புதிய வழியில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம், அரசியல் அரங்கில் பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உருக்கினால் தயாரிக்கப்பட்ட இந்த வீடுகள், வடக்கிலுள்ள காலநிலைக்கும் மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்றதல்ல என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாணசபையின் வாதமாக இருக்கிறது.

அதேவேளை, இந்த திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றி முடிப்பது என்பதில், புனர்வாழ்வு, மீள்குயேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தீவிர ஆர்வத்தைக் காட்டி வருகிறார். இந்த விடயத்தில், இரண்டு தரப்புகளுக்கும் இடையே அறிக்கைப் போர்களும் கடிதப் போர்களும் நடக்கின்றன. ஊடகங்களிலும், இருதரப்பும் தமது தரப்புக் கருத்தை நியாயப்படுத்தி வருகின்றன. இந்த விடயத்தில், ஐ.தே.க அரசாங்கத்துக்கு கூடுதல் பங்கு இருந்தாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்க முக்கியஸ்தர்கள், இந்த மோதலைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் போல நடந்து கொள்கின்றனர்.

அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் சுவாமிநாதன் தவிர்ந்த வேறெவரும், இந்த வீட்டுத்திட்டம் பற்றிப் பேசுவதும் இல்லை, இதற்கு எதிராகத் தெரிவிக்கப்படும் எதிர்ப்புகளுக்குப் பதிலளிப்பதுமில்லை. சுவாமிநாதனுக்கும், வடக்கு மாகாணசபை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான தனிப்பட்ட மோதல் போன்று, இந்த விவகாரம் திட்டமிட்டு மாற்றப்பட்டிருக்கிறது. 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம், அதுவும், ஒரு வீட்டின் பெறுமதி 21 இலட்சம் ரூபாய், இதற்கான மொத்த செலவினம் 1 பில்லியன் டொலர், இப்படிப்பட்ட பாரியதொரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தில் உள்ள அனைவருக்கும் பங்கு இருக்கிறது. ஆனால், மிகவும் சாதுரியமான வகையில், இந்த விவகாரத்தை தமிழ் அமைச்சருக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான மோதல் போன்று மாற்றி விட்டிருக்கிறது அரசாங்கத் தரப்பு.

வடக்கில், காலூன்ற முனையும், ஐ.தே.கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில், உள்ளூர ஒரு நிழல் யுத்தம் நடப்பது உண்மை. இந்த வீட்டுத் திட்டத்தை, ஐ.தே.க தனது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி வருகிறது என்பதும் உண்மை. அதனால் தான், இந்த வீட்டுத் திட்டத்துக்கான விண்ணப்பப் படிவங்கள், பெற்றோல் நிலையங்களிலும் வேறு இடங்களிலும் வைத்து வழங்கப்பட்டன என்பதை மறந்து விட முடியாது. எனினும், பின்னர் பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பங்களைக் கோரி, அதற்குத் தகுதியானவர்களையும் அரசாங்கம் அவசர அவசரமாகத் தெரிவு செய்து விட்டது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவசரமாக வீடுகள் தேவைப்படுகின்றன என்பது உண்மையேயாயினும், அவர்களின் நீண்டகாலத் தேவையை ஈடுசெய்யக் கூடியதாக இருக்க வேண்டும் என்பபதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் 65 ஆயிரம் உருக்கு வீட்டுத் திட்டம், அத்தகைய, நீண்டகாலத் தேவையைக் கருத்தில் கொண்டதாகவும் இல்லை, மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டதாகவும் இல்லை. மக்களின் நலன் என்பது, வெறுமனே, குடிசைகளிலும் கூடாரங்களிலும் இருப்பவர்களை, உருக்கு வீட்டில் குடியமர்த்தி, மின்விசிறிகள், எரிவாயு அடுப்புகள், இணைய வசதிகளைக் கொடுத்து விடுவது மட்டும் அல்ல. அதற்கும் அப்பால், அந்த வீட்டில் வசிக்கப்போகும் மக்களின் சுகாதார நிலை எப்படி இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலகளாவிய ரீதியாக, காலநிலை மாறிவருகிறது. ஒருகாலமும் இல்லாத வெப்பம், இந்த ஆண்டில் அனலாக அடிக்கிறது. அதிலும் வடக்கில் உள்ள மக்களுக்கு, வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. உருக்கு வீடுகள், வெப்பத்தை எந்தளவுக்குத் தாங்கிக் கொள்ளும் திறன் படைத்தவை என்பதை சாதாரணமாக எந்த மக்களும் உணர்ந்து கொள்வார்கள். வெப்பத்தை உள்ளீர்த்துக் கொள்ளும் சில வசதிகள் செய்யப்பட்டாலும் கூட, அதன் மறைமுகமான பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது. அஸ்பெட்டஸ் கூரைத் தகடுகளை பல நாடுகள் இப்போது தடை செய்திருக்கின்றன. காரணம், அவை வெப்பத்தை அதிகளவில் உள்ளே விடுவதால், பாதிப்பு ஏற்படுவதாகவும் புற்றுநோய்க்கான காரணியாக அமைவதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது.

இதுபற்றிய உண்மை தெரியாமல், இலங்கையிலுள்ள ஏராளமான வீடுகளில் இன்னமும் அஸ்பெட்டஸ் கூரைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதுபோலத் தான், உருக்கு வீடுகளின் பாதிப்புகள் உடனே வெளியே தெரியவரப் போவதில்லை. அதன் தாக்கம், இன்னும் ஐந்தோ பத்தோ வருடங்களின் பின்னர் தான் தெரியக்கூடும், சில வேளைகளில் அடுத்தடுத்த தலைமுறைகளைக் கூட நாசமாக்கி விடலாம்.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்த உருக்கு வீடுகள் இருக்கின்றன. ஆனால் அவை, அதிகம் குளிரான தேசங்கள் என்பதால், அதன் பாதிப்புக் குறைவாக இருக்கும். ஆனால் இலங்கையில், அதுவும் வடக்கு, கிழக்கில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்ற சூழலில், இந்த வீடுகளை அமைப்பது பொருத்தமானதா என்று ஆராய வேண்டியிருக்கிறது.

