பசுமை நிறைந்த சம்பூர் மண் சுடுகாடாக மாறப் போகிறதா?

திருகோணமலை சம்பூரில் 500 மெகாவாட்ஸ் அனல் மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தினை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளதன் மூலம் இராஜதந்திர உறவுகளுக்கும் சுற்றாடல் பாதுகாப்புக்கும் இடையே நாடு ஊசலாட்டம் கண்டுள்ளது. சுற்றாடல் பாதுகாப்பு மீது அதீத அக்கறை கொண்டுள்ள இந்த அரசாங்கம், சம்பூர் அனல் மின் நிலையம் விடயத்தில் நுனிப்புல் மேய்வது போல் சுற்றாடல் தாக்கம் பற்றிய மதிப்பீட்டு அறிக்கை தயாரித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் 500 மெகாவாட்ஸ் அனல் மின்நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கடந்த அரசாங்கத்தின் போது கைச்சாத்திடப்பட்டது. அதற்கு சில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சூழலியலாளர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். புதிய அரசாங்கத்திலாவது இதற்கு தீர்வு கிடைக்குமென எதிர்பார்த்திருந்தவர்களுக்கு தொடர்ந்தும் ஏமாற்றமே கிடைத்துள்ளது.

வளர்ச்சி அடைந்து வரும் நாடு என்ற வகையில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய சந்தை வாய்ப்பினைக் கொண்டுள்ள சீனா மற்றும் இந்தியாவில் தங்கியிருப்பது தவிர்க்க முடியாதது ஆகும். இத்தனைக்கும் மத்தியில் சீனாவுடனான ஒப்பந்தத்தையும் மீறி, சுற்றாடல் தாக்கத்துக்கான மதிப்பீட்டு அறிக்கையில் திருப்தி இல்லாமையை காரணம் காட்டி புதிய அரசாங்கம் கொழும்பு துறைமுக நகர செயற்திட்டத்தை இடைநிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள சம்பூர் அனல் மின் நிலையம் செயற்திட்ட விடயத்தில் புதிய அரசாங்கம் பாராமுகமாக இருப்பது அதன் மீது இந்தியா செலுத்தி வரும் ஆதிக்கத்தையும் அழுத்தத்தையும் எமக்கு உணர்த்துகின்றது.

சம்பூர் அனல் மின் நிலையத்தினை 2017 ஆம் ஆண்டுக்குள் ஆரம்பிக்கா விட்டால் நாடு பாரிய மின்சார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடுமென மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்கள் அமைச்சு கூறி வருகிறது. மின்சார நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் தேசிய மின்சக்தி நிறுவனமும் அனல் மின் நிலையத்தை நிறுவுவதற்கான பணிகளை மும்முரப்படுத்தி வருகின்றன.

இதற்கிடையே உலகமே அனல் மின் நிலையத்தை ஓரம் கட்ட ஆரம்பித்திருக்கும் நிலையில் இலங்கையில் மீண்டுமொரு அனல் மின் நிலையத்தை புதிதாக ஆரம்பிக்க எடுத்திருக்கும் நடவடிக்கை நாட்டிற்கு பெரும் சாபக்கேடு என சூழலியலாளர்கள் ஒருபுறம் தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று உலக நாடுகளுக்கே பெரும் சவாலான விடயமாக காலநிலை மாற்றம் உருவாகியுள்ளது. நிலக்கரி காலநிலை மாற்றத்துடன் மிக நெருங்கிய தொடர்பு உடைய மூலப் பொருளாகும். சிறிய தீவு என்ற ரீதியில் இலங்கையில் காலநிலை மாற்றம் செல்வாக்கு செலுத்தி வரும் நிலையில் நாம் அனல் மின் நிலையத்தை கைவிட்டு சுற்றாடலுக்கு சேதத்தை விளைவிக்காத இயற்கை மூலங்களிலிருந்து மின்சாரத்தை பிறப்பிக்க வேண்டும் என்பதே சூழலியலாளர்களின் உறுதியான நிலைப்பாடு ஆகும்.

