பஞ்சாப் வங்கி ஊழல்: பா.ஜ.கவின் பிரசார ஆயுதம் பறி போகிறதா?

(எம். காசிநாதன்)
‘பஞ்சாப் தேசிய வங்கி’ மோசடி, இந்திய வங்கிகளின் அத்தியாயத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு எதிராக, தங்கள் தாக்குதலைத் தொடுக்க, எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான ஆயுதமாக, பஞ்சாப் வங்கி ஊழல் அமைந்திருக்கிறது. ‘லெட்டர் ஒப் அன்டர்டேங்கிங்கை’ பயன்படுத்தி, 110,400 மில்லியன் ரூபாயை அபகரித்துள்ள வைரவியாபாரி நிராவ் மோடி, பிரதமர் நரேந்திர மோடிக்குப் பெரிய தலைவலியைக் கொடுத்திருக்கிறார்.

இந்திய விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ, அமுலாக்கத்துறை அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டு நிராவ் மோடி மீதும், பஞ்சாப் தேசிய வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்தாலும், தலைமறைவாகி விட்ட நிராவ் மோடி, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க, ஒரு வருடமே இருக்கின்ற நிலையில், பாரதிய ஜனதா அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சோதனையை ஏற்படுத்தி விட்டார் என்பதே, இன்றைய அரசியல் சூழ்நிலையாகும்.

110,400 மில்லியன் ரூபாய் ஊழல், காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே தொடங்கியது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், நான்கு வருட பா.ஜ.கஆட்சியில் அதை கோட்டை விட்டது ஏன் என்ற கேள்வி எங்கும் எழுந்திருக்கிறது.

2ஜி ஊழல் நடைபெற்ற போதும், இதே மாதிரி “பா.ஜ.க ஆட்சிக் காலத்தில்தான் அலைக்கற்றை நஷ்டம் தொடங்கியது” என்று வாதம் புறப்பட்டாலும், காங்கிரஸ் ஆட்சிதான் 2ஜி அலைக்கற்றை ஊழலுக்கு காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளுமே வாதிட்டன.

ஆனால், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த தி.மு.கவின் மத்திய அமைச்சர் ராஜா மீதும், கலைஞர் கருணாநிதி மகள் கனிமொழி மீதும்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்றைக்கு அந்த வழக்கும் விடுதலை ஆகியிருக்கிறது.

அதேபாணியில் இப்போது, இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கி விட்டது என்று பா.ஜ.கவும், “இல்லை; உங்கள் ஆட்சியில்தான்” என்று காங்கிரஸும் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரத்தை முன்னிறுத்தினாலும், இந்திய வங்கித்துறைக்கு ஏற்பட்டது 110,400 மில்லியன் ரூபாய் நஷ்டம் என்பதுதான் நிலைமை.

விஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில், இப்போது நிராவ் மோடி சேர்ந்திருக்கிறார். இந்த மூவரும் பா.ஜ.கவின் எதிர்காலத் தேர்தல் அரசியலுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஆட்சியிலிருக்கும் கட்சிக்கும், பிரதமராக இருப்பவர்களுக்கும் இப்படித் தலைவலிகள், தேர்தல் வருடத்தில் தொடங்கப்படுவது புதிதல்ல.

ஏற்கெனவே, பல பிரதமர்களுக்கு எதிராக, இவ்வாறான பிரசார யுத்தங்கள் நடைபெற்றுள்ளன. இந்திரா காந்தி, பிரதமராக இருந்தபோது, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ தொடர்பான ‘நகர்வாலா ஊழல்’ பிரசித்தி பெற்றது. அப்போது இருந்த அரசாங்கத்துக்குப் பெருத்த தலைவலியை அது ஏற்படுத்தியது.

இந்திரா காந்தியின் குரலில் பேசி, ஆறு மில்லியன் ரூபாயை வங்கியிலிருந்து எடுத்த நகர்வாலா, பத்து நிமிடமே நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அதிசயம் நடைபெற்றது.

காங்கிரஸ் ஆட்சி போனபிறகு, அமைக்கப்பட்ட ‘ரெட்டி ஆணைக்குழு’ விசாரணைகளில் நகர்வாலா விவகாரம் நட்சத்திர அந்தஸ்து பெற்றது. சிறையில் இருக்கும் போதே, நகர்வாலா இறந்ததும், அந்த வங்கி ஊழலும் பிரதமர் இந்திரா காந்தியின் வீழ்ச்சிக்கான காரணங்களாக அமைந்தன.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, போபர்ஸ் ஊழல் வழக்கு, தலைப்புச் செய்தியாகி, இந்திய அரசியலில் எதிர்பாராத மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. போபர்ஸ் ஊழல் பற்றி, தினமும் பத்து கேள்விகள் என்ற பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத்மலானியின் யுத்தம், ராஜீவ் காந்தியின் தேர்தல் வெற்றிக்கு ஆபத்தாக முடிந்தது.

ராஜீவ் அமைச்சரவையில் இருந்த அமைச்சரான வி.பி.சிங், அடுத்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் பிரதமரானார். ‘போபர்ஸ் ஊழல்’ நாடாளுமன்றத் தேர்தல் முடிவை நிர்ணயித்தது.