எந்த அடிப்படை ஆய்வுகளும் நடத்தப்படாமல், நிபுணர்களுடன் கலந்தாலோசிக்காமல் இதுபற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டு, திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு வந்திருக்கிறது அரசாங்கம். இந்தத் திட்டம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட கட்டடக்ககலை நிபுணர்கள், பொறியியலாளர்கள் பலரும், இவை 30 ஆண்டுகளுக்குக் கூடத் தாக்குப்பிடிக்காது என்று கூறியிருக்கின்றனர். அதற்குப் பின்னர், இந்த வீடுகளில் வசிக்கும் மக்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் திட்டமிடுகிறது?

இந்த திட்டத்தை லக்ஷ்மி மிட்டலின் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துக்கு கொடுத்த விடயத்திலும் வெளிப்படைத் தன்மையில்லை. இதுபற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு, அமைச்சர் சுவாமிநாதன் பொறுமையாகப் பதிலளிப்பதற்குப் பதிலாக மறுதரப்பின் மீது எரிந்து விழுகிறார். இந்த திட்டத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக செய்திகள் வெளியான போது, ஊழல் செய்வதற்கு தனக்குத் தேவையில்லை என்றும், தனக்கு மூதாதையர்கள் போதிய செல்வத்தை தேடித் தந்திருப்பதாகவும் தானும் சட்டத்தொழில் மூலம் தேவையான பணத்தைச் சம்பாதித்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியதும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதியதும் இவருக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஏற்கெனவே ஒரு சந்தர்ப்பத்தில், இந்த திட்டம் பற்றிக் கருத்து கூறிய போது, சுவாமிநாதன் தனது நெருங்கிய நண்பர் என்றும் அவர் தவறு செய்திருப்பதாக கூறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், விக்னேஸ்வரனுக்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்தில், வடக்கு மாகாணசபை மீது சுவாமிநாதன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் விக்னேஸ்வரனுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

வடக்கு மாகாணசபை மக்களுக்காக எதையும் செய்யவில்லை, மத்திய அரசாங்கம் கொடுத்த நிதியை உரியவாறு பயன்படுத்தாமல் வீணடித்திருக்கிறது, மத்திய அரசாங்கத்தின் திட்டங்களைக் குழப்புகிறது, மக்களின் நலனில் அக்கறை காட்டாமல், பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ள முனைகிறார்கள், பாதிக்கப்பட்ட மக்கள் எல்லா வசதிகளும் உள்ள ஒரு வீட்டை பெறுவதை இவர்கள் விரும்பவில்லை, என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமைச்சர் சுவாமிநாதன் சுமத்தியிருந்தார்.

இந்தப் பதிலைப் பார்த்த போது, கடந்த ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் ஏற்பட்ட நிழல் போரின் தொடர்ச்சியாகத் தான் கருத தோன்றுகிறது.

அதாவது வடக்கு மாகாணசபைக்கு எதிரான நிழல் போர் மிகவும் சூட்சுமமான முறையில் கைமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பிரதமர் இந்த விடயத்தை கையாண்டால், அது நல்லிணக்கத்துக்கு விரோதமான செயலாக பார்க்கப்படும், வெளிநாடுகளும் அதனை விரும்பாது. அதனால் இப்போது தன்கையை வைத்தே தன் கண்ணைக் குத்திக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. வடக்கு, கிழக்கிலுள்ள மக்களுக்கு வீடுகள் தேவை, இதனை அவசரமாக நிறைவேற்ற வேண்டியது அவசியம், இந்தச் சந்தரப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மூன்றாவது தரப்பு இலாபமடைவதற்குத் தான் அரசாங்கம் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இதுபற்றி கேள்வி எழுப்பினால், வடக்கு மாகாணசபையையும் கூட்டமைப்பையும், வைக்கோல் பட்டடை நாய்கள் போன்று விமர்சிக்கத் துணிந்திருக்கிறார் அமைச்சர் சுவாமிநாதன். வடக்கு மாகாணசபை ஒன்று இருக்கும் போது, அதனுடன் கலந்தாலோசிக்காமல் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைந்த அரசாங்கம், அதுபற்றி கேள்விகள் எழுப்பப்படும் போது மட்டும், விசனம் கொள்வது வேடிக்கை. இத்தகைய கேள்விகள் எழாத வகையில், திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்னரே கலந்தாலோசித்திருக்கலாம். ஆனால், அப்படிக் கலந்தாலோசித்தால், அதற்கு வடக்கு மாகாணசபை எதிர்ப்புத் தெரிவிக்கும் என்பதை உணர்ந்தும், அரசியல் இலாபம் தேடும் நோக்கிலும் தான் அவசர அவசரமாக இந்த திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் காட்டும் அதீத ஆர்வத்தின் பின்னர், பெரும் ஆதாயம் ஒன்று இருப்பதாகவே சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஊழலற்ற ஆட்சியைத் தருவதாக மக்களை நம்பவைத்த தற்போதைய அரசாங்கம், வெளிப்படைத்தன்மையற்ற நடவடிக்கைகளின் மூலம் தனது கைகளிலும் கறைகளை பூசிக்கொள்ளத் தயாராகிறது என்பதையே இந்த விவகாரம் எடுத்துக் காட்டுகிறது.
(கே. சஞ்சயன்)