சம்பூர் குடிமனைகள் அதிகமாக உள்ள பிரதேசம் ஆகும். குறிப்பாக இது தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் இடம் என்றும் கூறலாம். மக்களின் காணிகளிலேயே மின்சார உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட இருப்பதனால் காணிப் பிரச்சினையும் ஒருபுறம் நாட்டிற்குள் அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

மறுபுறம் சம்பூர் கடல் வளம் நிறைந்த பிரதேசமாகும். இலங்கைக்கே உரிய தனித்துவமான கடல் தாவரங்கள், மீனினங்கள் இங்கு உள்ளன. பல அருகி வரும் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இடமாகவும் இது அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் அனல் மின் நிலையத்தினை நிறுவுவதன் விளைவாக நிலம், நீர், வளி என்பன மாசடைவதுடன் இது மக்களுக்கும் தாவரங்களுக்கும் ஏனைய விலங்கினங்களுக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

உள்நாட்டுப் பிரச்சினை மற்றும் இராஜதந்திர உறவுகளில் குழப்பம் ஏற்பட்டாலும் அவை என்றாவது ஒருநாள் சீர் செய்யப்படக்கூடியவை. ஆனால் சுற்றாடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் அழிவுகளும் ஒருதடவை இழந்தால் பின்னர் மீளப்பெற முடியாது என்பது அனைவரும் அறிந்ததேயாகும்.

ஏற்கனவே நுரைச்சோலை அனல் மின் நிலையம் காரணமாக பாரிய சுற்றாடல் மாசுபடுதலுக்கு நாடு முகம்கொடுத்துள்ளதுடன் அப்பகுதி வாழ் மக்கள் புகை, துர்நாற்றம் போன்ற சுகாதார சீர்கேடுகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை நாட்டிற்கு மிகுந்த மோசமான அனுபவத்தை அளித்துள்ளது.

உலகின் வெப்ப நிலை 2.7 பாகை செல்சியஸிலிருந்து 3.8 பாகை செல்சியஸாக அதிகரிக்கலாமென ஐயம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பெரிஸ் பிரகடனத்தின் பின்னர் உலக நாடுகள் அனல் மின்நிலையம் குறித்து விழிப்படைய ஆரம்பித்துள்ளன. 2050 ஆம் ஆண்டுடன் சீனா அனல் மின் நிலையத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது. இந்தியா அனல் மின்நிலையம் தொடர்பான தனது செயற்பாடுகளை பெருமளவில் குறைந்து வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்திய அரசாங்கம் தனது மூலோபாய அணுகுமுறையாக இலங்கையின் திருகோணமலையில் கடல் வளமும் உயிர் பல் வகைமையும் நிறைந்த சம்பூரில் தனது சுய தேவைக்காக அனல் மின் நிலையமொன்றை நிறுவுவது எந்த வகையில் நியாயமாகும் என்ற கேள்விக்கு நாம் விடை தேட வேண்டியுள்ளது.

சம்பூர் அனல் மின் நிலையத்தில் கையாளப்படும் தொழில்நுட்பமானது நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் கையாளப்படும் முறையிலும் முற்றிலும் மாறுபட்டது.

சம்பூர் அனல் மின் நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயன்முறைகளின்படி அனல் மின் நிலையத்திற்கூடாக மின் பிறப்பாக்கப்படும் போது வெப்பமடைந்த இயந்திரங்களை குளிர்ச்சிப்படுத்துவதற்காக திருகோணமலை களப்பிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் நீரானது சாதாரண வெப்பநிலையிலும் 07 பாகை செல்சியஸ் கூடுதல் வெப்பத்துடன் நேரடியாக கடலில் விடுவிக்கப்படவுள்ளது.

கடலில் இதுபோன்ற சுடுநீர் கலக்கப்படுவதனால் கடலின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதுடன் அதில் வாழும் உயிரினங்களும் தாவரங்களும் அழியும் அபாயம் ஏற்படும்.

இயந்திரங்களை குளிர்ச்சி செய்வதற்காக களப்பு அல்லது கடல் நீர் உள்வாங்கப்படும்போது பெரும் எண்ணிக்கையான சிறிய மீன் வகை, சிப்பிகள், மீன் முட்டைகள் என்பன இயந்திரத்துக்குள் சென்று அழிவடையக் கூடும்.

