பயிரை மேய்த வேலிகள்..(24)

(உலகை உறைய வைத்த இரத்த சகதி)

14.08.2006 ( இன்றைக்கு சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு) பொழுது புலரத்தொடங்கியது. புலிகளால் ஆயுத பயிற்சிக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச்செல்லப்பட்ட மாணவர்களையும் மாணவிகளையும் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்க தீர்மாணித்த புலிகள் அதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையை தொடங்குவதற்கு தயாராகிவிட்டனர்.

கிளிநொச்சி மாணவிகளை வடமுனை போர்களங்களுக்கு ஏற்றிப்போவதற்காக தயார் நிலையில் வாகனங்கள் நின்றன. நாவற்காட்டில் காளி மாஸ்டர் இன்னும் துயில் எழுந்திருக்கவில்லை. அங்கிருந்த முல்லைத்தீவு மாணவர்கள் தப்பி ஓடுவதற்கான மற்றுமொரு முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தனர். வட்டகச்சி பண்ணையில் புலித்தேவன் இன்று என்ன செய்யபோகின்றாரோ எனற பயத்தில் கிளிநொச்சி மாணவர்கள் அன்றைய பொழுதை எதிர்கொள்ள தயாராகினர்.

வள்ளிபுனத்தில் இருந்த பெண்கள் பயிற்சி முகாமில் முல்லைத்தீவு மாணவிகளும் அங்கிருந்து எப்படியாவது தப்பித்து விடலாம் எனற நம்பிக்கையில் அன்றைய காலை பொழுதை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளத்தொடங்கினர்.

சூரியனும் அந்த மாணவிகளை போன்றே இன்று சிறிது துணிச்சலுடன் பிரகாசிக்க தொடங்கினான். இரவின் குளிர்ச்சி தளர்ந்து பகலின் ஆதிக்கம் மெல்ல தலையெடுத்தது. இரட்மலானையில் இலங்கை வான் படைக்கு சொந்தமான தாக்குதல் போர் விமானங்கள் தமக்கு கிடைத்த தகவல்படி அன்றைய தாக்குதலுக்கு புறப்பட தயாராகின.

வள்ளிபுனத்தில் முதல் நாள் இரவு ஆழ ஊடுறுவும் படையினர் கட்டிச்சென்ற சிவப்பு நிற அடையாளக்கொடி காற்றில் அசையத்தொடங்கியது. அந்த கொடிய கவனித்த மாணவிகள் சிலர் அது புலிகளின் ஏதாவது ஒரு தந்திரமாக இருக்க வேண்டும் என அதனையே பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். ”ஏறுது பார் கொடியேறுது பார்என்கின்ற தமிழீழ தேசிய கீத்துடன் அன்றய செயற்பாட்டுக்காக பொறுப்பாளர் புலிக்கொடியை ஏற்றி வைத்தார். ஏனையவர்கள் அதற்கு மரியாதை செய்யுமாறு பணிக்கப்பட்டன்ர்.

மாணவிகளை மூளைச்சலவை செய்யும் நோக்கில் புலிகள் இப்போது ஒலிபெருக்கிகள் மூலம் எழுச்சிப்பாடல்களை ஒலிக்கவிட்டனர். ”ஆழக்கடல் எங்கும் சோழ மகராசன்என்று புரட்சி பாடகர் சாந்தனின் குரல் கம்பீரமாக காற்றில் ஒலிக்கத்தொடங்கியது.

காலை 7.00 மணிக்கு முற்றத்தில் வரிசையில் நிற்கவைக்கப்படுவதற்காக கட்டளையிடப்பட்ட மாணவிகள் மனதில் எப்படி தப்பிக்கலாம் என்கின்ற சிந்தனையில் மூழகிப்போய் இருந்தனர். முகாம் பொறுப்பாளர் மேலதிக உத்தரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.

போர்க்களத்தில் நிற்கின்ற புலிகளை தவிர அனேகமா அத்தனை உயர்நிலை புலிகளும் காலை உணவுக்காக குடும்பத்தினர், நண்பர்கள் சகிதம் உணவு மேசைகளில் அமர்ந்திருந்தனர்.

இப்போது காலை மணி 6.53 ஆகியிருந்த்தது, ஆளில்லா உளவு விமானம்– Unmanned Aerial Vehicle. ( வண்டு ) வள்ளிபுனம் வானில் தோன்றியது. சாந்தனின் கம்பீரக்குரல் வேவு விமானத்தின் ஒலியை வெறித்தனமாக அடக்க முயன்றது.

காலை மணி 6.55 அருகில் படுத்திருந்த நாயின் காதுகள் திடீரென கூர்மையடைந்தன. கலவரமடைந்த நாய் அங்கும் இங்கும் ஓடத்தொடங்கியது.

காலை மணி 6.56 உளவு விமானம் அங்கிருந்து விலகி சற்று தொலைவில் பறக்கத்தொடங்கியது. நாய் அதிக கலவரத்துடன் அங்கிருந்து காட்டுக்குள் ஓடியது.

திடீரென காற்றை கிழிந்த்துக்கொண்டு வானில் பாய்ந்த நான்கு போர் விமானங்கள் அந்த பயிற்சி முகாம் மீது மாறிமாறி குண்டுமழை பொழிந்தனர். ஒரு நிமிடத்துக்குள்ளாகவே விமானங்கள் தக்குதல்களை முடித்துவிட்டு திரும்ப தொடங்கின. உளவு விமானம் மீண்டும் வள்ளிபுன வானில் தோன்றி அமைதியாக வட்டமிடத்தொடங்கியது.

பலகனவுகள் சுமந்து பாடசாலைக்கு சென்ற முல்லைத்தீவு மாணவிகள் உடல் சிதறி அந்த முகாம் எங்கும் பலியாகி கிடந்தனர், ஒரு நிமிடத்துக்கு முன்புவரை உயிருடன் இருந்த தங்கள் தோழிகள் உடல் சிதறி கிடப்பதை பார்த்தபடி பல மாணவிகள் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். உதவிக்காக அவர்களால் கூக்குரல் இடமுடியாத படி தப்பித்தவர்களின் ஓலம் வானை பிளக்க தொடங்கியது.

இன்னும் சற்று நேரத்தில் உலகமே உறைந்து போகும் செய்தியாக அந்த அவல ஓலம் காற்றில் பரவத்தொடங்கியது

இதற்கு மேல் என்னால் இந்த வன்கொடுமையை எழுதமுடியவில்லை கண்களில் நீர் வழிகின்றது கணணி விசைப் பலகை கண்ணீரில் நனைகின்றது.
அநியாயமாக பலிகொடுக்கப்பட்ட எனது அந்த சகோதரிகளுக்காக இப்போது இதயமும் அழதொடங்கியுள்ளது.10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அந்த கொடும் காட்சி மீண்டும் என் கண்முன்னே வருகின்றது. சற்று நேரம் பொறுத்து மிகுதியை தொடருகின்றேன் நண்பர்களே

(Rajh Selvapathi)