அடுத்து, வி.பி சிங்குக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் உபத்திரவம் கொடுக்கவில்லை. ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசாங்கம் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கும் ‘மண்டல் ஆணைக்குழு’ பரிந்துரைகளை அமுல்படுத்தியதால், அவர் பா.ஜ.க மற்றும் இடதுசாரிகட்சிகளின் மிகப்பெரிய போராட்டத்தைச் சந்தித்தார். அதில், வி.பி.சிங் தோற்கடிக்கப்பட்டு பிரதமர் பதவியை இழந்தார். அவருக்குப் பிறகு, இடைக்கால பிரதமரான சந்திரசேகர், அவருக்கு ஆதரவளித்த ராஜீவ் காந்தியின் வீட்டுக்கு பொலிஸை அனுப்பி, வேவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில், பிரதமர் பதவியை இழக்க நேர்ந்தது.

இந்நிலையில் நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று அக்கட்சியின் சார்பில் நரசிம்மராவ் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார். ராஜீவ் இல்லாத சூழ்நிலை, சோனியா, காங்கிரஸ் தலைவராக வர முடியாத நிலை இரண்டும் நரசிம்மராவுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தது.

காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகமிருந்ததால், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நரசிம்மராவ் பிரதமரானார்.

கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும், நரசிம்மராவ் ஆட்சி காலத்தில், நாட்டை உலுக்கிய மிகப்பெரிய ஊழல் என்றால், அதுவும் வங்கியும் பங்குச் சந்தையும் இணைந்த ஊழல்தான். அதற்கு பெயர் ஆறு இலட்சம் மில்லியன் மதிப்பிலான ‘ஹர்சத் மேத்தா’ பங்குச் சந்தை ஊழல்.

இந்த ஊழலில், ஹர்சத் மேத்தா தண்டிக்கப்பட்டார். சில வழக்குகளில் மட்டும் அவர் தண்டிக்கப்பட்ட நிலையில், மீதி வழக்குகளைச் சந்திக்கும் முன்பே மரணமடைந்து விட்டார். ஆனால், அந்த வங்கி- பங்குச் சந்தை ஊழல், நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை, மிக மோசமான ஊழல் ஆட்சியாகச் சித்திரித்துக் காட்டியது.

விளைவு, 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 1996ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக வெறும் 140க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது.

அதே சிக்கலில், 2004இல் கூட்டணி ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி, மீண்டும் மாட்டிக் கொண்டது. அதுதான் அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மிகவும் மோசமான ஊழல் ஆட்சி என்ற நிலையை, நாட்டுக்குள் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இந்தியத் தலைமைக் கணக்காளராக வினோத் ராய் புண்ணியத்தில் ஏற்படுத்தியது.

இந்த மெகா ஊழல்கள், எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பா.ஜ.கவுக்கு தேர்தல் வெற்றிக்கான மிக கூர்மையான ஆயுதத்தைக் கொடுத்தது. அதை மிக இலாவகமாகப் பயன்படுத்திய நரேந்திர மோடி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தார். காங்கிரஸ் கட்சியோ, அந்தக் கட்சி தொடங்கிய பிறகு நடைபெற்ற தேர்தல்களில், வரலாறு காணாத படு தோல்வியைக் கண்டது.

543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தையே நாடாளுமன்றத்தில் இழந்தது. இப்படியொரு தோல்வியை, காங்கிரஸ் கட்சியின் எந்த தலைமையின் கீழும் பெறவில்லை என்ற அளவுக்கு, ஊழல்கள் அக்கட்சியின் எதிர்காலத்தைக் காலில் போட்டு நசுக்கியதை, அரசியல் பார்வையாளர்கள் மறந்து விட முடியாது.

ஆகவே, ஒவ்வோர் ஆட்சிக் காலத்திலும் தேர்தல் வருடத்தில் ஓர் ஊழல் புறப்படும். அதுவே, அந்தக் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு உலை வைத்து விடும்.

அப்படியொரு சிக்கலில்தான் இப்போது பஞ்சாப் வங்கி ஊழல், பா.ஜ.கவைச் சிக்க வைத்துள்ளது. இதில் பா.ஜ.க ஆட்சிக்கு நேரடித் தொடர்பு இல்லை. ஆனால், பா.ஜ.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல் என்பதை எதிர்க்கட்சிகள் குக்கிராமங்களுக்கும் கொண்டு சேர்த்து விடும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“ஊழலற்ற ஆட்சி நடத்துகிறோம்” என்ற ஒரே பிரசாரம்தான், இப்போது பா.ஜ.கவின் கையில் மிக அழுத்தமான, ஆணித்தரமான ஆயுதமாக இருக்கிறது.

“அத்தனை கட்சிகளும் ஊழல்; நாங்கள் மட்டும்தான் நேர்மையான ஆட்சியை கொடுக்கிறோம்” என்பதுதான் பா.ஜ.கவின் முழக்கம். ஏன், பிரதமர் நரேந்திர மோடியே தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அதைத்தான் முன்வைத்து வருகிறார்.

இதை மக்கள் இன்றளவும் நம்புவதால்தான் ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்று அனைத்து விவகாரங்களிலும் ஏற்பட்ட பாதிப்பைக் கூட, மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை என்று, அரசியல் பார்வையாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இந்த ஊழலற்ற ஆட்சி என்ற வலிமைமிக்க ஆயுதத்தை பா.ஜ.கவின் ஆட்சியாளர்களுக்குத் தொடர்பில்லாத (இதுவரை வெளிவந்துள்ள விசாரணையில்) பஞ்சாப் வங்கி ஊழல் பறித்துள்ளது.

இந்த ஊழல், பா.ஜ.கவுக்கு எதிரான சுனாமியாக மையம் கொண்டிருக்கிறது. இந்திய புலனாய்வு அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கை, விசாரணையை நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு எல்லாம்தான், இந்தச் சுனாமி 2019- நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவைப் பாதிக்குமா என்பதை முடிவு செய்யும்.