கடல் வாழ் உயிரினங்கள் அதிக உணர் திறன் கூடியவை என்பதன் காரணமாக சூடான நீரின் கலப்படத்தால் அழிவடையலாம் அல்லது மீண்டும் அதே இடத்துக்கு வராமல் விடலாம் என இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக விலங்கியல் திணைக்கள பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி சம்பூர் கடல் பிரதேசத்திற்கு அதிகமாக வரும் Blue Whale, Bottle Nosed Dolphin, Bryde’s Whale, False Killer Whde, Long – Snouted Sperm Whale, Striped Dolphin உள்ளிட்ட 13 வகையான திமிங்கிலங்களும் டொல்பின்களும் சம்பூர் அனல் மின்நிலையம் காரணமாக பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.

இவை மீண்டும் அப்பிரதேசம் நோக்கி வராமல் விடுவதன் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பின்னடைவதற்கான சூழ்நிலையை இது உருவாக்கும்.

மேலும் இந்த சூடான நீருடன் சேர்ந்து கந்தகவீரொட்சைட்டும் கடலில் விடுவிக்கப்படுவதனால் கடல் நீ்ர் அமிலமாகும்.

இதனால் மீன்கள் உயிர்வாழ முடியாத நிலை உருவாகும். கடல் தாவரங்களும் முருகைக் கற்களும் அழிவடையும்.

அத்துடன் 05 வகையான கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்து முட்டை இடுவதற்குரிய தகுந்த சூழலை குறித்த காணியின் கடல் பிரதேசம் கொண்டுள்ளதால் Loggerhead (Caretta Caretta), Green turtle (Chelonia Mydas), Olive Ridley (Lepidochelys Olivacea), Leatherback (Dermochelys Coriacea) மற்றும் Hawksbill turtle (Eretmochelys imbricate) ஆகிய ஆமை இனங்களின் இனப்பெருக்கம் பாதிப்படையுமெனவும் ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சம்பூர் அனல் மின்நிலையம் நிர்மாணிப்பதன் மூலம் நத்தைகள், வண்ணத்துப் பூச்சிகள், தும்பி வகைகள், நன்னீர் மீன்கள், தவளைகள், ஊர்வன, பறவைகள், முலையூட்டிகளென 285 வகையான உயிரினங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவுள்ளன.

ஊர்வனவை எடுத்துக் கொண்டால் இலங்கைக்கு மட்டுமே உரிய 14 வகை ஊர்வன இதனால் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. இவை 14 குடும்பங்களைச் சேர்ந்தவை. இலங்கையிலுள்ள மொத்த ஊர்வனவற்றில் 14 சதவீதத்தை இது குறிப்பதாகவும் விலங்கியல் பேராசிரியர்கள் கூறுகின்றனர். முதலைகள் உள்ளிட்ட மேற்படி ஊர்வன முட்டை இட்டு தனது இனத்தை பெருக்குவதற்காக கிழக்கு கரையோரத்தையே பெரிதும் நாடுவதனால் இவை பாரிய அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

அனல் மின் நிலையத்துக்காக ஏனைய நீர் நிலையங்களிலிருந்து நீர் எடுக்கப்படும் கட்டத்தில் நிலக்கீழ் நீர் அமிலம் அடைய வாய்ப்புண்டு. இதனால் உள்நாட்டு பறவைகளும் வெளிநாட்டு பறவைகளும் இப்பிரதேசம் நோக்கி வருவதனை தவிர்த்துக் கொள்ளும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கடற்கரையோர தாவரங்கள் நிர்மாணப்பணிகளுக்காக அழிக்கப்படுவதனால் கடலரிப்பு இடம்பெற வாய்ப்புண்டு.

யானைகள் அதிகளவில் வந்து செல்லும் இடமாதலால் இப்பிரதேசத்தில் யானைக்கும் மனிதர்களுக்குமிடையே முறுகல் நிலை உருவாகலாம்.

எனவே சம்பூர் அனல் மின் நிலையத்துக்கு சூழலியலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் உள்ளிட்ட பல சுற்றாடல் அமைப்புக்கள் அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பினையும் மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.

நாட்டு மக்கள் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் சிறந்த பொருளாதார பெறுபேறுகளையும் அனுபவிக்க ஆரோக்கியமாகவும் சுகாதாரமான சுற்றாடலிலும் வாழ்வது மிக அவசியமாகும்.

எனவே இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளுக்காக நாட்டின் சுற்றாடலை பணயம் வைக்காது என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருப்போம்.

(லக்ஷ்மி பரசுராமன்)