தோ விடுதலை செய்ய நடவடிக்ைக எடுக்குமாறு கொழும்பு மகசீன் சிறைச்சாலை கைதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உருக்கமான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். வலிகளையும் சுமைகளையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதென்று தெரிவித்துள்ள அவர்கள், தம்மை உறவுகளோடு சேர்த்து வைப்பதற்கு நடவடிக்ைக எடுத்தால், வரலாறு ஜனாதிபதியை வாழ்த்தும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதியொன்று தினகரன் வாரமஞ்சரிக்கும் கிடைத்துள்ளது. அக்கடிதத்தின் முழுமையான விபரங்களை கீழே அப்படியே தருகிறோம்.

தமிழ் தேசிய மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நீங்கள் அரச தலைவராகி மூன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ் மக்களின் அடிப்படை மற்றும் அன்றாடதேவைகள் யாவும் உங்களின் பதவிக்காலத்தில் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும்.

சில நிறைவேறியும் இன்றும் சில நிறைவேறாமலும் உள்ளதை யாவரும் அறிவோம். எல்லாவற்றுக்கும் உங்கள் மூலம் நீதி வேண்டும், தீர்வு வேண்டும்.

“யுத்தம் முடிவுற்றும் ஒரு தசாப்தம் அண்மித்துள்ளபோதும் அதனோடு தொடர்புடையவர்கள் எனக் காரணம் காட்டி நூற்றுப்பத்துக்கும் குறைவானோர் இன்னமும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 25-, 10 ஆண்டுகள் வரை இவ் விதம் நாம் சிறையில் வாடுகின்றோம். பதின்ம வயதில் கைதாகி இளமையைச் சிறையில் தொலைத்தவர்களும், திருமணமாகி மனைவி பிள்ளைகளைப் பிரிந்தவர்களும் நோயாலும் சிறைக்குள் மரணிப்பவர்களாக நாம் உள்ளோம். பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கொடூரமான பக்கத்துக்கு சிறந்த ஒருசான்று நாங்களே.

மிக நீண்டகால சிறையிருப்பால் நாம் இழந்தவைகள் ஏராளம் நாம் அனுபவிக்கும் உடல், உள, உயிர் வலியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அனுபவித்தால் மட்டுமே இதை உணர்ந்துகொள்ள முடியும். நாம் வஞ்சிக்கப்படுகின்றோமா? அரசியல் சதுரங்கத்தில் நாம் பகடைக்காய்களா? எம்மோடு சேர்த்து எமது குடும்ப உறவுகளும் தண்டிக்கப்படுவதை யாராலும் உணர முடியவில்லையா? கடந்த மூன்றரைஆண்டுகாலத்தில் போலி அரசியல் வாக்குறுதிகளால் பல தடவை நாம் ஏமாற்றப்பட்டோம். இருப்பினும் குடும்பங்களுடன் மீள் இணையும் அந்த நாளுக்காக மீண்டும் மீண்டும் ஏங்குகின்றோம்.

எமது விடுதலை தொடர்பில் சாதகமானதொரு நிலைப்பாட்டிலேயே நீங்கள் இருக்கின்றீர்கள் என்பது எமது நம்பிக்கை இவ்விடத்தில் தங்களால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களை நினைவுபடுத்திக் கொள்கின்றோம். இன முரண்பாட்டுத் தீர்வுக்கு எடுத்துக்காட்டாக எஞ்சியுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் புனர்வாழ்வுஅளித்தேனும் உறவுகளுடன் சேர்ப்பீர்களானால் நிச்சயம் வரலாறு உங்களை வாழ்த்தும்.