நாளை என்ன நடக்கும்…. நடக்க வேண்டும்…

மாற்றம் ஒன்றோ மாறாது என்பது மாற்றம் எதனை நோக்கியதாக அமைய வேண்டும் அது ஒரு பிற்போக்குத் தனமான பிழையான நிலையில் இருந்து முற்போக்குத் தனமான சரியான மக்கள் நலன் சார்ந்த செயற்பாட்டை நோக்கியதாக அமைய வேண்டும் என்பதாகவே பொருள்பட வேண்டும்.

பொருளாதார சில்கல் இலங்கையில் ஏற்பட்ட போது இலங்கை அரசுக்கு எதிராக உருவான போராட்டங்கள் பதவி விலகல்களை கோரி விடாப்பிடியாக தொடர்ந்ததன் விளைவுதான் முதலில் பிரதமந்திரி மஹிந்தாவின் பதவி விலகல்… ஓட்டம்….

அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட ரணிலின் தெரிவு மாற்றத்தை கொண்டுவருவதற்கு பதிலாக இனியும் இது வரை இருந்தவற்றை கட்டிக் காப்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சிதான்.

அது ஆரம்பத்தில் அல்ல அதற்கு முதலே தெரிந்த விடயம்தான். ரணிலின் கடந்த கால அரசியல் வரலாறும் ராஜபக்ஷகளின் செயற்பாடுகளும் இவர்களுக்கிடையோன உறவுகளும் இதனை எமக்கு உணர்த்தி இருந்தவைதான்.

அதனால்தான் போராட்டக்கார்கள் ரணிலின் தெரிவை உடனடியாக நிராகரித்தனர். அதற்கு மக்கள் ஆதரவும் கொடுத்தனர்… கொடுக்கின்றனர்….

எப்படியாவது ரணிலை வைத்துக் கொண்டு எஞ்சி இருக்கும் காலத்தை சிறைக்குள் இல்லாமல் ஜனாதிபதி மாளிகையிற்குள் கழித்துவிடலாம் என்ற கனவு தொடர்ந்த போராட்டத்தால் மாலைதீவு சிங்கப்பூர் என்று முன்னாள் ஜனாதிபதியை விரட்ட அந்த விரட்டலுக்கான தங்கு இடங்களை ஒழுங்கு செய்தவரே ரணில்தான் என்பது அப்பட்டமாக வெளியே தெரிந்தும்விட்டது.

இறுதியில் சிறையில் அல்ல…? வெளியில் என்ற நிலையில் நாடு திரும்ப வேண்டிய சூழலில் நாடு திரும்பினால் சிறையிற்கு செல்லாதமல் தவிர்பதற்கு நல்லாட்சியில் வழங்கிய அதே செயற்பாடுகளை வழங்குவதற்கு ரணில் அல்லது டளஸ்தான் சரியானவர்கள் என்ற தீர்மானத்தின் அடிப்படையிலான் செயற்பாடுகளும் தொடங்கிவிட்டன.

அதிலும் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போல் ஆட்சி மாற்றம் போல் காட்டுவதற்கான ரணில் ஐ அதிகம் முன்லைப்படுத்தும் செயற்பாட்டின் சூட்சமம் இதுதான்.

இதனை மேற்குலகமும் அதிகம் வரவேற்கும் என்பது இந்த மக்கள் விரோத அரசியல்வாதிகளுக்கு தெரியும்.

தற்போது ரணிலை அதிகம் தெரிவு செய்வதற்கே பாராளுமன்றக் கதிரைகள் அதிகம் விரும்பும். இந்த 200 சொச்ச கதிரைகளில் எத்தனை கதிரைகள் உழுத்துப் பொகாதவை என்றால் ஒருவரைக் கூட காட்ட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

இதுவரை இருந்த முறமையை… கட்டமைப்பை இனியும் தொடர்ந்து அரச வாகனம் அரச பங்களா இலவசப் பயணம் கொத்தராத்து பண மோசடி என்று தொடர்வதை அவர்கள் இலகுவில் விட விரும்பமாட்டார்கள்.

இதில் இந்த 200 சொச்சங்களுளிடையே அதிகம் வேறுபாடுகள் இல்லை.

ஒருவர் இருவர் என்று இங்கொன்றும் அங்கொன்றும் யாராவது இருந்தாலும் இவர்கள் தீர்மானங்கள் எடுப்பவர்களாகவும் மாற்றத்தைக் கொண்டு வருபவர்களாகவும் செயற்படுவதற்கு பாராளுமன்ற கை உயர்த்தல் இரகசிய வாக்கெடுப்பு ஜனநாயகம் உதவப் போவது இல்லை.

இருப்பவர்களில் அனுர குமார திசநாயக்கா ஓரளவிற்கு விமர்சனங்களிடையேயும் சரியானவராக தோன்றினாலும் மேற்கும், உள்ளுர் தேசிய முதலாளிகளும் இந்த இடத்திற்கு அவரை வர விடாமல் தடுப்பதில் பாரம்பரிய இடதுகளுடன் இணைந்தும் செயற்படுவர்.

எனவே தற்போதைய பாராளுமன்ற கை உயர்தல்களாலும், இரகசிய வாக்கெடுப்பாலும் ஏற்படுத்த முடியாத பிழையான கட்டமைப்புகளை, மக்களுக்கான முன்னெற்றகரமான மாற்றத்தை உருவாக்க மக்களால்தான் முடியும்.

அதற்கு அமைப்பும் வேண்டும்… போராட்டமும் வேண்டும்… போராடட்க் குழுவும் வேண்டும். அதனை நோக்கி நாம் நகர வேண்டும்.

அதனை நோக்கி நகர்வதற்கான சிறிய பொறிகளை நாம் தற்போது காண்கின்றோம்.

இந்த மக்களுக்கான அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவதில் மக்கள் தோற்றுவிட்டால் கைதுகளும் சிறையில் அடைப்புக்களும் பட்டினிச் சாவிற்கான வாழ்வும் தொடரத்தான் போகும்…

எனவே மக்களே தீர்மானியுங்கள் இந்த 200 சொச்சத்தால் ஏதும் ஆகப் போவது இல்லை. அது தற்காலிக தீர்வாக இருந்தாலும்….!

இதற்கு அப்பால் தற்காலிகலிகமாக ஆட்சிப் பொறுப்பை ஒரு அமைப்பிடம் ஒப்படைத்து விலகிக் கொள்வதே தற்போதைய பாராளுமன்றவாதிகளின் செயற்பாடாக இருக்க வேண்டும்.

அன்றேல் இருக்கும் நிலமையில் எரியும் மக்கள் கோவத்தில் கட்டியிருக்கும் கோவணமும் காணமல்தான் போகும் கவனம் ரணில் விக்ரசிங்க.

இருப்பவர்களிலே அதிகம் மோசமான ஆள் இவர்தான்.

இவருக்கு இங்காலையும் ஆதரவு அங்காலையும் ஆதரவு ஆனால் மக்களிடம் ஆதரவு இல்லை.